Wednesday, July 06, 2005

புத்தகங்களின் கைப்பிடித்து.......

புரட்டப்புரட்ட நம்மையே புரட்டிப்போடுகிற புத்தகங்களும் எத்தனை தான் புரட்டினாலும் வரலாற்றுப் புரட்டுகளை மட்டுமே பேசுகிற புத்தகங்களுமாக மனிதர்களைப்போலவே புத்தகங்களும் சுவாரசியமானவை.

புத்தகங்களின் கைப்பிடித்து நடந்தே பல்வேறு உலகங்களை நான் கண்டுக்கொண்டேன். மேலும் விளையாட்டுக்களும் சினிமாவும் நிரம்பிய என் சிறுவயது சுற்றங்களிலிருந்து புத்தகங்களே தனித்தன்மையை காக்கவும் தனிமையைப் போக்கவும் உதவின.

வாசிக்கும் பழக்கம் சிறுவயதிலிருந்தே தந்தைவழியில் என்னைத் தொற்றியது. எங்கள் குடும்பத்தில் அநேகமாக அனைவரும் வாசிப்பை நேசிப்பவர்களே!

'இவங்க ஒரு படிப்பாளி குடும்பம் தெரியுமா'
'அப்படியா!. எல்லோரும் நல்லாப் படிச்சவங்களோ?''
'அதெல்லாம் ஒண்ணுமில்ல...... . எப்பவும் ஏதாச்சும் படிச்சுக்கிட்டே இருப்பாங்க'
-இது எங்களின் வாசிக்கும் வழக்கம் குறித்து உறவினர்-தெரிந்தவரிடையே இன்றைக்கும் புழக்கத்தில்உள்ள கேலிமொழி எனினும் அதன் பொருட்டு நாங்கள் அலட்டுவதில்லை.

NLC யில் பணிபுரிந்து வந்த தகப்பனார் வார விடுமுறைகளில் ஊருக்கு வரும் போதெல்லாம் கூடவே புத்தகங்களும் வரும்.
'சிறுகதை படிக்கணும்னா சுஜாதாவைப்படி' என்கிற தகப்பனார் இன்றும் சாய்வு நாற்காலியில் தனது வாசிப்பைத் தொடர்ந்துக் கொண்டிருக்க........ பணி நிமித்தம் அயல் நாடுகளுக்கு வந்துவிட்ட நாங்களும் அப்படியே.....

சுஜாதாவின் முத்திரை முடிவுகளுக்காகவும் தனித்தன்மையான நடைக்காகவும் அவரது சிறுகதைகளை அதிகம் வாசித்ததுண்டு. ஆனால் இப்போதெல்லாம் அவருடைய எளிய அறிவியல் கட்டுரைகளையே மனம் அதிகம் நாடுகிறது.

பிரபஞ்சனின் பூ மலர்வது போன்ற எழுத்துக்கள் - மேலாண்மை பொன்னுச்சாமியின் மண் மணம் கமழும் கதைகள் மாலனின் சிறப்பான பல கதைகள்- (வீடென்று எதனைச் சொல்வீர்? அது இல்லை எனது வீடு என்ற மாலனின் ஒரு கவிதை வரி இன்னமும் என்னுள் ஒலித்துக் கொண்டிருக்கிறது) ஜெயகாந்தன் என்று நீள்கிற.....எங்கள் வாசிப்பு அனுபவங்களில் குறிப்பிடத்தக்கவை ஏராளம் இருக்கின்றன.

1987 என்று நினைவு. இந்தியா டுடேயில் 'ஸஃபர்' என்று ஒரு சிறுகதை படித்து விட்டு அசந்துப்போனேன். (சிறுகதை எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு ஒரு உதாரணமாக என் நண்பர்களுக்கு பரிந்துரைத்திருக்கிறேன்). ஒரு சராசரி தமிழ் முஸ்லிம் குடும்பத்தின் நிலையை மிகத் துல்லியமாக எழுதியிருக்கிற கதாசிரியர் சாருநிவேதிதா நிச்சயம் புனை பெயரிலுள்ள ஒரு முஸ்லிமாகத்தான் இருக்கவேண்டும் என்று இ.டு க்கு வா.கடிதமும் எழுதினேன். (பிற்பாடு அது குறித்தொரு சர்ச்சையையும் வலைப்பூக்களில் நாகூர் ரூமி உபயத்தில் அறிந்தேன்).

