'எனக்குத் தெரிந்த வாழ்க்கையை விட நீ நல்லவள். வாழ்க்கை பலரை வெறுக்கிறது. சண்டை போடுகிறது. நீயோ எல்லோரையும் அரவணைத்துக்கொள்கிறாய்.' என்று ஒரு கவிஞன் (முகத்திரை அணிந்த)மரணத்தைப் பற்றி எழுதியிருந்தான். எல்லோரையும் பாரபட்சமின்றி ஏற்றுக்கொண்டாலும், மனிதர்கள் மரணத்தை விரும்புவதாயில்லை. பின்னங்கால் பிடறியில் பட மரணத்திலிருந்து தப்ப முடிகிற வழிகளைத் தேடி மனிதர்கள் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள் வாழ்நாள் முழுதும். துருப்புச்சீட்டாக சக மனிதர்களைத் தரவும் அவர்கள் தயங்குவதில்லை.
அடிப்படை ஆதாரமற்ற ஒருசெவிவழித் தொன்மம் நினைவுக்கு வருகிறது.
சாலமன் மன்னரின் அவைக்கு மரணத்தேவன் ஒருமுறை 'மரியாதை வருகை' செய்தபோது அந்த அவையில் அமர்ந்திருந்த ஆள் ஒருவருக்கு வியர்த்துப்போனதாம். மரணத்தேவன் அங்கிருந்துப்போனதும் அவர் சாலமன் மன்னரை நோக்கி, "காற்றுக்கும் கட்டளையிடும் உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னைக் கண்காணாத ஒரு கோட்டைக்கு அனுப்பி விடுங்களேன், மரணத்தேவன் என்னை முறைத்த பார்வை இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது" என்றாராம். அதன்படி அனுப்பி வைக்கப்பட்டாராம்.
பிறிதொரு முறை வருகை தந்த மரணதேவன் சாலமன் மன்னருக்கு 'நன்றி' சொல்ல, சாலமன் கேட்டாராம் "எதற்கு?". " அந்த ஆளை 'உரிய இடத்துக்கு' அனுப்பி வைத்ததற்காக" என்றாராம் மரணத்தேவன்.
இன்னொரு சம்பவமாக, சமீப ஆழிப்பேரலையில் மறைந்துவிட்ட ஒரு தூ..ரத்து உறவினர். பல கல் தொலைவுக்கு அப்பாலுள்ள ஒரு நகரில் ஆடையகம் நடத்தி வந்தார் அவர். எல்லா ஞாயிறுகளிலும் ஊருக்கு வந்துவிடுவார். அந்த கறுப்பு ஞாயிறன்று ஒரு டென்னிஸ் விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு அந்நகரிலேயே அவர் தங்கிவிட நேர்ந்தது.
விளையாடும் களத்தில் வந்த நீரலையை வேடிக்கை என்று நினைத்து.. விபரீதம் உணரும் முன் மரணப்பாலத்தை அவர் கடக்கநேர்ந்ததை இன்றும் நம்ப முடியவில்லை. இத்தனைக்கும் வெறும் மூன்று கல் தொலைவிலிருக்கும் சொந்த ஊரில் வெறுங்கையோடு கடல் திரும்பிப்போக, 90 கல் தொலைவு சென்றவர் மட்டும் சென்றவராகி விட்டார். அங்கும் கடல் இருந்தது. மரணமும்.
இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்: "தலைவிதி, இங்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கு"
வியாதியென்றோ, விபத்தென்றோ, பேராசையென்றோ, போரோசையென்றொ எந்த ஒரு காரணமுமின்றி மரணம் யார்வீட்டுக்கதவையும் தட்டுவதில்லை.
சில மரணங்கள் மா-ரணங்கள்.காலத்தின் அழியாவடுக்கள்.கும்பகோணத்தில் குழந்தையில் கருகிய நம்பிக்கைகளில் பட்ட ம(ன)ரணங்களிலிருந்து பதினெட்டு வருஷம் வெளிநாட்டு வாழ்க்கை போதும் என்று சிங்கப்பூரிலிருந்து வந்து சேர்ந்த அடுத்தநாளே மரணித்த தூரத்து உறவு மாமா வரை.
'எறும்புகள் நசுக்கப்படுவதற்கு என்ன காரணமிருக்க முடியும் - அது எளிது என்பதைத் தவிர' என்று படித்த ஒரு வரி இன்னமும் மனதில் ஊர்ந்துக்கொண்டிருக்கிறது - தினம் தினம் காரணமின்றிக் கொல்லப்படுகிறவர்களை கேட்கவோ, காணவோ நேரிடும்போதெல்லாம்.
அழுகையுடனே அடையாளப்படும் மரணம் சிரிக்கவும் வைப்பதுண்டு. கொடுங்கோலர்களை அது தழுவும்போது குடியானவர்கள் சிரித்து மகிழுகிறார்கள். பாலகர்களை அது உட்கொள்ளும் போதோ, கொடுங்கோலர்களும் துடித்து விடுகிறார்கள். அல்லது கொடூரத்தையே தமது துடிப்பாக்கிக்கொள்கிறார்கள்.
