நினைத்ததும் நடந்ததும் - உம்ராப் பயணம்
"நாம் இன்னும் நேரில் சந்திக்கவில்லையே?" - வலையுலக நண்பர் ஒருவரிடமிருந்து வந்திருந்த மின்னஞ்சல் சொன்னது. என்னை வலைப்பூவிற்கு ஈர்த்து;உதவிய நண்பர் அவர். நல்ல ஆலோசனைகள் நல்குபவர். அவருடன் இன்னொரு நண்பரையும் சந்திக்க நினைத்தேன். இந்த இரண்டாமவர் என் கவிதைகளின் குறைகளைச் சுட்டி என் கவியார்வத்தை நெறிப்படுத்த நினைப்பவர். மதிப்பிற்குரிய மூத்த வலைப்பதிவர்.ஜித்தா வந்தால் சந்திக்கிறேன் என்று இருவரிடமும் சொல்லியிருந்தாலும் நாள் நேரம் குறிப்பிடவில்லை.
இதன் பொருட்டு 'சவூதியா'வில் அதிகபட்ச முகவர் தள்ளுபடியுடன் ஒரு விமானச் சீட்டுக்கும் ஏற்பாடு செய்துவிட்டேன். 'சந்திக்கலாம் விரைவில் - இறை நாட்டப்படி' என்று நண்பருக்கும் மறுமொழியிட்டேன். "முடிந்தால் இந்த வாரம் வந்தால் தொலைபேசுகிறேன்"
அந்த வாரமே போயாக வேண்டும் என்ற நிலையில் தான் இருந்தேன். காரணம், அடுத்தடுத்த வாரங்களில் ஓய்வின்றிப் போகலாம். ஏன் , வலைக்கு அடிக்கடி வருவதும் இயலாமற் போகலாம் என்ற நிதர்சனம். மேலாளரிடம் பேசி புதன் மாலைக்கும் வியாழன் ஒரு நாளுக்கும் அனுமதி வாங்கியாயிற்று. "எல்லா வேலையையும் முடிச்சிட்டுப் போ"
ஜித்தா வரை போய்விட்டு உம்ராச் செய்யாமல் வருவதா என்று உள்மனம் ஒரு நியாயமான கேள்வியைக் கேட்க, உம்ராவும் தீர்மானித்தேன்.
உள்ளூர் வலைப்பதிவு நண்பர் ஒருவரிடமிருந்து தொலைபேசி வந்தது.
"இந்த வெள்ளிக்கிழமை உங்களைச் சந்திக்கணுமே!"
" இல்லைங்க, வாய்ப்பில்லே, உம்ரா போலாம்னு இருக்கேன்"
" ஹ, அப்படியா, ரொம்ப நல்லதாப் போச்சு, நாலு வருஷமாகியும் நான் உம்ரா செஞ்சதில்லே. நானும் வர்றனே"
"நான் விமானத்துல போலாம்னு இருக்கேன்"
"விமானமா? கட்டுப்படியாகாதுங்களே, பஸ்லயே போயிரலாமே"
யோசித்தேன். பேருந்தில் போனால் தான் என்ன? புதன் மாலை புறப்பட்டால் போதும். வியாழன் மதியத்துக்குள் உம்ராவை முடித்துவிடலாம். திரும்பப் புறப்படுகிற வெள்ளி மாலைக்குள் ஜித்தா போய் நண்பர்களையும் சந்தித்துவிடலாம். நல்ல யோசனை தான்.
"12 மணி நேரம் பயணம் அலுப்பா இருக்குமைய்யா, நீங்களும் கூடவே வர்றதினால சரி" என்றேன்.
அன்றைய இரவே சென்று பேருந்துக்கு முன்பதிவு செய்த போது நண்பர் மேலும் இருவர் (அவருடைய சகோதரர்கள்) வருவதாகவும் சொன்னார். "ஆட்சேபணையில்லயே"
"அதுக்கென்ன, தாராளமா வரட்டும்"
தொடர்ந்து சொன்னார் நண்பர்: "உம்ரா முடித்ததும் ஹோட்டல்ல இவங்கள விட்டுட்டு நாம ஜித்தா போயிட்டு வந்திறலாம்"
ஆமோதித்தேன்: "அப்படித்தான் செய்யணும்"
ஆனால் அப்படிச் செய்ய முடியாமல் போனது தான் 'மனிதன் நினைக்கிறான், இறைவன் இயக்குகிறான் '.
முதல் முறை உம்ராச் செய்யப் போகிறவர்களுக்காக மதீனா வழியாகப் போகிற பேருந்தில் முன்பதிவு செய்துவிட, அதன்படி மதீனா சென்று 'ஸியாரத்' செய்துவிட்டு மக்கா வந்து உம்ரா ச் செய்து முடிக்க வியாழன் இரவு மணி பத்து ஆகிவிட்டது. இருந்தும் மறு நாள் அதிகாலைத் தொழுகைக்குப்பின் ஜித்தாச் சென்று வர முடியுமா என்று யோசித்தேன்.
