Thursday, February 08, 2007

கணவன் - மனைவி - ஆடை!

கடந்த வாரம் கணவனா மனைவியா என்ற தலைப்பில் ரியாத்-தில் நடந்த நகைச்சுவையான பட்டிமன்றத்தில் கணவனே என்று பேச "நேர்ந்தது".

'நேர்ந்தது' என்று சொல்லக்காரணம், ஏற்றுக்கொண்ட தலைப்புக்கேற்ப பேசினேன் என்பதைத்தான். இல்லாவிட்டால், எல்லாக் கணவர்களையும் போல நானும் மனைவியே! கட்சி தான் என்பது இங்கு கேடயக்குறிப்பு. (Disclaimer).

பேசி முடித்ததும், நிறையவே பாராட்டுக்கள் கிடைத்தன என்றாலும் ஒரு சகோதரியின் பாராட்டு புன்னகைக்க வைத்தது. "நல்லாயிருந்துச்சுங்க! - இன்னும் கொஞ்சம் சிரிச்சிக்கிட்டே பேசி இருக்கலாம்!"

உண்மையைச்சொன்னால், மேடை அனுபவம் அதிகமில்லாத நிலையில், மேடைக்கூச்சத்தை சரிசெய்துக்கொள்ள கிடைத்த வாய்ப்பை தவறு செய்யாமல் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். நிறைய பேசும் எண்ணமும், குறிப்புகளும் வைத்திருந்தும், பதவிக்காலத்தில் அரசியல்வாதிகள் நினைவுபடுத்திக்கொள்ளும் வாக்குறுதிகளைப் போலாகிவிட்டிருந்தன என் மேடைநேரத்துச் சிந்தனைகள்.

மேடையை விட்டு இறங்கியதும் தான், தேர்வு முடிந்த மாணவனுக்கு ஞாபகம் வருவது போல, வரிசையாக நினைவுகளில் அலைமோதின குறிப்புகள்."அட, அந்த ஒரு சிரிப்பையும் சொல்லியிருக்கலாமே...?"

அன்றைய இரவில் எனக்கு இதே தலைப்பினையொட்டி ஒரு மின்னல் கீற்று ஞாபக அ(இ)டுக்குகளிலிருந்து கண்விழித்தது.

கிட்டத்தட்ட பதினைந்து, பதினாறு ஆண்டுகளேனும் இருக்கலாம், ஆடை என்கிற தலைப்பில் கவிக்கோ அப்துல்ரகுமான் எழுதிய ஒரு ஆன்மீகக் கட்டுரை வாசித்து!

ஜூனியர் விகடனோ, ஜூனியர் போஸ்ட்டோ, நினைவில்லை, ஆறாவது விரல் என்கிற தொடரில் எழுதியிருந்தார். நினைவிலிருக்கும்வரை எழுதுகிறேன், தவறாக ஏதும் இருப்பின், அறிந்தவர்கள் சுட்டினால் திருத்திக்கொள்வேன்.

ஆன்மீகம் என்று வரும்போது, இலக்கியவாதிகளைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்பது என் பொதுவான கொள்கை! காரணம், இலக்கியம் என்பது என்னதான் காலக்கண்ணாடியாக கருதப்பட்டாலும், குவிஆடியாகவோ, குழி ஆடியாகவோ-எதையும் மிகைப்படுத்தவோ, குறைப்படுத்தவோ-செய்கிறது என்பதென் எண்ணம்.

ஆயினும்,யோசித்துப்பார்த்தவரை 'ஆடை' என்கிற கவிக்கோவின் கட்டுரை இயல்பாக இருப்பதாகவே உணர்கிறேன். எனவே, நினைவிலிருந்து இங்கு பதிவிறக்கம் செய்துவைக்கிறேன். ஏதும் தவறாக எழுதி இருப்பதாக அறிந்தவர் சுட்டினால் திருத்திக்கொள்கிறேன்.

குர்ஆனில் கணவன் மனைவி குறித்து சொல்லப்படும் ஒரு உவமைக்கு அப்துல்ரகுமான் அதில் விளக்கமளித்திருந்தார்:

சூரத்துல் பகரா என்கிற அத்தியாயத்தில் 187ம் வசனத்தில் "அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை!" என்று சொல்லப்பட்டுள்ளது! அதாவது, கணவன் மனைவிக்கு ஆடை! மனைவி கணவனுக்கு ஆடை!

