Saturday, March 27, 2010

வ'செ'ந்தத்தின் சிறப்பு விழா!

வலைமடல் வழியாகவும் அலைபேசியிலும் அழைக்கப்பட்டிருந்தோம் நாம்.
வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் (வசெந்தம்) கொண்டாடிய பைந்தமிழ்ப் பாவாணர் விழாவுக்கு (26/03/2010) பிற்பகல் தொழுகைக்குப் பின்னரே புறப்பட்டுச் சென்றோம்.

வாசலிலேயே உள்ளம் குளிர்ந்த வரவேற்பு கிடைக்க, உள்ளே நுழைந்தவுடன் பருகக் கிடைத்த தாளித்த மோரில் உடலும் குளிர்ந்தது.

வந்துபோகும் நுழைமதி(Visit Visa)யில் சவூதி வந்திருக்கும் புலவர் அ. அரங்கராசன் - நண்பர் காமராஜின் தந்தையார் - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் அணுக்கத் தொண்டர்களுள் குறிப்பிடத்தக்கவருமாவார். விழாவின் சிறப்பு விருந்தினரான அவரிடம் எங்களையும் அறிமுகப்படுத்தி வைத்தார்கள்: "ஐயா, இவர் ஒரு தமிழார்வலர், கவிஞர்...."

மகிழகத்தின் ஒருபக்கத்தில் உப்பல்கள்(Balloons) ஊதுதலும் உடைத்தலும் தனித்த ஆட்களு(Bachelors)க்கான வேடிக்கைவிளையாட்டாக நிகழ்வுற்றுக்கொண்டிருக்கையில், சற்று தள்ளி நாமும் தமிழார்வலர்கள் சிலரும் புலவர் ஐயாவுடன் உரையாடிக்கொண்டிருந்தோம்.

மொழிஞாயிறு பாவாணரைப் பற்றி, வள்ளலாரைப் பற்றி உளமுருகப் பேசுகிற புலவர் அ.அரங்கராசன் அறியப்படவேண்டிய, அரிய தமிழறிஞர்.

"உள்வாங்கி வெளிப்படுத்தும் திறன் (மாந்துதல்) உயிர்களிலே மனிதனுக்கே உண்டு. அதனால் தான் அவனை மாந்தர் என்கிறோம்" என்று பாவாணரையும்....
'நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து.......' - வள்ளலாரையும் மேற்கோள் காட்டிப் பேசுகிறார்.

அலைமுழக்கம் சிறப்பில்லை; ஆழி என்றால்
ஆழம்தான் சிறப்பாகும் அறிஞர் போலே..'

என்று என்னுள் ஒரு ஓடை (Channel) உற்பத்தியாகி ஓடத்தொடங்கியது அப்போது.
இனி அது பெருகலாம், இறைநாட்டம். இனியது பெருகட்டுமே.

பேசிக்கொண்டிருந்த எங்கள் நால்வரை விழாக்குழுவினர் அழைத்து, அணிகளுக்கு பழமொழி அடுக்குதலில் உதவும்படி வேண்ட, எனக்குக் கிடைத்த அணி நிறம் பச்சை. தரப்பட்ட உறையிலிருந்து கொட்டப்படும் வார்த்தைகளில் பழமொழிகளை அடுக்கித் தர வேண்டும். நாங்கள் வேகமாக அடுக்கிவிட்டாலும் வெற்றி பெற்றது வேறு அணி. (எங்கள் அடுக்குதலில் ஏதோ பிழை இருந்திருக்கலாம் போல :-)) )

அதன்பின்னர், நண்பர் கி.வை.இராசாவின் 'சிரித்து வாழவேண்டும்' நிகழ்ச்சி. எல்லோரையும் வட்டமாக அமரவைத்து நகைச்சுவை பெருகச் செய்ய வேண்டிய நிகழ்ச்சி.
என்னவோ, நம்பியார் சிரிப்பு போல நறுக்கென்று இருக்கும் என்று நினைத்தால் வீரப்பா சிரிப்பு போல கொஞ்சம் இழுவையாகிவிட்டது. சிரிப்பு வெடிகள் பரவி நிகழ்ச்சி சூடுபிடிக்க இருந்த நேரத்தில் அதைத் தணிப்பது போல் வந்த மழையும் காரணமாயிருக்கலாம்.
எனினும், ஐயா, ராசா,
- இன்னும் விறுவிறுப்பாக உங்களால் நடத்த முடியுமே நண்பா. :-)))

('வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்று ஒருவர் சொல்ல "மனசு விட்டுச்சிரித்தால் வயசு விட்டுப் போகும்' - என்னைமாதிரி எப்பவும் இளமையாக இருக்கலாம்" என்ற என்னுடைய குத்து (Punch) சிறப்பாகவும், சிரிப்பாகவும், நன்கு உள்வாங்கப்பட்டது.

அடுத்து வந்தவர் நண்பர் ராஜ்குமார். தமிழா, நீ பேசுவது தமிழா? என்று கேட்காமல் கேட்ட நிகழ்ச்சி.
நடத்துபவரும் ஆங்கிலச் சொற்களுக்கான சரியான தமிழ்ச்சொற்களைத் தெரிந்து வைப்பது இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு இன்றியமையாத ஒன்றாகும். மற்றொரு (மேற்)பார்வையாளரைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை, பாருங்கள்.

