Wednesday, August 24, 2011

பொறாமைத் தீயில் பொசுங்கும் நல்லறங்கள்

 

வழக்குத் தமிழில், “பொறாமை” என்றும் இலக்கியமாய் “அழுக்காறு” என்றும் கூறப்படும் கெட்ட எண்ணத்திற்கு அரபுமொழியில் “ஹஸது” (Jealousy and Envy) என்று சொல்வார்கள்.
சகமனிதருக்குக் கிடைத்திருக்கும் வசதி வாய்ப்புகள், திறமை ஆகியவற்றின்மீது ஆசை கொண்டு சகமனிதருடைய வீழ்ச்சியை விரும்புதல்; அவ்வீழ்ச்சியில் மகிழ்ந்திருத்தல், அதற்கான செயல்களில் ஈடுபடல் போன்ற இழிவான மனப்பான்மைக்குத்தான் பொறாமை என்று சொல்லப்படும்.
இதில் நேரடிப் பொறாமை, மறைமுகப் பொறாமை என்று இரு வகைகள் உண்டு. நேரடிப் பொறாமையாளர்கள் வெளிப்படையாக ஒருவனை வீழ்த்தும் எண்ணத்தை/பேச்சை/செயலை மேற்கொள்கிறார்கள் என்றால் மறைமுகப் பொறாமையாளர்களோ உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி, நயவஞ்சகராகவும் (முனாஃபிக்) செயற்படுகிறார்கள்.
இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் இந்தப் பொறாமைநோய் குறித்துக் கடும் எச்சரிக்கையை நமக்கு அளித்துள்ளார்கள்.
விறகை நெருப்புத் தின்று விடுவதைப்போலப் பொறாமை உங்களின் நற்செயல்களை அழித்துவிடுகிறது, எனவே எச்சரிக்கையாக இருங்கள்என்கிற நபிமொழி (நூல்: அபூதாவூத்) பொறாமையின் பொல்லாத் தீங்கை உணர்(ந்)/த்/திடப் போதுமானதாகும்.
மற்றவருக்குக் கிடைத்திருக்கும் கல்வி(அறிவு), செல்வம், மக்கட்பேறு, பதவி, சமூகநிலை, வலிமை, திறமை போன்ற உலகியல் ஆபரணங்களில் ஒருவன் பொறாமை அடையும்போது அவன் அறிந்தோ, அறியாமலோ, அவை, அந்த மற்றவருக்கு, தம் இறைவனாலேயே வழங்கப்பட்டன என்பதை மறந்து, அல்லது மறுத்து விடுவதாகவே பொறாமை அமைகின்றது.
தன்னைவிட மற்றோரை மேன்மையாகக் காணும்போது, இறைவன் தனக்கு நீதி செய்யவில்லை என்பதுபோலக் கருதி, மனிதன் பொறாமைச் சேற்றில் வீழ்கிறான். அதுமட்டுமா? இறைவன் தனக்கு வழங்கியுள்ள நற்பேறுகளையும் பாக்கியங்களையும்கூட, அவன் மறக்கவும் துறக்கவும் தலைப்படுகிறான். “எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை…..” என்கிற மனநிலை.
ஒருமுறை இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களிடத்தில், “அவர்கள் இறை அருளுக்கு விரோதிகள்என்று மொழிந்தார்கள். தோழர்கள், “யாரைச் சொல்கிறீர்கள் நபியே?” என்று கேட்க, நபி(ஸல்)அவர்கள், “இறைவன் தனக்கு(ம்) வழங்கியிருக்க, மற்றவரைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்களே, அவர்கள்தாம்என்று கூறினார்கள் (நூல்: அத்-தப்ரானி).
யாருக்கு எங்கே, எவற்றை, எவ்வளவு, எவ்விதம் வழங்குவது என்பதை இறைவனே தன் தூய அறிவால் தீர்மானிக்கிறான். இந்தப் பேருண்மையை அறியாமல், பொறாமை கொள்பவன், தன் இறைவனை அறியாதவனாகிறான்.
நிறைவடையா மனநிலை மனிதனைப் பொறாமையில் தள்ளுகிறது. பொறாமை பழிபாவத்திற்கும்,  வன்மம், பொல்லாங்கு இறைமறுப்பு ஆகியவற்றுக்கும் இட்டுச் செல்கிறது. முதல் பாவமாகக் கூறப்படுவதும் பொறாமைதான். ஆதம்(அலை) என்கிற மனிதப் படைப்பைப் பார்த்து  ஷைத்தான் கொண்ட பொறாமை!
இன்று நம்மிடையே தனியாளாயினும், இயக்கங்களாயினும், ஏன் தேசங்களாயினுங்கூட இந்தப் பொறாமைதானே, வம்பு வழக்குகளுக்குக் காரணமாக அமைகிறது! சக மனிதர்கள்/இயக்கங்கள்/அமைப்புகள் செய்த நற்செயல்களை எளிதாகப் புறக்கணிக்கிறோம். அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த, தீய செயல்களை அம்பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் அவமானப்படுத்துகிறோம்.
இறைநம்பிக்கையுள்ள ஒருவன், தன் நம்பிக்கையாலும் முயற்சிகளாலும் மன நிறைவுடன், மனந்தளராமல், நிலைகுலையாமல் (தானறியாத, தனக்குக் கிடைக்கவிருக்கும் நலவளங்களுக்காகப்) பாடுபட வேண்டுமேயல்லாது மற்றவர்மீது பொறாமை கொள்ளலாகாது. இறைவன் தனக்கு அளித்தவற்றில், மனநிறைவு அடைபவனாக, ஒரு நம்பிக்கையாளன் இருப்பான். இதையே அறிஞர் இப்னு கைய்யூம் இப்படிக் குறிப்பிடுகிறார்: “(மனநிறைவு) அது நிம்மதியின் வாசலைத் திறக்கிறது. அடியானுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறது”.
மேலும், அல்லாஹ் உங்களில் சிலருக்கு வேறு சிலரைவிட, வாழ்க்கை வசதியில் மேன்மை அளித்துள்ளான் ...” (16:71) என்பது இறைமறை குர்ஆன் காட்டும் உண்மை.
அதுமட்டுமின்றி இறைமறை, வேறொரு வசனத்தில், “... உலகவாழ்வில் இவர்களுக்குத் தேவையான வாழ்க்கை வசதிகளை நாம்தானே இவர்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கிறோம். மேலும், நாம் இவர்களில் சிலருக்கு, வேறு சிலரைவிட, உயர்பதவிகளை அளித்தோம்; இவர்களில், சிலர், வேறு சிலருடைய ஊழியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக! ...”(43:32) என்றும் குறிப்பிடுகிறது.
“இவ்வுலக நலவளங்களைக் காட்டிலும் இறையருளே உயர்மதிப்புடையது” என்பதே இதிலிருந்து நாம் உணரவேண்டுவது. ஏனெனில், உயர்வு என்பது உலக ஆபரணங்களில் அல்ல; மாறாக நேர்மையான இறையச்ச உணர்(தக்வா)வில்தான் இருக்கிறது.]
... உங்களில், இறைவனின் கண்ணியத்துக்கு உரித்தானவர், இறையச்சமுடையவரே ... என்கிறது இறைமறை (49:13).
மேலும்... மறுமையோ, இறைவனை அஞ்சி வாழ்பவர்களுக்கு உரித்தானதாகும்” (43:35) என்றும் கூறுகிறது.
இறைநம்பிக்கையாளனின் இருபெரும் வலிமையாக, இறைமீதான அவனது ஆதரவும் அச்சமும் அமைகின்றன.
மற்றவர் அழிந்துபோக எண்ணும் தீய பொறாமைக்குத் தடை சொல்லும் இஸ்லாம், ஒருவருக்கொருவர் நற்செயல்களில் போட்டியிடுவதை நன்கு ஊக்குவிக்கிறது; உற்சாகப்படுத்துகிறது.
தான-தர்மங்களில் தலைசிறந்து விளங்கும் ஒருவரைப் பார்த்து “இறைவா! எனக்கும் நீ செல்வ வளங்களை; ஆரோக்கியத்தை வழங்கினால், இன்னாரைப் போன்றே நானும் தர்மம் செய்வேன்; வாரி வழங்குவேன், நற்காரியங்கள் புரிவேன்” என்று பிரார்த்திக்கத் தடையேதுமில்லை.
இந்த, தீய எண்ணமில்லாத போட்டி மனப்பான்மைக்கு அரபுமொழியில் ‘Ghibtah’ ‘கிப்தாஹ்’ (ஆக்கப்பூர்வமான போட்டியுணர்வு) என்று சொல்லப்படுகிறது.
சுருங்கக் கூறின்,

  • ஹஸது எனப்படும் (தீய எண்ணப் பொறாமை) நற்செயல்களை அழித்துவிடும்.
  • பொறாமை நயவஞ்சகத்துக்கும் இறைமறுப்புக்கும் வழிகோலுகிறது.
  • இறையை நம்பிடும் மனநிறைவு நிம்மதியும் பாதுகாப்பும் அளிக்கவல்லது.
  • ஏற்றம்-தாழ்வு, இரண்டுமே இறைநியதி.
  • தளராமல் பாடுபடுவது நம்பிக்கையாளரின் பண்பு.
  • உலக வளங்களை வைத்தல்ல, உள்ளத்தூய்மை, இறையச்சத்தைப் பொருத்தே இறைவனிடம் நற்சிறப்பும் கண்ணியமும் கிடைக்கும்
  • மறுமை இறையச்சமுடையவர்களுக்கே உரியது.
  • தீய எண்ணமில்லாத, போட்டி மனப்பான்மை (Ghibtah) தவறன்று.
  • பொறாமைக்காரர்களின் தீமையிலிருந்து, இறைவா! உன்னிடம்பாதுகாவல் தேடுகின்றேன்....என்று பிரார்த்திப்போமாக! 
ஆக்கம்: இப்னு ஹம்துன்

சத்தியமார்க்கம்.காம் தளத்திலிருந்து..
Comments:

Sunday, February 13, 2011

ஒரு தாமரைக்கு எத்தனை சுழியம்?

ஒரு தாமரைக்கு எத்தனை சுழியம்?

எனக்கு வந்த ஒரு மடல் கீழே சாய்வெழுத்துகளில் :

அமெரிக்க முறைப்படி எண்களை மில்லியன், பில்லியன், ட்ரில்லியன்,
க்வாட்ரில்லியன், குயின்டில்லியன், என்று துவங்கி சென்டில்லியன் வரை
நீட்டிக்கொண்டே போகலாம். (சென்டில்லியன் என்றால் ஒன்று போட்டு 303
ஸைஃபர் போடவேண்டும்).

ஆனால், நம் இந்தியாவிலோ கோடியைத் தாண்டிவிட்டால் பிறகு வேறு வார்த்தை
கிடையாது. அதன் பிறகு நூறு கோடி, ஆயிரம் கோடி, லட்சம் கோடி, கோடி கோடி
என்று கூறித்தான் மக்களைக் குழப்ப வேண்டி யிருக்கிறது. ஒரு காலத்தில்
கோடி என்பது மிகப் பெரிய எண்ணாக இருந்ததால், அதற்கு மேல் வார்த்தை
தேவைப்படவில்லை. ஆனால், இப்போதெல்லாம் ஒரு ஊழல் மட்டுமே ஒரு லட்சத்து 76
ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடத்தப்படுகிறது.

வருகிற காலத்தில் கோடி கோடி ஊழல் எல்லாம் வரக்கூடும். எனவே, கோடிக்கு
மேல் புதிய சொற்களை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு
ஏற்பட்டுள்ளது.

இதை வைத்து நம் இன்டெர்நெட் அரசியல் ஆர்வலர்கள் விளையாட ஆரம்பித்து
விட்டார்கள். எப்படி ?

1000 கோடி = 1 ராடியா
10,000 கோடி = 1 கல்மாடி
1,00,000 கோடி = 1 ராசா

ஆக, இனிமேல் பெரிய தொகைகளைக் குறிக்கும் தகவல்களைக் கீழ்க் கண்டவாறு
குறிப்பிடலாம்:

அனில் அம்பானி புதிதாகக் கட்டியிருக்கும் வீட்டின் மதிப்பு சுமார்
4.5 ராடியா ரூபாய் (4,500 கோடி ரூபாய்) மதிப்பிருக்கும்.

ஆண்டுதோறும் கெரஸினுக்கு மத்திய அரசு வழங்கும் மான்யம்
2 கல்மாடி ரூபாய் ஆகும் (20,000 கோடி ரூபாய்)

ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் தொகை
50 ராசா ரூபாய் (50 லட்சம் கோடி ரூபாய்) இருக்கக் கூடுமெனத் தெரிகிறது.

-இந்த ஐடியாவை மத்திய அரசு பரிசீலிக்கலாம்.
------------------------------
----------------------------------------
நன்றி : துக்ளக் வார இதழ் 16.02.2011
----------------------------------------------------------------------



நகைச்சு வைப்பதற்காக மேலுள்ளதைக் குறிப்பிட்டாலும்,

உண்மையில் கோடிக்கு அப்பாலும் எண்களைச் சொல்வதற்கு தமிழில் முடியும் என்று தொல்காப்பியம் சுட்டுகிறது:

ஒன்று = 1
பத்து = 10
நூறு = 102
ஆயிரம் = 103
பத்தாயிரம் = 104
நூறாயிரம் = 105
பத்து நூறாயிரம் = 106
கோடி = 107
தாமரை (=கோடிகோடி) = 1014
வெள்ளம் (=கோடிதாமரை) = 1021
ஆம்பல் (=கோடிவெள்ளம்) = 1028

இன்று படித்த ஒரு செய்தி இங்கே கூறத்தக்கது:

1.76 லட்சம் கோடிக்கு எத்தனை "ஜீரோ'? பதிலளித்த மாணவிக்கு ரூ. 10 ஆயிரம்.

Tuesday, January 25, 2011

எடுத்ததும் கொடுப்பதும்: முன் தோன்றி மூத்த குடி


முன்குறிப்பு: வான(ப்பயண)த்தில் பறந்துகொண்டிருந்தபோது, நண்பர் வினவினார் இப்படி: “எத்தனையோ நல்ல புத்தகங்கள்; கருத்துகளைப் படிக்கிறோம், கிரகிக்கிறோம், குறிப்புகளையும் எடுத்துவைக்கிறோம். இருந்தும் நீண்ட காலத்துக்கு அவை நினைவில் தங்குவதில்லையே, என்ன செய்வது?”

இந்த நண்பர் வெளிப்படுத்திவிட்டாலும், இன்னும் நிறையபேருக்கு இந்த வினா ‘உள்’ளே இருக்கத்தான் செய்கிறது.

என்ன சொல்வது? சற்றே யோசித்தேன்.

பள்ளிப் பருவ நுட்பம் ஒன்று நினைவிலாட……

“நாம் படித்ததை; அறிந்ததை; குறித்துக்கொண்டதை, நமது மொழியில்; நமது சொற்களில் நாமாக எழுதிப் பார்க்க வேண்டும், மறக்காமலிருக்க அது உதவும்” என்றேன்.

அதன்படி, அண்மையில் (விடுமுறையில்) நான் படித்த, பிடித்த கட்டுரை ஒன்றை நினைவுப் பேழையிலிருந்து எடுத்து இங்கே என்மொழியில்; சொற்களில் தருகிறேன்.
‘முன் தோன்றி குடி” என்ற தலைப்பில் அப்துல்ரகுமான் எழுதிய கட்டுரை அது.


தமிழினமும் தமிழ்மொழியும் தொன்மை வாய்ந்தவை என்பது வியப்பிற்கும் பெருமைக்கும் உரியது. தமிழ் ஆதிமொழி.

தமிழின் தொன்மையை கூற வேண்டி வந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பழம்பாடல் வரியை அனைவரும் ஒப்பிப்போம். அது: ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி” என்கிற வரி.

இந்த வரியை அறியாத தமிழர்களே இல்லை என்னுமளவுக்கு இந்தச் சொற்றொடர் அழியாப் புகழ் பெற்றது. இதன் புகழ் எந்த அளவுக்கு என்று கேட்டால், இதை எழுதியவர் பெயரோ, இந்தப் பாடலின் மற்ற வரிகளோ பலருக்கும் தெரியாது. அவையெல்லாமும் மங்கிப்போகிற அளவுக்கு இந்த வரி பிரகாசமடைந்துள்ளது.

ஆயினும், இதே பாடல்வரியை வைத்துக்கொண்டு, தமிழை, தமிழர்களை கேலி செய்பவர்களும் உள்ளனர். அவர்களும் தமிழர்களே என்பதுவும் அறிந்து வருந்தத்தக்கது.

“அதெப்படி, கல் தோன்றி ( பின்) மண் தோன்றாக் காலத்து” என்று வருவது சரியாக இருக்கும்?” என்பது அவர்களின் கேலி வினாக்களுள் ஒன்று. ”கல் தோன்றியா பின்பா மண் தோன்றும்?”

அது மட்டுமல்லாமல், வாளோடு முன் தோன்றி மூத்த குடி” என்பது எப்படி சரியாக இருக்கும்? என்பதும் அவர்களின் வினா.

ஒருவேளை, ‘வாலோடு முன் தோன்றி மூத்த குடி’ என்பதாக இருக்குமோ என்று கூறி நகைக்கவும் செய்கின்றனர். உண்மையில் அவர்கள்தாம் நகைப்புக்குரியவர்கள். தன் இனவரலாறு அறிந்திராத அவர்கள் நகைப்புக்குரியவர்தாமே.

இந்தப் பாடல் புறப்பொருள் வெண்பா மாலை என்ற நூலில் காணப்படுகிறது. இதை எழுதியவர் ஐயனாரிதனார் என்பார்.

மனித இன வரலாற்றில், தொடக்கக் காலத்தில் மனிதன் மலையில் தான் வசித்துவந்தான். மலையில்தான் இயற்கை உணவுகளான காய்கனிகள் கிடைத்தன. உறைவிடமாகக் கொள்ள இயற்கையான குகைகளும் வாய்த்தன. தமிழ் அகப்பொருள் திணைகளுள் முதலாவதான ‘குறிஞ்சி’ மலையும் மலைசார்ந்த இடமும் பற்றியதே, தமிழில் ‘கல்’ என்ற சொல் மலையையும் குறிக்கும்.

‘கல் இயங்கு கருங் குற மங்கையர்’ என்று கம்பர் சொல்வதில் வருகிற ‘கல்’லுக்கு, மலை என்றுதான் பொருள். (மலையில் வாழ்கிற கருநிற குறத்தியர்).

ஆக, ‘கல்’ தோன்றி என்பதற்கு ‘மலை தோன்றி’ என்று பொருள். அதாவது மலைவாழ் காலமாகிய ‘குறிஞ்சி வாழ்க்கை தோன்றி’ என்று பொருள்.

ஆதியில் மலையில் வசித்துவந்த மனிதன், பின்னர் ஆடுமாடுகள் உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளைப் பழக்கி அவற்றை ஓட்டியபடி காட்டுக்கு வந்தான். தமிழ் அகப்பொருள் இலக்கணம், காடும், காடுசார்ந்த இடத்தையும் முல்லை என்று சொல்கிறது.

சரி, “மண் தோன்றாக் காலத்து” என்றால்?
மண் என்பது சிறப்புப் பொருளில் நிலத்தைக் குறிக்கும். குறிப்பாக, விவசாய நிலத்தையே அப்படிக் குறிப்பிடுவர். (“இந்த மண்ணுக்கு என்னமா விளைஞ்சிருக்கு, பாருங்களேன்). ஆக, மண் தோன்றாக் காலம் என்றால், வயல் தோன்றாத காலம், அதாவது, மனிதன் விவசாயத்தை அறியாத காலம் என்று பொருள்படும். வயலும் வயல் சார்ந்த இடத்தை தமிழின் அகப்பொருள் இலக்கணம் ‘மருதம்’ என்றழைக்கிறது.

மலை வாழ்க்கையாகிய ‘குறிஞ்சி’ தோன்றி, வயல் வாழ்க்கையாகிய ‘மருதம்’ தோன்றுமுன்பே ‘முல்லை’யாகப் பூத்தது தமிழினம் என்பதே ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து…’ என்பதற்குப் பொருள்.

மலை வாழ்க்கையில் கற்களையே மனிதன் ஆயுதமாகப் பயன்படுத்தினான்.
உலோகத்தாலான ஆயுதங்களை மனிதன் பயன்படுத்தத் தொடங்கியது ‘காட்டு’வாழ்க்கையில்தான். கி.மு மூவாயிரத்தில் எகிப்தியர்கள் உலோக ஆயுதங்களைப் பயன்படுத்திய காலக்கட்டத்திலோ அதற்குச் சற்று முன்னதாகவோ இந்தியர்களும் உலோகப் பயன்பாட்டை அறிந்திருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய இனங்களுள் தொன்மை மிக்கது தமிழினமே. முதன்முதலாக இரும்பாலான வாளை செய்தவன் தமிழனே. சேக்ஸ்பியர் “இந்திய வாள்” என்று சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.

இப்போது முழுப்பாடலையும் பார்ப்போம்:
பொய்யகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி.


வையகம் போர்த்த வயங்கொலி நீர் என்பது எதைக்குறிக்கிறது ?

நோவாவின் காலத்தில் மிகப் பெரிய கடல்கோள் ஏற்பட்டு பூமி கடலால் சூழப்பட்டது. (நூஹ்) நோவாவின் பேழையில் இருந்த உயிரினங்களைத் தவிர அனைத்து உயிரினங்களும் அழிந்துபட்டன. இதை பைபிள் உள்ளிட்ட மதநூல்கள் தெளிவாகக் கூறுகின்றன. பின்னர், நோவாவின் சந்ததிகளிலிருந்தே மனித இனம் பல்கிப் பெருகியது.

சில காலம் கழித்து வெள்ளம் வடியத் தொடங்கியது. அப்போது, வெள்ளம் வடியவடிய, உயரமான மலைகள் தானே முதலில் தோன்றும். அதன்பிறகே மண் தோன்றும் அல்லவா!

நோவாவின் பேழையில் இருந்தவர்கள் ஆயுதங்களும் வைத்திருந்திருப்பார்கள் அல்லவா! அதில் வாளும் இருக்கத்தானே செய்யும். அதைத்தான் ஐயனாரிதனார் இப்படிக் குறிப்பிடுகிறார்:
வையகம் போர்த்த வயங்கொலி நீர் – கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே’ வாளோடு
முன் தோன்றி மூத்த குடி


நோவா எனப்படும் நூஹ் தமிழினத்தின் ஆதிமூதாதை எனக் கொள்ள இடமளிப்பதாக ஐயனாரிதனாரின் இந்தப் பிரசித்திப் பெற்ற பாடல் உள்ளது.


பின்குறிப்பு: கவிக்கோ அப்துல்ரகுமானின்,கட்டுரையின் இறுதியில் கூறப்பட்டுள்ள இந்தக் குறிப்பு அறுதியிட்டதோ, உறுதிபட்டதோ அன்று. விவாதத்திற்கு இடமளிக்கும் ஒன்றே என்று நான் நினைக்கிறேன்.

(கவிக்கோவின் சிந்தனை என் எழுத்துகளில்)

Thursday, January 06, 2011

எது சிறப்பு!


எது சிறப்பு!

மலரதனின் சிறப்பென்றால் மகிழ்ச்சித் தோற்றம்
மனங்கனியச் செய்வதிலே மிகவும் ஏற்றம்
நிலவதனின் சிறப்பதுவோ நிலைகள் மாற்றம்
நிறைந்தாலும் மறைந்தாலும் நிலைக்கும் ஆற்றல்
உலகமிதன் சிறப்பென்ன? வேறு பூக்கள்
ஒருசேரப் பூத்திருக்கும் இயற்கைப் பூங்கா
உலவுகின்ற தென்றலுக்கும் உண்டே பேறு
உள்ளபடி பொதுவுடமை விளங்கும் காற்றே
.
தலைமையதன் சிறப்பென்றால் தகுதி காத்தல்
தக்கபடி பணிமுடிக்க தேரும் ஆட்கள்
கலைமனதின் சிறப்பிங்கே கற்பின் வாய்மை
கலங்காமல் ஒளிவீசும் கனலின் தூய்மை
அலைமுழக்கம் சிறப்பில்லை: ஆழி என்றால்
ஆழம்தான் சிறப்பாகும் அறிஞர் போல!
நிலைமறந்தே ஆடுவோரின் நினைப்பைக் கூட
நீக்கிவிடும் சிறப்பிங்கே நல்லோர்க் காமே

நண்பர்தம் சிறப்பெல்லாம் நலமே செய்தல்
நம்பிக்கை நீட்டியொரு நேசம் பெய்தல்
மண்ணிதனின் சிறப்பிங்கே மனிதம் ஓங்கல்
மற்றவரும் தன்போன்றே மனதில் கொள்ளல்.
கண்விழிகள் சிறப்படையும் காணும் நோக்கில்
கருத்தான ஏதொன்றும் கவர்ந்துக் கொண்டால்.
பெண்ணவளும் சிறப்பன்றோ பேணும் தாய்மை
பொறுமையினால் அடைகின்றாள் பெரிய வெற்றி.