மணவாழ்க்கையில் யார் உயர்ந்தவர்கள் என்பதில் கணவன், மனைவி இடையே தான்மை (Ego) விளையும் நிலையில் இவ்வசனம் தீர்வாய் நிற்கிறது.இருவரும் ஒருவருக்கொருவர் ஆடை. எனவே, இப்பதவிகளைப் பொறுத்த அளவில் இருவரும் சமமே!

அதி முக்கியத் தேவைகள் மூன்றில், உணவை, உறைவிடத்தை உவமையாகக் கூறாமல், உடையைச் சொன்னதில் ஆழமான பொருள் இருக்கிறது.ஏனெனில், உயிரினங்களில் மனிதன் மட்டும் தான் ஆடை அணிகிறான். பாலுணர்வையும், அழகாக, திருமணம் என்கிற வரம்புக்குட்பட்டு வெளிப்படுத்துவது மனித இனம் மட்டுமே.அதனால் தான் அவன் 'மண'க்கிறான்.

திருமணம் என்பதை ஆணும் பெண்ணும் 'ஆடை' அணியும் நிகழ்வாகச் சொல்லப்பட்டிருப்பது சிந்தனைக்குரியது!


அவரவர் அணியும் ஆடையை அவரவரே தேர்ந்தெடுக்க வேண்டும். தன் விருப்பம் போல் தேர்ந்தெடுத்ததை உடுத்தும் போது தான் மனமகிழ்வு இருக்கும். திருமண உறவு என்பதும் அப்படித்தான்.விரும்பியதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் விருப்பத்தோடு உடுத்த முடியாது.

அடுத்து, ஆடை நமக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும். இவ்வுலகின் சூழ்நிலைகள், காரணங்களில் ஒவ்வொருவரும் ஆயத்த ஆடைகளே! அதில் அவரவர் தம் விருப்பத்துக்கும், பொருத்தத்துக்கும் ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்வதே நலம் பயக்கும்.

ஆடையானது பாலுறுப்புகளை மறைப்பதைப் போல கணவன் என்கிற ஆடை கட்டிக்கொண்டிருக்கும் ஒரு பெண் தவறான பார்வைகளிலிருந்து மறைக்கப்படுகிறாள். மனைவி என்கிற ஆடை அணிந்துக்கொண்டிருக்கும் ஒரு ஆணும், அவ்விதமே மறைக்கப்படுகிறான்,

தட்ப வெப்பங்களிலிருந்து நம்மை ஆடையானது காப்பது போல, இன்ப துன்பம் தாக்காமல், கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு தருகிறார்கள்.

ஆடையானது அழுக்குப்படாமல் உடலைக் காப்பது போல, தீய பழக்கங்கள் என்ற அழுக்குப்படாமல் கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் காத்துக்கொள்ள வேண்டும்.

உடற்குறைகளை வெளித்தெரியாமல் ஆடை மறைப்பது போல், கணவனின் குறைகளை மனைவியும், மனைவியின் குறைகளை கணவனும் மறைக்க வேண்டும்.

சமூகத்தில்,ஆடை என்பது கெளரவத்துக்காக அணியப்படுகிறது, கணவனும், மனைவியும் ஒருவர் மற்றவரின் கெளரவமாய் அமைய வேண்டும்.


அதுபோலவே, ஆடை அடையாளத்துக்காகவும் அணியப்படுகிறது. கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவரின் அடையாளமாய் இருக்க வேண்டும்.


ஆடை அழகுக்காக அணியப்படுகிறது. அதுபோல கணவனும் மனைவியும் அழகுப்படுத்துபவர்களாக இருக்கவேண்டும். சிறந்த அழகு தூய்மை தான்.எனவே, ஒருவருக்கொருவர் ஆடையாக இருவரும் தூய்மையாக இருக்க வேண்டும்.

ஆடை, நாகரீகத்துக்கான குறியீடு. ஆடை இல்லாதவன் அரை மனிதன். திருமணத்தில் தான் ஆணும் பெண்ணும் முழுமையடைகிறார்கள்.

ஆடையில் ஒரு சமூகத்தின் பண்பாடு வெளிப்படும். கணவன் மனைவி என்கிற ஆடையிலும்!

ஆடை அழுக்காகி விட்டால், தூக்கி எறிந்துவிடக்கூடாது. சலவை செய்து அணிந்துக்கொள்கிறோம்.சற்றே கிழிந்து விட்டாலும், தைத்து அணிந்துக்கொள்கிறோம். கணவனிடமோ, மனைவியிடமோ, குறைகள், கோபதாபங்கள் ஏற்பட்டால், பிரிந்து விடக்கூடாது. சமாதானமாகி விட வேண்டும்.

