Monday, February 12, 2007

கல்யாண் என்றொரு சகோதரன்.

கல்யாண் என்றொரு சகோதரன்.

சாகரன் என்கிற கல்யாணுடனான எங்கள் பழக்கத்திற்கு அதிக வயதில்லை என்றாலும் பல வருடங்கள் பழகிய ஒரு அந்நியோன்னிய உணர்வு. இன்னமும் அவருடைய அகால மரணத்தை நம்ப இயலவில்லை.

எப்போதும் உற்சாகத்தைத் தேக்கி வைத்திருக்கும் அந்த முகத்தைப் பார்த்தாலே, பார்ப்பவருக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

இருவாரங்களுக்கொரு முறை தொடர்ந்து எழுத்துக்கூடத்தில் சந்தித்து வந்திருக்கிறோம். எழுத்துக்கூடத்தின் ஒருங்கிணைப்பாளரே அவர்தான்.

(பஃக்ருத்தீன்) பெயரும் பதிவும் தினமலரில் குறிப்பிடப்பட்டதைக் குறித்து முதலில் செல்பேசியில் தொடங்கிய நட்பு.

ஊக்கமூட்டுவதில் மன்னன். "பாராட்டணும்யா, அப்பத்தான் திறமைலாம் வெளிப்படும்" என்பார்.

நல்ல திறமைசாலி. தேன்கூடு திரட்டி மட்டுமில்லாமல், பலப்பல மின் குழுமங்களின் வெற்றிக்கும் பின்னணியில் இருந்தவர். அதிகம் பேசாதவர் எனினும் நண்பர் சுபைர் போன்ற நிறைய பேர்களை எழுதவைத்தவர்.

'உங்களையெல்லாம் நண்பனாக அடைந்ததில் சந்தோஷமடைகிறேன்' என்று
ஒரு முறை
மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் சொல்லியிருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த பட்டிமன்றம் முடிந்ததும், ஓடிவந்து எங்களை கட்டிப்பிடித்துக்கொண்டு "கலக்கிட்ட..யா" என்று பாராட்டிய அந்தக்குரலை இனி கேட்க இயலாது.

இது சுயநலம் தான். எங்களை முன்வைத்தே இந்த இழப்பை சிந்திக்கிறோம். உண்மையில், அவர் வாழ்வின் எல்லா நிலைகளிலும் சிறந்து விளங்கினார். அவருடைய மூன்றே வயதான குழந்தை, இழப்பு அறியாமல், வந்திருந்த ஒரு 'அங்கிளை' விளித்தபோது... அனைவருக்கும் கரை உடைத்துக் கொண்டது கண்ணீர்.

'கூகுள் சாட்'டில் Kalyan J என்கிற பெயர் Not at Desk என்ற குறிப்புடன் இருப்பதை தாங்க முடியவில்லை.

மரணம் என்பது தத்துவமாகவே இருக்கிறது-நெருங்கியவர்களுக்கு வரும்வரை!

ரியாத் வாழ் தமிழர்கள் கல்யாண் விட்டுச்சென்றுள்ள வெற்றிடத்தில் தம் குடும்பத்தில் ஒரு சகோதரனின் இழப்பை உணர்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

கண்ணீருடன்
லக்கி ஷாஜஹான்
ஹ.பஃக்ருத்தீன்.

13 comments:

Unknown said...

செய்தி சக பதிவர் என்ற வகையிலே வருந்தமளிக்கிறது. அவரின் குடும்பத்தினருக்கு வார்த்தைகள் ஆறுதலைத் தருமாவெனத் தெரியவில்லை.
காலம் அவர் குடும்பத்தின் கவலையை மெல்ல ஆற்றுமென நம்புகிறேன்.

பரஞ்சோதி said...

நண்பரே!

நேற்றிரவு உங்க தொலைபேசிக்கு பலமுறை முயற்சி செய்தேன், லைன் போகலை. மனம் பட்ட பாடு இறைவனுக்கு தான் தெரியும்.

இச்செய்தி உங்க வாயில் மூலமாவது பொய்யானது என்று அறிய ஆசைப்பட்டேன்.

என்ன செய்வது, எனக்கு வர்ணிகாவை நினைக்க நினைக்க அழுகை வருகிறது.

மிகப்பெரிய இழப்பை இறைவன் அவருக்கு கொடுத்திருக்கிறான்.

contivity said...

சகோ இப்னு ஹம்துன்,

சாகரன் அவர்களை வலைப்பதிவின் மூலமும் தேன்கூடு திரட்டி மூலமும் மட்டுமே அறிந்துள்ளேன். இருப்பினும் அவர் மறைவு வருத்தம் அளிக்கிறது. அதை நீங்கள் பதிவு செய்துள்ள விதமும் ஆறுதல் அளிக்கிறது.

குடும்பத் தலைவனை இழந்து வாடும் அவரின் முடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

தமிழ்நதி said...

ஒரே ஒரு தடவை வலைப்பதிவர் சந்திப்பிற்கு வந்து, தான் யாரென வெளிப்படுத்த வேண்டாமெனக் கேட்டுக்கொண்டு போய்விட்டார். பின் நன்றாக எழுதுகிறீர்கள் என்று ஒரு மடலிட்டிருந்தார். அந்த இளமையான முகம் இனி புகைப்படத்தில் மட்டுந்தான் என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. மறந்துபோயிருக்கும் வாழ்வின் அநிச்சயத்தை இப்படி யாராவது நினைவுபடுத்திவிட்டுப் போய்விடுகிறார்கள். அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் வார்த்தைகளால் பயனிருக்குமா தெரியவில்லை... ஆனால்,கழிந்துபோகும் நாட்கள் தேறுதல் அளிக்கலாம்.

மரைக்காயர் said...

கல்யாண் அவர்களை நான் அறிந்திருக்கவில்லை என்றாலும் இச்சிறு வயதில் அந்த இனிய மனிதரின் மறைவு மனதை பாரமாக்கி விட்டது.

இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை இறைவன் அன்னாரது குடும்பத்தாருக்கும் உற்றார், நண்பர்களுக்கும் வழங்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

Vassan said...

இது போன்ற சூழல்கள் கொடுமை நிறைந்தவை. தகப்பனை இழந்த குழந்தையை நினைக்கும் போது மிகவும் வருத்தமாயுள்ளது.

நீங்கள் எழுதியதை படித்ததில் சாகரன் நல்லதொரு மனிதர் என்பதாய் தெரிகிறது. குறுகிய காலமே என்றாலும், நட்பு, உங்களுக்கு
வாழ்நாள் முழுவதும் மறக்கவியலாத நினைவுகளை தந்துள்ளதாய் நீங்கள் எழுதியுள்ளது தெரிவிக்கிறது.

Unknown said...

நண்பரே..

எனக்கு கல்யாண் அவர்களை மின்னஞ்சல்கள் மூலம் மிகவும் பரிச்சயம். நேரில் பார்த்ததில்லை. ஊக்கமூட்டுவதில் மன்னன் என்பது மிகவும் சரி. இந்த அகால மரணம் மிகவும் வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஏதாவது பண உதவி தேவைப்படுமா என்று கேட்டுச் சொல்லமுடியுமா? உடனடியாக இல்லாவிட்டாலும் அந்த குழந்தையின் படிப்புக்கு உதவி தேவைப்படுமானால் சொல்லவும்.

அன்புடன்,
வெங்கட்ரமணி.

Osai Chella said...

mikavum varunthukirom

இப்னு ஹம்துன் said...

//அவரின் குடும்பத்தினருக்கு வார்த்தைகள் ஆறுதலைத் தருமாவெனத் தெரியவில்லை.
காலம் அவர் குடும்பத்தின் கவலையை மெல்ல ஆற்றுமென நம்புகிறேன். //

உண்மைதான் ரமணிதரன், நண்பர்களாகிய எங்களாலேயே இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியவில்லையே..உங்கள் வார்த்தைகள் ஆறுதல் அளிக்கின்றன.


