Saturday, April 01, 2006

புவனகிரி ஒரு பார்வை - தேர்தல் 2006

பரங்கிப்பேட்டை, புவனகிரி என்று இரு தேர்வு நிலை பேரூராட்சி ('அம்மா' புண்ணியத்தில் இப்போது சிறப்பு சிற்றூராட்சி)களையும் நிறைய கிராமங்களையும் கொண்டுள்ள புவனகிரி தொகுதி சராசரியான தமிழகத் தொகுதிகளுள் ஒன்றாகும்.

தலித் மக்கள், வன்னியர்கள், முஸ்லிம்கள், மீனவர்கள் நிரம்பிய இத்தொகுதி வெற்றி வாய்ப்பை பாரபட்சமின்றி இரு கழகங்களுக்கும் வழங்கி வந்திருக்கிறது. 1977லிருந்து எடுத்துக்கொண்டால் உதயசூரியன் மூன்று முறை இங்கு உதித்திருக்கிறது. (தி.மு.க - 2 இ.தே.லீ - 1). அதுபோல 'இரட்டை இலை' மூன்று முறை இங்கு மலர்ந்திருக்கிறது. இலையையொட்டி கடந்த ஒரு முறை 'வாழை'(சுயே) விளைந்தது. ஆக, அ.தி.மு.க மொத்தம் நான்கு முறை.

ஜெயலலிதா போட்டியிடப்போவதாக சொல்லப்பட்ட நான்கு தொகுதிகளில் ஒன்றாக கடந்தமுறை திகழ்ந்த இத்தொகுதி அப்போது பரவலான ஊடக கவனம் பெற்றது. ஜெயலலிதாவின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட, சரியான மாற்று வேட்பாளரை அறிவித்திராத அ.தி.மு.க அச்சமயம் களத்தில் சுயேச்சையாக இருந்த அனுதாபி ஒருவரை ஆதரித்து வெற்றி பெறச் செய்தது. மக்கள் தமிழ் தேசம் கட்சி நிறுவனரும் இந்தியவங்கியின் முன்னாள் தலைவருமான (தி.மு.க சார்பு) திரு. எம். கோபால கிருஷ்ணனுக்கு கிடைத்த 41.46% சதவீத வாக்குகளைக் காட்டிலும் 3.39% சதவீத வாக்குகள் (3764) அதிகம் பெற்று அ.தி.மு.க சார்பு அருள் ச.ம.உ ஆனார். (இதற்கு முந்தைய தேர்தல்களில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே 10,000க்கும் அதிகமான வாக்குகள் இருந்தன.)

இத்தொகுதியில் வெற்றி பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக முன்னாள் அமைச்சர் 'சூப் புகழ்' சுவாமிநாதனையும், மறைந்த சிவலோகத்தையும் கூறலாம்.
கட்சி ஆதரவிற்கு அப்பாலும் 'கொஞ்சூண்டு' சொந்த செல்வாக்கும் கொண்டிருந்தவர்கள்.
வி.வி.எஸ். என்று அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தன் காலத்தில் 'நகரப்பேருந்து'களை அதிகப்படுத்தினார். தேர்தலுக்கு முன் ஒரு துணிக்கடையில் சாதாரண விற்பனையாளராகப் பணியாற்றி, பின்னர் ஒரு 'மினி மேடமாக'வே மாறிய மல்லிகாவும் இத்தொகுதி உறுப்பினராக இருந்தவரே.

பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவியான திருமதி.செல்வி ராமஜெயம் இம்முறை இங்கு அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காட்சிக்கு எளியவரான இவர் பரங்கிப்பேட்டையின் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றவர் என்று கூறலாம். அனைத்து சமுதாய பெரியவர்களை மதிப்பதிலும் எளியவர்களை அரவணைப்பதிலும் சிறப்புற்று விளங்குவதால் கட்சி பாகுபாடின்றி மக்களின் ஆதரவு பரங்கிப்பேட்டையிலும் சுற்று வட்டார கிராமங்களிலும் இவருக்கு கிடைக்கும்.

தி.மு.க கூட்டணியில் இத்தொகுதி பா.ம.கவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாம்பழம் சின்னத்தில் தேவதாஸ் ஆண்டவர் என்பவர் போட்டி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் புவனகிரிப் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில் போட்டி நிலவலாம். பிற வெளிப்பகுதியைச் சேர்ந்தவர் எனில், தன்னின வாக்குகளைப் பிரிக்க மட்டுமே முடியும் என்பதால் கடும் பிரச்சாரத்தை கையிலெடுக்கவேண்டிய கட்டாயத்துக்காளாகிறார்.