என்னைப்போன்று ஏராளமான எழுதுகோல்களுக்கு தூண்டுகோலாய்த் திகழ்ந்த-திகழுகிற- ஹிமானா சையத்- நான் பெரிதும் மதிக்கிற அருமையான எழுத்தாளர். இஸ்லாமியப் பின்னணியில் பல சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் கவிதைகளையும் தமிழுக்கு அளித்தவர். பரப்பரப்பான மருத்துவர் பணிக்கிடையேயும் எழுத்து வேள்வி நடத்தி மாணவப்பருவத்திலிருந்த எங்களையெல்லாம் வியக்க வைத்தவர். கவிஞர் பாலு மணிமாறன் அவர்களும் தன்னுடைய ஒரு பதிவில் ஹிமானா சையத் பற்றி சில வரிகள் எழுதியிருந்தார். (சிங்கப்பூரில் இருக்கும் ஹிமானா சையத் அவர்களிடமிருந்து அண்மையில் வந்த மின்மடலில் 20 வருடங்களுக்கு முந்தைய என் வா.கடிதத்தால் நிகழ்ந்த நிகழ்வொன்றை பசுமையாகக் குறிப்பிட்டு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அளித்திருந்தார்).

நண்பர் மூர்த்தி பட்டியலிட்டுள்ள பல புத்தகங்களிடையே இரசனைகளின் ஒற்றுமை உணர முடிகிறது. மின் நூலகமும் அமைத்து அசத்துகிற மூர்த்திக்கு நன்றிகள் பல.

சாண்டியல்யனின் கடல்புறா, யவன ராணி, ஜல தீபம், கல்கியின் பொன்னியின் செல்வன் பார்த்திபன் கனவு என்று நீள்கிற சரித்திர நாவல் வாசிப்பினூடே குறிப்பிடத்தக்க ஒரு புதினம் மு.மேத்தா வின் 'சோழ நிலா'. (ஆ.வி யின் பொன் விழாக் கொண்டாட்டத்தில் முதல் பரிசு பெற்றது). மு.மேத்தாவை சிறந்த வரலாற்று புதினகர்த்தராக அறிமுகப்படுத்தியது. (இந்நூலை ஆ.வியிலிருந்து கோத்து எனக்களித்த மேநிலைப்பள்ளி நண்பன் தண்டபாணிக்கு நன்றி! எங்கிருக்கிறீர்?). ஆனால் மு.மேத்தா தனது இரண்டாவது புதினமான 'மகுட நிலா'வில் தன் முந்தைய மகுடத்தை பறி கொடுத்தது தான் மிச்சம் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

தொடர்ந்து ஐந்து முறை 'ஜெமினி சினிமா' வின் 'பார்க்க..... படிக்க....' போட்டியில் வென்று எனக்கு உத்வேகமூட்டிய நண்பர் GKDம் (ஒரு காலத்தில் சினிமாவின் தீவிர ரசிகர் - இப்போதோ சிறந்த சமூக சேவகர்) எனக்கேத் தெரியாமல் என் கவிதையொன்றை (என் பெயரில் தான்) பத்திரிக்கைக்கு அனுப்பி அது பிரசுரமானதைக் கண்டு மகிழ்ந்த 'ஹாமுஉ'வும்-என்றும் நினைத்துப் பார்க்கத் தகுந்தவர்கள்.

அது போலவே நண்பன் SAKA (ஒருங்கிணைப்புக்கும் பணிகளின் ஒழுங்கமைப்புக்கும் அவனை விட யார் சிறப்பாக செய்யமுடியும் என்று எனக்குத் தெரியாது); என்னால் படிக்கத் தொடங்கி இன்றும் புத்தகங்களின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் நிசார் என்று என் பிற நண்பர்களும் தான்.