சிலமனிதர் சிறப்பின்றி சின்ன புத்தி
சிந்தையிலே சுயநலமே செய்யும் உத்தி
பலமனிதர் சிறப்பிங்கே பாவம் ஐயோ.
பண்பாட்டைச் சிதைப்பதிலே பெருமை கொள்வார்
உளமகிழச் செய்வதுவே உயர்ந்தோர் செய்கை
ஒருவரையும் இகழாமல் உணரும் போக்கு.
புலவரிவர் சிறப்பிங்கே பொறுமை காத்து
புகழோங்க கவிவானில் ஒளிரும் பாடல்!

Wednesday, November 03, 2010

இந்தியா - இடைவெளிகளின் தேசம்!

இந்தியா - இடைவெளிகளின் தேசம்!




உலகின் மிகப்பெரிய நகரத்தின் ஒதுக்கப்பட்ட பகுதியாக அந்தச் சேரிப்பகுதி. மும்பையின் ரஃபீக்நகர் தான் அது. மூங்கில் எலும்புகளில் தார்ப்பாய்களை தோலாகப் போர்த்தியிருக்கும் அந்தக் குடியிருப்புகளில் தெளிந்த குடிநீர் கூட கிடைப்பதில்லை. குடிசைக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் பெரிய நீலநிற உருளை வடிவக் கலையங்களில் கலங்கலான பழுப்புநிற நீர், புழுக்கள் மிதக்கக் கிடைக்கிறது. சங்கிலியிடப்பட்டு ஒரு குவளையும் உண்டு.


திட்டமின்மையையும் ஒழுங்கின்மையையும் பறை சாற்றியபடி தலைக்குமேல் செல்லும் சட்ட விரோத மின்னிழைகள் வழியாக ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறது மின்சாரம்.

இதனினும் அவலம் என்னவென்றால், பத்தாயிரம் மக்களுக்கும் மேல் வசிக்கும் அந்தப் பகுதியில் ஒரே ஒரு குளியலறையோ, கழிப்பறையோ கூட இல்லை. ஆனால், நிராதரவான அந்த ஒவ்வொரு குடும்பத்திலும் நவீன இந்தியாவின் நாகரிகக் குறியீடான கைபேசி இருக்கிறது. சிலரிடம் மூன்று கூட.

ஐ.நா கூற்றுபடி கழிவறையினும் கைபேசிகள் மலிந்திருக்கும் ஒரு தேசத்தை, அதன் பயமுறுத்தும் சமச்சீரற்ற வீக்க வளர்ச்சியை; குழப்பியடிக்கும் அந்தப் பாகுபாட்டை நவம்பர் 6ஆம்தேதி வருகை தரும் அமெரிக்க அதிபர் பராக் ஹுசேன் ஒபாமாவும் காணக் கூடும்.

"வளர்ச்சி"யின் அழைப்பு மையங்களாக விளங்கும் கால்சென்டர்கள், மென்பொருள் வடிவமைப்பாளர்கள், தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் நிரம்பியிருக்கும் தேசம்தான் இந்தியா. ஆனால், அதே இந்தியாவில்தான் இலாயக்கற்ற, வெற்றுப்பேச்சு, இனவாத அரசியலும் அமைப்பு முறையும் மக்களின் மிக மிக அடிப்படையானப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு வக்கற்ற அரசுகளும் இருக்கின்றன.

காமன்வெல்த் விளையாட்டுகளில் கூட கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் செய்திகள் நிரம்பிய தேசத்தில், சாமானியனின் அடிப்படைப் பிரச்னைகள் சற்றும் கண்டு கொள்ளப்படுவதில்லை.

தேசத்தின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 8.5 விழுக்காடு, உலகிலேயே முதன்மையாக அமைந்து வியக்க வைத்தாலும், மேடுபள்ளம் நிரம்பிய இந்தச் சாலைகள் நிச்சயம் சகிப்பதற்கில்லை.

தரணி மெச்சும் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவ சேவையால் ஈர்க்கப்படும் மேற்கத்தியர்கள், மருத்துவச் சுற்றுலாவால் நாட்டின் அந்நியச் செலாவணியை அதிகப்படுத்திக் கொண்டிருக்க, இதே இந்தியாவில்தான் குழந்தை இறப்பு விகிதமும், பிரசவச் சாவுகளும் மிக அதிகம் - ஆஃப்ரிக்காவுக்கு அடுத்தபடியாக.

அரசியல் கட்சிகள், ஆளும் வர்க்கங்களின் விழாக்களிலும் கூட்டங்களிலும் அநியாயமாகவும் தேவைக்கதிகமாகவும் மின்சாரம் விரயமாகிக் கொண்டிருப்பது ஒருபுறமென்றால், அறிவிக்கப்பட்டோ, படாமலோ மின்வெட்டுகள் நாளின் பாதி நேரத்துக்கும் மேல் படர்ந்திருப்பதும் இங்கேதான்.

இந்தியாவின் ஏற்றுமதி வகை அரிசிகள் உலகின் பல நாடுகளிலும் நட்சத்திர அடுக்களைகளில் வெந்து கொண்டிருக்க, வறுமைக் கோட்டினை தன்னுள் இறக்குமதி செய்துகொண்டுள்ள எண்ண வரையற்ற வயிறுகள் பட்டினியால் நொந்துகிடப்பதும் இதே இந்தியாவில் தான்.

பங்குச் சந்தைகளில் குறியீட்டெண்களின் வரைபடம் உச்சபட்ச சாதனை அளவை நெருங்கி நிமிர்ந்திருக்கும் நாட்டில், பலகோடி மக்களின் நாளாந்திர வருமானமோ இரண்டு டாலருக்கும் குறைவுதான்.


ஒருபக்கம் உலகப் பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் கோடிக்கணக்கான மதிப்பு விலையுள்ள, 27 மாடிகளும், மூன்று உலங்கு வானூர்தித் தளங்களும் கொண்ட உலகின் உன்னத வசிப்பிடம் இந்தியாவின் செழுமையை சொல்லிக் காண்பிக்க முயலுகிறது. இன்னொரு பக்கமோ, சாக்குத் திரை மறைப்புகளிலும், மண் சேற்றாலும் மாட்டுச் சாணங்களாலும் மெழுகப்பட்ட வீடுகளில் கோடிக் கணக்கானோர் வாழும் அவலம் யதார்த்தத்தைப் பறைசாற்றுகிறது. இதுதான் இந்தியா.

ஏன் இந்த பாரிய இடைவெளி?

இந்த இடைவெளியை ஆட்சியாளர்கள் குறைக்கவோ, போக்கவோ முன்வராதது ஏன்? இயலாமையா? முயலாமையா? செயற்கைக்கோள் விடுவதில் சிறப்பு பெற்ற தேசம் இதை இயலாமை என்றால் பின்னால் சிரிப்பு தான் வரும்.

நகர்ப்புற பகுதிகளின் கழிப்பிட வசதிக்காக ஆண்டுதோறும் அரசால் 350 மில்லியன் டாலர்கள் செலவிடப்படுகின்றன என்கிறார் பிந்தேஷ்வர் பதக். சுலப் சுகாதார சமூக சேவை மையத்தின் நிறுவனர் இவர். "இந்தியாவுக்கு இன்னமும் 12 கோடிக்கும் மேற்பட்ட கழிவறைகள் தேவைப்படுகின்றன - அநேகமாக, உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் இதுவாகத்தானிருக்கும். இன்னொன்றும் தெரிந்துகொள்ளுங்கள். இந்தச் சுகாதாரச் சூழலை ஆட்சியாளர்களால்தான் ஏற்படுத்த முடியும்" என்கிற பதக் தனது அமைப்பின் மூலமாக, கடந்த நாற்பது ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான பொதுக் கழிப்பறைகளை நிறுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

41 வயதான சுரேஷ் பச்சே ஒரு மிதிவாகன இழுப்பாளர். நீர் சுமந்திருக்கும் அந்தக் கலையங்களைக் காட்டி "தண்ணீருக்கும் கூட, அதை வைத்து காசு பார்க்கும் தாதாக்களைத்தான் சார்ந்து இருக்க வேண்டி இருக்கிறது. அரசாங்கம் அந்தப் பணியைச் செய்தால், அந்தப் பணத்தை அரசாங்கம் எடு(த்து)க்கலாமே" என்கிறார். "ஆனால், அரசாங்கம் இங்கு செய்கிற ஒரே ஒரு சேவை வீடுகளை இடித்துத் தள்ளுவதுதான். எனது வீடு கூட 10 முறை இடிக்கப்பட்டிருக்கிறது. ஒரே சிரிப்புதான் போங்க".

ஒருபக்கம் அடிப்படைத் தேவைகளும் நிறைவேறாத கோடிக்கணக்கான மக்கள். இன்னொருபக்கம் கோடிகளில் விற்பனையாகும் கைபேசி உள்ளிட்ட நவீன சாதனங்கள். இந்தியா, தன்னுடைய அபாயமான இந்த வீக்கத்தைப் புரிந்துதான் இருக்கிறதா?

67 கோடி கைபேசி இணைப்புகளை குறுகிய காலத்தில் பெற்றிருக்கும் இதே தேசத்தில்தான் 36.5 கோடி மக்களுக்கு மட்டுமே தனிப்பட்ட கழிவறைகள் இருக்கின்றன. கைபேசி இணைப்புகளின் அளவுள்ள 67 கோடி மக்களுக்கு இன்னமும் திறந்த வெளிதான் என்கிறது ஐ.நாவின் புள்ளிவிவரமொன்று. ஆனால் கைபேசி இணைப்புகளின் வரைபடம் (Graph) மட்டும் மேலேறிச் சென்றுக்கொண்டிருக்கிறது - மாதாந்திரம் 2 கோடி இணைப்புகள் அளவுக்கு.

நவீன இந்தியா பெற்றுத்தந்த நாகரிகக் குறியீடான கைபேசி மூலம் பேசிக்கொண்டே திறந்தவெளி கழிப்பிடத்தை ஒரு மனிதர் பயன்படுத்துவதான காட்சியை நினைத்துப் பாருங்கள். திரைப்படங்களில் அது வெறும் பகடியாக இருக்கலாம். நாட்டின் நகர்ப்புறங்களிலோ அது இன்றைய இந்தியாவைக் குறிக்கவில்லையா?!.

தாராள மயமாக்கலின் கதவுகளைத் திறந்துவிட்ட நவீன இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங் "நம்முடைய இந்த வளர்ச்சி 30 கோடி நடுத்தர வர்க்கத்தை மேலும் மேலும் முன்னேற்றுகிற அதே நேரத்தில் அதனால் ஏழைகளும் பயனடையவே செய்வார்கள்" என்கிறார். "ஆனால், இந்த மாவோயிஸ்ட்டுகள்தாம் முட்டுக் கட்டைகள். ஏழைகளின் வெறுப்புணர்வை விசிறிவிடுகிறார்கள். இவர்கள்தாம் இந்த தேசத்தின் கட்டமைப்புக்கு ஆபத்தானவர்கள்"என்றும் மறக்காமல் சேர்த்துக் கொள்கிறார்.


"குறைந்தபட்சம் குழாய் நீர், சாக்கடை வசதி, இதுகூட இல்லாமல் முன்னேற்றத்தைப் பற்றி என்ன பேச்சு வேண்டி கிடக்கு" என்கிறார் அனிதா பட்டேல் தேஷ்முக். பம்பாயின் சேரிப்பகுதிகளில் இவருடைய "புகார்" அமைப்பு தான் ஆய்வு செய்தது.

இந்த வீக்க நிலை பெரும் அபாயம் தான் என்கிற ஆனந்த் மஹிந்திரா, மஹிந்திரா அன் மஹிந்திரா நிறுவனத்தின் துணைத்தலைவர், ஒரு பெரும் தொழிலதிபர். "இந்த இடைவெளியை அனைவரும் உணர்ந்தே இருக்கிறோம், இதுதான் ஒரு வேளை வளர்ச்சியைத் தூண்டுகிறதோ!"

செல்வ(ந்த)ர்கள் சொல்லத்தான் செய்வார்கள்.

