Tuesday, April 14, 2009

பொதுவாய் இருக்கும் பரந்த வானம்




கவியரங்கக் கவிதை

நாள்: சித்திரை முதல்நாள் விரோதி ஆண்டு.
அவை: எழுத்துக்கூட கவியரங்கம்
தலைப்பு: 'மனிதம்'


கடவுள் வாழ்த்து
(நிலை மண்டில ஆசிரியப்பா)

தேவ குணமும் மிருக குணமும்
சேர்த்து செய்த மனித இனத்தை
பாவ புண்ணிய கரைகள் நடுவே
பாரில் வாழ வைத்தனை இறைவா!
ஆவல் தூண்டும் பாவம் நீக்கி
அறிவே மிகைக்கும் ஞானம் நோக்கி
வாழும் காலம் யாவும் எங்கள்
வெற்றியின் உறுதி வழங்கிடு வாயே!

அவை வாழ்த்து (அறுசீர் விருத்தம்)

எழுத்துக் கூடம் அற்புதமே
எங்கள் தாகம் தணிப்பதிலே!
பழுத்த அறிஞர் பெரியோரும்
பன்மைத் திறனில் மற்றவரும்
அழுத்தி முத்திரைப் பதிக்கின்றார்
அதனைப் பார்த்து வியக்கின்றேன்
கழுத்தின் அணியாய் தமிழுக்கே
கண்டேன் அவையை; போற்றுகின்றேன்.

தலைவர் வாழ்த்து (அறுசீர் விருத்தம்)
இளைஞர் என்று சொல்லாதீர்
இவரோ இங்கே மூதறிஞர். (ராஜா ஜி :-) )
விளையும் தமிழும் நற்பயிராய்
விதைகள் தூவும் உழவரிவர்
தலைமைக் கவிஞர் வரிசையிலே
தகுதி மிக்க தமிழ்வாணர்.
விலையே இல்லா நற்பண்பில்
உயர்ந்து நிற்கும் என்நண்பர்.

"அலைந்து திரியும் காலமய்யா
அதனால் பின்னர் எழுதுகின்றேன்"
நிலையைச் சொன்ன பின்னாலும்
நீதான் முதலில் எழுதென்றார்.
வலையில் இழுத்துப் போட்டாரே
வந்தேன் நானும் உங்களிடம்!
இலையில் உணவாய் என்கவிதை
எடுத்துச் சுவைத்துச் சொல்வீரே!

முதன்மைக் கவிதை (எண்சீர் விருத்தம் (அ) 'என்'சீர் விருத்தம்)

இவ்வூரில் இவ்விடத்தில் இன்னார் பிள்ளை
....எனவிரும்பி பிறக்கத்தான் யாரால் ஏலும்
"1எவ்வூரும் எமதூரே" தமிழன் சொன்னான்
....யாவரையும் கேளிர்தான் என்று கொண்டான்
அவ்வாறே அறிந்திருந்தும் ஆசை உந்த
....அரசியலின் அவலத்தில் வீழும் மாந்தர்
வெவ்வேறு காரணத்தை கற்பிக் கின்றார்
....வேறுபாட்டில் ஆதாயம் தேடு கின்றார்.

2ஒன்றலவோ குலமென்றான் ஓதி வைத்தான்
....ஒருவன்தான் தேவனென்
ற உண்மை சொன்னான்
*நன்றிதனை கொள்கின்ற நெஞ்சம் தன்னில்
....நன்னலமே அனைவருக்காய் நாட்டங் கொள்ளும்.
தென்றலென வாழ்வாகும் உலகம் பூக்கும்
....தீந்தமிழும் இன்பந்தான் தீண்டத் தீண்ட!
என்றுவரும் பொற்காலம் இனியும் மீண்டும்?
....எங்குலமும் உங்குலமும் ஒன்றிப் போமோ?

மொழியென்ன மதமென்ன மனிதம் பார்க்க
....முன்வந்(து) உதவுகின்ற மனமே வேண்டும்.
விழிநீரை பிறருக்காய் வடிக்கும் போதில்
....உள்ளத்தின் அழுக்குகளும் கரைந்து போகும்
இழிவென்று மற்றவரை எண்ண வேண்டா
....இல்லாத நற்குணத்தை கற்கப் பார்ப்போம்
வழியெங்கும் பாடங்கள்; வாழ்க்கைப் பள்ளி
....வகைவகையாய் ஆசிரியர் வானின் கீழே!

