Wednesday, November 03, 2010

இந்தியா - இடைவெளிகளின் தேசம்!

இந்தியா - இடைவெளிகளின் தேசம்!




உலகின் மிகப்பெரிய நகரத்தின் ஒதுக்கப்பட்ட பகுதியாக அந்தச் சேரிப்பகுதி. மும்பையின் ரஃபீக்நகர் தான் அது. மூங்கில் எலும்புகளில் தார்ப்பாய்களை தோலாகப் போர்த்தியிருக்கும் அந்தக் குடியிருப்புகளில் தெளிந்த குடிநீர் கூட கிடைப்பதில்லை. குடிசைக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் பெரிய நீலநிற உருளை வடிவக் கலையங்களில் கலங்கலான பழுப்புநிற நீர், புழுக்கள் மிதக்கக் கிடைக்கிறது. சங்கிலியிடப்பட்டு ஒரு குவளையும் உண்டு.


திட்டமின்மையையும் ஒழுங்கின்மையையும் பறை சாற்றியபடி தலைக்குமேல் செல்லும் சட்ட விரோத மின்னிழைகள் வழியாக ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறது மின்சாரம்.

இதனினும் அவலம் என்னவென்றால், பத்தாயிரம் மக்களுக்கும் மேல் வசிக்கும் அந்தப் பகுதியில் ஒரே ஒரு குளியலறையோ, கழிப்பறையோ கூட இல்லை. ஆனால், நிராதரவான அந்த ஒவ்வொரு குடும்பத்திலும் நவீன இந்தியாவின் நாகரிகக் குறியீடான கைபேசி இருக்கிறது. சிலரிடம் மூன்று கூட.

ஐ.நா கூற்றுபடி கழிவறையினும் கைபேசிகள் மலிந்திருக்கும் ஒரு தேசத்தை, அதன் பயமுறுத்தும் சமச்சீரற்ற வீக்க வளர்ச்சியை; குழப்பியடிக்கும் அந்தப் பாகுபாட்டை நவம்பர் 6ஆம்தேதி வருகை தரும் அமெரிக்க அதிபர் பராக் ஹுசேன் ஒபாமாவும் காணக் கூடும்.

"வளர்ச்சி"யின் அழைப்பு மையங்களாக விளங்கும் கால்சென்டர்கள், மென்பொருள் வடிவமைப்பாளர்கள், தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் நிரம்பியிருக்கும் தேசம்தான் இந்தியா. ஆனால், அதே இந்தியாவில்தான் இலாயக்கற்ற, வெற்றுப்பேச்சு, இனவாத அரசியலும் அமைப்பு முறையும் மக்களின் மிக மிக அடிப்படையானப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு வக்கற்ற அரசுகளும் இருக்கின்றன.

காமன்வெல்த் விளையாட்டுகளில் கூட கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் செய்திகள் நிரம்பிய தேசத்தில், சாமானியனின் அடிப்படைப் பிரச்னைகள் சற்றும் கண்டு கொள்ளப்படுவதில்லை.

தேசத்தின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 8.5 விழுக்காடு, உலகிலேயே முதன்மையாக அமைந்து வியக்க வைத்தாலும், மேடுபள்ளம் நிரம்பிய இந்தச் சாலைகள் நிச்சயம் சகிப்பதற்கில்லை.

தரணி மெச்சும் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவ சேவையால் ஈர்க்கப்படும் மேற்கத்தியர்கள், மருத்துவச் சுற்றுலாவால் நாட்டின் அந்நியச் செலாவணியை அதிகப்படுத்திக் கொண்டிருக்க, இதே இந்தியாவில்தான் குழந்தை இறப்பு விகிதமும், பிரசவச் சாவுகளும் மிக அதிகம் - ஆஃப்ரிக்காவுக்கு அடுத்தபடியாக.

அரசியல் கட்சிகள், ஆளும் வர்க்கங்களின் விழாக்களிலும் கூட்டங்களிலும் அநியாயமாகவும் தேவைக்கதிகமாகவும் மின்சாரம் விரயமாகிக் கொண்டிருப்பது ஒருபுறமென்றால், அறிவிக்கப்பட்டோ, படாமலோ மின்வெட்டுகள் நாளின் பாதி நேரத்துக்கும் மேல் படர்ந்திருப்பதும் இங்கேதான்.

இந்தியாவின் ஏற்றுமதி வகை அரிசிகள் உலகின் பல நாடுகளிலும் நட்சத்திர அடுக்களைகளில் வெந்து கொண்டிருக்க, வறுமைக் கோட்டினை தன்னுள் இறக்குமதி செய்துகொண்டுள்ள எண்ண வரையற்ற வயிறுகள் பட்டினியால் நொந்துகிடப்பதும் இதே இந்தியாவில் தான்.

