எண்ணங்களின் பயணத்தில்..........
போவதும் வருவதும்
பொதுவாய் மரபு
ஆவதும் அழிவதும்
அன்றாட இயல்பு.
எண்ணங்களின் பயணத்தில்
இயங்குகின்ற மனது.
வண்ண வண்ண கனவுகளே
வாழ்க்கைக்கு விருந்து.
ஆசையில் வருவதெல்லாம்
அடுத்தவர் 'இடம்' தான்
ஓசையறும் சிந்தனையில்
உலகமும் மடம் தான்.
பிறப்பதும், பின்னொரு நாள்
இறப்பதும்; இடையிலே
சிறப்புகள் தேடித்தேடி
செல்வதுவும் பயணந்தான்.
எல்லாப் பக்கத்திலும்
இருக்கலாம் பாதைகள்
வல்லோன் வகுத்தாற்போல்
வாய்ப்பதுவே வழிப்பாதை.
வாய்த்ததொரு வாகனத்தில்
வழியெங்கும் கோரிக்கை
வாட்டமின்றி சென்றாலே
வாழ்க்கை கேளிக்கை.
கயிறுகளாய் பாசபந்தம்;
கட்டப்பட்ட கைகால்கள்.
வயிறுக்காய் நகர்ந்தாலும்
வாழ்நாள்கள் உயிர்பூக்கும்.
'நிலை'யில்லாக் காலம் தான்
நதியாகப் பாய்ந்து வரும்
விலையில்லா நேரத்தை
விதியென்று தள்ளாதீர்.
தாகத்தை அதிகரிக்கும்
தண்ணீரும் இதுவே தான்
ஏகதேச அறிவுரையோ
'எல்லாம் கடந்து போகும்'.
காற்றெங்கும் இறக்கைகள்
கைகளாய் பரிணமிக்கும்
ஆற்றலுள்ள மனிதருக்கு
அனைத்துமே பக்கந்தான்.
நன்றி: விகடன் - இளமைக் கச்சேரி
(தொடர்ந்து வலைப்பதிவில் இயங்க அன்புடன் கோரும் நண்பர் ரிஷானுக்கு(ம்) சிறப்பு நன்றி)
12 comments:
வாழ்த்துகள்
நண்பரே
விகடனில் வெளிவந்த அன்றே வாசித்தேன் இப்னு.
அருமை.
ஆரம்பம் முதல் கடைசி வரை அத்தனை வரிகளிலும் அடங்கியிருக்கிறது வாழ்க்கைக்கான தத்துவம்.
’எழுத்தோவியங்கள்’-இல் மட்டுமின்றி உங்கள் ‘எண்ணங்களின் பயணங்கள்..’ தொடரட்டும் இணைய இதழ்களிலும்.
//அட, ரிஷானு... நல்லா இருடே!//
ரிஷான், இது நான் சொன்னதல்ல:))! இப்னு என் பதிவில் சொன்னது:)! இதையே வழி மொழிகிறேன் இப்படி:
அட ரிஷான்... நன்றாக இருங்கள்:)!
நண்பர் திகழ்மிளிர்,
சகோதரி ராமலக்ஷ்மி,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்
அன்பின் நண்பர் இப்னு ஹம்துன்,
//காற்றெங்கும் இறக்கைகள்
கைகளாய் பரிணமிக்கும்
ஆற்றலுள்ள மனிதருக்கு
அனைத்துமே பக்கந்தான். //
இப்படி அருமையாகச் சொல்லிவிட்டு எனக்குத் தனியாக நன்றி தெரிவித்தல் தகுமா? இது முறையா? :)
நன்றி நண்பரே !
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி ராமலக்ஷ்மி !
கவிதை எளிமையாகவும், அதே நேரத்தில் கருத்துக்கள் தெளிவாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள் தோழரே!
அன்பின் ரிஷான்,
உங்கள் நல்ல மனதிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி நண்பா!
அன்பின் ஷீ-நிசி,
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே!
வணக்கம் இப்னு,முதலில் வாழ்த்துக்கள் உங்களுக்கு.கவிதை வரிகளின் சிந்தனை இயலபாய் விரிஞ்சிருக்கு.தொடருங்கள்.
கவிதையில் வார்த்தை மற்றும் எண்ணத்தின் செறிவு சிறப்பு..வாழ்த்துகள்
சகோதரி ஹேமா,
முதல் வருகைக்கும் முத்தான பாராட்டு+வாழ்த்துக்கும் நன்றி.
பாசமலர் அக்கா,
இது உங்களுக்கு பழைய கவிதை தான்.
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி
கயிறுகளாய் பாசபந்தம்;
கட்டப்பட்ட கைகால்கள்.
வயிறுக்காய் நகர்ந்தாலும்
வாழ்நாள்கள் உயிர்பூக்கும்.
அருமை! ஒரு பெரிய தத்துவத்தையே எளிமையாக் சொல்லியிருக்கிறீர்கள்
வேணு ஐயா,
உங்கள் முதல்வருகைக்கும் ஊக்கம் அளிக்கும் பாராட்டுக்கும் நன்றி.
Post a Comment