நிழல்போலும் மனிதருண்டே;இரவில் நீங்கல்
.....நிறம்மாறும் பச்சோந்தி; நச்சுப் பாம்பு
பழிகாணும் குணமிருப்பின் பாசம் எங்கே?
.....பண்பாட்டைப் புதைக்கின்றார் பாத கத்தார்.
விழல்போல சிலரிருப்பார் விரயம் நீரே
....விலங்குகளை ஒத்திருப்பார் மனிதர் தாமா?
சுழலொன்றில் சிக்கிவிட்ட சிலரும் உண்டு.
....சிந்தையிலே மண்மூடி சிதைகின் றாரே!

தன்னுயர்வை கொள்ளத்தான் பிறரை ஏய்க்கும்
....தரங்கெட்ட போக்குகளில் தனியன் அன்றி
மன்னுயிரைக் கொல்கின்ற மதத்தின் வாதம்
....மானத்தைக் குலைக்கின்ற மூர்க்கர் தம்மில்
என்னினமே பெரிதென்னும் இழிந்த உள்ளம்
....இவர்க்கிங்கே சளைக்காமல் இன்னோர் பக்கம்
தன்னினமே அழிந்தாலும் தயக்கம் இன்றி
....தன்னலனை; பதவியினைத் தாங்கும் போக்கு!


கண்பார்க்க முடியலையே கொடுமை ஐயோ
....காதுக்கும் சேதிவர கதறும் உள்ளம்
மண்மீதில் எளியவரை வதைக்கும் தீயோர்
....மனதுக்குள் எழுதட்டும் இறையின் நீதி
கண்ணீரும் புரட்டிவிடும் காலக் கோளை
....கீழதுவும் மேல்வருமே கறங்கின் சுற்றில்.
விண்ணுக்கும் எட்டிவிடும் வேத னைமூச்சும்
.....ஒருநாளில் புயலாகும்; உலகை மாற்றும்.

உழவுக்கும் அழிவுக்கும் உங்கள் கைகள்
....உள்ளபடி 3பிறர்தரவோ தீதும் நன்றும்?
மழையாக அன்பதுவும் மனதில் பெய்ய
....மனிதத்தின் பயிர்வளரும் மணமும் வீசும்
அழகான உலகத்தில் வாழ வேண்டின்
....அதற்கேனும் மனிதத்தை பேண வேண்டும்
தொழும்நேரம் இறைவனையே கேட்டு நிற்போம்
....தொலையாமல் மனிதத்தை காக்க வேண்டும்.

000000000000000000000OOO0000000000000000000000


பி.கு:
1. யாதும் ஊரே யாவரும் கேளிர்
2. ஒன்றே குலம்; ஒருவனே தேவன்
3. தீதும் நன்றும் பிறர்தர வாரா
* நன்றிதனை = நன்று இதனை (அ) நன்றி தனை


(கவியரங்கத் தலைவர் ராஜா இந்தத் தலைப்பைத் தந்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. இந்தக் கவிதை எழுதி முடித்த இந்நேரம் ஊமையின் கண்ணீராய் ஓர் ஆறுதல் உள்ளே வடிகிறது)

Thursday, March 12, 2009

கனவின் திசைகளுக்கப்பால்...........


கனவின் திசைகளுக்கப்பால்.....


காதலின் திரை மறைத்த
பொய்களுக்குப் பின்னே
நாம் நாயகர்களானோம்
நமக்குள்ளே.

கனவில் நெய்த அங்கி
வாழ்வின் முட்களில்
கிழிபடுகிறது எப்போதும்

காலத்தின் நிர்வாணத்தில்
கண்டுகொண்டோம்
நாம் நம்மை.

அதன்பின்
ஆடைகள் குறித்த
அலட்டல்கள் தவிர்த்தோம்

ஒப்பனைகள் மாற்றாத
'உள்'நிறத்தில்
அந்த அந்தகார ஆழத்தில்
இன்னும் வசீகரித்தபடி
ஒரு மலர்.


(உயிரோசையில் வெளியாகியிருக்கிறது)

Tuesday, March 03, 2009

எண்ணங்களின் பயணத்தில்......


எண்ணங்களின் பயணத்தில்..........