பங்குச் சந்தைகளில் குறியீட்டெண்களின் வரைபடம் உச்சபட்ச சாதனை அளவை நெருங்கி நிமிர்ந்திருக்கும் நாட்டில், பலகோடி மக்களின் நாளாந்திர வருமானமோ இரண்டு டாலருக்கும் குறைவுதான்.


ஒருபக்கம் உலகப் பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் கோடிக்கணக்கான மதிப்பு விலையுள்ள, 27 மாடிகளும், மூன்று உலங்கு வானூர்தித் தளங்களும் கொண்ட உலகின் உன்னத வசிப்பிடம் இந்தியாவின் செழுமையை சொல்லிக் காண்பிக்க முயலுகிறது. இன்னொரு பக்கமோ, சாக்குத் திரை மறைப்புகளிலும், மண் சேற்றாலும் மாட்டுச் சாணங்களாலும் மெழுகப்பட்ட வீடுகளில் கோடிக் கணக்கானோர் வாழும் அவலம் யதார்த்தத்தைப் பறைசாற்றுகிறது. இதுதான் இந்தியா.

ஏன் இந்த பாரிய இடைவெளி?

இந்த இடைவெளியை ஆட்சியாளர்கள் குறைக்கவோ, போக்கவோ முன்வராதது ஏன்? இயலாமையா? முயலாமையா? செயற்கைக்கோள் விடுவதில் சிறப்பு பெற்ற தேசம் இதை இயலாமை என்றால் பின்னால் சிரிப்பு தான் வரும்.

நகர்ப்புற பகுதிகளின் கழிப்பிட வசதிக்காக ஆண்டுதோறும் அரசால் 350 மில்லியன் டாலர்கள் செலவிடப்படுகின்றன என்கிறார் பிந்தேஷ்வர் பதக். சுலப் சுகாதார சமூக சேவை மையத்தின் நிறுவனர் இவர். "இந்தியாவுக்கு இன்னமும் 12 கோடிக்கும் மேற்பட்ட கழிவறைகள் தேவைப்படுகின்றன - அநேகமாக, உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் இதுவாகத்தானிருக்கும். இன்னொன்றும் தெரிந்துகொள்ளுங்கள். இந்தச் சுகாதாரச் சூழலை ஆட்சியாளர்களால்தான் ஏற்படுத்த முடியும்" என்கிற பதக் தனது அமைப்பின் மூலமாக, கடந்த நாற்பது ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான பொதுக் கழிப்பறைகளை நிறுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

41 வயதான சுரேஷ் பச்சே ஒரு மிதிவாகன இழுப்பாளர். நீர் சுமந்திருக்கும் அந்தக் கலையங்களைக் காட்டி "தண்ணீருக்கும் கூட, அதை வைத்து காசு பார்க்கும் தாதாக்களைத்தான் சார்ந்து இருக்க வேண்டி இருக்கிறது. அரசாங்கம் அந்தப் பணியைச் செய்தால், அந்தப் பணத்தை அரசாங்கம் எடு(த்து)க்கலாமே" என்கிறார். "ஆனால், அரசாங்கம் இங்கு செய்கிற ஒரே ஒரு சேவை வீடுகளை இடித்துத் தள்ளுவதுதான். எனது வீடு கூட 10 முறை இடிக்கப்பட்டிருக்கிறது. ஒரே சிரிப்புதான் போங்க".

ஒருபக்கம் அடிப்படைத் தேவைகளும் நிறைவேறாத கோடிக்கணக்கான மக்கள். இன்னொருபக்கம் கோடிகளில் விற்பனையாகும் கைபேசி உள்ளிட்ட நவீன சாதனங்கள். இந்தியா, தன்னுடைய அபாயமான இந்த வீக்கத்தைப் புரிந்துதான் இருக்கிறதா?

67 கோடி கைபேசி இணைப்புகளை குறுகிய காலத்தில் பெற்றிருக்கும் இதே தேசத்தில்தான் 36.5 கோடி மக்களுக்கு மட்டுமே தனிப்பட்ட கழிவறைகள் இருக்கின்றன. கைபேசி இணைப்புகளின் அளவுள்ள 67 கோடி மக்களுக்கு இன்னமும் திறந்த வெளிதான் என்கிறது ஐ.நாவின் புள்ளிவிவரமொன்று. ஆனால் கைபேசி இணைப்புகளின் வரைபடம் (Graph) மட்டும் மேலேறிச் சென்றுக்கொண்டிருக்கிறது - மாதாந்திரம் 2 கோடி இணைப்புகள் அளவுக்கு.

நவீன இந்தியா பெற்றுத்தந்த நாகரிகக் குறியீடான கைபேசி மூலம் பேசிக்கொண்டே திறந்தவெளி கழிப்பிடத்தை ஒரு மனிதர் பயன்படுத்துவதான காட்சியை நினைத்துப் பாருங்கள். திரைப்படங்களில் அது வெறும் பகடியாக இருக்கலாம். நாட்டின் நகர்ப்புறங்களிலோ அது இன்றைய இந்தியாவைக் குறிக்கவில்லையா?!.