ஆயின், அணியவே முடியாத அளவுக்கு அழுக்கடைந்தாலோ, தைக்கவே இயலாத அளவுக்கு கிழிந்துப் போனாலோ, ஆடை என்பது அதன் பொருளை இழந்து விடும் நிலையில் தூக்கி எறிந்து விட்டு புதிய ஆடையைத் தைத்துக்கொள்ள வேண்டியது தான்.

'அறிவு'க்கனி உண்டவுடன் ஆதாமும் ஏவாளும் செய்த முதல் வேலை ஆடை அணிந்ததாகத்தான் இருக்கும். அறிவிழந்து பைத்தியம் முற்றியவர் செய்யும் முதல் வேலையோ 'ஆடை'யைக் கிழிப்பது தான். காரணமின்றி, தத்தம் "ஆடை"யை கிழிக்கிற கணவனோ, மனைவியோ பைத்தியக்காரர்கள் தான்!

(கவிக்கோவின் குர்ஆன் சார்ந்த சிந்தனைகளை, நினைவிலிருந்தவரை என் எழுத்துக்களில் தந்திருக்கிறேன். தவறுகள் காணுமிடத்து, தயங்காமல் சுட்டும் படி மறுபடி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி).

25 comments:

Anonymous said...

After a long time reading such a nice and sensible post in tamil blog world.

Good and great job Mr.

சிறில் அலெக்ஸ் said...

//ஆயின், அணியவே முடியாத அளவுக்கு அழுக்கடைந்தாலோ, தைக்கவே இயலாத அளவுக்கு கிழிந்துப் போனாலோ, ஆடை என்பது அதன் பொருளை இழந்து விடும் நிலையில் தூக்கி எறிந்து விட்டு புதிய ஆடையைத் தைத்துக்கொள்ள வேண்டியது தான்.//

அட ஆமா.. நான் கிழியாம அழுக்காகாம இருக்கணும்னு வேண்டிக்கிறேன்.

ஏனோ படிக்கும்போது நம்ம பார்ட்னரை வைத்தே யோசிக்கத் தோணுது.

நாம நல்ல ஆடையா இருக்க இயன்ற முயற்சிகளை எடுப்போம்.
:)

அகமது சுபைர் said...

என்ன சார்...?

ரொம்ப நாளைக்கப்புறம் எழுதுறீங்க..
ஆனாலும் அழகா எழுதுறீங்க..

யோசிக்க வைத்த பதிவு.

அன்புடன்,
சுபைர்.

மரைக்காயர் said...

கவிக்கோ அவர்களின் கட்டுரையை கவித்துவம் சற்றும் குறையாமல் இங்கு பதிவிட்டதற்கு நன்றி சகோதரரே.

இப்னு ஹம்துன். said...

//After a long time reading such a nice and sensible post in tamil blog world.

Good and great job Mr.///

நன்றி அனானி அவர்களே!
உங்கள் பெயரையும் சொல்லியிருக்கலாமே!

இப்னு ஹம்துன். said...

/நாம நல்ல ஆடையா இருக்க இயன்ற முயற்சிகளை எடுப்போம்.
:)/

சிறில் அலெக்ஸ்,
தங்களின் வருகை+கருத்துக்கு நன்றி!

Anonymous said...

அழகான பதிவு...
ரொம்ப பிடித்திருந்தது.

-Mani

இப்னு ஹம்துன். said...

//ரொம்ப நாளைக்கப்புறம் எழுதுறீங்க..
ஆனாலும் அழகா எழுதுறீங்க..

யோசிக்க வைத்த பதிவு.

அன்புடன்,
சுபைர்.//

நன்றி சுபைர்,
நிறைய எழுத முயற்சிக்கிறேன். வருகைக்கு நன்றி!

இப்னு ஹம்துன். said...

மரைக்காயர் சார்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

KVR said...

நண்பரே,

அழகா எழுதி இருக்கிங்க. ஒரு உண்மையைச் சொல்லணும்ன்னா உங்க பேச்சை விட எழுத்தை நான் ரசிக்கிறேன் ;-)

KVR said...

//யோசிக்க வைத்த பதிவு.

அன்புடன்,
சுபைர்.

//

கண்ணாலம் கட்டுறதுக்கு முன்னாலேயே அப்படி என்னப்பு யோசனை?

இப்னு ஹம்துன். said...

//அழகான பதிவு...
ரொம்ப பிடித்திருந்தது.

-Mani //

நன்றி மணி.

இப்னு ஹம்துன். said...

