Monday, January 19, 2009

கவிதை: "இனிவரும் நாள்கள்"

பண்புடன் கவியரங்கில்....

இறைவாழ்த்து:

உயிருடன் உண்மை உயர்வை அளித்தே

இயல்பினில் நன்மை இருக்கவும் செய்து

மனிதரென நம்மையும் மாண்புற வைத்த
புனித இறைக்கே புகழ்.

தமிழ்வாழ்த்து
சொல்லில் அதன்பொருளில் சொந்தமாய் இவ்வுலகின்
எல்லா மொழிக்கும் இலங்கிடும் ஆதிநீ

வல்லமையில் பேரழகில் வாழ்பரப்பில் நற்றமிழே

இல்லை உனக்குமோர் ஈடு!


தலைவர் வாழ்த்து
நற்குணத்தில் நல்லன்பில் நாளெல்லாம்

....நாம்பேசும் நாயகரே ஆசாத்தாம்

கற்பனையில் சிறக்கின்ற கவிஞரிவர்

....கலைகளிலே காட்சியிலே இளைஞரிவர்
அற்புதங்கள் இவரெழுதும் ஆட்சீர்தான்

.....அத்துடனே 'பெருமூச்சும்' விட்டிடுவார் :-))

பற்பலவாய் திறனிறைந்த பெருமனிதர்
....பஃகுருத்தீன் போன்றோரின் அண்ணனிவர்.;-))


அவைவாழ்த்து:

நண்பர்கள் ஆகுகின்ற நல்மனங்கள் தன்னாலே

பண்புடன் இஃதொரு பள்ளியாம்- எண்ணம்

சிறக்க எழுதிடுவோர் சிந்தனை யாலே

பிறந்திடும் இங்கே படைப்பு!


முதன்மைக் கவிதை


கனவொன்று காணுகிறேன் கவிதைக் காக..

....கண்களுக்கு வாய்த்திடுமா காட்சி யாக!

இனவாதம் மதவாதம் இறந்து போக

....இதயத்து குணத்தினையே யாரும் நோக்க..

பணத்தாலும் பலத்தாலும் பேசும் போக்கை

....பேருண்மை ஒளிவீசி பொசுக்கித் தீய்க்க..

நனவாகும் நாளெண்ணி பாடி விட்டேன்

....நலமாக இனிவரட்டும் நாள்கள் யாவும்!


கடந்துவந்த காலத்தை எண்ணிப் பார்க்க...

....கண்ணீரும் புன்னகையும் கலந்த வாழ்க்கை.

நடந்துவரும் நாள்களிலும் நிகழ்வின் கைகள்

....நினைவுகளைத் தூவிவர நெஞ்சம் பொங்கும்.

தொடர்ந்துவரும் திருநாள்கள் துலங்க வைக்க..

....தன்னுணர்வில் நுண்ணறிவு விழிக்க வேண்டும்.

இடங்களல்ல 'இருப்பி'னிலே என்று (உ)ணர்ந்து

....இயல்புகளை ஏற்கின்ற இதயம் வெல்லும்.


சின்னவனாய் இருக்கையிலே சுகமே உலகம்

....சிந்தனையில் வேறில்லை சமமே யாரும்.

விண்ணதுவும் உயர்வில்லை உயர்வைக் கூறின்

....உண்மையிலே சிறுபிள்ளை உள்ளம் தானே!

மின்னுகிற கண்களிலே கனவின் கங்கு

....மேதினியில் வெளிச்சத்தை ஏற்றச் செய்யும்
என்னவொரு காலமய்யா! இன்றோ ஏக்கம்

....எங்கெங்கு நோக்கிடினும் பாகு பாடு!



இனிவருமோ அந்நாள்கள் என்ற கேள்வி

....எழும்பிடுதே வழியெங்கும் என்ன செய்ய?
தனிமனித நலமொன்றே யாரும் பார்க்கும்

....தற்காலம் மாறிவிடின் தீரும் ஏக்கம்.