தாராள மயமாக்கலின் கதவுகளைத் திறந்துவிட்ட நவீன இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங் "நம்முடைய இந்த வளர்ச்சி 30 கோடி நடுத்தர வர்க்கத்தை மேலும் மேலும் முன்னேற்றுகிற அதே நேரத்தில் அதனால் ஏழைகளும் பயனடையவே செய்வார்கள்" என்கிறார். "ஆனால், இந்த மாவோயிஸ்ட்டுகள்தாம் முட்டுக் கட்டைகள். ஏழைகளின் வெறுப்புணர்வை விசிறிவிடுகிறார்கள். இவர்கள்தாம் இந்த தேசத்தின் கட்டமைப்புக்கு ஆபத்தானவர்கள்"என்றும் மறக்காமல் சேர்த்துக் கொள்கிறார்.


"குறைந்தபட்சம் குழாய் நீர், சாக்கடை வசதி, இதுகூட இல்லாமல் முன்னேற்றத்தைப் பற்றி என்ன பேச்சு வேண்டி கிடக்கு" என்கிறார் அனிதா பட்டேல் தேஷ்முக். பம்பாயின் சேரிப்பகுதிகளில் இவருடைய "புகார்" அமைப்பு தான் ஆய்வு செய்தது.

இந்த வீக்க நிலை பெரும் அபாயம் தான் என்கிற ஆனந்த் மஹிந்திரா, மஹிந்திரா அன் மஹிந்திரா நிறுவனத்தின் துணைத்தலைவர், ஒரு பெரும் தொழிலதிபர். "இந்த இடைவெளியை அனைவரும் உணர்ந்தே இருக்கிறோம், இதுதான் ஒரு வேளை வளர்ச்சியைத் தூண்டுகிறதோ!"

செல்வ(ந்த)ர்கள் சொல்லத்தான் செய்வார்கள்.

நரசிம்மராவுக்கு முன்புவரை இந்தியா நேரு வகுத்த சோஷலிசப் பாதையில் தான் பயணித்தது. தலைக்கு இத்தனை கடன் என்பது போன்ற பேச்சுகளும், வெளிநாட்டுப் பொருள்கள், வசதிவாய்ப்புகளைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சுகளும் தான் அன்றைய சோஷலிச இந்தியா.

தனியுடமை என்பது பக்க வீக்கமாகவும், பொதுவுடமை என்பது தக்கோரின் ஏக்கமாகவும் மாறிவிடுகிற தேசத்தில் என்னதான் தீர்வு இருக்க முடியும்?

அனைத்து வளங்களும் இறையுடமை; அதற்கு நாம் பொறுப்பாளிகளே என்கிற எண்ணம் மக்களிடத்தே ஊட்டப்படவேண்டும். பயன்படுத்தப் படாமல் எந்த வளமும் வசதியும் வீணாகக் கூடாது. வீணடிப்பதை பற்றியும் நம்மை விசாரிக்க ஒருநாள் வரும், ஒரு மாபெரும் இறைசக்தி உண்டு என்கிற எண்ணம் பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே; உளப்பூர்வமாக ஒவ்வொருவரும் அப்படி உணர்ந்தால் மட்டுமே, அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதால் மட்டுமே இந்த வீக்கங்களும் ஏக்கங்களும் விலகிப்போகும் நிச்சயம்.


அப்படியானால், இதில் அரசாங்கத்துக்கு ஏதும் பங்கில்லையா? என்று கேட்கலாம். அரசாங்கத்திற்குத்தான் பெரும்பங்கு இருக்கிறது. ஆரவாரக் கூத்துகளை விடவும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை கொடுப்பதாக அரசு அமைய வேண்டும். அதற்கு மக்களைப் போலவே, இந்தப் பதவிகளுக்கும் பொறுப்புக்கும் ஒருநாள் தாம் பதில் சொல்லவேண்டியிருக்கும் என்று உணர்கிற ஆட்சியாளர்கள் வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதென்னவோ மக்கள் கையில்தான் இருக்கிறது.


(அரப் நியூஸில் ரவி நெஸ்மேன் எழுதிய கட்டுரையிலிருந்து புள்ளிவிவரத் தரவுகள் பெறப்பட்டன. நன்றி)
இந்நேரம்.காம் இக்கட்டுரையை வெளியிட்டுள்ளது. நன்றி

1 comment:

Thamizhan said...

வேறு யாரையும் எதிர் பார்க்காமல் அங்குள்ள மக்களே திட்டமிட்டு வசதிகளுடன் கூடிய பல அடுக்கு மாடிக் கட்ட்டிடங்களை உருவாக்கலாம்.சரியான தலைமையில் அவர்களை இணைத்தால் கட்டாயம் திட்டமிட்டு இதைச் செய்துவிட முடியும்.உதவிக்கு மற்றவர்களும் கட்டாயம் வருவார்கள்.