நரசிம்மராவுக்கு முன்புவரை இந்தியா நேரு வகுத்த சோஷலிசப் பாதையில் தான் பயணித்தது. தலைக்கு இத்தனை கடன் என்பது போன்ற பேச்சுகளும், வெளிநாட்டுப் பொருள்கள், வசதிவாய்ப்புகளைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சுகளும் தான் அன்றைய சோஷலிச இந்தியா.

தனியுடமை என்பது பக்க வீக்கமாகவும், பொதுவுடமை என்பது தக்கோரின் ஏக்கமாகவும் மாறிவிடுகிற தேசத்தில் என்னதான் தீர்வு இருக்க முடியும்?

அனைத்து வளங்களும் இறையுடமை; அதற்கு நாம் பொறுப்பாளிகளே என்கிற எண்ணம் மக்களிடத்தே ஊட்டப்படவேண்டும். பயன்படுத்தப் படாமல் எந்த வளமும் வசதியும் வீணாகக் கூடாது. வீணடிப்பதை பற்றியும் நம்மை விசாரிக்க ஒருநாள் வரும், ஒரு மாபெரும் இறைசக்தி உண்டு என்கிற எண்ணம் பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே; உளப்பூர்வமாக ஒவ்வொருவரும் அப்படி உணர்ந்தால் மட்டுமே, அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதால் மட்டுமே இந்த வீக்கங்களும் ஏக்கங்களும் விலகிப்போகும் நிச்சயம்.


அப்படியானால், இதில் அரசாங்கத்துக்கு ஏதும் பங்கில்லையா? என்று கேட்கலாம். அரசாங்கத்திற்குத்தான் பெரும்பங்கு இருக்கிறது. ஆரவாரக் கூத்துகளை விடவும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை கொடுப்பதாக அரசு அமைய வேண்டும். அதற்கு மக்களைப் போலவே, இந்தப் பதவிகளுக்கும் பொறுப்புக்கும் ஒருநாள் தாம் பதில் சொல்லவேண்டியிருக்கும் என்று உணர்கிற ஆட்சியாளர்கள் வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதென்னவோ மக்கள் கையில்தான் இருக்கிறது.


(அரப் நியூஸில் ரவி நெஸ்மேன் எழுதிய கட்டுரையிலிருந்து புள்ளிவிவரத் தரவுகள் பெறப்பட்டன. நன்றி)
இந்நேரம்.காம் இக்கட்டுரையை வெளியிட்டுள்ளது. நன்றி

Thursday, September 09, 2010

ஈத் முபாரக்!





மாதம் ஒன்று மலர்ந்ததுவே
மண்ணில் மனிதம் புலர்ந்ததுவே
வேத வெளிச்சம் படர்ந்திடவே
உள்ளம் தூய்மை அடைந்திடுமே!
நீத நெறிகள் துலங்கியதால்
நன்மை தீமை விளங்கியதே!
மீத வாழ்வும் ஒளிபெறவே
மீட்சி என்றும் இறையிடமே!

பொய்யும் புறமும் அற்றிருந்தோம்
பாவம் தொலைக்கக் கற்றிருந்தோம்.
மெய்யின் மெய்யை அறிந்திட்டோம்
மேன்மை நோன்பைப் புரிந்திட்டோம்
செய்யும் செயலில் உள்ளெண்ணம்
சிறப்பாய் இறையைச் சார்ந்துவிடின்
உய்யும் வழியும் நமதாகும்
உணர வைத்தான் இறையவனே!

நோன்பை சரியாய் வைத்தோரே
நோக்கில் வெற்றி பெற்றோராம்.
தான்தான் என்னும் தன்னலனை
தவிடு செய்தோம் பசித்திருந்தே...
ஆன்ம பலத்தின் பயிற்சிக்கே
அழகுப் பரிசாய் பெருநாளே!
மாண்பு மிக்க வெற்றியிலே
மதிப்பாய் ஈதென் வாழ்த்துகளே!

Sunday, August 08, 2010

இது குற்றாலம் கொட்டும் காலம்



(இரண்டரை ஆண்டுகளுக்கு முன் அன்புடன் மடலாற்குழுமத்தில் "இது குற்றாலம் கொட்டும் காலம்" என்ற தலைப்பில் நிகழ்வுற்ற கவியரங்கில் பாடியதிக் கவிதை. (மரபுப்பாக்கள் முயன்று கற்ற நேரம் அது)



இறைவாழ்த்து*
உற்சாகம் பொங்கிவர உள்ளத்தில் நீரருவி
சொற்களும் தித்திக்கும் செந்தமிழ் - நற்கருணை
வல்லோனே நீயளிக்கும் வாய்ப்பிதுவே என்கவிதைச்
சொல்லால் அருவிகள் செய்.


*தமிழ்வாழ்த்து
*பேச்சாய் எழுத்துமாய் பேருலகில் வாசம்நீ
மூச்சாய் எமக்கும் முகிழ்த்தாய்நின் - வீச்சினில்
பாயும் வெளிச்சத்தின் பாதையில் சென்றாலே
ஆயும் கவியாவேன் ஆம்


*தலைவர் வாழ்த்து*
அன்புடன் வந்திங்கே ஆற்றலைக் காட்டுகிற
நண்பரவர் சக்தியெனும் நற்பெயர் - பண்பில்
நிறைந்த கவிஞர் நலமுடன் வாழ்த்தி
உரைகள் சொன்னார் உயர்வு!


*அவை வாழ்த்து*
எங்கவிதை நீரருவி என்னும் கவிஞரும்
தங்கவிதை பாடும் தலைவரும் - பொங்கிடும்
நற்கவிதை இன்பத்தை நாடிவந்த வாசகரும்
குற்றாலம் என்பராம் குளித்து!


*முதன்மைக் கவிதை*
குற்றாலம் என்பதெல்லாம்
குளிக்கின்ற நீரருவி
சற்றேயோர் ஆனந்தம்
சாகசத்தின் ஓர்முழக்கம்.!


மற்றுமிது மடைதிறப்பு
மறக்காத வெண்சிரிப்பு
வற்றாத உயிரினொளி
வானுயரும் உள்ளொலிதான்..


குற்றாலம் எங்குண்டு
கவிஞனிடம் கேட்டாலே
சொற்களிலே வடித்திடுவான்
சுவையான கவியருவி.


பிற்கால உலகத்தில்
பிள்ளைகளின் நல்வாழ்வு
பொற்காலம் ஆவதற்கே
பெற்றோரின் கனவிலுண்டு.


உற்றோனில் உயர்ந்தோனாய்
உதவுகின்ற உள்ளத்தில்
மற்றோரும் மணங்கமழ
மகிழ்கின்ற மனதிலுண்டு..


கறுத்திருக்கும் அரசியலை
கவனிக்கும் பேராளர்
கருத்துடனே பொழிகின்ற
கார்மேகப் பெருமழையாம்..


அறுத்திருக்கும் இதயங்கள்
அன்பாலே ஒட்டவைக்க
அருந்தவத்தார் செய்கின்ற
அழகான பெருமுயற்சி..


பெருத்துவரும் ஊழலின்கண்
புழுத்துவரும் கையூட்டைப்
பொறுத்திருந்துப் பார்த்துவிட்ட
பொதுமக்கள் பேரெழுச்சி.!


சரித்திரத்தின் பூக்களிலே
சுவைத்தேனை உண்டுவரும்
சிரித்திருக்கும் காதலர்க்கு
சுகமான கண்காட்சி..


தரிசான உள்ளத்தும்
தன்வரிகள் எழுதிவிடும்
தாளம்போல் பேரிரைச்சல்
தண்ணீரே பாட்டாகும்.


பரிசாகும் புத்துணர்வே
பாவடிக்க மனமூறும்
பன்னீரும் நன்னீரும்
பூத்துவரும் பொதுவாக.!


அரசாட்சி இறைவனுக்கே
அறிவிக்கும் ஓர்சாட்சி
ஆன்மத்தின் கண்கொண்டால்
அனைத்துமே அருங்காட்சி.


முரசொலித்து முடிக்கின்றேன்
முதலோனின் புகழோதும்
நற்சாட்சி ஈதொன்று
நானிலத்தில் பலவுண்டே..!

Monday, April 19, 2010

வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள்.

தனக்குத் தானே தவமிருக்கக் கட்டிக் கொண்ட கூட்டில் முட்டி மோதிக் கொண்டிருந்தது அந்த உயிர். மெல்ல மெல்ல, உறுதியாக தன் போராட்டத்தில் வழியும் கண்டது. அந்தக் கூட்டில் இப்போது சிறு திறப்பு (துளை) ஒன்று உருவானது. அந்தத் துளையின் வழியே அதன் இளஞ்சிறகுகள் வெளிப்படத் தொடங்கின. ஆம், இனியும் அது புழுவல்ல. எல்லோராலும் விரும்பப்படுகிற வண்ணத்துப் பூச்சி. வண்ணத்துப்பூச்சி விரும்பப்படுவதற்கு அதன் சிறகுகளல்லவா காரணமாக இருக்கின்றன.

சிறகுகள் வந்துவிட்டால் பறக்கலாம். உலகத்து மலர்களில் தேன் உண்ணலாம். பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவலாம். இதோ, முழுதாக வெளிப்பட இன்னும் சற்றுகாலம்தான். அதன்பின் அது, தன் உலாவால், இந்தப் பூங்காவையே அழகுபடுத்திவிடலாம்.

சிறகுகள் சுதந்திரத்தின் குறியீடல்லவா!

அவ்வப்போது ஓய்வெடுத்துக்கொண்டும், போராட்டத்தைக் கைவிட்டுவிடாமலும், அந்த உயிர் முயற்சி செய்துகொண்டே இருந்தது.

அப்போது தான் அந்த மனிதன் அதைப் பார்த்தான். அவனுக்கு மிகுந்த இரக்க மனம். "அடடா, இந்த வண்ணத்துப்பூச்சி வெளிப்படுவதற்கு இத்தனைப் போராட்டம் நடத்துகிறதா?" அவன் வியந்தான். உதவ முடிவெடுத்தான். ஒரு கத்தரிக்கோலை எடுத்துவந்தான்.

அந்த கூட்டின் திறப்பை நுனியில் கத்தரித்து, அந்தத் துளையை பெரிதாக்கினான். அவன் எண்ணியபடியே, அந்த வண்ணத்துப்பூச்சி எளிதாக, உடனடியாக வெளிவந்தது. ஆனால்... ஆனால் ... அதன் உடல் வீங்கியிருக்க... சிறகுகள் சுருங்கியே இருந்தன. முழுவளர்ச்சி அடைந்திருக்கவில்லை.

அவன் அந்த வண்ணத்துப்பூச்சியை கவனிக்கத் தொடங்கினான். இதோ, எந்தக் கணமும் அதன் சிறகுகள் விரிந்து அதன் அற்புதமான அந்தப் பறத்தல் நிகழும் என்று அவன் நம்பினான்.

அப்படி ஏதும் நடக்கவில்லை.அந்தப் பூச்சியால் பறக்கவே இயலாது போயிற்று. வீங்கிய உடம்புடனும் சுருங்கிய இறக்கைகளுடனும் அது ஊர்ந்தபடியே இருந்தது. இனி காலத்துக்கும் அப்படியே இருக்கும் என்று சொல்வதைப் போல அதன் ஊர்தல் இருந்தது.

உண்மையில், தவறு செய்தவன் அந்த மனிதன் தான். தன்னுடைய இரக்க உணர்ச்சியால் அந்த வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் பெறும் போராட்டத்தில் தடை ஏற்படுத்தினான். அறியாமல் செய்த பிழை.

உடம்பிலிருந்து பாயும் திரவமொன்று சிறகுகளை உந்த, சிறகுகள் மெல்ல வலிமை பெற்று, கூட்டினை முட்டித்தள்ள, அது வெளிவருவதற்கான போராட்டம் மட்டுமல்ல. இணைச் சிறகுகளை வரமாகவே வழங்கும் இயற்கைத் தவத்தின் வழிமுறை; முடிவும் கூட.


ஆம். சில நேரங்களில் நமது தேவை போராட்டங்களிலிருந்தே கிடைக்கிறது. எந்தச் சிரமமுமின்றி எல்லாம் எளிதில் கிடைத்துவிட்டால், அவை மதிப்பற்றுப் போய்விடாதா? போராட்டங்கள் அல்லவா வலிமையை சேர்க்கவும் நம்மை உணர்த்தவும் செய்கின்றன.

இறைவனிடம் வலிமையை வேண்டினேன்.
அவனோ, துன்பங்களைத் தந்தான். அதனால் வலிமை கிடைத்தது.

