Thursday, January 10, 2008

பூக்களில் உறங்கும் மெளனம்

பூக்களில் உறங்கும் மெளனத்தை வைத்து கவிதையாகப் பேசுமாறு கேட்டிருக்கிறார் நண்பர் சிறில் அலெக்ஸ். இவ்வலைப்பூவில் உறங்கும் மெளனத்தைக் கலைப்பதற்கு முதலில் யோசித்தாலும் எழுதியே விட்டேன் இன்று.
(ஒரே ஒரு எச்சரிக்கை: இது தொடரக்கூடும் என்பது தான்:-))) ).

பூவுக்குள் கவியொன்றே புதைந்தி ருக்கும்
...புன்னகையின் சாந்தத்தைப் போர்த்தி ருக்கும்
நாவுக்கும் தெரியாத நாதத் தென்றல்
...நறுமுகையாய் சிறுவிதையாய் ஒளிந்தி ருக்கும்.
பாவொன்று படம்பிடித்து எழுத வந்த
...பாவலனென் கவிதையிலே இடம்பி டிக்கும்
தாவென்று கேட்போர்க்கு தந்து நிற்கும்
...தனிச்சிரிப்பின் நற்சிறப்பை பூவில் கற்போம்!

வான்சிந்தும் மழைத்துளியில் உழவர் இன்பம்
...வைத்திருக்கும் இறையோனே பூவைத் தந்தான்
தேன்சிந்தும் பூமலரும் காதல் சொல்லும்
...துணைசேரும் உலகத்தில் உயிர்கள் பூக்கும்
தானேந்தும் புன்சிரிப்பைத் தொற்ற வைக்கும்
...தன்மகிழ்வை பிறமுகத்தில் பற்றச் செய்யும்
ஏனென்று கேளாமல் எங்கும் பூக்கும்
...எல்லாமே சமமென்று எடுத்துச் சொல்லும்

பிறப்புக்கும் இறப்புக்கும் பூக்கள் உண்டு
...பொதுவான வெற்றியிலும் ஒருபூச் செண்டு
சிறப்பான செய்கைக்கே பூவின் கூட்டம்
...சேர்ந்துவந்து மாலையாக கழுத்தில் வீழும்!
விருப்பத்தைத் தெரிவிக்கும் காதல் சின்னம்
...வகைவகையாய் நிறமிருக்கும் வார்த்தைக் கேற்ப
பொறுப்பான பேச்செல்லாம் பூவே பேசும்
...பார்த்தாலோ வேறில்லை ஒற்றை மெளனம்.


பேசுகிற பூவுமுண்டு; மழலை என்பார்
...புன்னகையும் பூவினைத்தான் ஒத்தி ருக்கும்
தூசுகளாம் பாவங்கள் தீண்டா முல்லை
...தூய்மையிலும் சொல்வதற்கு வேறு இல்லை
நேசமிகு உள்ளத்தில் மழலைப் பூக்கள்
...நல்குகின்ற மகிழ்ச்சிக்கும் அளவு முண்டோ?
வாசமிகு இளம்பூவில் விதையே மெளனம்
...வளர்ந்தபின்னர் வெளிப்படுமே விருட்சப் பாடல்!13 comments:

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாசமிகு இளம்பூவில் விதையே மெளனம்
...வளர்ந்தபின் வெளிப்படுமே விருட்சப் பாடல்!

மிக அழகிய கவிதை நண்பரே..
தொடரட்டும்...!

இப்னு ஹம்துன் said...

எம்.ரிஷான் ஷெரீப்..
வருக, வருக
நன்றி, மகிழ்ச்சி!

Raghavan alias Saravanan M said...

எழுத்தோவியன், நல்ல பெயர்.

முதல் முறை வருகை இங்கே. சிறில் அலெக்ஸ் வலைத்தளத்தில் இருந்து!

//பேசுகிற பூவுமுண்டு; மழலை என்பார்
...புன்னகையும் பூவினைத்தான் ஒத்தி ருக்கும்//

அழகான வரிகள்!

நல்லா இருக்கு வார்த்தைக் கோவை!

வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

இப்னு ஹம்துன் said...

இராகவன் (எ) சரவணன்,

முதல்முறை வருகைக்கும், பாராட்டு-வாழ்த்துக்கும் நன்றிகள், மகிழ்ச்சி.

அடிக்கடி வாங்க.

திகழ்மிளிர் said...

மிக அழகிய கவிதை

இப்னு ஹம்துன் said...

நன்றி திகழ்மிளிர்,
(ஏனோ பதிப்பிக்கப்பட்டபின்னும், பதிவில் உங்கள் பின்னூட்டம் தெரிய வரவில்லை).

பாச மலர் said...

அழகிய கவிதை..பாராட்டுகள்

இப்னு ஹம்துன் said...

பாராட்டுக்கு நன்றி பாசமலர்

cheena (சீனா) said...

நல்லதொரு கவிதை - நல்வாழ்த்துகள் -மரபுக் கவிதை. இலக்கிய நெடி எங்கும் வீசுகிறது.

//...புன்னகையின் சாந்தத்தைப் போர்த்தி ருக்கும்//

போர்த்தியி ருக்கும் - தவறென்றால் திருத்திக் கொள்க

பூவின் சிரிப்பே கவிதையின் அடிப்படை.

மனித வாழ்க்கையில் அனைத்து நிகழ்வுகளிலும் பூக்கள் தொடர்புடையவை. வெவ்வேறு நிகழ்வுகளுக்கு வெவ்வேறு பூக்கள்.

மழலையையும் பூவையும் இணைத்த காட்சி அருமை.

நல் வாழ்த்துகள்

அகரம்.அமுதா said...

அன்பனென் பேரமுதா! ஆர்ப்பதெல்லாம் சீர்மரபே!
இன்னுமிரு பத்தெட்டை எட்டவில்லை -மன்னும்
குணத்தமிழர் மாமரபு குன்றா துமக்கு
வணக்கங்கள் சொல்கின்றேன் வந்து!

தோழரே! தங்கள் எண்சீர் விருத்தம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. எனது அகரம்.அமுதா என்னும்
http://agramamutha.blogspot.com/
இத்தளத்திற்குத் தங்களை மிகவும் தாழ்மையுடன் வரவேண்டுகிறேன்.

அகரம்.அமுதா said...

அட! இயன்ற வரை இனிய தமிழ் தங்களுடைய வலைப் பக்கம் தானா? ஏன் தொடராமல் விட்டுவிட்டீங்க?

இப்னு ஹம்துன் said...

சீனா சார்,
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

அகரம் அமுதா ஐயா, உங்கள் வலைப்பூ வழியாக சிறப்பான இலக்கியச்சேவை செய்கிறீர்கள். மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்.

'இயன்றவரை இனிய தமிழில்' என்னுடையது இல்லை. அதில் நான் ஒரு பொதுவான உறுப்பினனே..

Kavianban KALAM, Adirampattinam said...

மண்சீர் பெறவே மணக்கும் மலரினை
எண்சீர் விருத்தத்தில் எத்திக்கும் தூவி
மகிழ்வித்த உன்றன் மதியின் திறனால்
நெகிழ்ந்து புகழும் மனம்.

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்