அ.தி.மு.க வேட்பாளரோ தன்னின வாக்குகளைப் பிரித்துஎடுப்பதுடன், அ.தி.மு.கவுக்கே உரித்தான மீனவ, தலித் வாக்குகளையும், தன் நற்பெயர் காரணமாக பிற சமுதாய வாக்குகளையும் பெற்று வெல்வதற்கு நிறைய வாய்ப்புள்ளது.

செல்வி ராமஜெயம் வென்றால் பரங்கிப்பேட்டைவாசிகளின் நீண்ட கால கோரிக்கையான வெள்ளாற்றுப்பாலத்தை விரைந்து செயற்படுத்தி முடிப்பார் என்பது பரங்கிப்பேட்டை வாசிகளின் நம்பிக்கை. (அருகிலுள்ள சிதம்பரத்துக்குச் செல்ல, கணிசமான தொலைவையும், நேரத்தையும் மிச்சப்படுத்தலாம். மேலும் கிழக்கு கடற்கரை சாலையை இடையூறின்றி கன்னியாகுமரி வரை நீட்டிக்க ஏதுவாகும் . போக்குவரத்து நெருக்கடி மிக்க புவனகிரிக்கும் இது நன்மையாக அமையக்கூடும்).

பொதுவாக, கணிப்புகளுக்கு எதிரான முடிவுகளை இம்மக்கள் திணிப்பதில்லை எனினும் நாளையின் மர்மத்தில் தான் நகர்கிறது வாழ்க்கை. பொறுத்திருந்துப் பார்ப்போம்.

8 comments:

குழலி / Kuzhali said...

இப்னுவிற்கு எனது கடுமையான கன்டணத்தை தெரிவித்துக்கொள்கின்றேன், தொகுதிப்பங்கீடு செய்து கொள்ளாமல் புவனகிரி தொகுதியை எடுத்துக்கொண்டதற்கு, ஏற்கனவே தமிழ்சசியினால் குறிஞ்சிப்பாடி,விருத்தாசலம் தொகுதியையும், பொட்டீக்கடை சத்யாவினால் நெல்லிக்குப்பம் தொகுதியையும் இந்த இருவரினால் பண்ருட்டி தொகுதியையும் இழந்திருந்தேன், கேவிஆர் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் தொகுதிகளுக்கு துண்டு போட்டுவிட்டார் தற்போது தான்
ஆச்சரிய ஆண்டிமடம் என்று ஆண்டிமடம் தொகுதிப்பற்றி எழுதிவிட்டு வந்தால் புவனகிரி கையைவிட்டு போய்விட்டது, நான் எழுதியதிலிருந்து சில வரிகள் இங்கே,

கடலூர் மாவட்டத்தில் பல அதிமுக புள்ளிகள் குறிவைத்தது புவனகிரி தொகுதியை, கிழக்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராசேந்திரன் நெல்லிக்குப்பம், பண்ருட்டி தொகுதியோடு புவனகிரி மீதும் கண்வைத்திருந்தார், அருள்மொழித்தேவனும் புவனகிரியை குறிவைத்தார், வருமானத்திற்கு மீறிய சமீபத்தில் சிறைசென்று வந்து அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் சமீபகாலமாக கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மல்லிகாவும் பெயருக்கு கேட்டுவைத்தார்

பரங்கிப்பேட்டையில் சில காலங்களுக்கு முன் 'ஒத்தக்கை' பாண்டியன் கோஷ்டியினருடன் ஏற்பட்ட சாராய மோதலில் அதிமுக பிரமுகர் ராமஜெயமும், அவரது சொந்தக்காரரும் வெட்டிக்கொல்லப்பட்ட சில மணிநேரங்களில் ராமஜெயம் கோஷ்டியினரால் 'ஒத்தக்கை' பாண்டியனின் தங்கையும் தாயும் வெட்டிக்கொல்லப்பட்டு ஒரே நாளில் நான்கு கொலைகளை பரங்கிப்பேட்டை பார்த்த பயங்கரத்திற்கு பின் 1996ல் ராமஜெயத்தின் மனைவி செல்வி ராமஜெயம் பரங்கிப்பேட்டை சிறப்பு பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு அதிமுக சார்பாக போட்டியிட்டார், அப்போது தான் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவிற்கு எதிரான அலையடித்து அதன் தொடர்ச்சி உள்ளாட்சி தேர்தல்களில் வெளிப்பட்ட போதும் செல்வி ராமஜெயம் வீடுவீடாக திண்ணைகளில் அமர்ந்து வாக்கு கேட்டதும் செல்வி ராமஜெயம் வெற்றி பெற உதவியது, அதனைத் தொடர்ந்து 2001 உள்ளாட்சி தேர்தலில் இப்படியெல்லாம் அனுதாப அலை தேவையில்லாமலே அவருடைய முந்தைய செயல்பாடுகள் வெற்றி பெற வைத்தது, மாவட்டத்தின் செல்வாக்கு அதிமுக பிரமுகர்கள் குறிவைத்த போதும் புவனகிரி தொகுதி அவருக்கு கிடைத்தது இவைகள் தெரிந்தவர்களுக்கு ஆச்சரியமில்லை, மேலும் அதிமுக, திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் என்ற வரிசையில் செல்வாக்கு பலமிருக்கும் தொகுதியில் செல்வி ராமஜெயம் வெற்றியின் அருகில், புவனகிரி கடலூர் மாவட்டத்தில் அதிமுகவின் இலுப்பைப்பூ

இப்னு ஹம்துன். said...

அன்பின் குழலியண்ணே.!
உங்கள் அரசியல் கருத்துக்களில் எனக்கு சிற்சில வேறுபாடுகள் உண்டு எனினும் நீங்கள் என் அபிமான வலைப்பூ அரசியலறிஞர். புவனகிரி பத்தி எப்படி எழுதுவீர்கள் என்று யோசித்தேன். புவனகிரி அ.தி.மு.கவுக்கு இலுப்பைப்பூ என்றால் உங்களுக்கு மீசையில் மண் ஒட்டவில்லை.:-))

சரி, நான் எழுதியிருந்தால் தான் என்ன, நீங்களும் எழுதுங்களேன். பின்னூட்டமே ஒரு பதிவு அளவுக்கு உறவினர் ஊர் பற்றி விபரமான தகவல்களை வைத்திருப்பதை பார்த்தால் நீங்கள் இன்னும் நுணுக்கமாக ஆராய்ந்து...... 'இலுப்பைப்பூ' என்று சொல்வீர்கள் இல்லையா?!

ஷாஜி said...

கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாங்க

ஏன் அப்பு வெள்ளாட்டுக்கு பேசிக்கிறீங்களா.. இல்ல வெனையமா பேசிக்கிறியளா...

வேணாம் அப்பு.. அரசியல் அதுகளோட இருக்கட்டும்.. நமக்கெதுக்கு..

சரி சரி நான் தஞ்சாவூர் பத்தி எழுதலாம்னு இருந்தேன்..விட்டுர்ரேன்..

வாசன் said...

அடிக்கடி போய் வந்த ஊர்கள் பற்றிய அரசியல் செய்திகளை படிக்க பிடித்துள்ளது. நன்றி இப்னு ஹம்துன்.

பு.முட்லூர் ல் கடலூர் சாலையில் ஒரு வளைவில் இருக்கும் பெரிய வீடு, குலாம் ரசூல் குடும்பத்தினருக்கு எனது தந்தையால் மேற்பார்வை செய்து கட்டப்பட்டது !

பரங்கிபேட்டையில் இளங்குற்றவாளிகள் பள்ளி இன்னமும் உள்ளதா..

குழலி / Kuzhali said...

//நீங்கள் என் அபிமான வலைப்பூ அரசியலறிஞர்
//
இப்படி உசுப்பி உசுப்பிதான் உடம்பு ரணகளமா இருக்கு

//புவனகிரி அ.தி.மு.கவுக்கு இலுப்பைப்பூ என்றால் உங்களுக்கு மீசையில் மண் ஒட்டவில்லை.:-))
//
நம் சார்பு நிலை, நாம் யார் வெற்றிபெற வேண்டுமென நினைப்பது வேறு, தொகுதி நிலவரம் பற்றி கூறும் போது நம் சார்பு நிலையை ஏற்றி சொன்னால் அது சரியானதாகாது, நிறைய நாட்களை பரங்கிப்பேட்டையில் கழித்துள்ளேன், நீங்கள் பதிவில் அனைத்தையும் கூறிவிட்டதால் தனியாக எழுதுவதற்கு ஒன்றுமில்லை, கடலூர் மாவட்டத்தின் அதிமுக போட்டியிடும் மற்ற தொகுதிகள் சாதகமாக இல்லாத நிலையில் புவனகிரியில் அதிமுக முந்துவதால் புவனகிரியை அதிமுகவின் இலுப்பைப்பூ என்று கூறினேன்

இப்னு ஹம்துன். said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷாஜி!
அரசியல் பற்றி எழுத எனக்கு ஆர்வமில்லை தான். இருந்தாலும் நம்ம குழலி, தமிழ்சசி இவங்கல்லாம் அரசியலை 'பிரிச்சு மேயுறத'ப் பார்த்துட்டு நானும் ஒரு ஆர்வத்துல எழுதிப்புட்டேனுங்க! நான் எந்த கட்சியிலும் உறுப்பினன் இல்லீங்க! சார்பு நிலை ஏதாச்சும் நம்ம எழுத்துல தெரியுதுங்களா?