இறைவனிடம் அறிவைக் கேட்டேன்
அவனோ, பிரசினைகளையே அளித்தான். அவற்றை தீர்க்கத் தீர்க்க அறிவு மேம்பட்டது.

இறைவனிடம் செல்வச் செழிப்பைக் கேட்டேன்
அவனோ, திட்டமிடும் மூளையையும், உழைக்கும் கரங்களையும் கொடுத்தான். அவற்றைக் கொண்டே செழிப்பைப் பெற முடியும் என்பது புரிந்தது

இறைவனிடம் தைரியத்தைக் கேட்டேன்.
அவனோ, ஆபத்துகளைத் தந்தான், கடந்தால் கிடைப்பது தைரியம் அல்லவா

இறைவனிடம் அன்பைக் கேட்டேன்
சிரமப்படும் மனிதர்களைச் சுட்டினான். அவர்களுக்கு உதவிட, அன்பின் பொருள் புரிந்தது

"இறைவா! சலுகைகளைத் தா" என்று வினவினேன்.
பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளை அளித்தான் அவன்.

நான் கேட்டது அப்படியே கிடைக்கவில்லை!
ஆனால், எனக்குத் தேவையான எல்லாமே கிடைத்தன.

இறைவனுக்கே எல்லாப் புகழும்

அவனே பெரும்பாக்கியம் உடையவன். மிக அழகான படைப்பாளன்.(அல்குர்ஆன் 23:14)

Saturday, March 27, 2010

வ'செ'ந்தத்தின் சிறப்பு விழா!

வலைமடல் வழியாகவும் அலைபேசியிலும் அழைக்கப்பட்டிருந்தோம் நாம்.
வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் (வசெந்தம்) கொண்டாடிய பைந்தமிழ்ப் பாவாணர் விழாவுக்கு (26/03/2010) பிற்பகல் தொழுகைக்குப் பின்னரே புறப்பட்டுச் சென்றோம்.

வாசலிலேயே உள்ளம் குளிர்ந்த வரவேற்பு கிடைக்க, உள்ளே நுழைந்தவுடன் பருகக் கிடைத்த தாளித்த மோரில் உடலும் குளிர்ந்தது.

வந்துபோகும் நுழைமதி(Visit Visa)யில் சவூதி வந்திருக்கும் புலவர் அ. அரங்கராசன் - நண்பர் காமராஜின் தந்தையார் - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் அணுக்கத் தொண்டர்களுள் குறிப்பிடத்தக்கவருமாவார். விழாவின் சிறப்பு விருந்தினரான அவரிடம் எங்களையும் அறிமுகப்படுத்தி வைத்தார்கள்: "ஐயா, இவர் ஒரு தமிழார்வலர், கவிஞர்...."

மகிழகத்தின் ஒருபக்கத்தில் உப்பல்கள்(Balloons) ஊதுதலும் உடைத்தலும் தனித்த ஆட்களு(Bachelors)க்கான வேடிக்கைவிளையாட்டாக நிகழ்வுற்றுக்கொண்டிருக்கையில், சற்று தள்ளி நாமும் தமிழார்வலர்கள் சிலரும் புலவர் ஐயாவுடன் உரையாடிக்கொண்டிருந்தோம்.

மொழிஞாயிறு பாவாணரைப் பற்றி, வள்ளலாரைப் பற்றி உளமுருகப் பேசுகிற புலவர் அ.அரங்கராசன் அறியப்படவேண்டிய, அரிய தமிழறிஞர்.

"உள்வாங்கி வெளிப்படுத்தும் திறன் (மாந்துதல்) உயிர்களிலே மனிதனுக்கே உண்டு. அதனால் தான் அவனை மாந்தர் என்கிறோம்" என்று பாவாணரையும்....
'நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து.......' - வள்ளலாரையும் மேற்கோள் காட்டிப் பேசுகிறார்.

அலைமுழக்கம் சிறப்பில்லை; ஆழி என்றால்
ஆழம்தான் சிறப்பாகும் அறிஞர் போலே..'

என்று என்னுள் ஒரு ஓடை (Channel) உற்பத்தியாகி ஓடத்தொடங்கியது அப்போது.
இனி அது பெருகலாம், இறைநாட்டம். இனியது பெருகட்டுமே.

பேசிக்கொண்டிருந்த எங்கள் நால்வரை விழாக்குழுவினர் அழைத்து, அணிகளுக்கு பழமொழி அடுக்குதலில் உதவும்படி வேண்ட, எனக்குக் கிடைத்த அணி நிறம் பச்சை. தரப்பட்ட உறையிலிருந்து கொட்டப்படும் வார்த்தைகளில் பழமொழிகளை அடுக்கித் தர வேண்டும். நாங்கள் வேகமாக அடுக்கிவிட்டாலும் வெற்றி பெற்றது வேறு அணி. (எங்கள் அடுக்குதலில் ஏதோ பிழை இருந்திருக்கலாம் போல :-)) )

அதன்பின்னர், நண்பர் கி.வை.இராசாவின் 'சிரித்து வாழவேண்டும்' நிகழ்ச்சி. எல்லோரையும் வட்டமாக அமரவைத்து நகைச்சுவை பெருகச் செய்ய வேண்டிய நிகழ்ச்சி.
என்னவோ, நம்பியார் சிரிப்பு போல நறுக்கென்று இருக்கும் என்று நினைத்தால் வீரப்பா சிரிப்பு போல கொஞ்சம் இழுவையாகிவிட்டது. சிரிப்பு வெடிகள் பரவி நிகழ்ச்சி சூடுபிடிக்க இருந்த நேரத்தில் அதைத் தணிப்பது போல் வந்த மழையும் காரணமாயிருக்கலாம்.
எனினும், ஐயா, ராசா,
- இன்னும் விறுவிறுப்பாக உங்களால் நடத்த முடியுமே நண்பா. :-)))

('வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்று ஒருவர் சொல்ல "மனசு விட்டுச்சிரித்தால் வயசு விட்டுப் போகும்' - என்னைமாதிரி எப்பவும் இளமையாக இருக்கலாம்" என்ற என்னுடைய குத்து (Punch) சிறப்பாகவும், சிரிப்பாகவும், நன்கு உள்வாங்கப்பட்டது.

அடுத்து வந்தவர் நண்பர் ராஜ்குமார். தமிழா, நீ பேசுவது தமிழா? என்று கேட்காமல் கேட்ட நிகழ்ச்சி.
நடத்துபவரும் ஆங்கிலச் சொற்களுக்கான சரியான தமிழ்ச்சொற்களைத் தெரிந்து வைப்பது இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு இன்றியமையாத ஒன்றாகும். மற்றொரு (மேற்)பார்வையாளரைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை, பாருங்கள்.

சேக்தாவூத் அண்ணன் ஒருநிமிடத்தை தமிழில் முதலில் கடந்து பரிசு பெற்றார். நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க,கடைசியாகப் பங்குபெற்ற எனக்கும் பரிசு கிடைத்தது.

மன்ஃபுவா மாறன் குழுவினரின் நகைச்சுவை நாடகம், மக்களை சிரிக்கவைக்கும் தன்நோக்கில் வெற்றிபெற்றது. ஒருசில நடன அசைவுகளை (மட்டும்) தவிர்த்திருந்திருக்கலாம் என்பது என்கருத்து.

தனித்திறன் போட்டியில் சிரிப்பொன்றை சொல்ல வந்தவர் பார்வையாளர் அனைவரையும் தன் சரளமான சேலத்துப் பேச்சால் வீழ்த்தினார். அவர் பெயர் முகமது அலி.

சிறுவர் சிறுமியரின் தனித்திறன்களாக நாட்டியமும், பாடலும் மிகவும் வியக்கவைத்தன. எத்தனை எத்தனை திறமைசாலிகள். குறிப்பாக, அன்பே என் அன்பே பாடியவனின் தாம்தூம்.


நண்பர் சீ.ந இராசாவின் இயக்கத்தில், அழகப்பனின் சிறப்பான நடிப்பில் 'தமிழா, தமிழா' நாட்டிய நாடகம் அருமையாக இருந்தது. "இந்தியர்கள் நல்லவர்கள்;நம்பிக்கைக்குரியவர்கள் சிறந்த உழைப்பாளிகள்" என்ற கருத்தை வலியுறுத்தியது. சிறுமிகளின் நடனமும், தேர்ந்தெடுத்த பாடல்களும் முதல்தரம்.இயக்குநர் நண்பர் சீ.ந.இராசாவை வாழ்த்தியாக வேண்டும். இராசா சொன்னது: "இந்த நாடகத்தின் அருமையான வெற்றிக்கு திருமதி.இரம்யா காமராஜ் அவர்களின் பின்னணி உழைப்பு(ம்) காரணம்". வாழ்த்துகள் சகோதரி.

புலவர் அரங்கராசன் அவர்களுக்கு சிறப்புச் செய்யப்பட்டது. அவர்தம் பேச்சுக்கும் சற்று அதிகநேரம் முன்னதாகக் கொடுத்திருக்கலாமே என்று எனக்குத் தோன்றியது.

உழைக்கும் வர்க்க (Blue Collar Workers)நண்பர்களை விழாவுக்கு அழைத்து மகிழ்வித்து, நிலாச்சோறு நிகழ்ச்சியில் பங்கெடுக்க வைத்தது; நிகழ்ச்சிக்கென்று எந்தத் தொகையும், கட்டணமும் யாரிடமும் கோராமல், நண்பர்களும், புரவலர்களுமாகச் செலவினைப் பங்கிட்டுக்கொண்டது; மரம் நடுதல், ஆதரவற்ற சிறார்களுக்கு ஆடை அனுப்பிவைத்தல், தொடர்ந்து, உழைக்கும் வர்க்க நண்பர்களை உயர்வு செய்வது என்று வசெந்தம் குழுவினரின் மனிதநேயப் பணிகள் மனமாரப் பாராட்டத்தக்கவை. வாழ்க, வளர்க.

தன்னலப் பெருக்கோ, தான்மைச் செருக்கோ இடம்பெறாத அழகிய விழாவொன்றில் கலந்தும்,களித்தும் இனிய மனநிலையுடன் இல்லம் திரும்பினேன் என்று முடிக்குமுன்

எனை ஈர்த்த ஒரு சிறு குழந்தையை,அதன் மழலையை தமிழாய் வார்த்தேன் மனதுக்குள்

பிஞ்சுமலர்ப் பார்வையினை; பிள்ளைக் கனியமுதை
கொஞ்சிடத் தோன்றுதே கோமகளே - நெஞ்சிலே
எஞ்சிடும் ஞாபகத்தில் எம்ம(க்)கள் எண்ணிட
விஞ்சிடும் பாசம் விளைந்து!

Sunday, March 21, 2010

மனிதமே புனிதம்!

( ஐந்தாறு வருடங்களாக வலைப்பதிவிட்டு வந்தாலும், ஏனோ அத்தனை ஆர்வங்காட்டுவதில்லை நான்.
குழுமங்களில் எழுதுவதையாவது வலையில் பதிவிட்டுவைக்கலாமே என்று இன்று ஒரு நண்பர் அன்புக்கோரிக்கை வைக்க அதனடிப்படையில் ஜனவரி 26ல் குழுமங்களில் எழுதிய மனிதமே புனிதம்!' என்கிற கட்டுரையை பதிகிறேன். படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள்- நன்றி)

மனிதமே புனிதம்

இறைமையை; அதன் நற்பண்புகளை பிரதிநிதித்துவம் செய்கின்ற மனிதமே புனிதம் என்கிற மகத்தான நற்செய்தியை ஓங்கி ஒலிக்கச் செய்வதாகவும்.....

ஒவ்வொருவரும் தத்தம் தனித்திறனைக் கண்டறிந்து மானுடத்திற்குச் சேவையாற்றுவதில் தான் அவரவர் வாழ்வின் பொருளும் வெற்றியும் அடங்கியிருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துவதாகவும்......

இன்னும் சொல்வதென்றால்...

எண்ணமே செயலுக்கு அடிப்படை....

ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள்; அவரவர் பொறுப்புகள் குறித்து விசாரிக்கப்படுவீர்கள் என்ற நபிமொழிகளுக்கும்,

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய(து) உயர்வு.
என்ற திருக்குறளுக்கும் விளக்க உரையாகவும் அமைந்திருந்தது அந்த இனிய நிகழ்ச்சி.

