(அர்-ரியாத் நகரின் எழுத்துக்கூடத்தில் மின்வெளியின் அரூப அரங்கில் நிகழ்வுற்ற கவியரங்கில் 'ரியால் மட்டுமா?' என்ற தலைப்பின் கீழ் பாடிய கவிதை! நாள்: 17/04/2007)
(இ)ரியால் மட்டுமா?
சொல்லாகப் பொருளாகப் பேச்சைத் தந்து
....சோபிக்கும் எழுத்தார்வம் சேர்த்தே தந்து
நல்லோரின் அறவோரின் நட்பை யீந்து
....நலமாக வாழுதற்கு வழியும் செய்தான்!
பல்லோரும் வாழ்கின்ற பூமி தன்னில்
.....பலவுண்டு சித்தாந்தம் உண்மை ஒன்றே!
எல்லோரின் இறையோனாம் அவனைப் போற்றி
....எழுதுகின்றேன் கவியொன்று; ஏற்றால் நன்றி!
அமிழ்தாய் பேச்சு; அன்புந்தான்
....அறிவில் வயதில் அண்ணந்தான்.
தமிழைச் சுவையாய்த் தருவதிலே
....தகைமை சான்ற ஆசாத்தாம்.
இமையாய் செயல்கள் புரிபவராம்
....இருக்கும் தமிழோ கண்கள்போல்!
எமையும் அழைத்தார் அரங்கேக
.....ஏதோ சொல்வேன் கவிதைபோல்!
அறியாத சிறுவன்நான் எழுது கின்றேன்
....ஆர்ப்பாட்ட மில்லாமல் கேட்பீர் தானே!
நெறியாக எழுதுதற்கே நினைப்பு வேண்டி
....நீள்கின்ற கருத்ததனை நிறுத்திச் சொல்வேன்
சரியாக நானேதும் சொல்லும் போதில்
....சப்திப்பீர் கைதட்டி உற்சா கந்தான்!
விரிவாக இலக்கணத்தைக் கற்றே னில்லை
....வேண்டுகின்ற உள்ளந்தான் வாய்த்து விட்டேன்.
(இ)ரியால்கள்மட் டுந்தானா என்ற கேள்வி
....(இ)ரகசியமாய் கேட்டாலும் இல்லை என்பேன்.
நியாயத்தின் பக்கத்தில் நின்று பார்த்தால்
...நிச்சயமாய் ஏராளம் எடுத்துச் சொல்வேன்
வியாழந்தான் தொடங்கிவிடும் விடுப்பின் ஆட்டம்
...வெள்ளியன்று முழுதாக வெற்றித் தூக்கம்.
தியாகத்தைச் செய்கின்ற தோழர் கூட்டம்.
...திருவாளர் சேமிப்பில் குடும்பம் வாழும்!
ஆரென்று அறியாரும் அம்மா மொழியால்
...ஊரென்று உணர்வாரே உறவாய் ஆவார்.
ஊருக்குப் போனாலும் உயர்த்திப் பேசும்
...உள்ளத்தைக் கேட்டாலும் உண்மைச் சொல்வார்
பாரெங்கும் இதுபோல சூடும் உண்டோ
...பனிப்பொழிவும் அதிகம்தான் என்ன செய்ய?
ஊராரும் இங்குவர விரும்பு கின்றார்
...உலகத்தில் செலவிங்கு குறைவே ஆமாம்.
ஆறென்று ஏதுமிலை இந்த நாட்டில்
....ஆனாலும் வியர்வைதான் அதனைப் போல
சோறாக்கி உண்பதற்கு சமையற் கட்டில்
.....சிலநேரம் நின்றாலே வியர்வை ஆறாம்.
தாரெல்லாம் கொதிக்கின்ற தாங்காச் சூட்டில்
....தன்விதியை பூசுகின்ற உழைக்கும் வர்க்கம்
நீரூறும் நெற்றியெலாம் நிலத்தில் வைத்தால்
....நிலமிங்கே ஆறாகும் நிதர்ச னம்தான்.
வேறூரும் அறியாத மனிதர் இங்கே
....வெளிநாட்டார் பழக்கத்தைப் பெற்றுக் கொள்வார்.
*பேரூரில் வாகனங்கள் பலவு மிருந்தும்
....பெண்ணுக்குப் பூவாங்க வழியே இல்லை.
சீராகச் செல்கின்ற வாழ்வில் இங்கே
...சிற்சிலவே குறையாக தனிமை, தாபம்.
பார்போற்றும் தமிழுக்கும் பெரிய சேவை
...பண்பாட வைக்கின்ற எழுத்துக் கூடம்.
__________________oooOOOooo__________________
5 comments:
அழகிய கவிதை ஹம்துன் அவர்களே! மேடை வாசிப்பிற்கு எப்பொழுதும் விருத்தம் கைகொடுக்கும். அழகாய்ப் புனைந்துள்ளீர்கள். பாடல் வரிகள் அனைத்தும் என்னைக் கவர்ந்துள்ளதெனினும் குறிப்பாய் உரைக்கக் கேட்டால்:-
/////ஆறென்று ஏதுமிலை இந்த நாட்டில்
....ஆனாலும் வியர்வைதான் அதனைப் போல
சோறாக்கி உண்பதற்கு சமையற் கட்டில்
.....சிலநேரம் நின்றாலே வியர்வை ஆறாம்.
தாரெல்லாம் கொதிக்கின்ற தாங்காச் வட்டில்
....தன்விதியை பூசுகின்ற உழைக்கும் வர்க்கம்
நீரூறும் நெற்றியெலாம் நிலத்தில் வைத்தால்
....நிலமிங்கே ஆறாகும் நிதர்ச னம்தான்./////
-என்னை மிகவும் கவர்ந்திழுத்த வரிகள். வாழ்த்துகள். தோழரே. ஏனெனில் இதுபோன்ற கொடுமையை நானும் துபாயில் துய்த்திருக்கிறேன்.
நன்றி தோழரே!
நீங்கள் எடுத்துக்காட்டி பாராட்டிவிட்ட வரிகள் எழுத்துப் பிழையுடன் பதிவாகியிருந்தது. சரி செய்துவிட்டேன். நன்றிகள்.
\\ஆறென்று ஏதுமிலை இந்த நாட்டில்
....ஆனாலும் வியர்வைதான் அதனைப் போல \\
மிகவும் அருமை.
மிக அருமையான கவிதை. வேற்று தேசத்தில் விதிக்கப்பட்ட வாழ்க்கையினை என்ன அழகாகச் சொல்கிறீர்கள் ? அருமையாக வந்திருக்கிறது நண்பரே.
நட்புடன் ஜமால்,
நன்றி - வருகைக்கும் கருத்துக்கும்.
எம்.ரிஷான் ஷெரீப்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment