நாகூர் ரூமியின் 'அடுத்த விநாடி'
தமிழ் எழுத்தாளரும் ஆங்கிலப்பேராசிரியருமான நாகூர் ரூமி எழுதிய இரண்டு நூல்களை நண்பர் ஒருவரிடமிருந்து பல முயற்சிகளுக்குப்பின் வாங்கி வந்தேன். 1). அடுத்த விநாடி 2). இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம். என்நூலகத்தில் வாங்கிச் சேர்க்க நான் கண்வைத்த இரண்டு புத்தகங்கள் அவை.
முதலில் 'அடுத்த விநாடி' யை சில விநாடிகள் மேலோட்டமாகப் புரட்ட நினைத்த என்னை முழுதுமாக அது ஈர்த்ததில், மற்ற வேலைகளை மறந்து அப்படியே உட்கார்ந்து விட்டேன்,
சுய முன்னேற்ற நூல்கள் பொதுவாக 'எழுதியவருக்கே' அதிகம் உதவுவதாக இதுவரையில் கேள்விப்பட்டுள்ள எனக்கு, இந்நூல் உண்மையில் நல்ல ஆச்சரியமளித்தது.
தொடக்கம் முதலே பிசிறு தட்டாத, ஈர்க்கும் நடை ரூமிக்கே உரிய கலை.
முதல் அத்தியாயத்தில் 'ஒரு ரகசியம்' சொல்லித்தொடங்குகிற இந்நூல் வெற்றிக்குரிய 'பயிற்சியை' மேற்கொள்பவர்களாக வாசகர்களை இறுதியில் ஆக்கிவிடுகிறது
எதிர்மறையான எண்ணங்களையும் உணர்வுகளையும்,பழக்கங்களையும் விடாதவரை வெற்றியும் நமக்கு எதிர்மறையாகவே இருக்கும்.
வெற்றிக்கு மாலையிட விரும்பும் யாரும் தன்னைத்தானே தோற்கடிக்கிற மனப்பாங்கை (Self Defeating Behaviour) விட்டும் கட்டாயம் மீள வேண்டும் என்பதை வலியுறுத்தும் முதல் அத்தியாயத்தில் வருகிற பொன்மொழியிது:"சிந்திப்பவர்கள் சாவதில்லை, சிந்திக்காதவர்கள் ஏற்கனவே செத்துப்போனவர்கள்"
வெற்றி என்பது பணம் புகழ் சம்பாதிப்பதோ, சொத்து சேர்ப்பதோ அல்ல. இவையெல்லாம் வெற்றியைக் குறிக்கலாம்.வெற்றியின் எத்தனையோ அடையாளங்களில் இவை ஒன்று அவ்வளவு தான்.
'தோல்வி, அவமானம், ஏமாற்றம் எனப்பலப் பெயர்களில் வெற்றி தொடக்கத்தில் வருவதுண்டு' என வெற்றியின் பல முகங்களை இரண்டாம் அத்தியாயம் பேசுகிறது.
உதாரணங்களாக, பத்தாயிரம் தடவை தோற்றிருந்தாலும், இன்று ஒரு மாபெரும் வெற்றியாளராக அறியப்படும் விஞ்ஞானி எடிசனும், பலப்பல தோல்விகளுக்குப் பின்னரே வெற்றிக்கொடி கட்டிய ஆபிரஹாம் லிங்கனையும் ஆசிரியர் சுட்டுகிறார்.
நம்பிக்கை என்கிற அற்புத விளக்கைப் பற்றி பேசும் போது, தெளிவில்லாமல் குழப்பமாக இருந்தால் எந்த நம்பிக்கையாலும் பயன் இல்லை, உணர்ச்சியோடும், தெளிவான நம்பிக்கையோடும் ஆழ்மனத்துக்கு அனுப்பப்படும்எண்ணங்கள் மட்டுமே வெற்றியாக நமக்குத் திரும்பி வரும்' என்கிறார்.
ஆசை என்னும் பிரார்த்தனை பற்றி, குறிக்கோளுடன் கூடிய ஆசையை ஆசிரியர் வலியுறுத்துகிறார்.