//அழகா எழுதி இருக்கிங்க. ஒரு உண்மையைச் சொல்லணும்ன்னா உங்க பேச்சை விட எழுத்தை நான் ரசிக்கிறேன் ;-) //

நன்றி KVR. (நானும்) ஒரு உண்மையைச் சொல்லணும்ன்னா, உங்க பாராட்டை விட அந்த 'உள்குத்தை' ரொம்ப ரசிச்சேன்.

/கண்ணாலம் கட்டுறதுக்கு முன்னாலேயே அப்படி என்னப்பு யோசனை? //

இதுக்கு தம்பி சுபைர் தான் பதில் சொல்லணும்!

வளர்பிறை said...

"அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை!" என்பதில் இவ்வளவு வெளிப்பாடா?! நல்லா எழுதியிருக்கீங்க. எல்லா தம்பதியினரையும் சிந்திக்க வைக்கும் பதிவு.

இப்னு ஹம்துன். said...

வளர்பிறை,
வருக, வருக!
கருத்துக்கு நன்றி

நாமக்கல் சிபி said...

நன்றாக இருந்தன!

இப்னு ஹம்துன். said...

நாமக்கல் சிபி,
உங்களுக்கு இன்னொரு பெயர் ரத்தினச் சுருக்கமா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

மஞ்சூர் ராசா said...

ஆடையில்லாத மனிதன் அரை மனிதன் என சொல்கிறார்கள். எந்த ஆடையை எனறு தெரியவில்லை.


அது சரி பட்டிமன்றத்தில் ஆரம்பித்து வேறு எங்கேயோ போய்ட்டீங்க போல....

இருந்தாலும் பட்டிமன்றத்தை பற்றி இன்னும் கொஞ்சம் சுவையான செய்திகளை தந்திருக்கலாம்.

இப்னு ஹம்துன். said...

மஞ்சூராரே! வருக, வருக!

//ஆடையில்லாத மனிதன் அரை மனிதன் என சொல்கிறார்கள். எந்த ஆடையை எனறு தெரியவில்லை./

அதைத்தான் எழுதியிருக்கிறேன்:'திருமணத்தில்தான் ஆணும் பெண்ணும் முழுமை யடைகிறார்கள்'.

//பட்டிமன்றத்தை பற்றி இன்னும் கொஞ்சம் சுவையான செய்திகளை தந்திருக்கலாம்.//
ம்... திண்ணையில் இந்தவாரம் இதுபற்றி செய்தியொன்று வந்துள்ளது:
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60702081&format=html

அகமது சுபைர் said...

ஐயா ராசா..

கண்ணாலம் பண்றதுக்கு முன்னாடியே யோசிக்கிறது நல்லது. அதுக்கப்புறம் பேசவே முடியாது.. அப்புறம் என்ன யோசனை?

Anonymous said...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

சுல்தான் said...

ஆடையைப் பற்றி அழகாகச் சொல்லியுள்ளார்.
//இலக்கியம் என்பது என்னதான் காலக்கண்ணாடியாக கருதப்பட்டாலும், குவிஆடியாகவோ, குழி ஆடியாகவோ-எதையும் மிகைப்படுத்தவோ, குறைப்படுத்தவோ-செய்கிறது என்பதென் எண்ணம்.//
சரியான எண்ணம். இரசிக்கும்படி இருக்கிறது.

Anonymous said...

Super

Abu Aasim said...

Simply Superb

shaikacader said...

relationship, nothing is more powerful than healthy intimacy to resurrect feelings
of love and compassion.
Final Thoughts
24
In the very same verse that Allah describes our spouses ‘…like a garment’ unto us (Sura al-Baqara;
287), Allah commands us in the next phrase: ‘…so therefore, now embrace them (i.e., your
spouses), and seek what Allah has written for you’. Most commentators of the Qur’aan have interpreted
the phrase ‘…seek what Allah has written for you’ as being a reference to sexual pleasures
and to the blessing of children that follows. Therefore, Allah wants us to obtain these pleasures,
and reminds us to thank Him for it.
Let us conclude as we began: with the famous hadith of Jabir b. Abdillah. Remember that our
beloved Prophet salla Allahu alayhi wa sallam actually wanted Jabir to find pleasure with his wife,
and he also wanted her to find pleasure with him (‘…so that you can play with her, and she can
play with you’). Embrace this beautiful aspect of our religion, appreciate the harmony of our faith
with our human nature, and rejoice in Allah’s blessings upon you.
Goodbyes are always difficult. Let’s hope that we meet again soon!
Jazakum Allah khayr! Please remember me in your du`as, and I will remember you in mine!
Your brother,
Yasir Qadhi