பத்தாவது தேறாவிட்டாலும் வாசிப்பில் எனக்குச் சளைத்தவனல்லன் என்று நிரூபிக்கும் என் தம்பி அஷ்ரஃப் ஒரு மரப்பேழை நிறைய புத்தகங்களாகவே வைத்திருக்கிறான்.

என் பாடசாலை வாழ்வின் இறுதி ஆண்டுகளில் எங்கள் கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் நடைபெற்ற கவிதைப்போட்டியில் என்னைப் பங்கேற்க வைப்பதில் பெருமுயற்சி எடுத்து- அதனால் அப்போட்டியில் நானும் கலந்துக்கொண்டு எதிர்பாராமல் முதல்பரிசு பெற்றுவிட-அதுகாறும் என் கூச்ச சுபாவத்தால் இழக்கப்பட்ட வாய்ப்புகளை நினைத்து ஏங்கவைத்து-நட்பின் அர்த்தங்களுள் ஒன்றாக தன்பெயரையும் நிறுவிக்கொண்ட அருமை நண்பன் கோகுலை நான் தாயகம் செல்லும் ஒவ்வொரு முறையும் சந்திக்கத் தவறுவதில்லை.

எதிர்மறையான சிந்தனைகளைக் கொண்ட தனது கவிதைகளால் சமூகத்தின் கருத்தோட்டங்களை நேர்படுத்தி- கவிதையில் "உண்மையைத்தான் சொல்ல வேண்டும் ஆனால் பொய் போல சொல்ல வேண்டும்" என்று தனது கவிதைகளின் மூலமாக கற்றுத்தந்துவருகிற கவிக்கோ அப்துல் ரகுமானும் வார்த்தைகளுக்குள் கருத்தை அழகுற வார்த்து வர்ணஜாலம் புரியும் வைரமுத்துவும் என் மனதுக்கினிய துரோணர்கள்.

சிறுவயதில் 'கொடிமரத்தின் வேர்களை'யும் 'கவிராஜன் கதை'யையும் படித்துவிட்டு வைரமுத்துவுக்கு கடிதமெழுதி 'உங்களின் வார்த்தைவளம் வியப்பளிக்கிறது' என்று பாராட்டு வாங்கியிருக்கிறேன். அதுபோல அசட்டுத்தனமான கேள்விகளால் 'கவிக்கோ' வை கோபப்படுத்தி ' என் எழுத்துக்களை இனி வாசிக்காதீர்கள்' என்று அவரிடமிருந்து திட்டும் வாங்கியிருக்கிறேன்.

இப்போதெல்லாம் வாசிக்கும் வாய்ப்பு மிகவும் குறைந்து விட்டிருக்கிறது. குடும்பத்தை அழைத்து வந்தவுடன் பரஸ்பரம் வாசிக்கவும் வாசிக்கப்படவும் பிள்ளைச்செல்வங்களுடன் செலவிடவுமாக பொழுதுகள் கரைந்துக் கொண்டிருப்பதாலோ..... என்னவோ... புத்தகம் என்கிற முதல் மனைவி கோபமாக மூலையில்..! (சமாதானப்படுத்தித் தான் மூளையில் ஏற்ற வேண்டும்).

இப்போது நான் வாசித்து வருபவை:
1). பேராசிரியர் முனைவர் வ.மாசிலாமணி எழுதிய 'பௌதீகம் என்பது ஒரு புதுக்கவிதை'ஜனரஞ்சக நடையில் அறிவியலின்; பௌதீகத்தின் முழு வரலாறு சொல்கிறது. (ஆர்க்கிமிடீஸ் தொடங்கி ஐன்ஸ்டீனுக்கு அப்பாலுக்கும் கொண்டு செல்கிறது).

'ஒரே ஆற்றில் இரண்டு முறை கால் நனைக்க முடியாது. நனைத்தவனும் ஒரே ஆளாக இருக்க முடியாது' - டெமாக்ரிடீஸ்.