சேக்தாவூத் அண்ணன் ஒருநிமிடத்தை தமிழில் முதலில் கடந்து பரிசு பெற்றார். நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க,கடைசியாகப் பங்குபெற்ற எனக்கும் பரிசு கிடைத்தது.

மன்ஃபுவா மாறன் குழுவினரின் நகைச்சுவை நாடகம், மக்களை சிரிக்கவைக்கும் தன்நோக்கில் வெற்றிபெற்றது. ஒருசில நடன அசைவுகளை (மட்டும்) தவிர்த்திருந்திருக்கலாம் என்பது என்கருத்து.

தனித்திறன் போட்டியில் சிரிப்பொன்றை சொல்ல வந்தவர் பார்வையாளர் அனைவரையும் தன் சரளமான சேலத்துப் பேச்சால் வீழ்த்தினார். அவர் பெயர் முகமது அலி.

சிறுவர் சிறுமியரின் தனித்திறன்களாக நாட்டியமும், பாடலும் மிகவும் வியக்கவைத்தன. எத்தனை எத்தனை திறமைசாலிகள். குறிப்பாக, அன்பே என் அன்பே பாடியவனின் தாம்தூம்.


நண்பர் சீ.ந இராசாவின் இயக்கத்தில், அழகப்பனின் சிறப்பான நடிப்பில் 'தமிழா, தமிழா' நாட்டிய நாடகம் அருமையாக இருந்தது. "இந்தியர்கள் நல்லவர்கள்;நம்பிக்கைக்குரியவர்கள் சிறந்த உழைப்பாளிகள்" என்ற கருத்தை வலியுறுத்தியது. சிறுமிகளின் நடனமும், தேர்ந்தெடுத்த பாடல்களும் முதல்தரம்.இயக்குநர் நண்பர் சீ.ந.இராசாவை வாழ்த்தியாக வேண்டும். இராசா சொன்னது: "இந்த நாடகத்தின் அருமையான வெற்றிக்கு திருமதி.இரம்யா காமராஜ் அவர்களின் பின்னணி உழைப்பு(ம்) காரணம்". வாழ்த்துகள் சகோதரி.

புலவர் அரங்கராசன் அவர்களுக்கு சிறப்புச் செய்யப்பட்டது. அவர்தம் பேச்சுக்கும் சற்று அதிகநேரம் முன்னதாகக் கொடுத்திருக்கலாமே என்று எனக்குத் தோன்றியது.

உழைக்கும் வர்க்க (Blue Collar Workers)நண்பர்களை விழாவுக்கு அழைத்து மகிழ்வித்து, நிலாச்சோறு நிகழ்ச்சியில் பங்கெடுக்க வைத்தது; நிகழ்ச்சிக்கென்று எந்தத் தொகையும், கட்டணமும் யாரிடமும் கோராமல், நண்பர்களும், புரவலர்களுமாகச் செலவினைப் பங்கிட்டுக்கொண்டது; மரம் நடுதல், ஆதரவற்ற சிறார்களுக்கு ஆடை அனுப்பிவைத்தல், தொடர்ந்து, உழைக்கும் வர்க்க நண்பர்களை உயர்வு செய்வது என்று வசெந்தம் குழுவினரின் மனிதநேயப் பணிகள் மனமாரப் பாராட்டத்தக்கவை. வாழ்க, வளர்க.

தன்னலப் பெருக்கோ, தான்மைச் செருக்கோ இடம்பெறாத அழகிய விழாவொன்றில் கலந்தும்,களித்தும் இனிய மனநிலையுடன் இல்லம் திரும்பினேன் என்று முடிக்குமுன்

எனை ஈர்த்த ஒரு சிறு குழந்தையை,அதன் மழலையை தமிழாய் வார்த்தேன் மனதுக்குள்

பிஞ்சுமலர்ப் பார்வையினை; பிள்ளைக் கனியமுதை
கொஞ்சிடத் தோன்றுதே கோமகளே - நெஞ்சிலே
எஞ்சிடும் ஞாபகத்தில் எம்ம(க்)கள் எண்ணிட
விஞ்சிடும் பாசம் விளைந்து!

8 comments:

அன்புடன் மலிக்கா said...

அழாகாய் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்..

/பிஞ்சுமலர்ப் பார்வையினை; பிள்ளைக் கனியமுதை
கொஞ்சிடத் தோன்றுதே கோமகளே - நெஞ்சிலே
எஞ்சிடும் நினைவினில் எம்ம(க்)கள் எண்ணிட
விஞ்சிடும் பாசம் விளைந்து//

மிக அருமை அருமை.. வாழ்த்துக்கள்.

தாங்களுக்கும் வசெந்தத்துக்கும்.

இப்னு ஹம்துன் said...

மலிக்கா அக்கா,
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

நீங்களும் வெண்பா எழுதுவீங்களா?

ஷாஜி said...

