Sunday, August 08, 2010

இது குற்றாலம் கொட்டும் காலம்



(இரண்டரை ஆண்டுகளுக்கு முன் அன்புடன் மடலாற்குழுமத்தில் "இது குற்றாலம் கொட்டும் காலம்" என்ற தலைப்பில் நிகழ்வுற்ற கவியரங்கில் பாடியதிக் கவிதை. (மரபுப்பாக்கள் முயன்று கற்ற நேரம் அது)



இறைவாழ்த்து*
உற்சாகம் பொங்கிவர உள்ளத்தில் நீரருவி
சொற்களும் தித்திக்கும் செந்தமிழ் - நற்கருணை
வல்லோனே நீயளிக்கும் வாய்ப்பிதுவே என்கவிதைச்
சொல்லால் அருவிகள் செய்.


*தமிழ்வாழ்த்து
*பேச்சாய் எழுத்துமாய் பேருலகில் வாசம்நீ
மூச்சாய் எமக்கும் முகிழ்த்தாய்நின் - வீச்சினில்
பாயும் வெளிச்சத்தின் பாதையில் சென்றாலே
ஆயும் கவியாவேன் ஆம்


*தலைவர் வாழ்த்து*
அன்புடன் வந்திங்கே ஆற்றலைக் காட்டுகிற
நண்பரவர் சக்தியெனும் நற்பெயர் - பண்பில்
நிறைந்த கவிஞர் நலமுடன் வாழ்த்தி
உரைகள் சொன்னார் உயர்வு!


*அவை வாழ்த்து*
எங்கவிதை நீரருவி என்னும் கவிஞரும்
தங்கவிதை பாடும் தலைவரும் - பொங்கிடும்
நற்கவிதை இன்பத்தை நாடிவந்த வாசகரும்
குற்றாலம் என்பராம் குளித்து!


*முதன்மைக் கவிதை*
குற்றாலம் என்பதெல்லாம்
குளிக்கின்ற நீரருவி
சற்றேயோர் ஆனந்தம்
சாகசத்தின் ஓர்முழக்கம்.!


மற்றுமிது மடைதிறப்பு
மறக்காத வெண்சிரிப்பு
வற்றாத உயிரினொளி
வானுயரும் உள்ளொலிதான்..


குற்றாலம் எங்குண்டு
கவிஞனிடம் கேட்டாலே
சொற்களிலே வடித்திடுவான்
சுவையான கவியருவி.


பிற்கால உலகத்தில்
பிள்ளைகளின் நல்வாழ்வு
பொற்காலம் ஆவதற்கே
பெற்றோரின் கனவிலுண்டு.


உற்றோனில் உயர்ந்தோனாய்
உதவுகின்ற உள்ளத்தில்
மற்றோரும் மணங்கமழ
மகிழ்கின்ற மனதிலுண்டு..


கறுத்திருக்கும் அரசியலை
கவனிக்கும் பேராளர்
கருத்துடனே பொழிகின்ற
கார்மேகப் பெருமழையாம்..


அறுத்திருக்கும் இதயங்கள்
அன்பாலே ஒட்டவைக்க
அருந்தவத்தார் செய்கின்ற
அழகான பெருமுயற்சி..


பெருத்துவரும் ஊழலின்கண்
புழுத்துவரும் கையூட்டைப்
பொறுத்திருந்துப் பார்த்துவிட்ட
பொதுமக்கள் பேரெழுச்சி.!


சரித்திரத்தின் பூக்களிலே
சுவைத்தேனை உண்டுவரும்
சிரித்திருக்கும் காதலர்க்கு
சுகமான கண்காட்சி..


தரிசான உள்ளத்தும்
தன்வரிகள் எழுதிவிடும்
தாளம்போல் பேரிரைச்சல்
தண்ணீரே பாட்டாகும்.


பரிசாகும் புத்துணர்வே
பாவடிக்க மனமூறும்
பன்னீரும் நன்னீரும்
பூத்துவரும் பொதுவாக.!


அரசாட்சி இறைவனுக்கே
அறிவிக்கும் ஓர்சாட்சி
ஆன்மத்தின் கண்கொண்டால்
அனைத்துமே அருங்காட்சி.


முரசொலித்து முடிக்கின்றேன்
முதலோனின் புகழோதும்
நற்சாட்சி ஈதொன்று
நானிலத்தில் பலவுண்டே..!

Monday, April 19, 2010

வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள்.

தனக்குத் தானே தவமிருக்கக் கட்டிக் கொண்ட கூட்டில் முட்டி மோதிக் கொண்டிருந்தது அந்த உயிர். மெல்ல மெல்ல, உறுதியாக தன் போராட்டத்தில் வழியும் கண்டது. அந்தக் கூட்டில் இப்போது சிறு திறப்பு (துளை) ஒன்று உருவானது. அந்தத் துளையின் வழியே அதன் இளஞ்சிறகுகள் வெளிப்படத் தொடங்கின. ஆம், இனியும் அது புழுவல்ல. எல்லோராலும் விரும்பப்படுகிற வண்ணத்துப் பூச்சி. வண்ணத்துப்பூச்சி விரும்பப்படுவதற்கு அதன் சிறகுகளல்லவா காரணமாக இருக்கின்றன.

சிறகுகள் வந்துவிட்டால் பறக்கலாம். உலகத்து மலர்களில் தேன் உண்ணலாம். பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவலாம். இதோ, முழுதாக வெளிப்பட இன்னும் சற்றுகாலம்தான். அதன்பின் அது, தன் உலாவால், இந்தப் பூங்காவையே அழகுபடுத்திவிடலாம்.

சிறகுகள் சுதந்திரத்தின் குறியீடல்லவா!