2). 'ரியா - மறைவான இணைவைப்பு' பேராசிரியர் ஜவாஹிருல்லா மொழிபெயர்த்துத் தந்துள்ள இந்நூல் 'தான்'என்னும் அகந்தை எத்தனை தவறானது என்று இஸ்லாமிய பார்வை பார்க்கிறது.

அநேகமாக சக வலைப்பதிவர்கள் பெரும்பாலும் புத்தகம் பற்றி எழுதி விட்ட நிலையில் புத்தகம் பற்றி இனிமேல் தான் எழுத வேண்டும் என்றிருக்கும் அனைவரையும் நான் அழைக்கிறேன். குறிப்பாக......

1)K.V.ராஜா (KVR)
2)அக்பர் பாட்சா

(பி.கு: புத்தகம் பற்றி எழுத நண்பர் மூர்த்தி அழைத்திருந்த போது என் உயர்அலுவலர் விடுப்பில் சென்று விட்டதால் பணிச்சுமையின் கீழ் அழுந்திக் கிடந்தும் ரியாத்துக்கும் ஜெத்தாவுக்குமாக பறப்பதுமாக காலம் சென்றுக்கொண்டிருந்ததில் தமிழ்மணத்தைக் கூட வழமையாக நுகர இயலாமல் எப்போதேனும் - (உணவு இடைவேளைகளில்) - தலைக்காட்டத்தான் முடிந்தது என்பதை தெரிவித்துக் கொண்டு..... என் மேல் எதிர்பார்ப்பு வைத்த மூர்த்தி அவர்களிடம் தாமதத்திற்கான வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்).

20 comments:

KVR said...

வணக்கம் சார்,

கடந்த சனியன்றே ரியாத் வந்துவிட்டேன். நீங்கள் எந்த நேரமும் தொடர்புகொள்ளலாம்.

Anonymous said...

test

Anonymous said...

Hi
I think u had read maximum of present tamil literatures.. but i am not that much.. any how.. it is great to know that how many good books i had missed to read..

Your's this essay tempts me to read more books.
Thanks..
M. Padmapriya http://priyaraghu.blogspot.com

பாலு மணிமாறன் said...

நல்ல பதிவு. ரசித்து, ருசித்து எழுதியிருக்கிறீர்கள். ஆழ்ந்த வாசிப்பனுபவம் அழகாக வெளிப்பட்டிருக்கிறது.பெரிய எழுத்தாளர்கள் வாசகர்களின் கடிதங்களுக்கு, ரசித்தோ, கோபித்தோ பதில் எழுதவே செய்கிறார்கள் என்பது உங்கள் பதிவில் நானறிந்த இன்னொரு செய்தி.

நிறைய எழுதுங்கள்!

பாலு மணிமாறன் said...

நல்ல பதிவு. ரசித்து, ருசித்து எழுதியிருக்கிறீர்கள். ஆழ்ந்த வாசிப்பனுபவம் அழகாக வெளிப்பட்டிருக்கிறது.பெரிய எழுத்தாளர்கள் வாசகர்களின் கடிதங்களுக்கு, ரசித்தோ, கோபித்தோ பதில் எழுதவே செய்கிறார்கள் என்பது உங்கள் பதிவில் நானறிந்த இன்னொரு செய்தி.

நிறைய எழுதுங்கள்!

Moorthi said...

அன்புள்ள சகோதரரே,

சில காரணங்களால் எந்த வலைப்பூவுக்கும் பின்னூட்டுவதில்லை என்று இருந்தேன். புனைபெயர்களில் வந்து கண்டபடி திட்டிவிட்டுச் செல்பவர்கள் ஏற்படுத்திய பாதிப்பினால்.

ஆனாலும் உங்கள் எழுத்துக்கு என்னால் மறுமொழி அளிக்காமல் இருக்க முடியவில்லை. கைதேர்ந்த எழுத்தாளரின் எழுத்துக்கள் பளிச்சிடுகின்றன உங்கள் பதிவில். நல்லதொரு வாசிப்பனுபவம் தந்தீர்கள். பத்தாவது என்ன.. வெறும் மூன்றாவதே படித்த என் நண்பன் ஒருவன் கவிதைகளை புரட்டிப் போடுகிறான். அருமையாகக் கவிதைகள் எழுதுகிறான். எல்லா வகை தமிழ் புத்தகங்களும் படிக்கிறான். நல்ல ஒரு கவிமனது. எனவே மனமிருந்தால் நிச்சயம் நல் மார்க்கமுண்டு.