மரணத்துடன் ஆடும் கண்ணாமூச்சியே வாழ்க்கை என்றாலும் இந்த ஆட்டத்தில் வெல்வது தனிவகை.
அது மாட்டிக்கொள்ளாமல் நாள் கடத்துவதிலில்லை. உண்மையைச் சொன்னால், ஈட்டுகிற பெயர் எதுவும், இற்றுப்போகும் உடம்போடு பெயர்ந்துவிடாமல் காலத்தின் சுவரில் கலைச்சித்திரமாகச் செதுக்கி வைக்கிற கைத்திறமையில் தான் அது இருக்கிறது.
காலமெல்லாம் களைப்பின்றி போராடுபவன் செத்தபின் காட்டுகிறான் வெள்ளைக்கொடி.
ஆசாபாசங்கள் தீர்ந்துப்போன அந்த குடுவையை எரிப்பதும் புதைப்பதும் மனித மனத்தின் துருவ முரண்கள்.
தூரத்து நாட்டில் கொடூரமாகக் கொல்லப்பட்ட குழந்தையை விடவும், பக்கத்து வீட்டில் இழுத்துப் பறித்துப் போய்ச்சேர்ந்த முதியவனே அதிக துக்கம் அளிக்கிறான். இத்தகைய 'சார்பு' இருப்பதால் தான் மரணத்தோடு சார்ந்திருக்கின்றன துக்கமும் துயரமும்.
மரணம் தொட்ட இடத்திலிருந்து துயரத்தின் குருதி பெருகுவதன் காரணம் பற்று தான்.
உலகத்திலும், உறவிலும், உடமையிலும் நாம் வைக்கும் பற்று. பற்றினால் விளையும் இப்பக்கவிளைவை எதிர்கொள்ள வரவு வைப்பதே வழி.நற்செயல்களால் நமது 'புத்தகத்தில்' வரவு வைக்க வேண்டும். குறைந்தபட்சம் 'நல்லெண்ணங்களாலாவது'.
அழையா விருந்தாளியாய் உள் நுழைய வாசலிலேலேயே காத்துக்கிடக்கும் மரணம் விஞ்ஞானிக்கு இன்னமும் விந்தை. ஆன்மீகவாதிக்கு அதுவே ஒரு 'பாலம்' தான். கவிஞனுக்கு அது 'கரு'ப்பொருள்.
பயங்கரவாத வெறியாட்டம்
பலியாயினர் அப்பாவிகள்
இலங்கையில் குண்டுவெடித்து
இருநூறு பேர் சாவு
இஸ்ரேல் ஏவுகணை வீச்சு
இழப்பு சில உயிர்கள்
இராக் குழந்தைகள்
ஏராளம் மரித்தன
உணவின்றி
எல்லாமே செய்தியென்று
இருந்துவிட்டுப்போக...
பக்கத்துவீட்டில்
திடீரெனச் செத்தவனோ
பாதி ராத்திரியில்
எழுந்து வருகிறான்
என் தூக்கம் கலைப்பதற்கென்றே!
-------------------------------
முற்றுப்புள்ளிகளை கொஞ்சுபவர்களே!
சற்றேனும் கற்றுணருங்கள்:
வாக்கியத்தின் இனிமை
முற்றுப்புள்ளியில் இல்லை.
நீளமான வாக்கியத்தை
நினைத்தேங்குபவர்களே!
சிறிய வாக்கியமும்
சிறப்புப் பெறுவதுண்டு
குறளைப் போல
எல்லா வாக்கியங்களுக்கும்
இருக்கிறது ஒரு முற்றுப்புள்ளி
என்று சொல்பவர்களே
இருங்கள்,
இடைநிறுத்தக் குறி
ஒருபோதும் முற்றுப்புள்ளியாவதில்லை.
(தேன்கூடு ஜூலை மாதப்போட்டிக்கென இது என் முதல் ஆக்கம்)
15 comments:
///
தூரத்து நாட்டில் கொடூரமாகக் கொல்லப்பட்ட குழந்தையை விடவும், பக்கத்து வீட்டில் இழுத்துப் பறித்துப் போய்ச்சேர்ந்த முதியவனே அதிக துக்கம் அளிக்கிறான்.
///
நிதர்சன உண்மை இது. நல்லா எழுதியிருக்கீங்க. போட்டிக்கு வாழ்த்துக்கள்.
இனிய பக்ருத்தீன்,
நல்ல கட்டுரை.
சில பகிர்தல்கள்.
கட்டுரையாகவடிக்கும்போது இதன்
நோக்கம் என்னவென்பது
துவக்கத்திலேயே சொல்லப்பட வேண்டும்.மரணத்தின்
நிரந்தரத்தைப் பாதிவரையில் பேசுவதாகவும்,பின்னர் மரணத்தால்
வருத்தம் அடைவதற்கு மரணம் அடைந்தவருடன் நமக்குள்ள உறவுக\லே காரணம் என்றும்,
கடைசியில் கவிதையாகவும்
உங்களது கட்டுரை விரிவதால்,
துவக்கத்தில் சொல்லப்பட்ட
கருத்தின் ஆழம் மனதில் சரியாகப்
பதியவில்லையென்பதான தோற்றம்.