அவ்வப்போது ஓய்வெடுத்துக்கொண்டும், போராட்டத்தைக் கைவிட்டுவிடாமலும், அந்த உயிர் முயற்சி செய்துகொண்டே இருந்தது.

அப்போது தான் அந்த மனிதன் அதைப் பார்த்தான். அவனுக்கு மிகுந்த இரக்க மனம். "அடடா, இந்த வண்ணத்துப்பூச்சி வெளிப்படுவதற்கு இத்தனைப் போராட்டம் நடத்துகிறதா?" அவன் வியந்தான். உதவ முடிவெடுத்தான். ஒரு கத்தரிக்கோலை எடுத்துவந்தான்.

அந்த கூட்டின் திறப்பை நுனியில் கத்தரித்து, அந்தத் துளையை பெரிதாக்கினான். அவன் எண்ணியபடியே, அந்த வண்ணத்துப்பூச்சி எளிதாக, உடனடியாக வெளிவந்தது. ஆனால்... ஆனால் ... அதன் உடல் வீங்கியிருக்க... சிறகுகள் சுருங்கியே இருந்தன. முழுவளர்ச்சி அடைந்திருக்கவில்லை.

அவன் அந்த வண்ணத்துப்பூச்சியை கவனிக்கத் தொடங்கினான். இதோ, எந்தக் கணமும் அதன் சிறகுகள் விரிந்து அதன் அற்புதமான அந்தப் பறத்தல் நிகழும் என்று அவன் நம்பினான்.

அப்படி ஏதும் நடக்கவில்லை.அந்தப் பூச்சியால் பறக்கவே இயலாது போயிற்று. வீங்கிய உடம்புடனும் சுருங்கிய இறக்கைகளுடனும் அது ஊர்ந்தபடியே இருந்தது. இனி காலத்துக்கும் அப்படியே இருக்கும் என்று சொல்வதைப் போல அதன் ஊர்தல் இருந்தது.

உண்மையில், தவறு செய்தவன் அந்த மனிதன் தான். தன்னுடைய இரக்க உணர்ச்சியால் அந்த வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் பெறும் போராட்டத்தில் தடை ஏற்படுத்தினான். அறியாமல் செய்த பிழை.

உடம்பிலிருந்து பாயும் திரவமொன்று சிறகுகளை உந்த, சிறகுகள் மெல்ல வலிமை பெற்று, கூட்டினை முட்டித்தள்ள, அது வெளிவருவதற்கான போராட்டம் மட்டுமல்ல. இணைச் சிறகுகளை வரமாகவே வழங்கும் இயற்கைத் தவத்தின் வழிமுறை; முடிவும் கூட.


ஆம். சில நேரங்களில் நமது தேவை போராட்டங்களிலிருந்தே கிடைக்கிறது. எந்தச் சிரமமுமின்றி எல்லாம் எளிதில் கிடைத்துவிட்டால், அவை மதிப்பற்றுப் போய்விடாதா? போராட்டங்கள் அல்லவா வலிமையை சேர்க்கவும் நம்மை உணர்த்தவும் செய்கின்றன.

இறைவனிடம் வலிமையை வேண்டினேன்.
அவனோ, துன்பங்களைத் தந்தான். அதனால் வலிமை கிடைத்தது.

இறைவனிடம் அறிவைக் கேட்டேன்
அவனோ, பிரசினைகளையே அளித்தான். அவற்றை தீர்க்கத் தீர்க்க அறிவு மேம்பட்டது.

இறைவனிடம் செல்வச் செழிப்பைக் கேட்டேன்
அவனோ, திட்டமிடும் மூளையையும், உழைக்கும் கரங்களையும் கொடுத்தான். அவற்றைக் கொண்டே செழிப்பைப் பெற முடியும் என்பது புரிந்தது

இறைவனிடம் தைரியத்தைக் கேட்டேன்.
அவனோ, ஆபத்துகளைத் தந்தான், கடந்தால் கிடைப்பது தைரியம் அல்லவா

இறைவனிடம் அன்பைக் கேட்டேன்
சிரமப்படும் மனிதர்களைச் சுட்டினான். அவர்களுக்கு உதவிட, அன்பின் பொருள் புரிந்தது

"இறைவா! சலுகைகளைத் தா" என்று வினவினேன்.
பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளை அளித்தான் அவன்.

நான் கேட்டது அப்படியே கிடைக்கவில்லை!
ஆனால், எனக்குத் தேவையான எல்லாமே கிடைத்தன.

இறைவனுக்கே எல்லாப் புகழும்

அவனே பெரும்பாக்கியம் உடையவன். மிக அழகான படைப்பாளன்.(அல்குர்ஆன் 23:14)

Saturday, March 27, 2010

வ'செ'ந்தத்தின் சிறப்பு விழா!

வலைமடல் வழியாகவும் அலைபேசியிலும் அழைக்கப்பட்டிருந்தோம் நாம்.
வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் (வசெந்தம்) கொண்டாடிய பைந்தமிழ்ப் பாவாணர் விழாவுக்கு (26/03/2010) பிற்பகல் தொழுகைக்குப் பின்னரே புறப்பட்டுச் சென்றோம்.

வாசலிலேயே உள்ளம் குளிர்ந்த வரவேற்பு கிடைக்க, உள்ளே நுழைந்தவுடன் பருகக் கிடைத்த தாளித்த மோரில் உடலும் குளிர்ந்தது.

வந்துபோகும் நுழைமதி(Visit Visa)யில் சவூதி வந்திருக்கும் புலவர் அ. அரங்கராசன் - நண்பர் காமராஜின் தந்தையார் - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் அணுக்கத் தொண்டர்களுள் குறிப்பிடத்தக்கவருமாவார். விழாவின் சிறப்பு விருந்தினரான அவரிடம் எங்களையும் அறிமுகப்படுத்தி வைத்தார்கள்: "ஐயா, இவர் ஒரு தமிழார்வலர், கவிஞர்...."

