Thursday, April 14, 2005

இனி வேறு விதி செய்வோம்

இனி வேறு விதி செய்வோம்
-பரங்கிப்பேட்டை ஹ.பஃக்ருத்தீன்

தலைவர் சிலைக்கு சந்தன மாலை
தலையில் நாறும் காக்கை எச்சம்
'பகுத்தறிவு' இங்கு விதியாக.....


நாய்க்கு உண்டு நெஞ்சணைத்து முத்தம்
தன்னின மனிதர் தொட்டாலே தீட்டு
'நாகரீகம்' இங்கு விதியாக.....

எச்சிலுறும் நாய்களுடனே போட்டி
எச்சில் இலைக்கு பாயும் மனிதன்
'பசிக்கொடுமை' இங்கு விதியாக.....

மழைக்குப் பயந்த ஒழுகும் குடிசை
மனதில் லாட்டரியின் ஆகாசக் கோட்டை
'சோம்பல்' இங்கு விதியாக.....

வறுமையில் மூழ்கிடும் குடித்தனம்
வழமையாய் தலைவன் 'குடி'த்தனம்
'கவலை' இங்கு விதியாக......

ஈர்த்தவரோடு இணைந்து ஓட்டம் - தன்னை
ஈந்து, தவித்துப் பின் திண்டாட்டம்
'காதல்' இங்கு விதியாக......

மகனின் திருமணத்தில் மாவீரப்பேச்சும்
மகளின் திருமணத்திலோ கைதிபோல கூச்சம்
'சம்பிரதாயம்' இங்கு விதியாக.....

படித்து உயர்ந்தால் பொருளீட்டலாம்
பொருளை ஈந்தாலே படிப்பினை பெறலாம்
'கல்வி' இங்கு விதியாக.....

'என் கையிது எப்படியும் வீசுவேன்
மூக்கு உனது. முடிந்தால் நகர்த்து'
'கருத்துச்சுதந்திரம்' இங்கு விதியாக......

தீக்குளித்திடும் தகுதி
தொண்டனுக்கே எப்போதும்
'அரசியல்' இங்கு விதியாக......

புனிதம் விதைக்கும் பெருமிதமாக
மனிதம் சிதைத்து இரத்த தீர்த்தம்
'மதம்' இங்கு விதியாக......

அறியா சனங்கள் கையிலே
அரியாசனங்கள்
'ஜனநாயகம்' இங்கு விதியாக.....

இனியேனும் செய்வோம்
வேறு விதிகள்.

17 comments:

Anonymous said...

வாழ்த்துக்கள். வடிவும், கவித்தைக்கருவும் அருமையாக உள்ளன. "இனியொரு (புதிய) விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்".
நா.கண்ணன்

Anonymous said...

அருமை பஃகுருதீன்... பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்...
உங்கள் படைப்புகள் பார்க்கும்போது
நான் எழுதிய,எழுதுகிற எதுவுமே பெரிது இல்லை என்றே தோணுகிறது...என் மனமகிழ்ந்த
பாராட்டுக்கள்.

இன்னும் எழுதுங்கள்...சாத்தியம் என்பது சொல் அல்ல ...செயல்

- ரியாத்திலிருந்து ஷாஜகான் - லக்கி நிறுவனங்களின் ஒரு விசுவாசி

Anonymous said...

test

dondu(#11168674346665545885) said...

"தீக்குளித்திடும் தகுதி
தொண்டனுக்கே எப்போதும்
‘அரசியல்’ இங்கு விதியாக......"

தன் பிள்ளைகளைக் காத்து, ஊரான் பிள்ளைக்கு பெல்ட் பாம் கட்டும் தலைவனைப் பற்றிக் கேட்டால் "புலி"யெனச் சீறும் குருட்டு ஆதரவாளர்கள்....
அன்புடனே,
டோண்டு ராகவன்

Anonymous said...

நண்பாரே! இந்த சாட்டைகள் சொடுக்கப்பட வேண்டிய இடங்கள் அனேகம். குறிப்பாக புதிய விதி செய்யும் ஒவ்வொரு இடமும்.

உடன்படும் நண்பர்கள் இதற்கு சிறகு கட்டி அந்த மயான மனிதர்களிடம் அனுப்புவார்கள் என்று நம்புவோம்.

அன்பான
ஜி - என்.

Ganesh Gopalasubramanian said...