பனித்துளிபோல் புல்நுனியில் பட்டு நிற்கும்

....பாசாங்காய் அரசியலில் பொதுமை எண்ணம்

இனிப்பதுவும் தேநீரில் இருத்தல் போல

....இரண்டறவே கலந்துவிட வருமே அந்நாள்.


பொதுமக்கள் வரிக்காசில் பிழைத்தே ஏய்க்கும்

....போக்கிரிகள் பொதுவாழ்வில் நீங்கி விட்டால்..

எதுவாகும் தன்னெல்லை அறிந்தே எவரும்
....ஏற்பற்ற குணம்நீக்கி ஏற்றம் கண்டால்...
நதிபோல நகர்கின்ற நாள்கள் தன்னில்

....நற்றவமே போலாகும் செயல்கள் கொண்டால்

விதியென்று சோம்புகின்ற வீணம் விடுத்து

....விளைவுகளை ஏற்கின்ற வீரம் பெற்றால்...


இனிவருமோ நாளெல்லாம் எண்ணம் போல

....இறையவனை கேட்டுத்தான் இறைஞ்சும் உள்ளம்

வினையெதுவும் விதைத்தாலே வினையை அறுப்பாய்

....வேறில்லை நியதிகளும் என்றே சொன்னால்

தனியொருவன் செய்கின்ற தவறின் பலனாய்

....தரணியிலே மற்றவர்க்கும் துன்பம் ஏனோ?

கனியளிக்கும் மரங்களுக்கே கல்ல டிகளோ?
....காரணத்தைக் கேட்டேனே கருத்தாய் நானும்.

விடையிருக்கும் உன்னிடத்தில் வேண்டித் தேடு!
....உணராத காரணங்கள் உள்ளி ருக்கும்.

கடைபிடிக்கும் முறையினிலே கோளா றிருக்க

....கண்டளித்த அறிஞனையா குறைகள் சொல்வர்?

கடைமனிதன், உயர்மனிதர் - பிரிக்கும் நீதி

....கைக்கொண்ட சுயநலத்தால் விளைந்த கேட்டை

உடைத்திடவே செய்யாமல் உறக்கம் கொண்டால்

....ஒன்றாகும் நன்மையுடன் தீமை கூட!


இனிவருமோ அந்நாள்கள் யாரும் கேட்பின்

....எப்போதும் மாற்றங்கள் மனிதர் கையில்!
தனிமனித நலனுக்காய் தவறு செய்யும்

....தரமற்ற தலைமைகளை மாற்ற வேண்டும்.

மனிதமிதே உயர்வென்ற மாண்பைப் போற்றி
....மண்மீதில் தருமத்தை மீளச் செய்வோம்.

அணிதிரளா நல்லவரால் கொடியோர் ஆட்டம்

....அறமழியும் முன்னாலே ஓடி வாரீர்!

நன்றி: பண்புடன்.

14 comments:

நட்புடன் ஜமால் said...

அழகான வாழ்த்துக்கள்

அழகான கவிதைகளோடு ...

நட்புடன் ஜமால் said...

\\தனிமனித நலனுக்காய் தவறே இழைக்கும்
....தரமற்ற தலைமைகளை மாற்ற வேண்டும்.\\

சரியாக(ச்) சொன்னீர்கள் ...

M.Rishan Shareef said...

அன்பின் இப்னு ஹம்துன்,


//முதன்மைக் கவிதை

கனவொன்று காணுகிறேன் கவிதைக் காக..
....கண்களுக்கு வாய்த்திடுமா காட்சி யாக!
இனவாதம் மதவாதம் இறந்து போக
....இதயத்து குணத்தினையே யாரும் நோக்க..
பணத்தாலும் பலத்தாலும் பேசும் போக்கை
....பேருண்மை ஒளிவீசி பொசுக்கித் தீய்க்க
நனவாகும் நாளெண்ணி பாடி விட்டேன்
....நலமாக இனிவரட்டும் நாள்கள் யாவும்!//