பேருந்து எப்போது திரும்பப் புறப்படும் என்று விசாரித்தேன். வெள்ளிக்கிழமை 'ஜும்மாத் தொழுகைக்கு பின் அதிகபட்சம் இரண்டு மணிக்கு புறப்பட்டுவிடும் என்று சொன்னார்கள். கடைசி இருக்கையில் அமர்ந்து வந்திருந்த எங்களுக்கு ஓய்வு எடுக்கச் சொல்லி சொந்தக் கால்களே கெஞ்சின. அதிகாலைத் தொழுகைக்குப்பின் 'அரபா , மினா, ஹிரா, குர்ஆன் கடைசியாக உதித்த ஜபலுர் ரஹ்மத் ஆகியவற்றுக்குச் சென்றுப் பார்க்கும் வாய்ப்பிருக்கிறது என்றும் விளங்கிக் கொண்டேன் .
நிலைமையை விளக்க நண்பருக்கு செல்பேசினேன். "அதனாலென்னங்க , அடுத்த வாய்ப்பு கிடைத்தால் சந்திக்கலாம்" என்று சொல்லிவிட்டார்.
பத்தாண்டுகளில் சராசரியாக வருடத்துக்கொரு உம்ராவே செய்திருந்தாலும் மதீனாவில் நபிகளாரின் பள்ளிக்கு அதிகம் சென்றதில்லை . அநேகமாக இது மூன்றாவது முறை. பள்ளியின் விஸ்தீரணமும் யாத்ரீகர்களுக்கான வசதிகளும் பிரமிக்க வைக்கின்றன !. சிறப்பு மிக்க மூன்று பள்ளிகளுள் ஒன்று. ' முந்தைய இறைத்தூதர்கள் கடவுளாகக் கருதப்பட்டுவிட்டதைப் போல் என்னையும் கடவுளாக்கி விடாதீர்கள்' என்று தீர்க்கமாகவும் மார்க்கமாகவும் சொல்லிவிட்ட முஹம்மது நபி(ஸல் ) அடக்கவிடத்தைக் ஸலாம் சொல்லிக் கடந்தபோது அடக்கமாட்டாமல் மனம் அழுதது.
அதன்பின் சரித்திரம் நிகழ்ந்த இடங்களைப் பார்க்க வாடகை வாகனம் அமர்த்திக்கொண்டோம். உஹதுப்போரில் உயிர் நீத்த நபித்தோழர்களிரின் அடக்கம் செய்யப்பட்ட இடம் ஒரு சுற்றுலாத் தளமாக உள்ளது. தொழும் திசை மாற்றப்பட்ட 'கிப்லத்தைன் ' பள்ளி, கந்தக் என்கிற அகழி யுத்தம் நிகழ்ந்த இடம், (அந்த யுத்தத்தில் தற்காப்புக்காக சுற்றிலும் அகழி தோண்டும் ஆலோசனையை நபிகளாருக்குச் சொன்ன பாரசீக நாட்டைச் சேர்ந்த நபித்தோழர் சல்மான் பாஃர்சி (ரலி)யை நினைவுபடுத்தியது மனம். முந்தைய வேதங்களில் புலமையுற்றிருந்த சல்மான் (ரலி), இறுதி நபி மதீனாவுக்கு வருவார் என்பதை முந்தைய வேதங்களின் வழியாகவே அறிந்து மதீனாவில் வந்து நபிகளாரின் வருகையை எதிர்நோக்கியிருந்ததும் , நபிகளார்(ஸல்) அவர்களைக் கண்டதும் பலப்பல குறுக்கு கேள்விகள் கேட்டதன் பின்னரே முஸ்லிமானதும் தனியே எழுத வேண்டிய விடயங்கள்).
அடுத்து முதன்முதலில் வெளியே கட்டப்பட்ட கூபா பள்ளி என்று சென்று வந்தோம். விண்ணும் மண்ணும் கைகோர்த்த விந்தை நிகழ்ந்த, சரித்திரத்தின் திருப்புமுனையாக அமைந்த 'பத்ரு' பற்றி கேட்டதற்கு 'தூரம், 150 கி.மீ." என்று மட்டும் சொன்னார் அந்த சவூதி ஓட்டுநர்.