பரஞ்சோதி, இக்கொடிய உண்மையை ஜீரணிப்பது மிகவும் சிரமமாகத்தான் இருக்கிறது.
உங்களை முன்வைத்து அவருக்கு கனவுகள் இருந்தன. எங்களிடம் அவ்வப்போது மனம் திறந்திருக்கிறார்.

Anonymous said...

இப்னுஹம்துன்,

நலமா? உங்கள் எண்ணுக்கு தொலைபேசி செய்தேன். இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. பேசவேண்டும். மடல் எழுதுகிறீர்களா?

மூர்த்தி,
முத்தமிழ் மன்றம்
mmoorthee@gmail.com

இப்னு ஹம்துன் said...

Contivity, தமிழ்நதி, மரைக்காயர்,
இத்தகைய ஆறுதல் வார்த்தைகளால் தான் நாம் நம்மைத் தேற்றிக் கொள்கிறோம்.

வாசன், அவர் நினைவுகளில் என்றும் வாழ்வார் என்பதில் ஐயமில்லை.

ரமணி,மூத்த பதிவர்களும், ரியாத் தமிழ்ச் சங்கமும் இதற்கான முன்முயற்சிகள் எடுத்தால் நாமும் இணைந்துக்கொள்வோம்.

அபூ முஹை said...

மரணம் ஜீரணிக்க முடியாதது, ஆனாலும் ஒவ்வொரு மனிதனும் மரணத்தைச் சந்தித்தே ஆக வேண்டும்.

கல்யாண் என்ற சாகரன் அவர்களை இழந்து நிற்கும் அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

****************************
சாகரன் அவர்களுக்கும் எனக்கும் எந்த விதத்திலும் அறிமுகம் இருந்ததில்லை. கடந்த 24.01.2007 அன்று முத்தமிழ் மன்றத்தின் வழியாக எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்...

24-01-2007, 09:10 PM
சாகரன் vbmenu_register("postmenu_", true);
வழிநடத்துனர்
இணைந்த தேதி: Jul 2004
வசிப்பிடம்: ரியாத்
பதிவுகள்: 148


vanakkam
அன்புள்ள அபுமுகை,

நலம். நீங்கள் நலம் தான் என்று நம்புகிறேன்.

நீங்களும் சவுதி அரேபியாவில் இருப்பதாக நம்புகிறேன். எனக்கு உங்களின் தொலைபேசி எண் கிடைக்குமா?

என்னுடைய எண்:

அன்புடன்,
கல்யாண்.
__________________
சாகரன்

அவருடைய செல்பேசி எண்களைக் குறிப்பிட்டிருந்தார்.

நான் முத்தமிழ் மன்றத்திற்கு முந்தா நாள், 11.02.2007 அன்று வருகை தந்தபோதுதான் சகரன் அவர்களின் மின்னஞ்சலைப் பார்த்தேன், பார்த்தவுடன் அவர் நம்பருக்குத் தொடர்பு கொண்டேன் ஏதேதோ சொன்னார்கள் ஒன்றும் விளங்காமல் தொடர்பை துண்டித்து விட்டேன். நேற்று முத்தமிழ் மன்றத்தில் ''சாகரனுக்குக் கண்ணீர் அஞ்சலி'' என்று செய்தியைப் பார்த்து நடந்த சம்பவம் உண்மைதான் என முடிவு செய்து கொண்டேன்.

சாகரன் அவர்களின் மின்னஞ்சலுக்கு உடனே பதில் கொடுக்க இயலாமல் போனதற்கான வருத்தமும் எனக்குள் சேர்ந்து கொண்டது.

இந்த மறுமொழி முத்தமிழ் மன்றத்திலும்

அன்புடன்,
அபூ முஹை

suvanappiriyan said...

இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை இறைவன் அன்னாரது குடும்பத்தாருக்கும் உற்றார், நண்பர்களுக்கும் வழங்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

-Suvanappiriyan