ஆம். சகோ.கஸ்ஸாலி அவர்கள் (ZEE TEE Express) ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் தன்னைத்தானே அறிந்துகொள்ளத் தக்க விதத்தில் இனியதொரு உரையை, அல்ல, அல்ல, ஒரு அழகிய கலந்துரையாடலை நிகழ்த்தினார் சகோ.சாதத்துல்லாஹ் கான்.
Islamic Voice என்கிற, பெங்களூரூவிலிருந்து வெளிவரும் ஆங்கிலமாத இதழின் ஆசிரியர்.

“நாம் அனைவரும் திருத்தத்தான் நினைக்கிறோம்; நம்மைத் தவிர”

என்பதை மிக அழகாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிய இந்தப் பேராசிரியர், “உண்மையில் ஒவ்வொருவரும் தம்மைத்தாமே திருத்திக்கொள்வதே இவ்வுலகம் பிரசினைகளிலிருந்து விடுபட வழி என்பதை இயல்பான கருத்துகளால் சுட்டினார். தீதும் நன்றும் பிறர் தர வாரா.

பொதுவாக மனிதன், ஒட்டுமொத்தஅறிவில் 1% மட்டுமே பெற்றிருக்கிறான். அதை அறிந்தும் இருக்கிறான். அதுபோல, சில வகை அறிவு பற்றி தான் அறிந்திருக்கவில்லை என்பதையும் அவன் அறிந்திருக்கிறான். இது 3% வரை இருக்கும்.

மீதமுள்ள 96% அறிவு பற்றி எந்த மனிதனும் அறிந்திருக்கவில்லை என்பதை விட, அதை தான் அறிந்திருக்கவில்லை என்று கூட அவன் அறிந்திருக்கவில்லை என்பதைத் தெளிவாக்கினார்.


அறிந்திருப்பதும் அதை அறிந்திருப்பதும் 1% என்றால், (அறிவு பற்றிய அறிவு)
(தன்) அறியாமையையை அறிந்திருப்பது 3% (அறியாமை பற்றிய அறிவு)

அறியாமலிருப்பதை அறியாமலிருப்பதுவே மீதமுள்ள 96% எனலாம். (அறியாமை பற்றிய அறியாமை)
இது அனைத்து மனிதருக்கும் பொருந்துவதே.

இந்த 96% ,எதுவென்றே அறியாத அறியாமையே ‘இருட்டான அறியாமை’ எனப்படுகிறது. ‘Blind Spot' என்றார் பேராசிரியர். தன்னிடமிருக்கும் இந்த ‘இருட்டான அறியாமை’யை எந்த மனிதனும் காண முடிவதில்லை. கண்டுவிட்டால் அது ‘அறியப்பட்ட அறியாமை’ ஆகிவிடும் , (அந்த 3% ல் சேர்ந்துவிடும்).

இதன் பொருள், அறியாமையின் அறியாமை எனப்படும் இந்த இருட்டான அறியாமைக்கு ஒரு உதாரணம் கூட சொல்லிவிட முடியாது. தெரிந்தால் தானே!

எனவே, நாம் இயன்ற வழிகளிலெல்லாம் நம் அறிவைப் பெருக்கிக்கொள்வது அத்யாவசியம். Knowledge is Power.

இந்த Blind Spot எனப்படுகிற நம் அறியாமையின் இருட்டுப் பக்கங்களை, நம்மால் காண முடியாவிட்டாலும், மனைவி உட்பட நம் மேலதிகாரிகளே (உரிமையாளர்கள்?) எளிதாகக் கண்டுகொள்வர் என்பதையும் பேராசிரியர் நகைச்சுவையாக விளக்கினார்: "நீ(ங்க) ஒண்ணத்துக்கும் லாயக்கில்லே" :-)))

மன்னர் மகனாக இருந்தாலும், மண்குடிசை மைந்தனானாலும், மனித சாதனைகளின் மூலங்களான, எண்ணம் (Thought), சொல்(Word), செயல்(Action) ஆகியவற்றை இறைவன் பாரபட்சமின்றி (அனைத்து மனிதருக்கும்)ஒன்றுபோலவே வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்ட பேராசிரியர், அதை வளர்த்தெடுக்கும் விதத்தில் தான் மனிதர்கள் வேறுபட்டுப்போய் விடுகிறார்கள் என்றார்.

ஜாதி, இனம், மதம், மொழி போன்ற எல்லா வேறுபாடுகளையும் கடந்து, சகமனிதனை, மனிதத்திற்காகவே நேசிக்க வேண்டும்
அப்படி மனிதர்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கத் தொடங்கிவிட்டால்........ வெறுப்பு காணாமல் போய்விடும். எங்கே வெறுப்பு இல்லையோ... அதனால் ஏற்படும் பிரசினைகளும் இல்லாமலாகி விடும்.

சகமனிதருக்கு பாராமுகம் காட்டுபவர் செய்கின்ற இறைவணக்கத்தை இறைவன் விரும்புவதில்லை என்றார் பேராசிரியர். "பக்கத்துவீட்டான் வறுமையில் வாடிக்கொண்டிருக்கையில் நீ பத்து ஹஜ்ஜு செஞ்சு என்ன பிரயோசனம்?"

"அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் உண்ணுபவர் இறைநம்பிக்கையாளராக இருக்க முடியாது" என்ற நபிமொழி என் நினைவுக்கு வந்தது.

மேலும் பேராசிரியர் கூறுகையில், கணக்கு வழக்குகள் துல்லியமாகத் தீர்க்கப்படும் அந்த நாளில், மனிதனிடம் இறைவனே இப்படி கேட்பானாம்:

" நான் பசியோடு இருந்தேனே, உனக்கு வசதியினை நான் அளித்திருந்தும் நீ எனக்கு உணவளிக்கவில்லையே?"

இறையடியானாகிய அந்த மனிதன் பதற்றத்தோடு, "இறைவா, நீயே சர்வ வல்லமை படைத்தவன், உனக்கு எப்படி பசி ஏற்பட முடியும்?" என்று வினவ,
அதற்கு இறைவன், "இன்ன மனிதனை இன்ன இடத்தில் நீ பசியோடு இருக்கக் கண்டிருந்தும் உணவளிக்காமல் போனாயே.... அவனுக்கு உணவிட்டிருந்தால்.. அங்கு என்னை நீ கண்டிருப்பாய்" என்ற பதிலளிப்பானாம்.

மேலும் அவர் நபிவழிக் கிரந்தங்களிலிருந்து மேற்கோள் காட்டுகையில் " வேசியொருத்தி வாயில்லாப் பிராணியான ஒரு நாய்க்கு தாகம் தணித்த இரக்கச்செயலால் இறைவனின் கருணைப்பார்வைக்கு ஆளானாள்" என்பதைக் குறிப்பிட்டார்.

மிருகங்களைக் கூட உணவுக்காக அன்றி கொல்லக்கூடாது என்ற பேராசிரியர், அதுவும் இறைவனின் படைப்பு என்ற உணர்வை நாம் மறந்து விடக்கூடாது என்றார்.

ஒரு உண்மையான இறையடியானால் சக மனிதர்களை எப்படி வெறுக்க முடியும்?. எர்ன்று கேள்வி எழுப்பிய பேராசிரியர், அப்படி வெறுத்தால் அது இறைவனின் படைப்பொன்றை அவமதித்த குற்றமாகும் என்று தெளிவுறுத்தினார்.


உண்மையில் வெறுப்பு, ஆணவம், கோபம், சுயநலம் போன்றவை சாத்தானிய இயல்புகள். இறைவனின் பிரதிநிதியாகத் தனனைக் கருதும் மனிதன், இவற்றைக் கைவிட்டுவிட்டு இறைமை வலியுறுத்தும் அன்பு, நேசம், உண்மை, பணிவு, பொதுநலநோக்கு, நல்லெண்ணம் போன்றவற்றையே மேற்கொள்ளவேண்டும்.

மனிதன் மேம்படுவதும், சீரழிவதும் தன் எண்ணங்களாலேயே என்பதை அழகாக விளக்கினார்.
எண்ணத்தூய்மையை வலியுறுத்திய அவர் பேச்சில் " இறைவன் உங்கள் புறத்தோற்றங்களைப் பார்ப்பதில்லை; உங்கள் உள்ளத்தையே பார்க்கிறான்" என்பது அழகாக வெளிப்பட்டது.

எடுத்தவுடனேயே, "என்னால ஆகாது", "இது சரிப்பட்டு வராது" "இதெல்லாம் சாத்தியமேயில்லை" என்று எதிர்மறை எண்ணங்களை மொழிவீர்களேயானால், உங்களுக்கு நீங்களே சிறைப்பட்டு விட்டீர்கள் என்று அர்த்தம் என்றார்.
உண்மைதான், சொந்தச்சிறைகளில் தானே பெரும்பாலான மக்கள் 'அக'ப்பட்டுக் கிடக்கிறார்கள்.

தேர்ந்தெடுக்கும் உரிமை (Choice) இறைவன் மனிதனுக்கு அளித்த மற்றொரு வரம்.
நாம் நன்மையை விட்டுவிட்டு தீமையை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்,

மொழிவது கூட உள்ளத்தில் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ பாதிப்பை ஏற்படுத்த வல்லது.
எனவே,
பேசினால், நல்லதையே பேசுங்கள்.
ஆம், மொழியும் விதத்தில் தான் எத்தனை விளைவுகள்.
"அன்பினால் சிங்கத்தின் மீசையைக் கூட பிடுங்கலாம்" என்கிறது ஒரு முதுமொழி.

தமிழில் கூட அழகாகச் சொல்வார்கள்: "எண்ணம் போல் வாழ்வு" என்று.

அலுவலகமானாலும், இல்லறமானாலும், முதல் சில மாதங்களில் காணப்படுகிற மகிழ்ச்சியும் நிம்மதியும் போகப்போக குறைந்துவருவதன் காரணத்தைச் சிந்திக்கத் தூண்டிய பேராசிரியர்,

நோக்கத்திலிருந்து நழுவி சுயநலத்தில் வீழ்தலே அதற்குக் காரணம் என்பதை அழகுற, காட்டுகளுடன் எடுத்தியம்பினார்.

அலுவலகம்/நிறுவனம் என்றால்... முதலில் நிறுவன நலன்களை முதன்மைப்படுத்தி உழைக்கிற நாம், படிப்படியாக... தாழ்ந்து... தன்னலமே பிரதானம் என்று ஆவதே.. அந்த மகிழ்ச்சிக்குப் பதிலாக மன அழுத்தத்தினை உண்டாக்குகிறது என்றார்.

"பிறருக்கு நீங்கள் அளிக்கும் எதிர்மறை பதில்கள், உங்களுக்கு நீங்களே அளித்துக்கொள்வதாகவே பொருள்" . விதைப்பதுவே அறுக்கப்படும்.

அதே போல, இல்லறம் என்று வருகையில்... கல்யாணத் தொடக்கத்தில் காணப்படும் அன்பு மெல்ல, மெல்ல மங்கி ஒளியிழந்து.. ஒருவருக்கொருவர் குறைகள் காணத் தொடங்கிவிட்டால்... அங்கே,
தான்மை மேலோங்கிவிடுகிறது. விளைவு, நிம்மதியிழப்பும் கவலையும் தான் என்றார்.


தயக்கத்தை உடைப்போம்; மனித மனம் இயல்பாகவே எதிர்ப்பு (Resist) காட்டக்கூடியதாகவே இருக்கிறது.
எந்த நல்ல காரியத்திற்கும் "அதெல்லாம் வேணாம்ப்பா" என்பவர்களே அதிகம்.

தயங்காமல், களம் காணுவோம். நமது தனித்திறனைக் கண்டறிவோம். இந்த உலகம் நமக்கானது. இறைவனால் தன்னாட்சி உரிமையும், தேர்ந்தெடுக்கும் உரிமையும் வழங்கப்பட்டு இந்த உலகத்திற்கு நாம் வந்தது வெறும் பார்வையாளராக இருந்துவிட்டுச் சென்றுவிடுவதற்கா? .

நானும், நீங்களும் இந்த உலகத்தின் பங்களிப்பாளர்களுள் ஒருவர். நாம் பங்களிக்கும் இந்த உலகம், இனிய உலகமாகத் திகழ வேண்டாமா?


நிகழ்ச்சிக்கு வந்து, பயன் பெற்றவர்களில் பாராட்டாதவர்கள் யாருமே இல்லை.


மனிதம் மதிப்போம் அதுவே புனிதம் ஆகும்.

எண்ணத்தில் நல்லதைப் பேணுவோம் - அதுவே மொழியாகிறது.
மொழியில் நல்லதைப் பேணுவோம் - அதுவே செயலாகிறது.
செயலில் நல்லதைப் பேணுவோம் - அதுவே வாழ்க்கையாகிறது.