போவதும் வருவதும்
பொதுவாய் மரபு
ஆவதும் அழிவதும்
அன்றாட இயல்பு.

எண்ணங்களின் பயணத்தில்
இயங்குகின்ற மனது.
வண்ண வண்ண கனவுகளே
வாழ்க்கைக்கு விருந்து.

ஆசையில் வருவதெல்லாம்
அடுத்தவர் 'இடம்' தான்
ஓசையறும் சிந்தனையில்
உலகமும் மடம் தான்.

பிறப்பதும், பின்னொரு நாள்
இறப்பதும்; இடையிலே
சிறப்புகள் தேடித்தேடி
செல்வதுவும் பயணந்தான்.

எல்லாப் பக்கத்திலும்
இருக்கலாம் பாதைகள்
வல்லோன் வகுத்தாற்போல்
வாய்ப்பதுவே வழிப்பாதை.

வாய்த்ததொரு வாகனத்தில்
வழியெங்கும் கோரிக்கை
வாட்டமின்றி சென்றாலே
வாழ்க்கை கேளிக்கை.

கயிறுகளாய் பாசபந்தம்;
கட்டப்பட்ட கைகால்கள்.
வயிறுக்காய் நகர்ந்தாலும்
வாழ்நாள்கள் உயிர்பூக்கும்.

'நிலை'யில்லாக் காலம் தான்
நதியாகப் பாய்ந்து வரும்
விலையில்லா நேரத்தை
விதியென்று தள்ளாதீர்.

தாகத்தை அதிகரிக்கும்
தண்ணீரும் இதுவே தான்
ஏகதேச அறிவுரையோ
'எல்லாம் கடந்து போகும்'.

காற்றெங்கும் இறக்கைகள்
கைகளாய் பரிணமிக்கும்
ஆற்றலுள்ள மனிதருக்கு
அனைத்துமே பக்கந்தான்.

நன்றி: விகடன் - இளமைக் கச்சேரி

(தொடர்ந்து வலைப்பதிவில் இயங்க அன்புடன் கோரும் நண்பர் ரிஷானுக்கு(ம்) சிறப்பு நன்றி)

Tuesday, February 24, 2009

வலைப்பதிவர்களிடம் பத்து கேள்விகள். :-)

வலைப்பதிவர்களிடம் பத்துகேள்விகள்

1). தமிழ்மணத்தைத் திறந்தவுடன் சூடான இடுகைகளை; மறுமொழியிடப்பட்டவற்றை நோக்கிப் பாய்கிறீர்களே..ஏன்?

2). சிலநிமிடங்களுக்கொரு முறை தன்னிச்சையாக தமிழ்மணத்தை மீள்திறப்பு (ரெஃப்ரெஷ்) செய்கிறீர்களே...ஏன்?

3). தெரியாதவர்கள் போடுவது பக்காப்பதிவாக இருந்தாலும் கண்டுகொள்ளாமல், தெரிந்தவர்கள் போடும் மொக்கைப்பதிவுக்கே பின்னூட்டுகிறீர்களே... ஏன்?

4). கவர்ச்சியான; அதிர்ச்சியான தலைப்புகளில் மயங்கிவிடுகிறீர்களே... ஏன்?

5). 'மீ த ஃபர்ஸ்ட்' என்ற பின்னூட்டத்திற்கு மட்டும் இவ்வளவு கிராக்கி ஏன்?
அதற்கப்புறமும் மீ த செகண்டு, மீ த தேர்டு அவசியமா? ரிப்பீட்டே அவசியமா :-))

6). பதிவையே படிக்காமல் 'மீ த ஃபர்ஸ்ட்டு' போட வேண்டியது அவசியம்- ஏன்?

7). சீரியஸான பதிவுகளுக்கு கூட்டத்தோடு ஆமாம்சாமி போடுவது ஏன்?

8). உங்கள் பிம்பத்திற்கு அப்பால் சொல்ல வேண்டிய கருத்துகளுக்கு வேறு பெயரில் அல்லது அனானியாக ப் போய் பின்னூட்டுகிறீர்களே.. ஏன்?

9). பின்னூட்டங்களை அதிகரிக்கும் வழியாக.. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்கிறீர்களே... ஏன்?

10). ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஏதாவது ஒரு சுழலில் (உதாரணம்: பத்து கேள்விகள்) சிக்கிக்கொள்கிறீர்களே.. ஏன்?