தஞ்சாவூர் பத்தி நீங்களும் எழுதுங்களேன். இந்த முறையும் தி.மு.க பிரமுகர் எஸ்.என்.எம். உபையதுல்லா தான் நிக்கிறார்னு கேள்விப்பட்டேன். முத்தமிழ் பேரவைன்னு ஏதோ செய்யறாராமே! சரி, நீங்க எழுதுங்க - படிச்சுக்கறேன்.

இப்னு ஹம்துன். said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாசன்.

இளங்குற்றவாளிகள் பள்ளி எனக்குத் தெரிந்து பரங்கிப்பேட்டையில் இல்லை. கேப்பர்குவாரியில் இருக்கிறது என்று நினைக்கிறேன். எதுக்கும், நம்ம குழலியிடம் கேட்டால் தெரிந்து விடும்.

அய்யா குழலி,
சட்டுனு சீரியஸாகிட்டீங்க போல. ச் சும்மா கலாய்க்கறதுக்காக 'மீசையில மண் ஒட்டலே'ன்னு சொன்னேன். நகைக்குறி கூட போட்டிருந்தேனே!

'உங்கள் அரசியல் கருத்துக்களில் எனக்கு 'சிற்சில வேறுபாடுகள்' உண்டு'ன்னு சொல்லும்போது 'பற்பல உடன்பாடுகள்' உண்டுன்னும் அர்த்தம் இல்லீங்களா? ஆங், உங்க சார்பு நிலையோ சார்பில்லாத நிலையோ - உங்கள் எழுத்துக்கள் மூலமாகத் தானய்யா எனக்குத் தெரியும். தொகுதி நிலவரம் எழுதும்போது 'சார்பு'ங்கறதை ஓரங்கட்டுவீங்கன்னும் தெரியும். கருத்துக்களுக்கு நன்றி.

குழலி / Kuzhali said...

//இளங்குற்றவாளிகள் பள்ளி எனக்குத் தெரிந்து பரங்கிப்பேட்டையில் இல்லை. கேப்பர்குவாரியில் இருக்கிறது என்று நினைக்கிறேன். எதுக்கும், நம்ம குழலியிடம் கேட்டால் தெரிந்து விடும்.
//
கடலூர் தேவனாம்பட்டினம் செல்லும் வழியிலிருந்தது, கேப்பர் குவாரி பற்றி தெரியவில்லைங்க

//அய்யா குழலி,
சட்டுனு சீரியஸாகிட்டீங்க போல. ச் சும்மா கலாய்க்கறதுக்காக 'மீசையில மண் ஒட்டலே'ன்னு சொன்னேன். நகைக்குறி கூட போட்டிருந்தேனே!
//
அட சீரியஸ்லாம் இல்லைங்க,சும்மாதான் தகவல் உங்களுக்கு அல்ல, பொதுவாக சொன்னேன்...

//தொகுதி நிலவரம் எழுதும்போது 'சார்பு'ங்கறதை ஓரங்கட்டுவீங்கன்னும் தெரியும். கருத்துக்களுக்கு நன்றி.
//
நன்றி தலைவா இப்படி நினைத்ததற்கு...

//'உங்கள் அரசியல் கருத்துக்களில் எனக்கு 'சிற்சில வேறுபாடுகள்' உண்டு'ன்னு சொல்லும்போது 'பற்பல உடன்பாடுகள்' உண்டுன்னும் அர்த்தம் இல்லீங்களா? ஆங், உங்க சார்பு நிலையோ சார்பில்லாத நிலையோ - உங்கள் எழுத்துக்கள் மூலமாகத் தானய்யா எனக்குத் தெரியும்.
//
ஹி ஹி வேறுபாடுகள் கொஞ்சமும் இல்லையென்றால் இப்னு, குழலி என இரண்டு ஆட்கள் இருக்கமாட்டார்கள் அல்லவா?! (தத்துவம்?!...)

இப்னு wordverification கொஞ்சம் தூக்கிவிடுங்களேன், அதான் மட்டுறுத்தல் உள்ளதே கொஞ்சம் சிரமமாக உள்ளது.

//வேணாம் அப்பு.. அரசியல் அதுகளோட இருக்கட்டும்.. நமக்கெதுக்கு..
//
ஷாஜி தொகுதி நிலவரம்,அரசியல் எழுதுவதில் என்ன இருக்கு, இதில் தவறொன்றுமில்லையே!!! நீங்களும் எழுதினால் உங்கள் ஊர் பற்றிய நிலவரம் தெரிந்து கொள்ளலாமே, அச்சு,ஒளி,ஒலி ஊடகங்களின் மீது நம்பிக்கை போய் எனக்கு நிறைய நாளாச்சி, நீங்களும் உங்கள் ஊர் நிலவரத்தை எழுதி கலக்குங்க