ஆம். நமது வாழ்க்கை நமது கையில்.

வாழ்த்துகளும் நன்றியும்.

Tuesday, February 23, 2010

சொல் வெடித்த பொழுது...


வார்த்தைகளால் நெய்யப்பட்ட

எதிர்பார்ப்பின் சிறகுகள்

ஒரு மலை மீது

தவமிருந்த பொழுது

"மறந்துவிடு" என்னும் ஓர் சொல்

வெடித்துப் பரவியது.



காரணத்தின் கத்தியை

அறியாமலேயே ஏந்தியவனாய்

உயரப் பறப்பதற்காகவே

ஊதப்பட்ட பலூனில்

காற்றும் அறியாததொரு

கீறலைச் செய்து விட்டு

விகல்பமற்ற

குழந்தையாகிவிடுகிறாய்.



தகிக்கும் தாகத்தில்

தள்ளிவிட்ட பின்னர்

நிராசையின் கங்குகளால்

நிரப்பவும் செய்கிறாய்.

நீயறியாமலே.


மன்னிக்கவும் மறக்கவுமாய்

கற்று வைத்த வாழ்க்கை

கதவு திறந்துவிடுகிறது.



பயணிக்கத் தயாராயிருக்கும்

பாதங்களுக்கு

இன்னமும் நீண்டிருக்கின்றன

பாதைகள்.



நன்றி: கீற்று

Saturday, February 06, 2010

எது கவிதை?



கைதட்ட(ல்) வேண்டுவதா கவிதை? - எண்ணம்
கருத்தணையத் தூண்டுவதே கவிதை.-மின்னும்
பொய்யூற்றிப் புலம்புவதா கவிதை? - நன்கு
புனைந்தாலும் பேருண்மை கவிதை. - கண்ணில்
மைதீட்டும் செயற்பாடா கவிதை? - மண்ணில்
மெய் தேடும் சமன்பாடே கவிதை. - இன்னும்
வையத்தில் வானவில்லா கவிதை? - உண்மை
உள்ளத்தில் மலர்த்துவதே கவிதை ஐயா!

சந்தமதன் வசந்தத்தை செவிகள் கேட்க
சாரமது போதுமென்று சிலபேர் சொல்ல
முந்தையதே கவிதையாகும் மற்ற யாவும்
முறையற்றுப் போனதென்ற முறையீ டுண்டு
பிந்தையதே கவிதையாகும்; பொருளே தேடல்
பொருட்டில்லை மரபென்ற பேச்சும் உண்டு.
எந்தவிதம் கவிதையாகும் என்னைக் கேட்டால்
இதயத்தில் பதிவதையே கவிதை என்பேன்.

கந்தகத்தைக் கொண்டிருக்கும் கவிதைப் பேனா
கொடுமைகளை எரிப்பதிலே நெருப்புக் குச்சி
விந்தைகளை வியப்பதுவே விருப்பம் என்று
உயர்மொழியில் பூச்சூடும் வனிதைப் பாக்கள்
சொந்தகதை சோகத்தைச் சொல்லும் சொற்கள்
சுகங்காண இலக்கியத்தைச் செய்யும் கைகள்
இந்தவிதம் கவிவகைகள் எண்ணி மாளா
இருந்தாலும் கவிதைக்கோர் கருத்தைச் சொல்வேன்.

சிந்தையிலே பூபூக்கும் கவிதை வந்து
சிகரத்தை கால்களுக்குச் சொல்லிப் போகும்
சந்தையிலே கிடைப்பதல்ல; கவிதைத் தன்னை
சூல்கொண்டு பிரசவிக்கத் தாய்மை வேண்டும்
மந்தையிலே ஒன்றில்லை; கவிதை என்றால்
மலையுச்சி தீபம்போல் வெளிச்சம் பேசும்
பந்தயங்கள் கவிக்கில்லை; பாரில் யாரும்
பெருவானில் ஓடுதளம் அமைப்ப தில்லை

Tuesday, April 14, 2009

பொதுவாய் இருக்கும் பரந்த வானம்




கவியரங்கக் கவிதை

நாள்: சித்திரை முதல்நாள் விரோதி ஆண்டு.
அவை: எழுத்துக்கூட கவியரங்கம்
தலைப்பு: 'மனிதம்'


கடவுள் வாழ்த்து
(நிலை மண்டில ஆசிரியப்பா)

தேவ குணமும் மிருக குணமும்
சேர்த்து செய்த மனித இனத்தை
பாவ புண்ணிய கரைகள் நடுவே
பாரில் வாழ வைத்தனை இறைவா!
ஆவல் தூண்டும் பாவம் நீக்கி
அறிவே மிகைக்கும் ஞானம் நோக்கி
வாழும் காலம் யாவும் எங்கள்
வெற்றியின் உறுதி வழங்கிடு வாயே!

அவை வாழ்த்து (அறுசீர் விருத்தம்)

எழுத்துக் கூடம் அற்புதமே
எங்கள் தாகம் தணிப்பதிலே!
பழுத்த அறிஞர் பெரியோரும்
பன்மைத் திறனில் மற்றவரும்
அழுத்தி முத்திரைப் பதிக்கின்றார்
அதனைப் பார்த்து வியக்கின்றேன்
கழுத்தின் அணியாய் தமிழுக்கே
கண்டேன் அவையை; போற்றுகின்றேன்.

தலைவர் வாழ்த்து (அறுசீர் விருத்தம்)
இளைஞர் என்று சொல்லாதீர்
இவரோ இங்கே மூதறிஞர். (ராஜா ஜி :-) )
விளையும் தமிழும் நற்பயிராய்
விதைகள் தூவும் உழவரிவர்
தலைமைக் கவிஞர் வரிசையிலே
தகுதி மிக்க தமிழ்வாணர்.
விலையே இல்லா நற்பண்பில்
உயர்ந்து நிற்கும் என்நண்பர்.

"அலைந்து திரியும் காலமய்யா
அதனால் பின்னர் எழுதுகின்றேன்"
நிலையைச் சொன்ன பின்னாலும்
நீதான் முதலில் எழுதென்றார்.
வலையில் இழுத்துப் போட்டாரே
வந்தேன் நானும் உங்களிடம்!
இலையில் உணவாய் என்கவிதை
எடுத்துச் சுவைத்துச் சொல்வீரே!

முதன்மைக் கவிதை (எண்சீர் விருத்தம் (அ) 'என்'சீர் விருத்தம்)

இவ்வூரில் இவ்விடத்தில் இன்னார் பிள்ளை
....எனவிரும்பி பிறக்கத்தான் யாரால் ஏலும்
"1எவ்வூரும் எமதூரே" தமிழன் சொன்னான்
....யாவரையும் கேளிர்தான் என்று கொண்டான்
அவ்வாறே அறிந்திருந்தும் ஆசை உந்த
....அரசியலின் அவலத்தில் வீழும் மாந்தர்
வெவ்வேறு காரணத்தை கற்பிக் கின்றார்
....வேறுபாட்டில் ஆதாயம் தேடு கின்றார்.

2ஒன்றலவோ குலமென்றான் ஓதி வைத்தான்
....ஒருவன்தான் தேவனென்
ற உண்மை சொன்னான்
*நன்றிதனை கொள்கின்ற நெஞ்சம் தன்னில்
....நன்னலமே அனைவருக்காய் நாட்டங் கொள்ளும்.
தென்றலென வாழ்வாகும் உலகம் பூக்கும்
....தீந்தமிழும் இன்பந்தான் தீண்டத் தீண்ட!
என்றுவரும் பொற்காலம் இனியும் மீண்டும்?
....எங்குலமும் உங்குலமும் ஒன்றிப் போமோ?

மொழியென்ன மதமென்ன மனிதம் பார்க்க
....முன்வந்(து) உதவுகின்ற மனமே வேண்டும்.
விழிநீரை பிறருக்காய் வடிக்கும் போதில்
....உள்ளத்தின் அழுக்குகளும் கரைந்து போகும்
இழிவென்று மற்றவரை எண்ண வேண்டா
....இல்லாத நற்குணத்தை கற்கப் பார்ப்போம்
வழியெங்கும் பாடங்கள்; வாழ்க்கைப் பள்ளி
....வகைவகையாய் ஆசிரியர் வானின் கீழே!

நிழல்போலும் மனிதருண்டே;இரவில் நீங்கல்
.....நிறம்மாறும் பச்சோந்தி; நச்சுப் பாம்பு
பழிகாணும் குணமிருப்பின் பாசம் எங்கே?
.....பண்பாட்டைப் புதைக்கின்றார் பாத கத்தார்.
விழல்போல சிலரிருப்பார் விரயம் நீரே
....விலங்குகளை ஒத்திருப்பார் மனிதர் தாமா?
சுழலொன்றில் சிக்கிவிட்ட சிலரும் உண்டு.
....சிந்தையிலே மண்மூடி சிதைகின் றாரே!

தன்னுயர்வை கொள்ளத்தான் பிறரை ஏய்க்கும்
....தரங்கெட்ட போக்குகளில் தனியன் அன்றி
மன்னுயிரைக் கொல்கின்ற மதத்தின் வாதம்
....மானத்தைக் குலைக்கின்ற மூர்க்கர் தம்மில்
என்னினமே பெரிதென்னும் இழிந்த உள்ளம்
....இவர்க்கிங்கே சளைக்காமல் இன்னோர் பக்கம்
தன்னினமே அழிந்தாலும் தயக்கம் இன்றி
....தன்னலனை; பதவியினைத் தாங்கும் போக்கு!


கண்பார்க்க முடியலையே கொடுமை ஐயோ
....காதுக்கும் சேதிவர கதறும் உள்ளம்
மண்மீதில் எளியவரை வதைக்கும் தீயோர்
....மனதுக்குள் எழுதட்டும் இறையின் நீதி
கண்ணீரும் புரட்டிவிடும் காலக் கோளை
....கீழதுவும் மேல்வருமே கறங்கின் சுற்றில்.
விண்ணுக்கும் எட்டிவிடும் வேத னைமூச்சும்
.....ஒருநாளில் புயலாகும்; உலகை மாற்றும்.

உழவுக்கும் அழிவுக்கும் உங்கள் கைகள்
....உள்ளபடி 3பிறர்தரவோ தீதும் நன்றும்?
மழையாக அன்பதுவும் மனதில் பெய்ய
....மனிதத்தின் பயிர்வளரும் மணமும் வீசும்
அழகான உலகத்தில் வாழ வேண்டின்
....அதற்கேனும் மனிதத்தை பேண வேண்டும்
தொழும்நேரம் இறைவனையே கேட்டு நிற்போம்
....தொலையாமல் மனிதத்தை காக்க வேண்டும்.

000000000000000000000OOO0000000000000000000000


பி.கு:
1. யாதும் ஊரே யாவரும் கேளிர்
2. ஒன்றே குலம்; ஒருவனே தேவன்
3. தீதும் நன்றும் பிறர்தர வாரா
* நன்றிதனை = நன்று இதனை (அ) நன்றி தனை


(கவியரங்கத் தலைவர் ராஜா இந்தத் தலைப்பைத் தந்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. இந்தக் கவிதை எழுதி முடித்த இந்நேரம் ஊமையின் கண்ணீராய் ஓர் ஆறுதல் உள்ளே வடிகிறது)

Thursday, March 12, 2009

கனவின் திசைகளுக்கப்பால்...........


கனவின் திசைகளுக்கப்பால்.....


காதலின் திரை மறைத்த
பொய்களுக்குப் பின்னே
நாம் நாயகர்களானோம்
நமக்குள்ளே.

கனவில் நெய்த அங்கி
வாழ்வின் முட்களில்
கிழிபடுகிறது எப்போதும்

காலத்தின் நிர்வாணத்தில்
கண்டுகொண்டோம்
நாம் நம்மை.

அதன்பின்
ஆடைகள் குறித்த
அலட்டல்கள் தவிர்த்தோம்

ஒப்பனைகள் மாற்றாத
'உள்'நிறத்தில்
அந்த அந்தகார ஆழத்தில்
இன்னும் வசீகரித்தபடி
ஒரு மலர்.


(உயிரோசையில் வெளியாகியிருக்கிறது)

Tuesday, March 03, 2009

எண்ணங்களின் பயணத்தில்......


எண்ணங்களின் பயணத்தில்..........


போவதும் வருவதும்
பொதுவாய் மரபு
ஆவதும் அழிவதும்
அன்றாட இயல்பு.

எண்ணங்களின் பயணத்தில்
இயங்குகின்ற மனது.
வண்ண வண்ண கனவுகளே
வாழ்க்கைக்கு விருந்து.

