
குழந்தை உண்ணும் சோறு!
வருடத்திற்குச் சில நாட்களே
வீட்டுக்கு வருகிறோம்
விருந்தாளிகளாக..!
ஆம் - நாங்கள்
அயல் நாட்டிற்குவாழ்க்கைப்பட்டவர்கள்.
தாய் நாட்டின் அந்நியர்கள் நாங்கள்!
அனுப்பும் பணத்தைக்கூட
அந்நியச்செலாவணி என்றே
அரசாங்கம் குறிப்பிடும்!
திரவியம் தேடித்தான்
திரைகடல் கடந்தோம்!
கடலைக் கடந்த எங்களால்
கடனைக் கடக்க இயலவில்லை.
வட்டியின் வெள்ளப்பெருக்கு!
தவணைகளில்கழியும்பொழுதுகள்
திருமணங்களையும்துயரங்களையும்
தொலைபேசிகளில்விசாரித்துக் கொண்டு..!
குடும்ப வாழ்க்கையோ
குழந்தை உண்ணும் சோறு!
உண்பதை விடவும்
சிந்துவது தான் அதிகம்
தூரத்துப்பச்சைக்காக
தவமிருக்கின்றன கண்கள்
கானல் போலவே வாழ்க்கை.
விடுமுறைகள் *தொங்கோட்டங்கள்!
ஊருக்குப் போகும்ஒவ்வொரு முறையும்
கனக்கும் பெட்டிகளாய்
கடன் சுமை.
திரும்பி வரும்போதோ
இன்னும் கனக்கும் இதயம்
திணிக்கப்பட்ட எதிர்பார்ப்புகளோடும்
தீராத ஏக்கங்களோடும்..!
அயல்நாட்டு பொருட்களுக்கு
ஆசைப்படும் சொந்தங்கள்
அந்தப்பக்கம்!
உள்நாட்டு சொந்தங்களுக்கு
ஏக்கப்படும் இதயங்களோ
இந்தப்பக்கம்!
இடையில் இருப்பதோ கடல்
அது..
கடமைகளாலான சமுத்திரம்
பல்லாயிரம் வியர்வைப்பூக்கள்
பூத்துக்குலுங்கிட…
சோலைகளாயின தேசங்கள்
பாலைகளாயின தேகங்கள்!
வளமையை வாங்குதற்கு
இளமையை செலவழிக்கும்
எங்களுக்கு
வாய்த்தது தான் என்ன..?
வரமா..? சாபமா..?
(*தொங்கோட்டம்: பச்சிளம் சிசுவின் தாகம் தணிக்க நீருக்காக இரு உயர்வெளிகளிடையே அலைந்து திரிந்த அன்னையின் நினைவாக 'ஹஜ்'ஜின் போது செய்யும் ஒரு சடங்கு)
[17.02.05 அன்று ரியாத் தமிழ்ச்சங்கத் தொடக்க விழாவில் கவிஞர் வைரமுத்து, சவூதி அரேபியாவுக்கான இந்தியத்தூதர் திரு. M.O.H. பாருக் முன்னிலையில் நடைபெற்ற கவியரங்கில் பாராட்டுப்பெற்ற கவிதை]
(கீற்றில் இக்கவிதை மலர்ந்துள்ளது)
6 comments:
குடும்ப வாழ்க்கையோ
குழந்தை உண்ணும் சோறு!
உண்பதை விடவும்
சிந்துவது தான் அதிகம்
wow...wat a fantastic lines..superb
வளமையை வாங்குதற்கு
இளமையை செலவழிக்கும்
எங்களுக்கு
வாய்த்தது தான் என்ன..?
வரமா..? சாபமா..?
kavithai ezhuthum samarthiyam ungalukku oru vareme
SALAMI
KUDUMBA VAZHKAIYO KUZHANDAI UNNUM CHORU.UNBADAI VIDAVUM CHINDUVADU THAN ADIGAM.Such words can come only from a riceeating tamizhan.All stanzas in that poem are heart touching.All the best wishes. FROM G.S.KRISHNAN 9.2.2005
சாலமி மற்றும் G.S KRISHNAN - தங்கள் பாராட்டுக்கு நன்றி.
வட்டம் தாண்டி சிந்திக்க முடியுமானால்
தீர்வுக்கான முன்வடிவையும் செதுக்க முடியுமே
உங்களால்
சுயம் அழிக்கும் கொடுமை ஒழிய
தாய் மண்ணில் தம் விழுதுகளை பதிக்க
இனிவரும் சகோதரர்களுக்காவது
தீர்வு சொல்லுங்களேன்
நல்லவை பெருகட்டும்
கண்ணுக்கு குளிர்ச்சி தரும் வலைப்பூ, கருத்தாழம் தரும் கவிதைகள், கட்டுரைகள் உணர்வுகளின் கவிக்கோலம். மனதிற்கும் உற்சாகம் தருகின்றது .வாழ்த்துக்கள்.
மனத்தைக் கனக்கச் செய்யும் கவிதை... உணர்ச்சிகளை வார்த்தைகளில் வடித்து அந்த உணர்ச்சியை படிப்பவரையும் தொற்றிக் கொள்ளச் செய்யும் பாங்கு எல்லோராலும் இயலாது... அதனைச் செவ்வனே செய்திருக்கிறீர்கள் அண்ணா..வாழ்த்துகள்...
Post a Comment