மகிழகத்தின் ஒருபக்கத்தில் உப்பல்கள்(Balloons) ஊதுதலும் உடைத்தலும் தனித்த ஆட்களு(Bachelors)க்கான வேடிக்கைவிளையாட்டாக நிகழ்வுற்றுக்கொண்டிருக்கையில், சற்று தள்ளி நாமும் தமிழார்வலர்கள் சிலரும் புலவர் ஐயாவுடன் உரையாடிக்கொண்டிருந்தோம்.

மொழிஞாயிறு பாவாணரைப் பற்றி, வள்ளலாரைப் பற்றி உளமுருகப் பேசுகிற புலவர் அ.அரங்கராசன் அறியப்படவேண்டிய, அரிய தமிழறிஞர்.

"உள்வாங்கி வெளிப்படுத்தும் திறன் (மாந்துதல்) உயிர்களிலே மனிதனுக்கே உண்டு. அதனால் தான் அவனை மாந்தர் என்கிறோம்" என்று பாவாணரையும்....
'நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து.......' - வள்ளலாரையும் மேற்கோள் காட்டிப் பேசுகிறார்.

அலைமுழக்கம் சிறப்பில்லை; ஆழி என்றால்
ஆழம்தான் சிறப்பாகும் அறிஞர் போலே..'

என்று என்னுள் ஒரு ஓடை (Channel) உற்பத்தியாகி ஓடத்தொடங்கியது அப்போது.
இனி அது பெருகலாம், இறைநாட்டம். இனியது பெருகட்டுமே.

பேசிக்கொண்டிருந்த எங்கள் நால்வரை விழாக்குழுவினர் அழைத்து, அணிகளுக்கு பழமொழி அடுக்குதலில் உதவும்படி வேண்ட, எனக்குக் கிடைத்த அணி நிறம் பச்சை. தரப்பட்ட உறையிலிருந்து கொட்டப்படும் வார்த்தைகளில் பழமொழிகளை அடுக்கித் தர வேண்டும். நாங்கள் வேகமாக அடுக்கிவிட்டாலும் வெற்றி பெற்றது வேறு அணி. (எங்கள் அடுக்குதலில் ஏதோ பிழை இருந்திருக்கலாம் போல :-)) )

அதன்பின்னர், நண்பர் கி.வை.இராசாவின் 'சிரித்து வாழவேண்டும்' நிகழ்ச்சி. எல்லோரையும் வட்டமாக அமரவைத்து நகைச்சுவை பெருகச் செய்ய வேண்டிய நிகழ்ச்சி.
என்னவோ, நம்பியார் சிரிப்பு போல நறுக்கென்று இருக்கும் என்று நினைத்தால் வீரப்பா சிரிப்பு போல கொஞ்சம் இழுவையாகிவிட்டது. சிரிப்பு வெடிகள் பரவி நிகழ்ச்சி சூடுபிடிக்க இருந்த நேரத்தில் அதைத் தணிப்பது போல் வந்த மழையும் காரணமாயிருக்கலாம்.
எனினும், ஐயா, ராசா,
- இன்னும் விறுவிறுப்பாக உங்களால் நடத்த முடியுமே நண்பா. :-)))

('வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்று ஒருவர் சொல்ல "மனசு விட்டுச்சிரித்தால் வயசு விட்டுப் போகும்' - என்னைமாதிரி எப்பவும் இளமையாக இருக்கலாம்" என்ற என்னுடைய குத்து (Punch) சிறப்பாகவும், சிரிப்பாகவும், நன்கு உள்வாங்கப்பட்டது.

அடுத்து வந்தவர் நண்பர் ராஜ்குமார். தமிழா, நீ பேசுவது தமிழா? என்று கேட்காமல் கேட்ட நிகழ்ச்சி.
நடத்துபவரும் ஆங்கிலச் சொற்களுக்கான சரியான தமிழ்ச்சொற்களைத் தெரிந்து வைப்பது இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு இன்றியமையாத ஒன்றாகும். மற்றொரு (மேற்)பார்வையாளரைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை, பாருங்கள்.

சேக்தாவூத் அண்ணன் ஒருநிமிடத்தை தமிழில் முதலில் கடந்து பரிசு பெற்றார். நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க,கடைசியாகப் பங்குபெற்ற எனக்கும் பரிசு கிடைத்தது.

மன்ஃபுவா மாறன் குழுவினரின் நகைச்சுவை நாடகம், மக்களை சிரிக்கவைக்கும் தன்நோக்கில் வெற்றிபெற்றது. ஒருசில நடன அசைவுகளை (மட்டும்) தவிர்த்திருந்திருக்கலாம் என்பது என்கருத்து.

தனித்திறன் போட்டியில் சிரிப்பொன்றை சொல்ல வந்தவர் பார்வையாளர் அனைவரையும் தன் சரளமான சேலத்துப் பேச்சால் வீழ்த்தினார். அவர் பெயர் முகமது அலி.

சிறுவர் சிறுமியரின் தனித்திறன்களாக நாட்டியமும், பாடலும் மிகவும் வியக்கவைத்தன. எத்தனை எத்தனை திறமைசாலிகள். குறிப்பாக, அன்பே என் அன்பே பாடியவனின் தாம்தூம்.


