Tuesday, April 14, 2009

பொதுவாய் இருக்கும் பரந்த வானம்




கவியரங்கக் கவிதை

நாள்: சித்திரை முதல்நாள் விரோதி ஆண்டு.
அவை: எழுத்துக்கூட கவியரங்கம்
தலைப்பு: 'மனிதம்'


கடவுள் வாழ்த்து
(நிலை மண்டில ஆசிரியப்பா)

தேவ குணமும் மிருக குணமும்
சேர்த்து செய்த மனித இனத்தை
பாவ புண்ணிய கரைகள் நடுவே
பாரில் வாழ வைத்தனை இறைவா!
ஆவல் தூண்டும் பாவம் நீக்கி
அறிவே மிகைக்கும் ஞானம் நோக்கி
வாழும் காலம் யாவும் எங்கள்
வெற்றியின் உறுதி வழங்கிடு வாயே!

அவை வாழ்த்து (அறுசீர் விருத்தம்)

எழுத்துக் கூடம் அற்புதமே
எங்கள் தாகம் தணிப்பதிலே!
பழுத்த அறிஞர் பெரியோரும்
பன்மைத் திறனில் மற்றவரும்
அழுத்தி முத்திரைப் பதிக்கின்றார்
அதனைப் பார்த்து வியக்கின்றேன்
கழுத்தின் அணியாய் தமிழுக்கே
கண்டேன் அவையை; போற்றுகின்றேன்.

தலைவர் வாழ்த்து (அறுசீர் விருத்தம்)
இளைஞர் என்று சொல்லாதீர்
இவரோ இங்கே மூதறிஞர். (ராஜா ஜி :-) )
விளையும் தமிழும் நற்பயிராய்
விதைகள் தூவும் உழவரிவர்
தலைமைக் கவிஞர் வரிசையிலே
தகுதி மிக்க தமிழ்வாணர்.
விலையே இல்லா நற்பண்பில்
உயர்ந்து நிற்கும் என்நண்பர்.

"அலைந்து திரியும் காலமய்யா
அதனால் பின்னர் எழுதுகின்றேன்"
நிலையைச் சொன்ன பின்னாலும்
நீதான் முதலில் எழுதென்றார்.
வலையில் இழுத்துப் போட்டாரே
வந்தேன் நானும் உங்களிடம்!
இலையில் உணவாய் என்கவிதை
எடுத்துச் சுவைத்துச் சொல்வீரே!

முதன்மைக் கவிதை (எண்சீர் விருத்தம் (அ) 'என்'சீர் விருத்தம்)

இவ்வூரில் இவ்விடத்தில் இன்னார் பிள்ளை
....எனவிரும்பி பிறக்கத்தான் யாரால் ஏலும்
"1எவ்வூரும் எமதூரே" தமிழன் சொன்னான்
....யாவரையும் கேளிர்தான் என்று கொண்டான்
அவ்வாறே அறிந்திருந்தும் ஆசை உந்த
....அரசியலின் அவலத்தில் வீழும் மாந்தர்
வெவ்வேறு காரணத்தை கற்பிக் கின்றார்
....வேறுபாட்டில் ஆதாயம் தேடு கின்றார்.

2ஒன்றலவோ குலமென்றான் ஓதி வைத்தான்
....ஒருவன்தான் தேவனென்
ற உண்மை சொன்னான்
*நன்றிதனை கொள்கின்ற நெஞ்சம் தன்னில்
....நன்னலமே அனைவருக்காய் நாட்டங் கொள்ளும்.
தென்றலென வாழ்வாகும் உலகம் பூக்கும்
....தீந்தமிழும் இன்பந்தான் தீண்டத் தீண்ட!
என்றுவரும் பொற்காலம் இனியும் மீண்டும்?
....எங்குலமும் உங்குலமும் ஒன்றிப் போமோ?

மொழியென்ன மதமென்ன மனிதம் பார்க்க
....முன்வந்(து) உதவுகின்ற மனமே வேண்டும்.
விழிநீரை பிறருக்காய் வடிக்கும் போதில்
....உள்ளத்தின் அழுக்குகளும் கரைந்து போகும்
இழிவென்று மற்றவரை எண்ண வேண்டா
....இல்லாத நற்குணத்தை கற்கப் பார்ப்போம்
வழியெங்கும் பாடங்கள்; வாழ்க்கைப் பள்ளி
....வகைவகையாய் ஆசிரியர் வானின் கீழே!

நிழல்போலும் மனிதருண்டே;இரவில் நீங்கல்
.....நிறம்மாறும் பச்சோந்தி; நச்சுப் பாம்பு
பழிகாணும் குணமிருப்பின் பாசம் எங்கே?
.....பண்பாட்டைப் புதைக்கின்றார் பாத கத்தார்.
விழல்போல சிலரிருப்பார் விரயம் நீரே
....விலங்குகளை ஒத்திருப்பார் மனிதர் தாமா?
சுழலொன்றில் சிக்கிவிட்ட சிலரும் உண்டு.
....சிந்தையிலே மண்மூடி சிதைகின் றாரே!