நல்ல பார்வை..நன்றி ஃபகுருதீன் இதைப்
பற்றி உங்களை எழுத சொல்லலாமே
என்று நினைத்திருக்கையில் எழுதியே
விட்டீர்கள்.

நிகழ்ச்சி குறித்தான திட்டமிடலுக்கும் அதைச் செம்மையாக செய்து முடித்த பாங்கும் உண்மையிலேயே பாராட்டுக்குரியன.. ஒத்தகககருத்துடையோர்
ஓரணியில் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்..

வந்திருந்த விளிம்பு நிலை ஊழியர்கள்
நிகழ்ச்சியை ஆனந்தமாக கண்டுகளித்ததைப் பார்க்க இது போன்ற
நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்க ஆவண
செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்ளத்
தோன்றியது.

அன்பே என் அன்பே பாடிய சிறுவன் நல்ல
பயிற்சி.. முயன்றால் ஊரில் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கர் போன்றவற்றில் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது...

பலானது பாடலுக்கு ஆடிய சிறுவனும், அந்த நாடகத்துக்கு ஆடிய சிறுமிகளும்
நன்றாக செய்திருந்தார்கள் - ஜூனியர்
சீ.ந.ராசா உட்பட.. கானா உலகநாதன்
மன்னிக்க காமராசும் கூட..


நொண்டி விளையாட்டை எல்லாம் சிறுவர் சிறுமியர்க்கு வைத்து விட்டு இன்னும் கொஞ்சம் வீர விளையாட்டை ?!
அதிகப்படுத்தலாம் :-)

தமிழா என் தமிழா நாடகம் குறித்து
நிறைய எழுத ஆசை. நாடகத்தின் நெறியாள்கையாளர் ராசாவை கொண்டாடத்
தோன்றுகிறது. ஒரு கலை ரசிகன் என்ற
முறையில் அந்நாடகம் பற்றி நிறைய
எழுத வேண்டும். நடித்திருந்த நண்பர்
மிகையின்றி வந்து போனார். ஒரிரு இடங்களில் கண் கலங்கிப் போனேன். நிறைசூலி மனைவி நிர்க்கதியில் வேலை
என்ற சூழலில் நானும் இருந்திருக்கிறேன்.
ஒன்றிப் போக முடிந்ததற்கு இதுவும் ஒரு
காரணம். அந்த வேலையும் நிற்கவில்லை
அந்த பிள்ளையும் நிலைக்கவில்லை என்பது வேறு விஷயம் :-(

என் இனிய நண்பர் கேவியாரின் நிகழ்ச்சி
சிறக்காமல் செய்த மழைக்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிரிப்பு பற்றிய கருத்து கேட்டதற்கு பதில்
ஆளாளுக்கு படித்த / கேட்ட துணுக்குககளை பகிர்ந்து கொள்ள
சொல்லியிருக்கலாமோ நண்பா.. ( நானே அள்ளிவிட்டிருப்பேன் நிறைய)

அன்பு வசெந்தம் குழுவினர்க்கு,

நண்பர் ஃபகுருதீன் எழுதியிருப்பது போல்
தன்னலப் பெருக்கோ, தான்மைச் செருக்கோ இடம்பெறாத அழகிய விழாவொன்றில் கலந்தும்,களித்தும் இனிய மனநிலையுடன்
இந்த விழாவில் நானும் கலந்து கொண்டதை மகிழ்கிறேன். மடல் அழைப்பு
மட்டுமல்லாது தனி அழைப்பிலும் பெருமைப் படுத்திய உங்கள் அன்புக்கு
நன்றி.

பனித்துளி சங்கர் said...

மிகவும் அருமை . நேர்த்தியான எழுத்து நடை .
தொடருங்கள்

இப்னு ஹம்துன் said...

நன்றி நண்பர் ஷாஜி.

நீண்ட கருத்தில் நிறைய செய்திகள் சொல்லியிருக்கிறீர்கள். பயனுடையவை.

இப்னு ஹம்துன் said...

நன்றி பனித்துளி சங்கர்.
முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி. தொடர்ந்து வருக நண்பரே.

அன்புடன் மலிக்கா said...

வெண்பாக்கள் இதுவரை எழுதியதில்லை. இனிதன் முயற்சி செய்யனும்.

நீங்க நேரம்கிடைக்கும்போது மற்றபிளாக்குகளுக்கு விசிட் அடிங்க
அங்க உங்க லிங்கைகொடுத்து வரச்சொல்லுங்க அப்பப்ப அப்படிசெய்தால் நிறைய பேர் வந்து வாசித்துப்போக ஏதுவாக இருக்கும்.

இதேபோல்.
நேரம்கிடைக்கும்போது இதையும் பாருங்கள்.

http://fmalikka.blogspot.com/2010/04/9.html

இப்னு ஹம்துன் said...

மீள்வருகைக்கு நன்றி மலிக்கா அக்கா.

விரைவில் நீங்கள் வெண்பா எழுத வாழ்த்துகள்.

எப்போதேனும் நேரம் வாய்க்கும்போதுதான் இணைய உலா வருகிறேன். உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி. இனியேனும் நிறைய எழுதணும், இன்ஷா அல்லாஹ்.