அருமையான கனவொன்றினைக் கண்டிருக்கிறீர்கள். நல்லோர் எல்லோரும் காணும் கனவு. சொப்பனத்திலேனும், வாழும் மனிதர் அனைவருக்கும் விடிவொன்று தோன்றிடாதா என்ற ஏக்கம் வரிகளில் தொனிக்கிறது. இனவாதமும் மதவாதமும்தான் மனிதத்தைக் கொன்று, யுத்தங்களில் மூழ்கவைத்து சமுதாயமே அழியச் செய்கிறது. எங்கும் பணத்தைக் கொண்டே நேசங்களின் நிலைப்பாடு உறுதிசெய்யப்படுகையில் இதயத்தின் குணத்தினை மட்டும் பார்த்துப் பழகும் நட்புகள் அரிது. அழகான கனவு, நனவாகப் பிரார்த்திப்போம்..!



//கடந்துவந்த காலத்தை எண்ணிப் பார்க்க...
....கண்ணீரும் புன்னகையும் கலந்த வாழ்க்கை.
நடந்துவரும் நாள்களிலும் நிகழ்வின் கைகள்
....நினைவுகளைத் தூவிவர நெஞ்சம் பொங்கும்.
தொடர்ந்துவரும் திருநாள்கள் துலங்க வைக்க..
....தன்னுணர்வில் நுண்ணறிவு விழிக்க வேண்டும்.
இடங்களல்ல 'இருப்பி'னிலே என்று (உ)ணர்ந்து
....இயல்புகளை ஏற்கின்ற இதயம் வெல்லும்.//


பழங்கால நினைவுகள், ஒரு கரும் மேகத்தைப் போல, கடந்து வந்த வேதனைகளையும் அவமானங்களையும் மட்டும் அதிகமாக உள்வாங்கி அவ்வப்போது நம்மில் பொழிந்து திரும்பத் திரும்ப சோர்வடையச் செய்வன. காயங்கள் ஆறிப்போயிருக்கும். ஆனால் கசியும் கண்ணீர்த்துளி அப்போது போலவே இப்பொழுதும் சூடாயிருக்கும். இடறச் செய்த துயரங்களை அனுபவமாக எடுத்துக்கொண்டு கடந்து செல்லெனும் இறுதி வரிகள் மிக அருமை.



// சின்னவனாய் இருக்கையிலே சுகமே உலகம்
....சிந்தனையில் வேறில்லை சமமே யாரும்.
விண்ணதுவும் உயர்வில்லை உயர்வு என்றால்
....உண்மையிலே சிறுபிள்ளை உள்ளம் தானே!
மின்னுகிற கண்களிலே கனவின் கங்கு
....மேதினியில் வெளிச்சத்தை ஏற்றச் செய்யும்
என்னவொரு காலமய்யா! இன்றோ ஏக்கம்
....எங்கெங்கு நோக்கிடினும் பாகு பாடு!

இனிவருமோ அந்நாள்கள் என்ற கேள்வி
....எழும்பிடுதே வழியெங்கும் என்ன செய்ய?
தனிமனித நலமொன்றே யாரும் பார்க்கும்
....தற்காலம் மாறிவிடின் தீரும் ஏக்கம்.
பனித்துளிபோல் புல்நுனியில் பட்டு நிற்கும்
....பாசாங்காய் அரசியலில் பொதுமை எண்ணம்
இனிப்பதுவும் தேநீரில் இருத்தல் போல
....இரண்டறவே கலந்துவிட வருமே அந்நாள்.//


பால்யத்தில் திளைத்த நாட்கள் எப்பொழுதும் இனிப்பானவைதாம். வாழ்வின் திருப்பங்கள், சங்கடங்கள் ஏதுமறியாப் பருவம். எதிர்காலம் குறித்த கனவுகளோ முயற்சிகளோ அற்ற சிறு பராயம். அதற்கு மீளச் செல்லும் ஆவல் பலருக்குமுண்டு. எனினும் என்றுமே நிகழ்வில் நடவாதது.



