அநாகரிகத்திற்கு எல்லை இருக்கிறதா? என்ற தலைப்பில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் தன்னுடைய உயிர்மை வலைப்பதிவில் தமிழக அரசியலாளர்களின் குணங்களை எடுத்துக்காட்டியிருந்தார்.
என் பார்வையில், அவர்கள் மாறாதிருப்பதன் அவலத்தை ஒத்துக்கொள்ளும் அதே சமயம் அவர்கள் மாறாதிருப்பது ஏதொரு ஆச்சர்யத்தையும் ஏற்படுத்திவிடவில்லை (என்னளவிலேனும்) என்பதையும் குறிப்பிட வேண்டும்.
அவர்கள் மட்டுமல்ல - மதம் சார்ந்த ஆர்.எஸ்.எஸ் - போன்ற அமைப்புகளுக்கும் தங்களின் பிம்பத்தை கட்டமைப்பதற்கும், முன்னிறுத்துவதற்கும் சுனாமிகள் கூட ஒரு வாய்ப்பாகி விடுகின்றன.
மத அரசியல் வாதிகள் ஒருவருக்கொருவர் 'நாங்கள் தான் செய்தோம்" 'இல்லையில்லை, நாங்கள் தான் கூடுதலாகச் செய்தோம்"- என்றெல்லாம் அறிக்கைபோரிட்டுக்கொண்டதையும் கண்டோம்.
துக்ளக் ஆண்டு விழாவில் கூட சோ சுனாமிப்பணிகளில் ஆர்.எஸ்.எஸ்ஸை(மட்டுமே) சிலாகித்துப்பேசினார். அச்சமயம் அவரிடம் மற்ற (மத) அமைப்புகளின் பணிகளைப் பற்றி குறிப்பிடப்பட,"அப்படியானால் பாராட்டுக்கள்" என்றார். (தூய உள்ளத்துடன் சேவை மனப்பான்மை கொண்டு தொண்டு செய்தவர்கள் (செய்து வருபவர்கள்) இதில் அரசியல் செய்வதில்லை).
அதே சமயம், தங்கள் இன்னுயிரைப்பொருட்படுத்தாமல், பின் வரும் புகழ் நோக்காமல், சுனாமியிடமிருந்து மக்களின் உயிர் காத்த எத்தனையோ ஹீரோக்களை உள்ளுர் பத்திரிக்கைகள் எடுத்துக்காட்டியிருந்தன. இந்தியாவில் பிரதானமான பேச்சுப்பொருளாயிருந்து வருகிற ஜாதியோ, இனமோ, மதமோ, அந்த நல்ல உள்ளங்களுக்கு பொருட்டாகத் தெரியவில்லை. சுனாமியால் எத்தனையோ உயிர்கள் இறந்துப்போன சோகத்தை ஓரளவேனும் ஆறுதல்படுத்த (ஜாதி மதம் பாராத) இந்தியத்துவம் உயிர்த்தெழுந்து வந்ததோ என்று தான் தோன்றுகிறது.
கடலூர் அருகிலிருக்கும் ஒரு கிராமத்தின் முஸ்லிம் ஜமாஅத்தினர் சுற்றுப்புறத்தில் பாதிக்கப்பட்ட மீனவ கிராமத்தவர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு இருபது தினங்களுக்கும் மேல் உணவு, இருப்பிட வசதி அளித்து உதவியதுடன், சுனாமிக்குப்பலியான நூற்றுக்கணக்கான சடலங்களை அவரவர்தம் மதச்சம்பிராதயங்களுக்கேற்ப இறுதிச்சடங்கு செய்தனர். (இத்தனைக்கும் அந்த கிராமத்தின் முஸ்லிம்கள் யாரும் பாதிக்கப்படவில்லையாம்). இது குறித்து வால் ஸ்டிரீட் ஜர்னல் முதல் தினமணி வரை செய்திகளை வெளியிட்டிருந்தனர். 'இக்கட்டான நேரங்களில் எப்படி செயல்படுவது என்பதை அரசாங்கத்துக்கே கற்றுத்தரும்படி செயல்பட்டனர்" என்றது ஜூனியர் விகடன். ''அற்புதமாக பணியாற்றினார்கள்"" - என்றார் மாவட்ட ஆட்சியர்.
இதில் சிலிர்க்க வைக்கும் செய்தி : CARING HAS NO RELIGION என்கிற தலைப்பில் INDIAN EXPRESS நாளிதழ் 30 டிசம்பர் 2004 ல் வெளியிட்டிருந்த பாராட்டுக்கட்டுரைக்கு இதுவரை வந்து குவிந்த 190க்கும் மேற்பட்ட கருத்துக்களில் 'நான் ஒரு கரசேவகனாக இருந்தேன். (இவர்களின்) மனித நேயப்பணிகளுக்கு முன்பாக என் காவி அடையாளத்தை சமர்ப்பித்து விடுகிறேன். குஜராத்தில் முஸ்லிம் மக்களை கொன்று குவித்தது குறித்து வெட்கப்படுகிறேன். இனியேனும் இந்தியாவை இந்து, முஸ்லிம் கிறிஸ்தவர்கள் சேர்ந்தே நிர்மாணிப்போம்." என்று ஒரு வாசகர் எழுதியிருப்பது தான். இந்தியாவை நிர்மாணிக்க இத்தகைய எண்ணங்களே தேவை.
சுனாமியால் திறந்துக்கொண்ட இதயங்களுக்கும் - உதவுவதன் பொருட்டே நீளத் தொடங்கிவிட்ட கரங்களுக்கும் நன்றி செலுத்துவோம்.
-------------------------------------------------------------------------------------
6 comments:
உண்மையிலேயே நல்ல கட்டுரை. பாராட்டப்படவேன்டிய விஷயம் - நன்றி
- ஆர்.வீரப்பன்.
keep positive writing
-aj
மதமாச்சரியங்கலால் இருகிவிட்ட இதயங்கலை இலகவைக்க படைத்தவன் வைத்த சோதனை மிகப்பெரியது. அதில் வென்ர சிலர்தான் எதிர்கால இந்தியாவின்நல்வாழ்விர்கு வழிகாட்டிகல். என்ரும்நல்லென்னத்தை விதைப்போம்.சகோதரத்துவம் வலர்ப்போம். அன்புடன் ஆசாத்
நன்றி ஆசாத்!
எழுத்துப்பிழைகளை தவிர்க்க கவனம் செலுத்துங்கள்.
-இப்னு ஹம்துன்.
very good posting.....keep posting good articles....
SALAMI
Post a Comment