நண்பர் சீ.ந இராசாவின் இயக்கத்தில், அழகப்பனின் சிறப்பான நடிப்பில் 'தமிழா, தமிழா' நாட்டிய நாடகம் அருமையாக இருந்தது. "இந்தியர்கள் நல்லவர்கள்;நம்பிக்கைக்குரியவர்கள் சிறந்த உழைப்பாளிகள்" என்ற கருத்தை வலியுறுத்தியது. சிறுமிகளின் நடனமும், தேர்ந்தெடுத்த பாடல்களும் முதல்தரம்.இயக்குநர் நண்பர் சீ.ந.இராசாவை வாழ்த்தியாக வேண்டும். இராசா சொன்னது: "இந்த நாடகத்தின் அருமையான வெற்றிக்கு திருமதி.இரம்யா காமராஜ் அவர்களின் பின்னணி உழைப்பு(ம்) காரணம்". வாழ்த்துகள் சகோதரி.

புலவர் அரங்கராசன் அவர்களுக்கு சிறப்புச் செய்யப்பட்டது. அவர்தம் பேச்சுக்கும் சற்று அதிகநேரம் முன்னதாகக் கொடுத்திருக்கலாமே என்று எனக்குத் தோன்றியது.

உழைக்கும் வர்க்க (Blue Collar Workers)நண்பர்களை விழாவுக்கு அழைத்து மகிழ்வித்து, நிலாச்சோறு நிகழ்ச்சியில் பங்கெடுக்க வைத்தது; நிகழ்ச்சிக்கென்று எந்தத் தொகையும், கட்டணமும் யாரிடமும் கோராமல், நண்பர்களும், புரவலர்களுமாகச் செலவினைப் பங்கிட்டுக்கொண்டது; மரம் நடுதல், ஆதரவற்ற சிறார்களுக்கு ஆடை அனுப்பிவைத்தல், தொடர்ந்து, உழைக்கும் வர்க்க நண்பர்களை உயர்வு செய்வது என்று வசெந்தம் குழுவினரின் மனிதநேயப் பணிகள் மனமாரப் பாராட்டத்தக்கவை. வாழ்க, வளர்க.

தன்னலப் பெருக்கோ, தான்மைச் செருக்கோ இடம்பெறாத அழகிய விழாவொன்றில் கலந்தும்,களித்தும் இனிய மனநிலையுடன் இல்லம் திரும்பினேன் என்று முடிக்குமுன்

எனை ஈர்த்த ஒரு சிறு குழந்தையை,அதன் மழலையை தமிழாய் வார்த்தேன் மனதுக்குள்

பிஞ்சுமலர்ப் பார்வையினை; பிள்ளைக் கனியமுதை
கொஞ்சிடத் தோன்றுதே கோமகளே - நெஞ்சிலே
எஞ்சிடும் ஞாபகத்தில் எம்ம(க்)கள் எண்ணிட
விஞ்சிடும் பாசம் விளைந்து!

Sunday, March 21, 2010

மனிதமே புனிதம்!

( ஐந்தாறு வருடங்களாக வலைப்பதிவிட்டு வந்தாலும், ஏனோ அத்தனை ஆர்வங்காட்டுவதில்லை நான்.
குழுமங்களில் எழுதுவதையாவது வலையில் பதிவிட்டுவைக்கலாமே என்று இன்று ஒரு நண்பர் அன்புக்கோரிக்கை வைக்க அதனடிப்படையில் ஜனவரி 26ல் குழுமங்களில் எழுதிய மனிதமே புனிதம்!' என்கிற கட்டுரையை பதிகிறேன். படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள்- நன்றி)

மனிதமே புனிதம்

இறைமையை; அதன் நற்பண்புகளை பிரதிநிதித்துவம் செய்கின்ற மனிதமே புனிதம் என்கிற மகத்தான நற்செய்தியை ஓங்கி ஒலிக்கச் செய்வதாகவும்.....

ஒவ்வொருவரும் தத்தம் தனித்திறனைக் கண்டறிந்து மானுடத்திற்குச் சேவையாற்றுவதில் தான் அவரவர் வாழ்வின் பொருளும் வெற்றியும் அடங்கியிருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துவதாகவும்......

இன்னும் சொல்வதென்றால்...

எண்ணமே செயலுக்கு அடிப்படை....

ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள்; அவரவர் பொறுப்புகள் குறித்து விசாரிக்கப்படுவீர்கள் என்ற நபிமொழிகளுக்கும்,

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய(து) உயர்வு.
என்ற திருக்குறளுக்கும் விளக்க உரையாகவும் அமைந்திருந்தது அந்த இனிய நிகழ்ச்சி.

ஆம். சகோ.கஸ்ஸாலி அவர்கள் (ZEE TEE Express) ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் தன்னைத்தானே அறிந்துகொள்ளத் தக்க விதத்தில் இனியதொரு உரையை, அல்ல, அல்ல, ஒரு அழகிய கலந்துரையாடலை நிகழ்த்தினார் சகோ.சாதத்துல்லாஹ் கான்.
Islamic Voice என்கிற, பெங்களூரூவிலிருந்து வெளிவரும் ஆங்கிலமாத இதழின் ஆசிரியர்.

“நாம் அனைவரும் திருத்தத்தான் நினைக்கிறோம்; நம்மைத் தவிர”

என்பதை மிக அழகாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிய இந்தப் பேராசிரியர், “உண்மையில் ஒவ்வொருவரும் தம்மைத்தாமே திருத்திக்கொள்வதே இவ்வுலகம் பிரசினைகளிலிருந்து விடுபட வழி என்பதை இயல்பான கருத்துகளால் சுட்டினார். தீதும் நன்றும் பிறர் தர வாரா.

பொதுவாக மனிதன், ஒட்டுமொத்தஅறிவில் 1% மட்டுமே பெற்றிருக்கிறான். அதை அறிந்தும் இருக்கிறான். அதுபோல, சில வகை அறிவு பற்றி தான் அறிந்திருக்கவில்லை என்பதையும் அவன் அறிந்திருக்கிறான். இது 3% வரை இருக்கும்.

