Sunday, March 21, 2010

மனிதமே புனிதம்!

( ஐந்தாறு வருடங்களாக வலைப்பதிவிட்டு வந்தாலும், ஏனோ அத்தனை ஆர்வங்காட்டுவதில்லை நான்.
குழுமங்களில் எழுதுவதையாவது வலையில் பதிவிட்டுவைக்கலாமே என்று இன்று ஒரு நண்பர் அன்புக்கோரிக்கை வைக்க அதனடிப்படையில் ஜனவரி 26ல் குழுமங்களில் எழுதிய மனிதமே புனிதம்!' என்கிற கட்டுரையை பதிகிறேன். படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள்- நன்றி)

மனிதமே புனிதம்

இறைமையை; அதன் நற்பண்புகளை பிரதிநிதித்துவம் செய்கின்ற மனிதமே புனிதம் என்கிற மகத்தான நற்செய்தியை ஓங்கி ஒலிக்கச் செய்வதாகவும்.....

ஒவ்வொருவரும் தத்தம் தனித்திறனைக் கண்டறிந்து மானுடத்திற்குச் சேவையாற்றுவதில் தான் அவரவர் வாழ்வின் பொருளும் வெற்றியும் அடங்கியிருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துவதாகவும்......

இன்னும் சொல்வதென்றால்...

எண்ணமே செயலுக்கு அடிப்படை....

ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள்; அவரவர் பொறுப்புகள் குறித்து விசாரிக்கப்படுவீர்கள் என்ற நபிமொழிகளுக்கும்,

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய(து) உயர்வு.
என்ற திருக்குறளுக்கும் விளக்க உரையாகவும் அமைந்திருந்தது அந்த இனிய நிகழ்ச்சி.

ஆம். சகோ.கஸ்ஸாலி அவர்கள் (ZEE TEE Express) ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் தன்னைத்தானே அறிந்துகொள்ளத் தக்க விதத்தில் இனியதொரு உரையை, அல்ல, அல்ல, ஒரு அழகிய கலந்துரையாடலை நிகழ்த்தினார் சகோ.சாதத்துல்லாஹ் கான்.
Islamic Voice என்கிற, பெங்களூரூவிலிருந்து வெளிவரும் ஆங்கிலமாத இதழின் ஆசிரியர்.

“நாம் அனைவரும் திருத்தத்தான் நினைக்கிறோம்; நம்மைத் தவிர”

என்பதை மிக அழகாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிய இந்தப் பேராசிரியர், “உண்மையில் ஒவ்வொருவரும் தம்மைத்தாமே திருத்திக்கொள்வதே இவ்வுலகம் பிரசினைகளிலிருந்து விடுபட வழி என்பதை இயல்பான கருத்துகளால் சுட்டினார். தீதும் நன்றும் பிறர் தர வாரா.

பொதுவாக மனிதன், ஒட்டுமொத்தஅறிவில் 1% மட்டுமே பெற்றிருக்கிறான். அதை அறிந்தும் இருக்கிறான். அதுபோல, சில வகை அறிவு பற்றி தான் அறிந்திருக்கவில்லை என்பதையும் அவன் அறிந்திருக்கிறான். இது 3% வரை இருக்கும்.

மீதமுள்ள 96% அறிவு பற்றி எந்த மனிதனும் அறிந்திருக்கவில்லை என்பதை விட, அதை தான் அறிந்திருக்கவில்லை என்று கூட அவன் அறிந்திருக்கவில்லை என்பதைத் தெளிவாக்கினார்.


அறிந்திருப்பதும் அதை அறிந்திருப்பதும் 1% என்றால், (அறிவு பற்றிய அறிவு)
(தன்) அறியாமையையை அறிந்திருப்பது 3% (அறியாமை பற்றிய அறிவு)

அறியாமலிருப்பதை அறியாமலிருப்பதுவே மீதமுள்ள 96% எனலாம். (அறியாமை பற்றிய அறியாமை)
இது அனைத்து மனிதருக்கும் பொருந்துவதே.

இந்த 96% ,எதுவென்றே அறியாத அறியாமையே ‘இருட்டான அறியாமை’ எனப்படுகிறது. ‘Blind Spot' என்றார் பேராசிரியர். தன்னிடமிருக்கும் இந்த ‘இருட்டான அறியாமை’யை எந்த மனிதனும் காண முடிவதில்லை. கண்டுவிட்டால் அது ‘அறியப்பட்ட அறியாமை’ ஆகிவிடும் , (அந்த 3% ல் சேர்ந்துவிடும்).