ஆசையில் வருவதெல்லாம்
அடுத்தவர் 'இடம்' தான்
ஓசையறும் சிந்தனையில்
உலகமும் மடம் தான்.

பிறப்பதும், பின்னொரு நாள்
இறப்பதும்; இடையிலே
சிறப்புகள் தேடித்தேடி
செல்வதுவும் பயணந்தான்.

எல்லாப் பக்கத்திலும்
இருக்கலாம் பாதைகள்
வல்லோன் வகுத்தாற்போல்
வாய்ப்பதுவே வழிப்பாதை.

வாய்த்ததொரு வாகனத்தில்
வழியெங்கும் கோரிக்கை
வாட்டமின்றி சென்றாலே
வாழ்க்கை கேளிக்கை.

கயிறுகளாய் பாசபந்தம்;
கட்டப்பட்ட கைகால்கள்.
வயிறுக்காய் நகர்ந்தாலும்
வாழ்நாள்கள் உயிர்பூக்கும்.

'நிலை'யில்லாக் காலம் தான்
நதியாகப் பாய்ந்து வரும்
விலையில்லா நேரத்தை
விதியென்று தள்ளாதீர்.

தாகத்தை அதிகரிக்கும்
தண்ணீரும் இதுவே தான்
ஏகதேச அறிவுரையோ
'எல்லாம் கடந்து போகும்'.

காற்றெங்கும் இறக்கைகள்
கைகளாய் பரிணமிக்கும்
ஆற்றலுள்ள மனிதருக்கு
அனைத்துமே பக்கந்தான்.

நன்றி: விகடன் - இளமைக் கச்சேரி

(தொடர்ந்து வலைப்பதிவில் இயங்க அன்புடன் கோரும் நண்பர் ரிஷானுக்கு(ம்) சிறப்பு நன்றி)

Tuesday, February 24, 2009

வலைப்பதிவர்களிடம் பத்து கேள்விகள். :-)

வலைப்பதிவர்களிடம் பத்துகேள்விகள்

1). தமிழ்மணத்தைத் திறந்தவுடன் சூடான இடுகைகளை; மறுமொழியிடப்பட்டவற்றை நோக்கிப் பாய்கிறீர்களே..ஏன்?

2). சிலநிமிடங்களுக்கொரு முறை தன்னிச்சையாக தமிழ்மணத்தை மீள்திறப்பு (ரெஃப்ரெஷ்) செய்கிறீர்களே...ஏன்?

3). தெரியாதவர்கள் போடுவது பக்காப்பதிவாக இருந்தாலும் கண்டுகொள்ளாமல், தெரிந்தவர்கள் போடும் மொக்கைப்பதிவுக்கே பின்னூட்டுகிறீர்களே... ஏன்?

4). கவர்ச்சியான; அதிர்ச்சியான தலைப்புகளில் மயங்கிவிடுகிறீர்களே... ஏன்?

5). 'மீ த ஃபர்ஸ்ட்' என்ற பின்னூட்டத்திற்கு மட்டும் இவ்வளவு கிராக்கி ஏன்?
அதற்கப்புறமும் மீ த செகண்டு, மீ த தேர்டு அவசியமா? ரிப்பீட்டே அவசியமா :-))

6). பதிவையே படிக்காமல் 'மீ த ஃபர்ஸ்ட்டு' போட வேண்டியது அவசியம்- ஏன்?

7). சீரியஸான பதிவுகளுக்கு கூட்டத்தோடு ஆமாம்சாமி போடுவது ஏன்?

8). உங்கள் பிம்பத்திற்கு அப்பால் சொல்ல வேண்டிய கருத்துகளுக்கு வேறு பெயரில் அல்லது அனானியாக ப் போய் பின்னூட்டுகிறீர்களே.. ஏன்?

9). பின்னூட்டங்களை அதிகரிக்கும் வழியாக.. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்கிறீர்களே... ஏன்?

10). ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஏதாவது ஒரு சுழலில் (உதாரணம்: பத்து கேள்விகள்) சிக்கிக்கொள்கிறீர்களே.. ஏன்?

( பி.கு: பதிவுக்கு ஆலோசனை: 'இளமை விகடனில்' உனக்கென மட்டும் எழுதும் ஒரு மூத்த பதிவர்)

Wednesday, February 18, 2009

இன்று வேறு நாள்....

இன்று வேறுநாள்


நேற்றைப்போலில்லை....

கணப்பொழுதில் நீண்டுவிட்டது
வெயிலின் கொடு நாவு

வெளியெங்கும்
பரவியிருக்கும் வெறுமை
முகத்திலறையும் பூதம்.

இரத்தம் வெளிறி
உறைந்து கிடக்கின்றன
இரவு பகல்கள்

பொருள் பிரிக்க..
சக்தி இழக்கிறது வாழ்க்கை.

காலடித்தடங்களில்
ஞாபகத்துணுக்குகள்
சிந்தியபடி மனம்.

நீ ஊருக்குப் போயிருக்கிறாய்!


நன்றி: கீற்று . (06 06 2007)

Wednesday, February 04, 2009

மெளனங்கள்.


முட்டைகளை ஒத்திருக்கின்றன
மெளனங்கள்.

வெண்மையாலான ஓடு
வெளித்தெரியும்
சமாதானமாகவோ...
சம்மதமாகவோ...!

உள்ளிருப்பு தெரிவதில்லை
உடையும் வரை!

பொறுமை காத்து
பிரசவிக்கச் செய்யலாம்
புதிய பிறப்பை!

எனினும்..

உடைக்கப்பட்டே
உட்கொள்ளப்படுகின்றன
பெரும்பாலும்!


இன்னமும்
உடைக்கப்பட முடியாமலிருக்கும்
ஒற்றை முட்டையில்
உறைந்திருக்கலாம்
ஓர் மகா நிசப்தம்.


(உயிரோசை மின்னிதழில்
வெளியாகியிருக்கிறது).

Monday, January 19, 2009

கவிதை: "இனிவரும் நாள்கள்"

பண்புடன் கவியரங்கில்....

இறைவாழ்த்து:

உயிருடன் உண்மை உயர்வை அளித்தே

இயல்பினில் நன்மை இருக்கவும் செய்து

மனிதரென நம்மையும் மாண்புற வைத்த
புனித இறைக்கே புகழ்.

தமிழ்வாழ்த்து
சொல்லில் அதன்பொருளில் சொந்தமாய் இவ்வுலகின்
எல்லா மொழிக்கும் இலங்கிடும் ஆதிநீ

வல்லமையில் பேரழகில் வாழ்பரப்பில் நற்றமிழே

இல்லை உனக்குமோர் ஈடு!


தலைவர் வாழ்த்து
நற்குணத்தில் நல்லன்பில் நாளெல்லாம்

....நாம்பேசும் நாயகரே ஆசாத்தாம்

கற்பனையில் சிறக்கின்ற கவிஞரிவர்

....கலைகளிலே காட்சியிலே இளைஞரிவர்
அற்புதங்கள் இவரெழுதும் ஆட்சீர்தான்

.....அத்துடனே 'பெருமூச்சும்' விட்டிடுவார் :-))

பற்பலவாய் திறனிறைந்த பெருமனிதர்
....பஃகுருத்தீன் போன்றோரின் அண்ணனிவர்.;-))


அவைவாழ்த்து:

நண்பர்கள் ஆகுகின்ற நல்மனங்கள் தன்னாலே

பண்புடன் இஃதொரு பள்ளியாம்- எண்ணம்

சிறக்க எழுதிடுவோர் சிந்தனை யாலே

பிறந்திடும் இங்கே படைப்பு!


முதன்மைக் கவிதை


கனவொன்று காணுகிறேன் கவிதைக் காக..

....கண்களுக்கு வாய்த்திடுமா காட்சி யாக!

இனவாதம் மதவாதம் இறந்து போக

....இதயத்து குணத்தினையே யாரும் நோக்க..

பணத்தாலும் பலத்தாலும் பேசும் போக்கை

....பேருண்மை ஒளிவீசி பொசுக்கித் தீய்க்க..

நனவாகும் நாளெண்ணி பாடி விட்டேன்

....நலமாக இனிவரட்டும் நாள்கள் யாவும்!


கடந்துவந்த காலத்தை எண்ணிப் பார்க்க...

....கண்ணீரும் புன்னகையும் கலந்த வாழ்க்கை.

நடந்துவரும் நாள்களிலும் நிகழ்வின் கைகள்

....நினைவுகளைத் தூவிவர நெஞ்சம் பொங்கும்.

தொடர்ந்துவரும் திருநாள்கள் துலங்க வைக்க..

....தன்னுணர்வில் நுண்ணறிவு விழிக்க வேண்டும்.

இடங்களல்ல 'இருப்பி'னிலே என்று (உ)ணர்ந்து

....இயல்புகளை ஏற்கின்ற இதயம் வெல்லும்.


சின்னவனாய் இருக்கையிலே சுகமே உலகம்

....சிந்தனையில் வேறில்லை சமமே யாரும்.

விண்ணதுவும் உயர்வில்லை உயர்வைக் கூறின்

....உண்மையிலே சிறுபிள்ளை உள்ளம் தானே!

மின்னுகிற கண்களிலே கனவின் கங்கு

....மேதினியில் வெளிச்சத்தை ஏற்றச் செய்யும்
என்னவொரு காலமய்யா! இன்றோ ஏக்கம்

....எங்கெங்கு நோக்கிடினும் பாகு பாடு!



இனிவருமோ அந்நாள்கள் என்ற கேள்வி

....எழும்பிடுதே வழியெங்கும் என்ன செய்ய?
தனிமனித நலமொன்றே யாரும் பார்க்கும்

....தற்காலம் மாறிவிடின் தீரும் ஏக்கம்.

பனித்துளிபோல் புல்நுனியில் பட்டு நிற்கும்

....பாசாங்காய் அரசியலில் பொதுமை எண்ணம்

இனிப்பதுவும் தேநீரில் இருத்தல் போல

....இரண்டறவே கலந்துவிட வருமே அந்நாள்.


பொதுமக்கள் வரிக்காசில் பிழைத்தே ஏய்க்கும்

....போக்கிரிகள் பொதுவாழ்வில் நீங்கி விட்டால்..

எதுவாகும் தன்னெல்லை அறிந்தே எவரும்
....ஏற்பற்ற குணம்நீக்கி ஏற்றம் கண்டால்...
நதிபோல நகர்கின்ற நாள்கள் தன்னில்

....நற்றவமே போலாகும் செயல்கள் கொண்டால்

விதியென்று சோம்புகின்ற வீணம் விடுத்து

....விளைவுகளை ஏற்கின்ற வீரம் பெற்றால்...


இனிவருமோ நாளெல்லாம் எண்ணம் போல

....இறையவனை கேட்டுத்தான் இறைஞ்சும் உள்ளம்

வினையெதுவும் விதைத்தாலே வினையை அறுப்பாய்

....வேறில்லை நியதிகளும் என்றே சொன்னால்

தனியொருவன் செய்கின்ற தவறின் பலனாய்

....தரணியிலே மற்றவர்க்கும் துன்பம் ஏனோ?

கனியளிக்கும் மரங்களுக்கே கல்ல டிகளோ?
....காரணத்தைக் கேட்டேனே கருத்தாய் நானும்.

விடையிருக்கும் உன்னிடத்தில் வேண்டித் தேடு!
....உணராத காரணங்கள் உள்ளி ருக்கும்.

கடைபிடிக்கும் முறையினிலே கோளா றிருக்க

....கண்டளித்த அறிஞனையா குறைகள் சொல்வர்?

கடைமனிதன், உயர்மனிதர் - பிரிக்கும் நீதி

....கைக்கொண்ட சுயநலத்தால் விளைந்த கேட்டை

உடைத்திடவே செய்யாமல் உறக்கம் கொண்டால்

....ஒன்றாகும் நன்மையுடன் தீமை கூட!


இனிவருமோ அந்நாள்கள் யாரும் கேட்பின்

....எப்போதும் மாற்றங்கள் மனிதர் கையில்!
தனிமனித நலனுக்காய் தவறு செய்யும்

....தரமற்ற தலைமைகளை மாற்ற வேண்டும்.

மனிதமிதே உயர்வென்ற மாண்பைப் போற்றி
....மண்மீதில் தருமத்தை மீளச் செய்வோம்.

அணிதிரளா நல்லவரால் கொடியோர் ஆட்டம்

....அறமழியும் முன்னாலே ஓடி வாரீர்!

நன்றி: பண்புடன்.