மீதமுள்ள 96% அறிவு பற்றி எந்த மனிதனும் அறிந்திருக்கவில்லை என்பதை விட, அதை தான் அறிந்திருக்கவில்லை என்று கூட அவன் அறிந்திருக்கவில்லை என்பதைத் தெளிவாக்கினார்.


அறிந்திருப்பதும் அதை அறிந்திருப்பதும் 1% என்றால், (அறிவு பற்றிய அறிவு)
(தன்) அறியாமையையை அறிந்திருப்பது 3% (அறியாமை பற்றிய அறிவு)

அறியாமலிருப்பதை அறியாமலிருப்பதுவே மீதமுள்ள 96% எனலாம். (அறியாமை பற்றிய அறியாமை)
இது அனைத்து மனிதருக்கும் பொருந்துவதே.

இந்த 96% ,எதுவென்றே அறியாத அறியாமையே ‘இருட்டான அறியாமை’ எனப்படுகிறது. ‘Blind Spot' என்றார் பேராசிரியர். தன்னிடமிருக்கும் இந்த ‘இருட்டான அறியாமை’யை எந்த மனிதனும் காண முடிவதில்லை. கண்டுவிட்டால் அது ‘அறியப்பட்ட அறியாமை’ ஆகிவிடும் , (அந்த 3% ல் சேர்ந்துவிடும்).

இதன் பொருள், அறியாமையின் அறியாமை எனப்படும் இந்த இருட்டான அறியாமைக்கு ஒரு உதாரணம் கூட சொல்லிவிட முடியாது. தெரிந்தால் தானே!

எனவே, நாம் இயன்ற வழிகளிலெல்லாம் நம் அறிவைப் பெருக்கிக்கொள்வது அத்யாவசியம். Knowledge is Power.

இந்த Blind Spot எனப்படுகிற நம் அறியாமையின் இருட்டுப் பக்கங்களை, நம்மால் காண முடியாவிட்டாலும், மனைவி உட்பட நம் மேலதிகாரிகளே (உரிமையாளர்கள்?) எளிதாகக் கண்டுகொள்வர் என்பதையும் பேராசிரியர் நகைச்சுவையாக விளக்கினார்: "நீ(ங்க) ஒண்ணத்துக்கும் லாயக்கில்லே" :-)))

மன்னர் மகனாக இருந்தாலும், மண்குடிசை மைந்தனானாலும், மனித சாதனைகளின் மூலங்களான, எண்ணம் (Thought), சொல்(Word), செயல்(Action) ஆகியவற்றை இறைவன் பாரபட்சமின்றி (அனைத்து மனிதருக்கும்)ஒன்றுபோலவே வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்ட பேராசிரியர், அதை வளர்த்தெடுக்கும் விதத்தில் தான் மனிதர்கள் வேறுபட்டுப்போய் விடுகிறார்கள் என்றார்.

ஜாதி, இனம், மதம், மொழி போன்ற எல்லா வேறுபாடுகளையும் கடந்து, சகமனிதனை, மனிதத்திற்காகவே நேசிக்க வேண்டும்
அப்படி மனிதர்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கத் தொடங்கிவிட்டால்........ வெறுப்பு காணாமல் போய்விடும். எங்கே வெறுப்பு இல்லையோ... அதனால் ஏற்படும் பிரசினைகளும் இல்லாமலாகி விடும்.

சகமனிதருக்கு பாராமுகம் காட்டுபவர் செய்கின்ற இறைவணக்கத்தை இறைவன் விரும்புவதில்லை என்றார் பேராசிரியர். "பக்கத்துவீட்டான் வறுமையில் வாடிக்கொண்டிருக்கையில் நீ பத்து ஹஜ்ஜு செஞ்சு என்ன பிரயோசனம்?"

"அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் உண்ணுபவர் இறைநம்பிக்கையாளராக இருக்க முடியாது" என்ற நபிமொழி என் நினைவுக்கு வந்தது.

மேலும் பேராசிரியர் கூறுகையில், கணக்கு வழக்குகள் துல்லியமாகத் தீர்க்கப்படும் அந்த நாளில், மனிதனிடம் இறைவனே இப்படி கேட்பானாம்:

" நான் பசியோடு இருந்தேனே, உனக்கு வசதியினை நான் அளித்திருந்தும் நீ எனக்கு உணவளிக்கவில்லையே?"

இறையடியானாகிய அந்த மனிதன் பதற்றத்தோடு, "இறைவா, நீயே சர்வ வல்லமை படைத்தவன், உனக்கு எப்படி பசி ஏற்பட முடியும்?" என்று வினவ,
அதற்கு இறைவன், "இன்ன மனிதனை இன்ன இடத்தில் நீ பசியோடு இருக்கக் கண்டிருந்தும் உணவளிக்காமல் போனாயே.... அவனுக்கு உணவிட்டிருந்தால்.. அங்கு என்னை நீ கண்டிருப்பாய்" என்ற பதிலளிப்பானாம்.

மேலும் அவர் நபிவழிக் கிரந்தங்களிலிருந்து மேற்கோள் காட்டுகையில் " வேசியொருத்தி வாயில்லாப் பிராணியான ஒரு நாய்க்கு தாகம் தணித்த இரக்கச்செயலால் இறைவனின் கருணைப்பார்வைக்கு ஆளானாள்" என்பதைக் குறிப்பிட்டார்.

மிருகங்களைக் கூட உணவுக்காக அன்றி கொல்லக்கூடாது என்ற பேராசிரியர், அதுவும் இறைவனின் படைப்பு என்ற உணர்வை நாம் மறந்து விடக்கூடாது என்றார்.