தன்னுயர்வை கொள்ளத்தான் பிறரை ஏய்க்கும்
....தரங்கெட்ட போக்குகளில் தனியன் அன்றி
மன்னுயிரைக் கொல்கின்ற மதத்தின் வாதம்
....மானத்தைக் குலைக்கின்ற மூர்க்கர் தம்மில்
என்னினமே பெரிதென்னும் இழிந்த உள்ளம்
....இவர்க்கிங்கே சளைக்காமல் இன்னோர் பக்கம்
தன்னினமே அழிந்தாலும் தயக்கம் இன்றி
....தன்னலனை; பதவியினைத் தாங்கும் போக்கு!


கண்பார்க்க முடியலையே கொடுமை ஐயோ
....காதுக்கும் சேதிவர கதறும் உள்ளம்
மண்மீதில் எளியவரை வதைக்கும் தீயோர்
....மனதுக்குள் எழுதட்டும் இறையின் நீதி
கண்ணீரும் புரட்டிவிடும் காலக் கோளை
....கீழதுவும் மேல்வருமே கறங்கின் சுற்றில்.
விண்ணுக்கும் எட்டிவிடும் வேத னைமூச்சும்
.....ஒருநாளில் புயலாகும்; உலகை மாற்றும்.

உழவுக்கும் அழிவுக்கும் உங்கள் கைகள்
....உள்ளபடி 3பிறர்தரவோ தீதும் நன்றும்?
மழையாக அன்பதுவும் மனதில் பெய்ய
....மனிதத்தின் பயிர்வளரும் மணமும் வீசும்
அழகான உலகத்தில் வாழ வேண்டின்
....அதற்கேனும் மனிதத்தை பேண வேண்டும்
தொழும்நேரம் இறைவனையே கேட்டு நிற்போம்
....தொலையாமல் மனிதத்தை காக்க வேண்டும்.

000000000000000000000OOO0000000000000000000000


பி.கு:
1. யாதும் ஊரே யாவரும் கேளிர்
2. ஒன்றே குலம்; ஒருவனே தேவன்
3. தீதும் நன்றும் பிறர்தர வாரா
* நன்றிதனை = நன்று இதனை (அ) நன்றி தனை


(கவியரங்கத் தலைவர் ராஜா இந்தத் தலைப்பைத் தந்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. இந்தக் கவிதை எழுதி முடித்த இந்நேரம் ஊமையின் கண்ணீராய் ஓர் ஆறுதல் உள்ளே வடிகிறது)

8 comments:

ராமலக்ஷ்மி said...

//
மொழியென்ன மதமென்ன மனிதம் பார்க்க
....முன்வந்(து) உதவுகின்ற மனமே வேண்டும்.
விழிநீரை பிறருக்காய் வடிக்கும் போதில்
....உள்ளத்தின் அழுக்குகளும் உதிர்ந்து போகும்
இழிவென்று மற்றவரை எண்ண வேண்டா
....இல்லாத நற்குணத்தை கற்கப் பார்ப்போம்
வழியெங்கும் பாடங்கள்; வாழ்க்கைப் பள்ளி
....வகைவகையாய் ஆசிரியர் வானின் கீழே!//

நல்ல வரிகளுக்கு நன்றி. கவிதை அருமை இப்னு.

அகமது சுபைர் said...

கலக்குறீங்க...

வாழ்த்துகள்..

இப்னு ஹம்துன் said...

வருகைக்கும் பாராட்டுக்கருத்துக்கும் நன்றி சகோதரி ராமலக்ஷ்மி.

இப்னு ஹம்துன் said...

வாழ்த்துகளுக்கு நன்றி சுபைர்.

(எப்பவாச்சும் நம்மளப் பார்க்கவும் வர்றீங்க போல..:-)))

ஹேமா said...

இல்லாத அல்லது மறைந்த அல்லது மறந்த ஒன்றைத் தேடுகிறோம் கண்டுவிடுவோம் என்கிற நம்பிக்கையோடு.

என் நினைவில் ஒரு ஏழையின் வீட்டில் அல்லது ஒரு ஏழையின் வார்த்தையில் மனிதம் வாழ்வதாக.சரியாய் இருக்குமா ?

இப்னு ஹம்துன் said...

வாங்க ஹேமா!

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நீங்கள் சொல்வதை சற்றே திருத்திச் சொல்வதென்றால் மனிதம் என்ற உணர்வை வாழச் செய்பவர்கள் ஏழையாகவோ, அல்லது பிழை(இழை)க்கத் தெரியாதவன் என்ற பட்டத்துக்குரியவர்களாகவோ தான் இருக்கிறார்கள்.

வினோத் கெளதம் said...

சார்,

கவிதை அருமை.
உங்களக்கு நேரம் கிடைக்கும் பட்சத்தில்..
இந்த ப்ளாக் வந்து பாருங்கள்..
http://vinothgowtham.blogspot.com

இப்னு ஹம்துன் said...

முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கெளதம்.

தொடர்ந்து வருக.