இதன் பொருள், அறியாமையின் அறியாமை எனப்படும் இந்த இருட்டான அறியாமைக்கு ஒரு உதாரணம் கூட சொல்லிவிட முடியாது. தெரிந்தால் தானே!

எனவே, நாம் இயன்ற வழிகளிலெல்லாம் நம் அறிவைப் பெருக்கிக்கொள்வது அத்யாவசியம். Knowledge is Power.

இந்த Blind Spot எனப்படுகிற நம் அறியாமையின் இருட்டுப் பக்கங்களை, நம்மால் காண முடியாவிட்டாலும், மனைவி உட்பட நம் மேலதிகாரிகளே (உரிமையாளர்கள்?) எளிதாகக் கண்டுகொள்வர் என்பதையும் பேராசிரியர் நகைச்சுவையாக விளக்கினார்: "நீ(ங்க) ஒண்ணத்துக்கும் லாயக்கில்லே" :-)))

மன்னர் மகனாக இருந்தாலும், மண்குடிசை மைந்தனானாலும், மனித சாதனைகளின் மூலங்களான, எண்ணம் (Thought), சொல்(Word), செயல்(Action) ஆகியவற்றை இறைவன் பாரபட்சமின்றி (அனைத்து மனிதருக்கும்)ஒன்றுபோலவே வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்ட பேராசிரியர், அதை வளர்த்தெடுக்கும் விதத்தில் தான் மனிதர்கள் வேறுபட்டுப்போய் விடுகிறார்கள் என்றார்.

ஜாதி, இனம், மதம், மொழி போன்ற எல்லா வேறுபாடுகளையும் கடந்து, சகமனிதனை, மனிதத்திற்காகவே நேசிக்க வேண்டும்
அப்படி மனிதர்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கத் தொடங்கிவிட்டால்........ வெறுப்பு காணாமல் போய்விடும். எங்கே வெறுப்பு இல்லையோ... அதனால் ஏற்படும் பிரசினைகளும் இல்லாமலாகி விடும்.

சகமனிதருக்கு பாராமுகம் காட்டுபவர் செய்கின்ற இறைவணக்கத்தை இறைவன் விரும்புவதில்லை என்றார் பேராசிரியர். "பக்கத்துவீட்டான் வறுமையில் வாடிக்கொண்டிருக்கையில் நீ பத்து ஹஜ்ஜு செஞ்சு என்ன பிரயோசனம்?"

"அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் உண்ணுபவர் இறைநம்பிக்கையாளராக இருக்க முடியாது" என்ற நபிமொழி என் நினைவுக்கு வந்தது.

மேலும் பேராசிரியர் கூறுகையில், கணக்கு வழக்குகள் துல்லியமாகத் தீர்க்கப்படும் அந்த நாளில், மனிதனிடம் இறைவனே இப்படி கேட்பானாம்:

" நான் பசியோடு இருந்தேனே, உனக்கு வசதியினை நான் அளித்திருந்தும் நீ எனக்கு உணவளிக்கவில்லையே?"

இறையடியானாகிய அந்த மனிதன் பதற்றத்தோடு, "இறைவா, நீயே சர்வ வல்லமை படைத்தவன், உனக்கு எப்படி பசி ஏற்பட முடியும்?" என்று வினவ,
அதற்கு இறைவன், "இன்ன மனிதனை இன்ன இடத்தில் நீ பசியோடு இருக்கக் கண்டிருந்தும் உணவளிக்காமல் போனாயே.... அவனுக்கு உணவிட்டிருந்தால்.. அங்கு என்னை நீ கண்டிருப்பாய்" என்ற பதிலளிப்பானாம்.

மேலும் அவர் நபிவழிக் கிரந்தங்களிலிருந்து மேற்கோள் காட்டுகையில் " வேசியொருத்தி வாயில்லாப் பிராணியான ஒரு நாய்க்கு தாகம் தணித்த இரக்கச்செயலால் இறைவனின் கருணைப்பார்வைக்கு ஆளானாள்" என்பதைக் குறிப்பிட்டார்.

மிருகங்களைக் கூட உணவுக்காக அன்றி கொல்லக்கூடாது என்ற பேராசிரியர், அதுவும் இறைவனின் படைப்பு என்ற உணர்வை நாம் மறந்து விடக்கூடாது என்றார்.