ஒரு உண்மையான இறையடியானால் சக மனிதர்களை எப்படி வெறுக்க முடியும்?. எர்ன்று கேள்வி எழுப்பிய பேராசிரியர், அப்படி வெறுத்தால் அது இறைவனின் படைப்பொன்றை அவமதித்த குற்றமாகும் என்று தெளிவுறுத்தினார்.


உண்மையில் வெறுப்பு, ஆணவம், கோபம், சுயநலம் போன்றவை சாத்தானிய இயல்புகள். இறைவனின் பிரதிநிதியாகத் தனனைக் கருதும் மனிதன், இவற்றைக் கைவிட்டுவிட்டு இறைமை வலியுறுத்தும் அன்பு, நேசம், உண்மை, பணிவு, பொதுநலநோக்கு, நல்லெண்ணம் போன்றவற்றையே மேற்கொள்ளவேண்டும்.

மனிதன் மேம்படுவதும், சீரழிவதும் தன் எண்ணங்களாலேயே என்பதை அழகாக விளக்கினார்.
எண்ணத்தூய்மையை வலியுறுத்திய அவர் பேச்சில் " இறைவன் உங்கள் புறத்தோற்றங்களைப் பார்ப்பதில்லை; உங்கள் உள்ளத்தையே பார்க்கிறான்" என்பது அழகாக வெளிப்பட்டது.

எடுத்தவுடனேயே, "என்னால ஆகாது", "இது சரிப்பட்டு வராது" "இதெல்லாம் சாத்தியமேயில்லை" என்று எதிர்மறை எண்ணங்களை மொழிவீர்களேயானால், உங்களுக்கு நீங்களே சிறைப்பட்டு விட்டீர்கள் என்று அர்த்தம் என்றார்.
உண்மைதான், சொந்தச்சிறைகளில் தானே பெரும்பாலான மக்கள் 'அக'ப்பட்டுக் கிடக்கிறார்கள்.

தேர்ந்தெடுக்கும் உரிமை (Choice) இறைவன் மனிதனுக்கு அளித்த மற்றொரு வரம்.
நாம் நன்மையை விட்டுவிட்டு தீமையை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்,

மொழிவது கூட உள்ளத்தில் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ பாதிப்பை ஏற்படுத்த வல்லது.
எனவே,
பேசினால், நல்லதையே பேசுங்கள்.
ஆம், மொழியும் விதத்தில் தான் எத்தனை விளைவுகள்.
"அன்பினால் சிங்கத்தின் மீசையைக் கூட பிடுங்கலாம்" என்கிறது ஒரு முதுமொழி.

தமிழில் கூட அழகாகச் சொல்வார்கள்: "எண்ணம் போல் வாழ்வு" என்று.

அலுவலகமானாலும், இல்லறமானாலும், முதல் சில மாதங்களில் காணப்படுகிற மகிழ்ச்சியும் நிம்மதியும் போகப்போக குறைந்துவருவதன் காரணத்தைச் சிந்திக்கத் தூண்டிய பேராசிரியர்,

நோக்கத்திலிருந்து நழுவி சுயநலத்தில் வீழ்தலே அதற்குக் காரணம் என்பதை அழகுற, காட்டுகளுடன் எடுத்தியம்பினார்.

அலுவலகம்/நிறுவனம் என்றால்... முதலில் நிறுவன நலன்களை முதன்மைப்படுத்தி உழைக்கிற நாம், படிப்படியாக... தாழ்ந்து... தன்னலமே பிரதானம் என்று ஆவதே.. அந்த மகிழ்ச்சிக்குப் பதிலாக மன அழுத்தத்தினை உண்டாக்குகிறது என்றார்.

"பிறருக்கு நீங்கள் அளிக்கும் எதிர்மறை பதில்கள், உங்களுக்கு நீங்களே அளித்துக்கொள்வதாகவே பொருள்" . விதைப்பதுவே அறுக்கப்படும்.

அதே போல, இல்லறம் என்று வருகையில்... கல்யாணத் தொடக்கத்தில் காணப்படும் அன்பு மெல்ல, மெல்ல மங்கி ஒளியிழந்து.. ஒருவருக்கொருவர் குறைகள் காணத் தொடங்கிவிட்டால்... அங்கே,
தான்மை மேலோங்கிவிடுகிறது. விளைவு, நிம்மதியிழப்பும் கவலையும் தான் என்றார்.


தயக்கத்தை உடைப்போம்; மனித மனம் இயல்பாகவே எதிர்ப்பு (Resist) காட்டக்கூடியதாகவே இருக்கிறது.
எந்த நல்ல காரியத்திற்கும் "அதெல்லாம் வேணாம்ப்பா" என்பவர்களே அதிகம்.

தயங்காமல், களம் காணுவோம். நமது தனித்திறனைக் கண்டறிவோம். இந்த உலகம் நமக்கானது. இறைவனால் தன்னாட்சி உரிமையும், தேர்ந்தெடுக்கும் உரிமையும் வழங்கப்பட்டு இந்த உலகத்திற்கு நாம் வந்தது வெறும் பார்வையாளராக இருந்துவிட்டுச் சென்றுவிடுவதற்கா? .

நானும், நீங்களும் இந்த உலகத்தின் பங்களிப்பாளர்களுள் ஒருவர். நாம் பங்களிக்கும் இந்த உலகம், இனிய உலகமாகத் திகழ வேண்டாமா?


நிகழ்ச்சிக்கு வந்து, பயன் பெற்றவர்களில் பாராட்டாதவர்கள் யாருமே இல்லை.


மனிதம் மதிப்போம் அதுவே புனிதம் ஆகும்.

எண்ணத்தில் நல்லதைப் பேணுவோம் - அதுவே மொழியாகிறது.
மொழியில் நல்லதைப் பேணுவோம் - அதுவே செயலாகிறது.
செயலில் நல்லதைப் பேணுவோம் - அதுவே வாழ்க்கையாகிறது.