//பொதுமக்கள் வரிக்காசில் பிழைத்தே ஏய்க்கும்
....போக்கிரிகள் பொதுவாழ்வில் நீங்கி விட்டால்..
எதுவாகும் தன்னெல்லை அறிந்தே எவரும்
....ஏற்பற்ற குணம்நீக்கி ஏற்றம் கண்டால்...
நதிபோல நகர்கின்ற நாள்கள் தன்னில்
....நற்றவமே போலாகும் செயல்கள் கொண்டால்
விதியென்று சோம்புகின்ற வீணம் விடுத்து
....விளைவுகளை ஏற்கின்ற வீரம் பெற்றால்...


இனிவருமோ நாளெல்லாம் எண்ணம் போல
....இறையவனை கேட்டுத்தான் இறைஞ்சும் உள்ளம்
வினையெதுவும் விதைத்தாலே வினையை அறுப்பாய்
....வேறில்லை நியதிகளும் என்றே சொன்னால்
தனியொருவன் செய்கின்ற தவறின் பலனாய்
....தரணியிலே மற்றவர்க்கும் துன்பம் ஏனோ?
கனியளிக்கும் மரங்களுக்கே கல்ல டிகளோ?
....காரணத்தைக் கேட்டேனே கருத்தாய் நானும்//


பணத்தினாலும் படை பலத்தினாலும் நிர்ணயிக்கப்படும் தற்கால இராஜ்ஜியங்களில் நீதி செத்துவிட்டது. செங்கோலைச் சாத்தான்கள் பற்றியிருக்க, நேர்மை மயானங்களுக்குள் புதையுண்டு போயிருக்க, விதியென்று நொந்து வாழ்ந்துபோவதோடு வேறென்ன செய்ய நாம் ? இறைவனிடம் இறைஞ்சுவதைத் தவிர...!




// விடையிருக்கும் உன்னிடத்தில் வேண்டித் தேடு!
....உணராத காரணங்கள் உள்ளி ருக்கும்.
கடைபிடிக்கும் முறையினிலே கோளா றிருக்க
....கண்டளித்த அறிஞனையா குறைகள் சொல்வர்?
கடைமனிதன், உயர்மனிதர் - பிரிக்கும் நீதி
....கைக்கொண்ட சுயநலத்தால் விளைந்த கேட்டை
உடைத்திடவே செய்யாமல் உறக்கம் கொண்டால்
....ஒன்றாகும் நன்மையுடன் தீமை கூட!

இனிவருமோ அந்நாள்கள் யாரும் கேட்பின்
....எப்போதும் மாற்றங்கள் மனிதர் கையில்!
தனிமனித நலனுக்காய் தவறே இழைக்கும்
....தரமற்ற தலைமைகளை மாற்ற வேண்டும்.
மனிதமிதே உயர்வென்ற மாண்பைப் போற்றி
....மண்மீதில் தருமத்தை மீளச் செய்வோம்.
அணிதிரளா நல்லவரால் கொடியோர் ஆட்டம்
....அறமழியும் முன்னாலே ஓடி வாரீர்!//


முழுக்கவிதையின் இறுதி வரிகள் பெருந் நல்தீர்ப்பொன்றினை ஏந்திவந்திருக்கின்றன. காலம் காலமாக வைத்துப் போற்றக் கூடிய உண்மைகளைக் கொண்டிருக்கின்றன. நற் சிந்தனை, நல்லதொரு கவிதையை யாத்திங்கு தந்திருக்கிறது. வரிகளில் மாணவப் பயிற்சியாளராக உங்களைக் காண முடியவில்லை. தேர்ந்த பெரும் மரபுக் கவியாக உங்கள் வரிகள் உங்களை இனங்காட்டி விட்டன. அருமையான கவிதை..பாராட்டுக்கள்..!
தொடருங்கள் நண்பரே !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

"உழவன்" "Uzhavan" said...