( பி.கு: பதிவுக்கு ஆலோசனை: 'இளமை விகடனில்' உனக்கென மட்டும் எழுதும் ஒரு மூத்த பதிவர்)

Wednesday, February 18, 2009

இன்று வேறு நாள்....

இன்று வேறுநாள்


நேற்றைப்போலில்லை....

கணப்பொழுதில் நீண்டுவிட்டது
வெயிலின் கொடு நாவு

வெளியெங்கும்
பரவியிருக்கும் வெறுமை
முகத்திலறையும் பூதம்.

இரத்தம் வெளிறி
உறைந்து கிடக்கின்றன
இரவு பகல்கள்

பொருள் பிரிக்க..
சக்தி இழக்கிறது வாழ்க்கை.

காலடித்தடங்களில்
ஞாபகத்துணுக்குகள்
சிந்தியபடி மனம்.

நீ ஊருக்குப் போயிருக்கிறாய்!


நன்றி: கீற்று . (06 06 2007)

Wednesday, February 04, 2009

மெளனங்கள்.


முட்டைகளை ஒத்திருக்கின்றன
மெளனங்கள்.

வெண்மையாலான ஓடு
வெளித்தெரியும்
சமாதானமாகவோ...
சம்மதமாகவோ...!

உள்ளிருப்பு தெரிவதில்லை
உடையும் வரை!

பொறுமை காத்து
பிரசவிக்கச் செய்யலாம்
புதிய பிறப்பை!

எனினும்..

உடைக்கப்பட்டே
உட்கொள்ளப்படுகின்றன
பெரும்பாலும்!


இன்னமும்
உடைக்கப்பட முடியாமலிருக்கும்
ஒற்றை முட்டையில்
உறைந்திருக்கலாம்
ஓர் மகா நிசப்தம்.


(உயிரோசை மின்னிதழில்
வெளியாகியிருக்கிறது).

Monday, January 19, 2009

கவிதை: "இனிவரும் நாள்கள்"

பண்புடன் கவியரங்கில்....

இறைவாழ்த்து:

உயிருடன் உண்மை உயர்வை அளித்தே

இயல்பினில் நன்மை இருக்கவும் செய்து

மனிதரென நம்மையும் மாண்புற வைத்த
புனித இறைக்கே புகழ்.

தமிழ்வாழ்த்து
சொல்லில் அதன்பொருளில் சொந்தமாய் இவ்வுலகின்
எல்லா மொழிக்கும் இலங்கிடும் ஆதிநீ

வல்லமையில் பேரழகில் வாழ்பரப்பில் நற்றமிழே

இல்லை உனக்குமோர் ஈடு!


தலைவர் வாழ்த்து
நற்குணத்தில் நல்லன்பில் நாளெல்லாம்

....நாம்பேசும் நாயகரே ஆசாத்தாம்

கற்பனையில் சிறக்கின்ற கவிஞரிவர்

....கலைகளிலே காட்சியிலே இளைஞரிவர்
அற்புதங்கள் இவரெழுதும் ஆட்சீர்தான்

.....அத்துடனே 'பெருமூச்சும்' விட்டிடுவார் :-))

பற்பலவாய் திறனிறைந்த பெருமனிதர்
....பஃகுருத்தீன் போன்றோரின் அண்ணனிவர்.;-))


அவைவாழ்த்து:

நண்பர்கள் ஆகுகின்ற நல்மனங்கள் தன்னாலே

பண்புடன் இஃதொரு பள்ளியாம்- எண்ணம்

சிறக்க எழுதிடுவோர் சிந்தனை யாலே

பிறந்திடும் இங்கே படைப்பு!


முதன்மைக் கவிதை


கனவொன்று காணுகிறேன் கவிதைக் காக..

....கண்களுக்கு வாய்த்திடுமா காட்சி யாக!

இனவாதம் மதவாதம் இறந்து போக

....இதயத்து குணத்தினையே யாரும் நோக்க..

பணத்தாலும் பலத்தாலும் பேசும் போக்கை

....பேருண்மை ஒளிவீசி பொசுக்கித் தீய்க்க..

நனவாகும் நாளெண்ணி பாடி விட்டேன்

....நலமாக இனிவரட்டும் நாள்கள் யாவும்!


கடந்துவந்த காலத்தை எண்ணிப் பார்க்க...

....கண்ணீரும் புன்னகையும் கலந்த வாழ்க்கை.