உங்களின் பதிவில் நல்ல வாசிப்பனுபவம் தென்படுகிறது. உங்களின் நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
(தயவு செய்து அனானிமஸ் பின்னூட்ட முடியாதவாறு செட்டிங்கில் மாற்றம் செய்யவும்)

Go.Ganesh said...

// எதிர்மறையான சிந்தனைகளைக் கொண்ட தனது கவிதைகளால் சமூகத்தின் கருத்தோட்டங்களை நேர்படுத்தி- கவிதையில் "உண்மையைத்தான் சொல்ல வேண்டும் ஆனால் பொய் போல சொல்ல வேண்டும்" என்று தனது கவிதைகளின் மூலமாக கற்றுத்தந்துவருகிற கவிக்கோ அப்துல் ரகுமானும் வார்த்தைகளுக்குள் கருத்தை அழகுற வார்த்து வர்ணஜாலம் புரியும் வைரமுத்துவும் என் மனதுக்கினிய துரோணர்கள். //

ஒரே திருத்தம். அப்துல் ரகுமானும் வார்த்தைகளுக்குள் கருத்தை அழகுற வார்த்து வர்ணஜாலம் புரியும் வைரமுத்துவும் நம் மனதுக்கினிய துரோணர்கள்.

வாழ்த்துக்கள்... தங்கள் வாசிப்பனுபவம் எனக்கு வியப்பளிக்கிறது.

இப்னு ஹம்துன். said...

KVR, பத்மப்ரியா, பாலு மணிமாறன், மூர்த்தி, கணேஷ் அனைவருக்கும் என் நன்றிகள்.

மூர்த்தி அவர்கள் சுமூக மனநிலைக்கு வந்துவிட்டதை இப்பின்னூட்டமும் சமீப பதிவும் உணர்த்துகின்றன. மூர்த்தி சாரின் ஆலோசனைப்படி 'அனாமதேயங்களை' செயலிழக்க செய்வது பற்றி யோசிக்கிறேன். ஆனால், அந்த வழியாக மட்டுமே வர முடிகிற சில அன்பு உள்ளங்களையும் கருத்தில் கொள்கிறேன்

வலைப்பூ உலகில் எனக்கு ஊக்கமூட்டி வருபவர்களில் மூர்த்தி, குழலி, விஜய், கணேஷ், அபூஉமர் என்று நிறைய நல்ல மனங்கள்.

நாமெல்லோரும் ஜாதி மத கசப்புணர்வுகளை தள்ளி வைத்துவிட்டால் 'தமிழனாக' தமிழில் சிறந்த ஆக்கங்களை நிறையவும் நிறைவாகவும் தரலாம்.

கணேஷ், உங்கள் திருத்தப்படி நீங்களும் என்னோடு ஏகலைவ பட்டியலில் என்பதறிந்தேன். வாழ்த்துக்கள்!

Anonymous said...

நல்ல பதிவு, வாழ்த்துக்கள்

என்றென்றும் அன்புடன்
பாலா

இப்னு ஹம்துன். said...

நன்றி பாலா
முதன்முறையாக என் வலைப்பூ வீட்டிற்கு வந்திருக்கும் உங்களை வரவேற்று மகிழ்கிறேன்.
- இப்னு ஹம்துன்.

அன்பு said...

நல்ல வாசிப்பு அனுபவம்.
(ஆனால், இன்றுதான் வாசிக்க இயன்றது) மிக்க நன்றி.

1). பேராசிரியர் முனைவர் வ.மாசிலாமணி எழுதிய 'பௌதீகம் என்பது ஒரு புதுக்கவிதை'ஜனரஞ்சக நடையில் அறிவியலின்; பௌதீகத்தின் முழு வரலாறு சொல்கிறது. (ஆர்க்கிமிடீஸ் தொடங்கி ஐன்ஸ்டீனுக்கு அப்பாலுக்கும் கொண்டு செல்கிறது).