//
மகனின் திருமணத்தில் மாவீரப்பேச்சும்
மகளின் திருமணத்திலோ கைதிபோல கூச்சம்
‘சம்பிரதாயம்’ இங்கு விதியாக.....
//

உங்கள் கவிதைகள் சமுதாயத்தையும் பெண்ணீயத்தையும் பேசுகின்றன.

இப்னு ஹம்துன் said...

மூர்த்தி, நா.கண்ணன், ஷாஜஹான், டோண்டு ராகவன், ஜீ.என், கோ.கணேஷ் அனைவருக்கும் நன்றிகள்.

மூர்த்தி அவர்கள் நினத்த அந்த 'என்னவோ' என்ன என்பதை எனக்கு மட்டுமாவது சொல்லுங்களேன்.

டோண்டு ஐயா அவர்களே! நீங்கள் எடுத்துக்காட்டிய அந்த வரிகளுக்குப் பொருத்தமாக எல்லாத் தரப்பிலும் இருக்கிறார்கள்.மண்டலுக்காக கோஸ்வாமியையை கொளுத்தியவர்கள் உட்பட

கணேஷ், பெண்ணியமோ ஆணியமோ நியாயம் தானே முக்கியம்!

குழலி / Kuzhali said...

பக்ருதீன் அவர்களின் கவிதையில் ஒரு புதுமை தெரிகின்றது, வழக்கமாக ஒரு கவிதை எழுதப்படும் போது ஏதேனும் ஒரு விடயம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும் பக்ருதீன அவர்கள் கிட்டத்தட்ட அனைத்து சமுதாய பிரச்சினைகளைப்பற்றியும் சுருக்கமாக சுவையாக எழுதியுள்ளார், தலைவனுக்காக உயிர்விடும் தொண்டர்களை பற்றிய எனது படைப்பையும் சற்று படியுங்களேன் இந்த சுட்டியில் அரவாணனின் அரற்றல்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

hi fakrudeen
Assalmau alaikkum
your poem is very superb. ur thoughts is very high. very superp wordings .
then can u pls help me? i want to add some links ( maraththadi, mutthamizmanram, thamiz manam..as u mentioned ) ..how to put those links in my blogs?
Regards
Rasikow Gnaniyar

பாபு said...
This comment has been removed by a blog administrator.
இப்னு ஹம்துன் said...

நன்றி குழலி,& நிலவுநண்பன்.
குழலி, உங்கள் கவிதையும் நன்று.
சொந்த ஊர் கடலூர் தானா?

நிலவுநண்பன், I will inform you.

Anonymous said...

ஆம் பக்ருதீன், கடலூரிலே பிறந்து வளர்ந்தவன் தான், பரங்கிப்பேட்டை எமக்கு மிகவும் பரிச்சயமான ஊர், எனது சில முக்கியசொந்தங்கள் பரங்கிப்பேட்டையிலுள்ளனர், பல நாட்கள் பரங்கிப்பேட்டையில் சுற்றி திரிந்துள்ளேன். இப்போது சிங்கையிலே திரிகின்றேன்

Anonymous said...

நாய்க்கு உண்டு நெஞ்சணைத்து முத்தம்
தன்னின மனிதர் தொட்டாலே தீட்டு
'நாகரீகம்' இங்கு விதியாக.....

படித்து உயர்ந்தால் பொருளீட்டலாம்
பொருளை ஈந்தாலே படிப்பினை பெறலாம்
'கல்வி' இங்கு விதியாக.....

புனிதம் விதைக்கும் பெருமிதமாக
மனிதம் சிதைத்து இரத்த தீர்த்தம்
'மதம்' இங்கு விதியாக......

அருமை

அன்புடன்
கீதா

M.Rishan Shareef said...

மிக அருமையாக, எல்லாத்தளங்களையும் தொட்டு வந்திருக்கிறதுங்கள் எழுத்தின் பார்வைகள் நண்பரே..!
யோசிக்க வைக்கின்றன ஒவ்வொரு வரிகளும்..!

தமிழ் said...

அருமையான
வரிகள் நண்பரே

இப்னு ஹம்துன் said...

சகோதரி கீதா,
நண்பர் ரிஷான்,
நண்பர் திகழ்மிளிர்,
உங்கள் அனைவரின்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

ராமலக்ஷ்மி said...

இனி வேறு விதி செய்தே ஆக வேண்டும் என்பதை ஒவ்வொரு வரிகளும் சாட்டையடி போல் ஓங்கி உரைக்கின்றன.