ஒரு உண்மையான இறையடியானால் சக மனிதர்களை எப்படி வெறுக்க முடியும்?. எர்ன்று கேள்வி எழுப்பிய பேராசிரியர், அப்படி வெறுத்தால் அது இறைவனின் படைப்பொன்றை அவமதித்த குற்றமாகும் என்று தெளிவுறுத்தினார்.


உண்மையில் வெறுப்பு, ஆணவம், கோபம், சுயநலம் போன்றவை சாத்தானிய இயல்புகள். இறைவனின் பிரதிநிதியாகத் தனனைக் கருதும் மனிதன், இவற்றைக் கைவிட்டுவிட்டு இறைமை வலியுறுத்தும் அன்பு, நேசம், உண்மை, பணிவு, பொதுநலநோக்கு, நல்லெண்ணம் போன்றவற்றையே மேற்கொள்ளவேண்டும்.

மனிதன் மேம்படுவதும், சீரழிவதும் தன் எண்ணங்களாலேயே என்பதை அழகாக விளக்கினார்.
எண்ணத்தூய்மையை வலியுறுத்திய அவர் பேச்சில் " இறைவன் உங்கள் புறத்தோற்றங்களைப் பார்ப்பதில்லை; உங்கள் உள்ளத்தையே பார்க்கிறான்" என்பது அழகாக வெளிப்பட்டது.

எடுத்தவுடனேயே, "என்னால ஆகாது", "இது சரிப்பட்டு வராது" "இதெல்லாம் சாத்தியமேயில்லை" என்று எதிர்மறை எண்ணங்களை மொழிவீர்களேயானால், உங்களுக்கு நீங்களே சிறைப்பட்டு விட்டீர்கள் என்று அர்த்தம் என்றார்.
உண்மைதான், சொந்தச்சிறைகளில் தானே பெரும்பாலான மக்கள் 'அக'ப்பட்டுக் கிடக்கிறார்கள்.

தேர்ந்தெடுக்கும் உரிமை (Choice) இறைவன் மனிதனுக்கு அளித்த மற்றொரு வரம்.
நாம் நன்மையை விட்டுவிட்டு தீமையை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்,

மொழிவது கூட உள்ளத்தில் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ பாதிப்பை ஏற்படுத்த வல்லது.
எனவே,
பேசினால், நல்லதையே பேசுங்கள்.
ஆம், மொழியும் விதத்தில் தான் எத்தனை விளைவுகள்.
"அன்பினால் சிங்கத்தின் மீசையைக் கூட பிடுங்கலாம்" என்கிறது ஒரு முதுமொழி.

தமிழில் கூட அழகாகச் சொல்வார்கள்: "எண்ணம் போல் வாழ்வு" என்று.

அலுவலகமானாலும், இல்லறமானாலும், முதல் சில மாதங்களில் காணப்படுகிற மகிழ்ச்சியும் நிம்மதியும் போகப்போக குறைந்துவருவதன் காரணத்தைச் சிந்திக்கத் தூண்டிய பேராசிரியர்,

நோக்கத்திலிருந்து நழுவி சுயநலத்தில் வீழ்தலே அதற்குக் காரணம் என்பதை அழகுற, காட்டுகளுடன் எடுத்தியம்பினார்.

அலுவலகம்/நிறுவனம் என்றால்... முதலில் நிறுவன நலன்களை முதன்மைப்படுத்தி உழைக்கிற நாம், படிப்படியாக... தாழ்ந்து... தன்னலமே பிரதானம் என்று ஆவதே.. அந்த மகிழ்ச்சிக்குப் பதிலாக மன அழுத்தத்தினை உண்டாக்குகிறது என்றார்.

"பிறருக்கு நீங்கள் அளிக்கும் எதிர்மறை பதில்கள், உங்களுக்கு நீங்களே அளித்துக்கொள்வதாகவே பொருள்" . விதைப்பதுவே அறுக்கப்படும்.

அதே போல, இல்லறம் என்று வருகையில்... கல்யாணத் தொடக்கத்தில் காணப்படும் அன்பு மெல்ல, மெல்ல மங்கி ஒளியிழந்து.. ஒருவருக்கொருவர் குறைகள் காணத் தொடங்கிவிட்டால்... அங்கே,
தான்மை மேலோங்கிவிடுகிறது. விளைவு, நிம்மதியிழப்பும் கவலையும் தான் என்றார்.