ஆம். நமது வாழ்க்கை நமது கையில்.

வாழ்த்துகளும் நன்றியும்.

Tuesday, February 23, 2010

சொல் வெடித்த பொழுது...


வார்த்தைகளால் நெய்யப்பட்ட

எதிர்பார்ப்பின் சிறகுகள்

ஒரு மலை மீது

தவமிருந்த பொழுது

"மறந்துவிடு" என்னும் ஓர் சொல்

வெடித்துப் பரவியது.



காரணத்தின் கத்தியை

அறியாமலேயே ஏந்தியவனாய்

உயரப் பறப்பதற்காகவே

ஊதப்பட்ட பலூனில்

காற்றும் அறியாததொரு

கீறலைச் செய்து விட்டு

விகல்பமற்ற

குழந்தையாகிவிடுகிறாய்.



தகிக்கும் தாகத்தில்

தள்ளிவிட்ட பின்னர்

நிராசையின் கங்குகளால்

நிரப்பவும் செய்கிறாய்.

நீயறியாமலே.


மன்னிக்கவும் மறக்கவுமாய்

கற்று வைத்த வாழ்க்கை

கதவு திறந்துவிடுகிறது.



பயணிக்கத் தயாராயிருக்கும்

பாதங்களுக்கு

இன்னமும் நீண்டிருக்கின்றன

பாதைகள்.



நன்றி: கீற்று

Saturday, February 06, 2010

எது கவிதை?



கைதட்ட(ல்) வேண்டுவதா கவிதை? - எண்ணம்
கருத்தணையத் தூண்டுவதே கவிதை.-மின்னும்
பொய்யூற்றிப் புலம்புவதா கவிதை? - நன்கு
புனைந்தாலும் பேருண்மை கவிதை. - கண்ணில்
மைதீட்டும் செயற்பாடா கவிதை? - மண்ணில்
மெய் தேடும் சமன்பாடே கவிதை. - இன்னும்
வையத்தில் வானவில்லா கவிதை? - உண்மை
உள்ளத்தில் மலர்த்துவதே கவிதை ஐயா!

சந்தமதன் வசந்தத்தை செவிகள் கேட்க
சாரமது போதுமென்று சிலபேர் சொல்ல
முந்தையதே கவிதையாகும் மற்ற யாவும்
முறையற்றுப் போனதென்ற முறையீ டுண்டு
பிந்தையதே கவிதையாகும்; பொருளே தேடல்
பொருட்டில்லை மரபென்ற பேச்சும் உண்டு.
எந்தவிதம் கவிதையாகும் என்னைக் கேட்டால்
இதயத்தில் பதிவதையே கவிதை என்பேன்.

கந்தகத்தைக் கொண்டிருக்கும் கவிதைப் பேனா
கொடுமைகளை எரிப்பதிலே நெருப்புக் குச்சி
விந்தைகளை வியப்பதுவே விருப்பம் என்று
உயர்மொழியில் பூச்சூடும் வனிதைப் பாக்கள்
சொந்தகதை சோகத்தைச் சொல்லும் சொற்கள்
சுகங்காண இலக்கியத்தைச் செய்யும் கைகள்
இந்தவிதம் கவிவகைகள் எண்ணி மாளா
இருந்தாலும் கவிதைக்கோர் கருத்தைச் சொல்வேன்.

சிந்தையிலே பூபூக்கும் கவிதை வந்து
சிகரத்தை கால்களுக்குச் சொல்லிப் போகும்
சந்தையிலே கிடைப்பதல்ல; கவிதைத் தன்னை
சூல்கொண்டு பிரசவிக்கத் தாய்மை வேண்டும்
மந்தையிலே ஒன்றில்லை; கவிதை என்றால்
மலையுச்சி தீபம்போல் வெளிச்சம் பேசும்
பந்தயங்கள் கவிக்கில்லை; பாரில் யாரும்
பெருவானில் ஓடுதளம் அமைப்ப தில்லை

Tuesday, April 14, 2009

பொதுவாய் இருக்கும் பரந்த வானம்




கவியரங்கக் கவிதை

நாள்: சித்திரை முதல்நாள் விரோதி ஆண்டு.
அவை: எழுத்துக்கூட கவியரங்கம்
தலைப்பு: 'மனிதம்'


கடவுள் வாழ்த்து
(நிலை மண்டில ஆசிரியப்பா)

தேவ குணமும் மிருக குணமும்
சேர்த்து செய்த மனித இனத்தை
பாவ புண்ணிய கரைகள் நடுவே
பாரில் வாழ வைத்தனை இறைவா!
ஆவல் தூண்டும் பாவம் நீக்கி
அறிவே மிகைக்கும் ஞானம் நோக்கி
வாழும் காலம் யாவும் எங்கள்
வெற்றியின் உறுதி வழங்கிடு வாயே!

அவை வாழ்த்து (அறுசீர் விருத்தம்)

எழுத்துக் கூடம் அற்புதமே
எங்கள் தாகம் தணிப்பதிலே!
பழுத்த அறிஞர் பெரியோரும்
பன்மைத் திறனில் மற்றவரும்
அழுத்தி முத்திரைப் பதிக்கின்றார்
அதனைப் பார்த்து வியக்கின்றேன்
கழுத்தின் அணியாய் தமிழுக்கே
கண்டேன் அவையை; போற்றுகின்றேன்.

தலைவர் வாழ்த்து (அறுசீர் விருத்தம்)
இளைஞர் என்று சொல்லாதீர்
இவரோ இங்கே மூதறிஞர். (ராஜா ஜி :-) )
விளையும் தமிழும் நற்பயிராய்
விதைகள் தூவும் உழவரிவர்
தலைமைக் கவிஞர் வரிசையிலே
தகுதி மிக்க தமிழ்வாணர்.
விலையே இல்லா நற்பண்பில்
உயர்ந்து நிற்கும் என்நண்பர்.