'எந்த ஒரு காரியத்திலும் வெற்றி பெற வெற்றியின் விதிகளைப் பின்பற்றுவதுடன் தோல்வியின் எந்தவிதியையும் பின்பற்றாதிருக்க வேண்டும் என்பதையும் ஒரு விதியாக உணர்த்துகிறார்.'தோல்வியின் விதிகளில் ஒன்று பதற்றம் (Tension) அடைவது'
நம்முடைய நாம், மற்றவருடைய நாம், உண்மையான நாம் என்று ஒவ்வொருவருள்ளும் இருக்கிற மூவரை வெளிப்படுத்தி அவரவர் வாழ்க்கை அவரவருக்கானதாக, உண்மையானதாக இருக்கவேண்டும் என்பதும் விளக்கப்பட்டிருக்கிறது.
வசதியற்றிருந்தாலும், செல்வமனநிலை கொண்டவர்களே வெற்றிக்குத் தகுதியானவர்கள் என்று விவரிக்கிற இந்நூல் பெரிய காரியங்களுக்கு வித்திடும் சிறிய அம்சங்களையும் நுண்ணோக்கிப்பார்வையில் கண்டு அவற்றின் முக்கியத்துவம் உணர்த்துகிறது.
நல்ல ஞாபகசக்தியின் முக்கியத்துவம் குறித்து கூற வருகிற ஆசிரியர், அதற்காக, தேவையற்ற எண்ணங்களை வைத்துக்கொண்டு குழப்பிக்கொள்ள கூடாது, குப்பைக்கூடையில் எறிந்துவிட வேண்டும் என்கிறார்.
அடுத்தவர் மீது பழி போடுவது, எதையும் நியாயப்படுத்த முயல்வது, கோபம், (பொருந்தாப்)பேச்சு என்கிற சுய சிறைகளிலிருந்து வெற்றிபெற விரும்புபவர்கள் வெளியேற விரும்பினால், இந்நூல் அதற்கு ஐயமின்றி உதவுகிறது.
முடிவெடுப்பதில் மதில்மேல் பூனையாக இருக்கக்கூடாது என்கிற கருத்து 'எண்ணித்துணிக கருமம்..' என்கிற குறளை நினைவுபடுத்துகிறது.
உடல்மொழி குறித்து சொல்லவரும்போது, உடல் என்பது சூட்சுமமான முறையில் மனது தான் என்கிறார்.
இறுதியாக, எளிய பயிற்சிகளாக 1) மூச்சுப்பயிற்சி, 2). கண் பயிற்சி 3). ரிலாக்சேஷன் 4). ஆல்ஃபா பயிற்சி 5) நினைவாற்றல் பயிற்சி 6). நினைத்தது நடக்க பயிற்சி 7). மன ஒருமைப்பாட்டுக்கான பயிற்சி ஆகிய பயிற்சிகளைத் தந்திருப்பதன் மூலம் இந்நூல் மேலும் சிறப்புடையதாகிறது.
முன்னேற்றத்தில் விருப்பமுடைய அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல்.
நாகூர் ரூமியின் சில படங்களை இங்கு காணலாம்:
http://www.box.net/public/2x36rq6zxxRumi's Picture
2 comments:
எங்களுக்குள் என்றென்றும் வாழும் எங்களது ஆசான் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் சாஹிப்" அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் இந்த அற்புத நூல் "அடுத்த விநாடி" படித்து புரிந்து கொள்ள மட்டுமல்ல படித்து பின்பற்றி பயன்பெறவும் சிறந்த நூலாகும். இந்த புத்தகத்தை படிக்கும் போது பல நேரங்களில் எங்களது ஹஜ்ரத் அவர்களின் முன்னால் உட்கார்ந்து அவர்கள் பேசுவதை கேட்பது போல் மரியாதையாக படித்ததுண்டு - பதிவுக்கு நன்றி- நாகூர் இஸ்மாயில்
//தமிழ் எழுத்தாளரும் ஆங்கிலப்பேராசிரியருமான நாகூர் ரூமி எழுதிய இரண்டு நூல்களை நண்பர் ஒருவரிடமிருந்து பல முயற்சிகளுக்குப்பின் வாங்கி வந்தேன். 1). அடுத்த விநாடி 2). இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம். என்நூலகத்தில் வாங்கிச் சேர்க்க நான் கண்வைத்த இரண்டு புத்தகங்கள் அவை.//
ஏன் அவ்வளவு கடும் முயற்சி? என் கிட்டே கேட்டிருந்தா ரெண்டுமே கொடுத்திருக்கப் போறேன்.
Post a Comment