தயக்கத்தை உடைப்போம்; மனித மனம் இயல்பாகவே எதிர்ப்பு (Resist) காட்டக்கூடியதாகவே இருக்கிறது.
எந்த நல்ல காரியத்திற்கும் "அதெல்லாம் வேணாம்ப்பா" என்பவர்களே அதிகம்.

தயங்காமல், களம் காணுவோம். நமது தனித்திறனைக் கண்டறிவோம். இந்த உலகம் நமக்கானது. இறைவனால் தன்னாட்சி உரிமையும், தேர்ந்தெடுக்கும் உரிமையும் வழங்கப்பட்டு இந்த உலகத்திற்கு நாம் வந்தது வெறும் பார்வையாளராக இருந்துவிட்டுச் சென்றுவிடுவதற்கா? .

நானும், நீங்களும் இந்த உலகத்தின் பங்களிப்பாளர்களுள் ஒருவர். நாம் பங்களிக்கும் இந்த உலகம், இனிய உலகமாகத் திகழ வேண்டாமா?


நிகழ்ச்சிக்கு வந்து, பயன் பெற்றவர்களில் பாராட்டாதவர்கள் யாருமே இல்லை.


மனிதம் மதிப்போம் அதுவே புனிதம் ஆகும்.

எண்ணத்தில் நல்லதைப் பேணுவோம் - அதுவே மொழியாகிறது.
மொழியில் நல்லதைப் பேணுவோம் - அதுவே செயலாகிறது.
செயலில் நல்லதைப் பேணுவோம் - அதுவே வாழ்க்கையாகிறது.

ஆம். நமது வாழ்க்கை நமது கையில்.

வாழ்த்துகளும் நன்றியும்.

11 comments:

mohamedali jinnah said...

தொடர்ந்து எழுதுங்கள் அன்புடன்
எனது வாழ்துக்கள்

NIDUR SEASONS said...

தொடர்ந்து எழுதுங்கள் அன்புடன்
எனது வாழ்துக்கள் உங்கள் வலை உங்கலுக்கு உங்கள் வீடு அதில் தொடர்ந்து எழுதுங்கள்

kaja nazimudeen said...

"மனிதமே புனிதம் ஆகும்" - மிக நல்லதொரு கட்டுரை.
தொடரட்டும் உங்களது பணி.

Unknown said...

//ஒரு உண்மையான இறையடியானால் சக மனிதர்களை எப்படி வெறுக்க முடியும்?... ... ... அப்படி வெறுத்தால் அது இறைவனின் படைப்பொன்றை அவமதித்த குற்றமாகும்//
அருமையான வாழ்வியல் கல்வி. தொடர்ந்து எழுதுங்கள் இப்னு ஹம்துன்

கபீஷ் said...

ரொம்ப நல்லாருக்குங்க.

//"அன்பினால் சிங்கத்தின் மீசையைக் கூட பிடுங்கலாம்"
// சூப்பர்

Highly inspiring.

அன்புடன் மலிக்கா said...

/தேர்ந்தெடுக்கும் உரிமை (Choice) இறைவன் மனிதனுக்கு அளித்த மற்றொரு வரம்.
நாம் நன்மையை விட்டுவிட்டு தீமையை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்//

சரியான கேள்வி.
இறைவனை மறந்து மரணத்தை நினைக்கத்தவரும்போது மனிதன் மனிதத்தை இழக்கிறான்..

நல்லதொரு பதிவு தொடர்ந்து எழுதுங்கள்.

நேரம்கிடைக்கும்போது இதையும் பாருங்கள்

http://fmalikka.blogspot.com/2010/03/8.html

இப்னு ஹம்துன் said...

@நீடூர் அலி அண்ணன் (நீடூர் சீசன்ஸ்),

உங்களின் இரு மறுமொழிகளுக்கும் நன்றி. இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வலைப்பதிய முயற்சி செய்கிறேன்.

இப்னு ஹம்துன் said...

Nazim நானா,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மகிழ்ச்சி.

தொடர்ந்து வருகை தாருங்கள்.

இப்னு ஹம்துன் said...

சுல்தான்ஜீ,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இன்ஷா அல்லாஹ், தொடர்ந்து வலைப்பதிய முயற்சி செய்கிறேன்.

இப்னு ஹம்துன் said...

கபீஷ்,

முதன்முறை வருகைக்கும் சிறப்பான கருத்துக்கும் நன்றி.

தொடர்ந்து வருக.

இப்னு ஹம்துன் said...

மலிக்கா அக்கா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஒழுக்கம் பற்றிய உங்கள் பதிவும் அருமை.

தொடர்ந்து வருக