"அலைந்து திரியும் காலமய்யா
அதனால் பின்னர் எழுதுகின்றேன்"
நிலையைச் சொன்ன பின்னாலும்
நீதான் முதலில் எழுதென்றார்.
வலையில் இழுத்துப் போட்டாரே
வந்தேன் நானும் உங்களிடம்!
இலையில் உணவாய் என்கவிதை
எடுத்துச் சுவைத்துச் சொல்வீரே!

முதன்மைக் கவிதை (எண்சீர் விருத்தம் (அ) 'என்'சீர் விருத்தம்)

இவ்வூரில் இவ்விடத்தில் இன்னார் பிள்ளை
....எனவிரும்பி பிறக்கத்தான் யாரால் ஏலும்
"1எவ்வூரும் எமதூரே" தமிழன் சொன்னான்
....யாவரையும் கேளிர்தான் என்று கொண்டான்
அவ்வாறே அறிந்திருந்தும் ஆசை உந்த
....அரசியலின் அவலத்தில் வீழும் மாந்தர்
வெவ்வேறு காரணத்தை கற்பிக் கின்றார்
....வேறுபாட்டில் ஆதாயம் தேடு கின்றார்.

2ஒன்றலவோ குலமென்றான் ஓதி வைத்தான்
....ஒருவன்தான் தேவனென்
ற உண்மை சொன்னான்
*நன்றிதனை கொள்கின்ற நெஞ்சம் தன்னில்
....நன்னலமே அனைவருக்காய் நாட்டங் கொள்ளும்.
தென்றலென வாழ்வாகும் உலகம் பூக்கும்
....தீந்தமிழும் இன்பந்தான் தீண்டத் தீண்ட!
என்றுவரும் பொற்காலம் இனியும் மீண்டும்?
....எங்குலமும் உங்குலமும் ஒன்றிப் போமோ?

மொழியென்ன மதமென்ன மனிதம் பார்க்க
....முன்வந்(து) உதவுகின்ற மனமே வேண்டும்.
விழிநீரை பிறருக்காய் வடிக்கும் போதில்
....உள்ளத்தின் அழுக்குகளும் கரைந்து போகும்
இழிவென்று மற்றவரை எண்ண வேண்டா
....இல்லாத நற்குணத்தை கற்கப் பார்ப்போம்
வழியெங்கும் பாடங்கள்; வாழ்க்கைப் பள்ளி
....வகைவகையாய் ஆசிரியர் வானின் கீழே!

நிழல்போலும் மனிதருண்டே;இரவில் நீங்கல்
.....நிறம்மாறும் பச்சோந்தி; நச்சுப் பாம்பு
பழிகாணும் குணமிருப்பின் பாசம் எங்கே?
.....பண்பாட்டைப் புதைக்கின்றார் பாத கத்தார்.
விழல்போல சிலரிருப்பார் விரயம் நீரே
....விலங்குகளை ஒத்திருப்பார் மனிதர் தாமா?
சுழலொன்றில் சிக்கிவிட்ட சிலரும் உண்டு.
....சிந்தையிலே மண்மூடி சிதைகின் றாரே!

தன்னுயர்வை கொள்ளத்தான் பிறரை ஏய்க்கும்
....தரங்கெட்ட போக்குகளில் தனியன் அன்றி
மன்னுயிரைக் கொல்கின்ற மதத்தின் வாதம்
....மானத்தைக் குலைக்கின்ற மூர்க்கர் தம்மில்
என்னினமே பெரிதென்னும் இழிந்த உள்ளம்
....இவர்க்கிங்கே சளைக்காமல் இன்னோர் பக்கம்
தன்னினமே அழிந்தாலும் தயக்கம் இன்றி
....தன்னலனை; பதவியினைத் தாங்கும் போக்கு!


கண்பார்க்க முடியலையே கொடுமை ஐயோ
....காதுக்கும் சேதிவர கதறும் உள்ளம்
மண்மீதில் எளியவரை வதைக்கும் தீயோர்
....மனதுக்குள் எழுதட்டும் இறையின் நீதி
கண்ணீரும் புரட்டிவிடும் காலக் கோளை
....கீழதுவும் மேல்வருமே கறங்கின் சுற்றில்.
விண்ணுக்கும் எட்டிவிடும் வேத னைமூச்சும்
.....ஒருநாளில் புயலாகும்; உலகை மாற்றும்.

உழவுக்கும் அழிவுக்கும் உங்கள் கைகள்
....உள்ளபடி 3பிறர்தரவோ தீதும் நன்றும்?
மழையாக அன்பதுவும் மனதில் பெய்ய
....மனிதத்தின் பயிர்வளரும் மணமும் வீசும்
அழகான உலகத்தில் வாழ வேண்டின்
....அதற்கேனும் மனிதத்தை பேண வேண்டும்
தொழும்நேரம் இறைவனையே கேட்டு நிற்போம்
....தொலையாமல் மனிதத்தை காக்க வேண்டும்.

000000000000000000000OOO0000000000000000000000


பி.கு:
1. யாதும் ஊரே யாவரும் கேளிர்
2. ஒன்றே குலம்; ஒருவனே தேவன்
3. தீதும் நன்றும் பிறர்தர வாரா
* நன்றிதனை = நன்று இதனை (அ) நன்றி தனை


(கவியரங்கத் தலைவர் ராஜா இந்தத் தலைப்பைத் தந்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. இந்தக் கவிதை எழுதி முடித்த இந்நேரம் ஊமையின் கண்ணீராய் ஓர் ஆறுதல் உள்ளே வடிகிறது)