\\தனிமனித நலனுக்காய் தவறே இழைக்கும்
....தரமற்ற தலைமைகளை மாற்ற வேண்டும்.\\

மிகவும் அருமை. வாழ்த்துக்கள் !


தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"


சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க


karisak kaattu ponnu .. Sl No: 41

http://tamiluzhavan.blogspot.com/2008/11/blog-post_13.html


Video: kozhi thinnum pasu .. Sl No: 18

http://tamizhodu.blogspot.com/2008/05/blog-post.html


kuruvi .. Sl No: 46

http://tamizhodu.blogspot.com/2008/04/blog-post_1936.html



நன்றியுடன்..
உழவன்

இப்னு ஹம்துன் said...

நன்றி.. 'நட்புடன்' ஜமால்.

வருகையுடன் இருகருத்தும் வழங்கிச் சென்றீர்
தருகின்றேன் நன்றியினை தொடர்ந்து வாரீர்.

இப்னு ஹம்துன் said...

அன்பின் ரிஷான்,

முழுமையான பாராட்டு விமர்சனத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடர்ந்து வருக.

இப்னு ஹம்துன் said...

வருகைக்கும் கருத்துக்கும் வாக்குகள் கோரியதற்கும் நன்றி உழவன்.

பந்தர்.அலி ஆபிதீன். said...

//பொதுமக்கள் வரிக்காசில் பிழைத்தே ஏய்க்கும்
....போக்கிரிகள் பொதுவாழ்வில் நீங்கி விட்டால்..
எதுவாகும் தன்னெல்லை அறிந்தே எவரும்
....ஏற்பற்ற குணம்நீக்கி ஏற்றம் கண்டால்...
நதிபோல நகர்கின்ற நாள்கள் தன்னில்
....நற்றவமே போலாகும் செயல்கள் கொண்டால்
விதியென்று சோம்புகின்ற வீணம் விடுத்து
....விளைவுகளை ஏற்கின்ற வீரம் பெற்றால்...

அரசியலை தொழிலாகசெய்யும் அரசியல்வாதிகளுக்கு நல்ல சாட்டையடி

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான கவிதை. ரிஷானின் கருத்துகளை வழி மொழிகிறேன்.

//விடையிருக்கும் உன்னிடத்தில் வேண்டித் தேடு!
....உணராத காரணங்கள் உள்ளி ருக்கும்.
கடைபிடிக்கும் முறையினிலே கோளா றிருக்க
....கண்டளித்த அறிஞனையா குறைகள் சொல்வர்?//

சாட்டையடியான வரிகள்!

//இனிவருமோ அந்நாள்கள் யாரும் கேட்பின்
....எப்போதும் மாற்றங்கள் மனிதர் கையில்!//

மிகச் சரி!

இப்னு ஹம்துன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் தமிழ்மகன்.

வருகைக்கும் பாராட்டுக் கருத்துக்கும் நன்றி சகோதரி ராமலக்ஷ்மி.

தொடர்ந்து வருகை தாருங்கள்.

Anonymous said...

வெண்பா வடிவிலான உங்கள் கவிதைகளில் பலவும் அருமை..

வாழ்த்துக்கள்!

Anonymous said...

வெண்பா வடிவிலான உங்கள் கவிதைகளில் பலவும் அருமை..

வாழ்த்துக்கள்!

இப்னு ஹம்துன் said...

நண்பர் ஷீ-நிசி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஹேமா said...

வணக்கம் இப்னு.அருமையான மனிதம் தேடும் வெண்பா.

நேற்றும் மனதின் ஆதங்கத்தை பின்னூட்டமாகத் தந்தேன்.
இணைக்கும்போதே ஏதோ ஒரு குழப்பம் தெரிந்தது.வரவில்லையா?பரவாயில்லை.

உண்மையில் மனிதம் ஒரு எழையின் வார்த்தையிலும் அவன் செய்கைகளிலுமே வாழ்கிறதாக உணர்கிறேன்.இது என் கருத்து.