நடந்துவரும் நாள்களிலும் நிகழ்வின் கைகள்

....நினைவுகளைத் தூவிவர நெஞ்சம் பொங்கும்.

தொடர்ந்துவரும் திருநாள்கள் துலங்க வைக்க..

....தன்னுணர்வில் நுண்ணறிவு விழிக்க வேண்டும்.

இடங்களல்ல 'இருப்பி'னிலே என்று (உ)ணர்ந்து

....இயல்புகளை ஏற்கின்ற இதயம் வெல்லும்.


சின்னவனாய் இருக்கையிலே சுகமே உலகம்

....சிந்தனையில் வேறில்லை சமமே யாரும்.

விண்ணதுவும் உயர்வில்லை உயர்வைக் கூறின்

....உண்மையிலே சிறுபிள்ளை உள்ளம் தானே!

மின்னுகிற கண்களிலே கனவின் கங்கு

....மேதினியில் வெளிச்சத்தை ஏற்றச் செய்யும்
என்னவொரு காலமய்யா! இன்றோ ஏக்கம்

....எங்கெங்கு நோக்கிடினும் பாகு பாடு!



இனிவருமோ அந்நாள்கள் என்ற கேள்வி

....எழும்பிடுதே வழியெங்கும் என்ன செய்ய?
தனிமனித நலமொன்றே யாரும் பார்க்கும்

....தற்காலம் மாறிவிடின் தீரும் ஏக்கம்.

பனித்துளிபோல் புல்நுனியில் பட்டு நிற்கும்

....பாசாங்காய் அரசியலில் பொதுமை எண்ணம்

இனிப்பதுவும் தேநீரில் இருத்தல் போல

....இரண்டறவே கலந்துவிட வருமே அந்நாள்.


பொதுமக்கள் வரிக்காசில் பிழைத்தே ஏய்க்கும்

....போக்கிரிகள் பொதுவாழ்வில் நீங்கி விட்டால்..

எதுவாகும் தன்னெல்லை அறிந்தே எவரும்
....ஏற்பற்ற குணம்நீக்கி ஏற்றம் கண்டால்...
நதிபோல நகர்கின்ற நாள்கள் தன்னில்

....நற்றவமே போலாகும் செயல்கள் கொண்டால்

விதியென்று சோம்புகின்ற வீணம் விடுத்து

....விளைவுகளை ஏற்கின்ற வீரம் பெற்றால்...


இனிவருமோ நாளெல்லாம் எண்ணம் போல

....இறையவனை கேட்டுத்தான் இறைஞ்சும் உள்ளம்

வினையெதுவும் விதைத்தாலே வினையை அறுப்பாய்

....வேறில்லை நியதிகளும் என்றே சொன்னால்

தனியொருவன் செய்கின்ற தவறின் பலனாய்

....தரணியிலே மற்றவர்க்கும் துன்பம் ஏனோ?

கனியளிக்கும் மரங்களுக்கே கல்ல டிகளோ?
....காரணத்தைக் கேட்டேனே கருத்தாய் நானும்.

விடையிருக்கும் உன்னிடத்தில் வேண்டித் தேடு!
....உணராத காரணங்கள் உள்ளி ருக்கும்.

கடைபிடிக்கும் முறையினிலே கோளா றிருக்க

....கண்டளித்த அறிஞனையா குறைகள் சொல்வர்?

கடைமனிதன், உயர்மனிதர் - பிரிக்கும் நீதி

....கைக்கொண்ட சுயநலத்தால் விளைந்த கேட்டை

உடைத்திடவே செய்யாமல் உறக்கம் கொண்டால்

....ஒன்றாகும் நன்மையுடன் தீமை கூட!


இனிவருமோ அந்நாள்கள் யாரும் கேட்பின்

....எப்போதும் மாற்றங்கள் மனிதர் கையில்!
தனிமனித நலனுக்காய் தவறு செய்யும்

....தரமற்ற தலைமைகளை மாற்ற வேண்டும்.

மனிதமிதே உயர்வென்ற மாண்பைப் போற்றி
....மண்மீதில் தருமத்தை மீளச் செய்வோம்.

அணிதிரளா நல்லவரால் கொடியோர் ஆட்டம்

....அறமழியும் முன்னாலே ஓடி வாரீர்!

நன்றி: பண்புடன்.