ஒரு கருத்தைஎடுத்துக்கொண்டு
அதற்கான அலசல்களை எழுதினீர்களென்றால்இன்னும் சிறக்கும்.
அன்புடன்
ஆசாத்
Abul Kalam Azad
நண்பரே,
இந்த சுட்டியை அளித்ததற்கு நன்றி.
மரணத்தைப்பற்றிய உங்கள் பார்வையில் உள்ள நிதர்சனங்களையும் உங்கள் கவிதைகளையும் வெகுவாக ரசித்தேன்.
மரணத்தைப் பற்றிய உங்கள் எண்ணங்களின் தொகுப்பு அருமை.
அன்புடன்,
மா சிவகுமார்
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி குமரன். உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
அன்பு ஆசாத் அண்ணன்,
உங்களுடைய கூர்ந்த விமர்சனம் நான் விரும்பும் ஒன்று.
மரணம் பற்றிய ஒற்றை எண்ணத்தை எடுத்துக்கொள்ளாமல் சில பல எண்ணங்களையும் சொல்ல நினைத்துத் தான் 'சில எண்ணங்கள்' என்று தலைப்பிட்டேன். கட்டுரை எழுதுவது குறித்த தங்களின் கருத்தினை என்றும் கவனத்தில் கொள்வேன். நன்றி.
// 'எறும்புகள் நசுக்கப்படுவதற்கு என்ன காரணமிருக்க முடியும் - அது எளிது என்பதைத் தவிர' //
பளிச்சுன்னு சில வார்த்தைகளில் பெரிய விசயங்கள்! அருமையான வரி இது... சுட்டியமைக்கு நன்றி!
//மனிதர்கள் மரணத்தை விரும்புவதாயில்லை. பின்னங்கால் பிடறியில் பட மரணத்திலிருந்து தப்ப முடிகிற வழிகளைத் தேடி மனிதர்கள் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள் வாழ்நாள் முழுதும். துருப்புச்சீட்டாக சக மனிதர்களைத் தரவும் அவர்கள் தயங்குவதில்லை. //
"எல்லோரும் சொர்கத்துக்கே போக விரும்புகிறோம். ஆனால், இறக்கத்தான் யாரும் தயாராக இல்லை!" இதுவும் எங்கோ படித்ததுதான்..
போட்டிக்கான என் வாழ்த்துக்கள்...
"முத்து"(தமிழினி) அவர்களே.,
தங்களது கருத்து(பாராட்டு)க்கு நன்றி.
மா.சிவக்குமார் அவர்களே, நன்றி!
இளவஞ்சி அவர்களே, நன்றி!
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். மரணத்தைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறீர்கள் ஆனால் கோர்வையில் சிதைவு இருப்பதாக உணர்கிறேன். ஒன்றுக்கு ஒன்று இணையாமலேயே இருக்கிறது. மனதில் தோன்றுவதை முழுவதுமாக கொட்டியுள்ளது புலப்படுகிறது. கருத்து சொல்லும் அளவுக்கு பெரிய ஆள் இல்லீங்க நான். ஆனால் உங்க சுட்டியை தந்தமையால் தெரிந்த, உணர்ந்த சிலவற்றை எழுதியிருக்கிறேன் அவ்வளவுதான்.
//'எறும்புகள் நசுக்கப்படுவதற்கு என்ன காரணமிருக்க முடியும் - அது எளிது என்பதைத் தவிர' என்று படித்த ஒரு வரி இன்னமும் மனதில் ஊர்ந்துக்கொண்டிருக்கிறது - தினம் தினம் காரணமின்றிக் கொல்லப்படுகிறவர்களை கேட்கவோ, காணவோ நேரிடும்போதெல்லாம்.//
மேற்கண்ட வரிகளைப் படிக்கையில், உலக நாடுகளைப் பார்வையாளர்களாக்கி பார்க்க வைத்து, அமெரிக்காவின் உச்சிமுகர்தலின் கிறக்கத்தில் அநியாயமான முறையில் அப்பாவி லெபனான் குழந்தைகளின் தலையில் குண்டுகளை இறக்கிக் கொண்டிருக்கும் இஸ்ரேலின் நினைவு வந்து தொலைத்ததை ஏனோ தவிர்க்க இயலவில்லை.
ஆழமான, கருத்துச்செறிவு மிக்க ஆக்கம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெஸிலா அவர்களே!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அபூ ஸாலிஹா அவர்களே!
நல்ல கருத்து!
மனிதனுக்கு மரண பயம் வர இன்னொறு முக்கிய காரணம் Inertia என்று சொல்லப்படும் மாறுதல்களை மறுக்கும் தன்மை! உலகத்தில் எந்த பந்தம், சொத்துகள் இல்லாதவன் கூட மரணத்தை வெறுப்பது இதனால் தான்.
Post a Comment