நல்லதொரு புத்தக அறிமுகத்துக்கும் நன்றி.

contivity said...

அருமையான பதிவு..

பேராசிரியர் வி.எம் (அப்படித்தான் நங்கள் அவரை அழைப்போம்) தற்போது எங்குள்ளார் என யாருக்காவது தெரியுமா? அவரிடம் அண்ணா பல்கலையில் பயின்றவன் நான். இப்புத்தகம் இந்தியாவில் கிடைக்கிறதா?

Anonymous said...

மிகவும் சுவாரஸ்யமாகவும், படிப்பவர்களுக்கு ஒரு nostalgic feeling வரும்படியாகவும் எழுதியிருக்கிறீர்கள். முதல் முறையாக உங்கள் வலைப்பூவிற்கு வந்திருக்கிறேன். நிதானமாக உங்கள் எல்லா பதிவுகளையும் படிக்கிறேன். வாழ்த்துக்கள்.

ரம்யா நாகேஸ்வரன்

இப்னு ஹம்துன். said...

நன்றி அன்பு!
பேராசிரியர் மாசிலாமணி அவர்களின் 'பெளதீகம் என்பது ஒரு புதுக்கவிதை' - அறிவியல் பயின்றவர்களும் அதில்தேடல் உள்ளவர்களும் படிக்க வேண்டிய பயனுள்ள நூல்.

உங்களின் ஒரு பதிவு 'தினம் ஒரு கவிதை'க்கு வழிகாட்டியது. ியது. அன்பு நன்றி..

இப்னு ஹம்துன். said...

Contivity,
பேராசிரியர் வ.மா. அவர்களின் மாணவரா நீங்கள்? மகிழ்ச்சி. எனக்கு அவர் நல்ல நண்பர். இலக்கிய வழிகாட்டி. இலக்கு தரும் வழிகாட்டி. இங்கே ரியாதில் தான் மன்னர் சவூத் பல்கலையில் 'Laser' துறையில் பணியாற்றுகிறார். உங்களின் விபரங்களை எனக்கு மின்மடலில் அளித்தால் தற்சமயம் அமெரிக்காவில் இருக்கும் அவருக்கு 'மேலேற்றம்' செய்கிறேன்.

ரம்யா நாகேஸ்வரன்,
வருக! வருக! உங்களின் விமர்சனங்களையும் வாழ்த்துக்களையும் வரவேற்றுக் காத்திருக்கின்றன என் ஆக்கங்கள். நன்றி!

நண்பன் said...

அன்பின் இப்னு ஹம்துன்,

உங்கள் புத்தக வாசிப்பனுபவம் குறித்து தெரிந்து கொள்ள முடிந்தது பற்றி மிக்க மகிழ்ச்சி. மூர்த்தி போலவே ஒரு பட்டியலும் கூட கொடுத்திருக்கலாம் - வாசித்த நிறைய புத்தகங்களைப் பற்றி.

என்றாலும் குறிப்பிட்ட சில புத்தகங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முயலுகிறேன்.

நன்றி,
அன்புடன்
நண்பன்

இப்னு ஹம்துன். said...

நன்றி நண்பன் அவர்களே!

salami said...

ungal kavithaiyum sari,katuraikalum sari,ungal padipanubavangalai solluvathil kooda oru oru kavithai nadai...vazthukkal guruve

இப்னு ஹம்துன். said...

அன்பின் salami -பாராட்டுக்கு நன்றி

நீங்கள் சிங்கையில் இருக்கிறீர்களா?
எனில் தொடர்பு கொள்க: fakhrudeen.h@gmail.com

Anonymous said...

Today is a memorable day for me as this is the first time I read such heart touching words,coutesy Dinamalar.I will definitely go through your Archives.I share your sadness in not keeping the company of books.At 60,I still recollect my student days in a village where I was used to spending 4 to 6 hours daily in a Local Library reading books by Kalki,Mu.Va.,Jayakanthan,Lakshmi, Akilan etc.Best Wishes G.S.KRISHNAN