Tuesday, June 20, 2006

மனமுதிர் பருவம்

மனமுதிர் பருவம்
- இப்னு ஹம்துன்

காற்றுடன் பொருதும் வேகம்
காகிதம் போல் மனமாகும்
வேற்றுமை விளங்கா மோகம்
வேறென்ன, வளர்சிதை மாற்றம்.

காட்டாறு போலும் பிரவாகம்
கவலையெலாம் மூழ்கிப்போகும்
வீட்டாரும் வியக்க நடையாகும்
விளைவறியா வாலிப விவசாயம்

கேட்பதெல்லாம் காதில் மோதும்
காதல் ஒன்றே இதயம் சேரும்
நாட்பகலாய் நாகரீகம் நாடும்
நல்லவையோ நகைப்புக்காகும்.

எதிர்பால் ஈர்ப்பு இருக்கும்
ஏதேதோ கவிதை சுரக்கும்
எதிர்மறை எண்ணம் வாய்க்கும்
இராக்கனவு வெட்கம் பூக்கும்.

அழகின் அழகாய் தன்னைப் பார்க்கும்
ஆயிரமாயிரம் நேரம் போக்கும்
வழமைஅழகை வெளியில் தேடும்
உள்ள அழகை உணராப் பருவம்.


போற்றிடும் இலக்கை நோக்கும்
பொறுமையால் வெற்றி சேர்க்கும்
ஆற்றலுயர் இளையர் கூட்டம்
அவனியிலே ஒளியைக் கூட்டும்.

7 comments:

VSK said...

வளமான கவிதைக்கு வாழ்த்துகள்!

உங்கள் பெயரில், 'ப'வுக்கு முன்னால் 'ஃ' வரும் என நினைக்கிறேன்.

தவறெனில் மன்னிக்கவும்.

தொடர்ந்து படைப்புகளை எதிர்பார்க்கிறேன்.

╬அதி. அழகு╬ said...

\\எதிர்பால் ஈர்ப்பு இருக்கும்
ஏதேதோ கவிதை சுரக்கும்
எதிர்மறை எண்ணம் வாய்க்கும்
இராக்கனவு வெட்கம் பூக்கும்.\\

இயல்பையும் இலக்கையும் சுட்டி நிற்கும் அற்புதமான கவிதை!

மேற்காணும் வரிகளை உணர்ந்து வாசித்தேன், வாழ்க!

இப்னு ஹம்துன் said...

நன்றி SK சார்,
தாங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


//உங்கள் பெயரில், 'ப'வுக்கு முன்னால் 'ஃ' வரும் என நினைக்கிறேன்//

தமிழில் பெயர்சொல்லை ஆய்தம் கொண்டு தொடங்குதல் முறையன்று என்று தான்! (மேலும் விளக்கமிருப்பின் தாருங்களேன்)

//தொடர்ந்து படைப்புகளை எதிர்பார்க்கிறேன். //

முயற்சிக்கிறேன். இறை நாடட்டும். நேரங்கிடைக்கும்போது தான் வலையில் நுழைகிறேன்.

இப்னு ஹம்துன் said...

ஊக்கமூட்டும் பாராட்டுக்கு நன்றி அழகு அண்ணன்,
வோட்டுப்போட மறந்துவிடாதீர்கள். மறந்து இருந்து விடாதீர்கள்!:-))

ஒரேயொரு ரகசியம் சொல்லிடறேன். தேன்கூடு போட்டிக்காக பதிவிடும்படி உங்களைப்போன்ற ஒரு நண்பர் வலியுறுத்தவும் தான் பதிவிட்டேன். 'கான முயலெய்த அம்பினில்....' :-))!

யாத்ரீகன் said...

நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..

உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....

இப்னு ஹம்துன் said...

நன்றி யாத்ரீகன் சார்,
உங்களுடையதை படித்துவிட்டு விரைவில் கருத்து சொல்கிறேன்.
தொடர்ந்து வருகை தாருங்கள்.

இப்னு ஹம்துன் said...

நன்றி தமிழாதமிழா, வாக்களித்துவிட்டீர்களா?