எட்டுமணிக்கெல்லாம் பேருந்து மதீனாவிலிருந்து புறப்பட்டுவிடும் என்று சொன்னதால் அவசரம் அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு ஒரு சிறிய கைப்பையையும் மறதியாக உணவகத்திலேயே வைத்துவிட்டு வந்தால் 'இப்போது பேருந்து 'ஸியாரத்'துக்குரிய இடங்களுக்கு புறப்படும்' என்று சொல்லி நாம் பார்த்துவந்த அதே இடங்களுக்கு மீண்டும் அழைத்துச் சென்றார்கள். "ஏனய்யா, முன்னாலேயே சொல்லியிருந்தால் எங்களுக்கு 'டாக்ஸி பணம்' மிச்சமாயிருக்குமே" என்று கேட்டதற்கு "பறஞ்சல்லோ" என்றார் அந்த மலையாள முஸல்லியார். (ஆளுக்குப் பத்து ரியாலும் தனியாக வாங்கிகொண்டார். சிறிது நேரம் 'வாதம் ' செய்துவிட்டு 'இது ஓட்டுனருக்காகத்தான்' என்றதும் கொடுத்துவிட்டோம் ). அதன்பிறகு அந்த ம.முஸல்லியார் சிரத்தை எடுத்து ஒவ்வொரு அறிவிப்பையும் எங்களுக்காகவே தமிழில் சொல்ல முயன்று காமெடி இல்லாக் குறையைப் போக்கினார். ('நாமள் இப்போள் கூபா பள்ளிக்குப்போய் ரெண்டு ரக்-அத் தொழுகிடப் போறேன்')
அதன்பின் மீக்காத் என்கிற எல்லைக்கு வந்து குளித்து 'இஹ்ராம்' என்கிற தையலில்லா வெள்ளைத் துணிகள் தரித்து மக்காவுக்கு புறப்பட்டோம்.
மக்காவுக்கு வந்து சேரும்போது கிட்டத்தட்ட மாலை மணி ஏழு ஆகிவிட்டது. நால்வருக்கு ஒரு அறை என்று விடுதி கொடுத்தார்கள். அறையில் பொருட்களை வைத்துவிட்டு விடுதியின் வரவேற்பாளரிடம் 'சார்ஜர் இருந்தால் கொடுங்களேன்' என்று செல்பேசியைக் காட்டி கேட்க, "அதெல்லாம் இல்லை" என்று அலட்சியமாகச் சொன்னவர் என்னை உற்றுப் பார்த்து "நீங்க எந்த ஊர்?" என்றார். சொன்னதும் "என்னைத்தெரியலயா பஃக்ருத்தீன் நானா, நான் தான் பக்கர்" என்றார். ஞாபகம் வந்தது. ஆளே மாறியிருந்தார் .பதினைந்து, இருபது வருடங்களாவது இருக்கும் ஊரில் அவருடன் 'கோலிக்குண்டு' விளையாடி. அதன்பிறகும் 'சார்ஜர் ' கிடைக்காதிருக்குமா?
ஹஜ்ஜையும் உம்ராவையும் வேறுபடுத்திக்காட்டுகிற அரபா, ஜம்ரத்துல் அகபா (சமீப விபத்துக்குப்பின் மேலும் சீர்படுத்த கட்டுமானப்பணிகள் நடைபெறுகின்றன)ஆகியவற்றையும், 'அருள் மலை ' என்ற பெயரில் விளங்கும் ஜபலுர் ரஹ்மத் ( குர்-ஆன் கடைசியாக இறங்கிய இடம்) - மேலும் , மனிதனுக்கு மனிதன் "இறையச்சத்தாலே தவிர'(இனத்தால் மொழியால்) சிறப்புகளில்லை" என்ற நபிவாக்கையும் பிரகடனப்படுத்திய இடம் - பார்த்தோம். அடுத்து, நபியவர்கள் ஆரம்பக்காலங்களில் தவத்தில் இருந்த 'ஹிரா'க்குகைக்கு வந்தோம் . ஆங்கிலத்திலும் அரபியிலும் பெரும்பாலான/முக்கிய ஆசிய மொழிகளிலும் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப்பலகை என்னைக்கவர்ந்தது: 'இந்த இடத்துக்கு வருபவர்கள் இங்குள்ள மண்ணையோ, மரத்தையோ புனிதமாகக் கருதாமல், அவற்றை எடுத்துப் பத்திரப்படுத்த நினைக்காமல், நபியவர்களின் போதனையை மட்டுமே புனிதப்படுத்துங்கள். அவர்களின் வழிமுறையை மனசுக்குள் பத்திரப்படுத்துங்கள் ' (அறிவிப்புபலகையில் உள்ளது என் எண்ணத்தில் பதிந்தப்படி).
மலையின் மேலேறிச் சென்றுவர 'ஒன்னர மணிக்கூறு ஆவும்' என்றார் முஸல்லியார்.
'கால்வலியைக் கருத்தில் கொண்டும், அந்த நேரத்தில் இன்னுமொரு தவாஃப் (வலம் வருதல்)செய்திடலாமென்றும் 'கஃபா' வுக்கு வந்து தவாஃப் செய்த என்னுள் பொங்கி வழிந்தன பிரார்த்தனைகள். பின்னர் வெள்ளி நண்பகல் தொழுகை முடித்து பேருக்கு ஏதோ சாப்பிட்டுவிட்டு ரியாத் திரும்ப வாகனமேறினோம்.
'இந்தமுறை' எனத் திட்டமிட்டது என்னறிவு
'இல்லை' எனத் தட்டிக் கழித்தது இறைமுடிவு
2 comments:
உங்கள் உம்ரா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமைய வாழ்த்துக்கள்.
test
Post a Comment