புதுச்சேரி மின்னிதழின் தள பொறுப்பாளர் கவிஞர். இராச தியாகராசன் அவர்களின் அறிவிப்பை ஏற்று பாவேந்தர் நினைவு நாளுக்காக புதுச்சேரி மின்னிதழில் வெளியிடுவதற்காக சில நாட்களுக்கு முன் எழுதிய கவிதை:
பாவேந்தர் நினைவாக
புகை மறப்போம் ஆனந்தம் கொள்வோம்
--------------------------------------------------------------------------------
தேசத்தின் வளமதனை சுருட்டுகின்ற தீயவர் போல்
தேகத்தின் நலமதனை சுருட்டுகின்ற வெண்சுருட்டே - நீசமுள்ள
நாகத்தின் நஞ்சுபோல் நுனிநாக்கில் நெருப்பேந்தி
நாசத்தின் வாசலுக்கு நகர்த்துகிறாய் நண்பரையே!
கவலை என்பார்உனை கைப்பிடித்த காரணத்தையே!
அவலை நினைத் துரலையே இடிப்பாருண்டோ..... - எவரும்
தீவலையில் வீழ்ந்து திரும்பிடவே இயலாமல்
தவணையிலொரு கொள்ளியினைத் தனக்கே வைப்பாரோ.....?
தீப்பழக்கம் அல்ல இது புகைப்பழக்கம் என்பாருண்டு
தீக்கு வழக்கம் புகையாய் தன்னைத் தொடங்குவதே - ஆக்கமின்றி
தேக்கமுறுமே தேக நலனுடன் தேடிடும் பொருளும்
தூக்கமி ல்லாத முகத்தைப் போல் முதுமைத் தோற்றம்.
சிந்திக்கப் புகைப்பாரும் சிந்தித்தால் புகைப்பாரோ.......
நிந்தித்து என்னபயன் நோய் வந்த பின்னாலே - எந்திக்கும்
ஏதுமில்லை ஒரு குரலும் புகையினைப் போற்றி
ஆதலினால் புகை மறப்போம் ஆனந்தம் கொள்வோமே!
_____________________________பாவலர் பக்ருதீன்,பறங்கிப்பேட்டை
நன்றி: www.pudhucherry.com
8 comments:
இப்போது தான் கண்ணுற்றேன். அருமையாக இருக்கிறது இந்த கவிதை.
-அல்வாசிட்டி விஜய்
// சிந்திக்கப் புகைப்பாரும் சிந்தித்தால் புகைப்பாரோ...... //
அருமை அருமை
எளிமையாக, புரியும் வகையில் உள்ளது. (வேற எப்பிடி பாரட்டறதுன்னு தெரியல :-) )
கவிஞர் பஃக்ருதீனின் கவிதை அருமை...பாராட்டுக்கள்...
- ரியாத்திலிருந்து ஷாஜகான்..
உங்களை எழுதச் சொல்லிட்டு நான் எழுதாமல் இருந்து விட்டேன்!!!
தங்களின் கவிதையை புகைபிடிப்பவர்கள் படித்தால் கண்டிப்பாக சிந்திப்பார்கள்!
அன்புடன்,
மூர்த்தி.
விஜய், கணேஷ், வாய்ஸ் ஆன் விங்ஸ், ஷாஜகான், மூர்த்தி அனைவருக்கும் நன்றிகள்.்..
பாராட்டுக்கள் நல்ல ஊக்கம் தருவன.
மிக அழகிய கவிதை நண்பர் இப்னு அவர்களே! புகைப்பிடிப்போர் இக்கவிதையை ஓர்முறை கண்ணுற்றால் மறுமுறைப் புகைக்குங்கால் கட்டாயம் புகைக்கத்தான் வேண்டுமா எனச் சிந்திப்பார்கள். வாழ்த்துகள்
Post a Comment