Monday, February 28, 2005

அது ஒரு பொன் மாலைப் பொழுது!

(இன்று காலை என் வலைப்பதிவு பக்கத்தை பார்தத எனக்கு அதிர்ச்சி. என் வலைப்பதிவில் புதிதாகப் பதிந்திருந்த 'ஒரு பொன் மாலைப்பொழுது' காணாமல் போயிருந்தது. காரணம் தெரியவில்லை. எனினும், அதையே மீண்டும் பதிகிறேன்.)


கடந்த 17.02.05 வியாழன் மாலை ரியாத் வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு இனிய மாலைப்பொழுதாக அமைந்தது. ஆம் அன்று தான் ரியாத் தமிழ்(ச்) சங்கம்
தொடங்கப்பட்டது. சவூதி அரேபியாவிற்கான இந்தியத்தூதர் மேதகு எம்.ஓ.ஹெச். பஃரூக் மரைக்காயர் தலைமையில் நடைபெற்ற விழாவின் சிறப்பு விருந்தினராக கவிப்பேரரசு வைரமுத்து வந்திருந்தார்.

இந்த இனிய நிகழ்ச்சியின் அமைப்பாளராக அஹமது இம்தியாஸ் திறம்பட செயலாற்றியிருந்தார். உண்மையில் ரியாத் தமிழ் ச்சங்கம் என்பது ரியாத்-தில் பல்வேறு பெயர்களில் இயங்கி வந்த ஆறு தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு ஆகும். அவற்றுள் குறிப்பிடத்தக்கதாக தமிழ் கலாச்சாரக் கழகம். அதன் தலைவர் திரு. மாசிலாமணி என் இனிய நண்பர். ரியாத்திலுள்ள மன்னர் சவூத் பல்கலைக்கழகத்தில் லேசர் துறையில் பேராசிரியர்.நோபல் பரிசு ப்பெற்ற விஞ்ஞானிகள் சந்திரசேகர் அப்துஸ்ஸலாம் ஆகியோருடன் பணியாற்றியவர். சிறந்த கவிஞர். சிறந்த விஞ்ஞானி. எல்லாவற்றுக்கும் மேலாக மிகச்சிறந்த மனிதர். என் கவித்திறனை மேலும் மேலும் முன்னெடுத்து ச் செல்ல விழைபவர்.

ரியாத் தமிழ்ச்சங்கத் தொடக்க விழாவின் கவியரங்கத்திற்காக நடத்தப்பட்ட கவிதைப்போட்டியில் கலந்துக்கொள்ளுமாறு பெரிதும் என்னை கோரியிருந்தார். அதன்படி நானும் கலந்துக்கொள்ள, 65க்கும் மேற்பட்ட கவிஞர்களின் - ஏற்பாட்டாளர்களால் தரப்பட்ட தலைப்புக்கேற்ப எழுதப்பட்ட கவிதைகளில்-முதற்கட்ட ஆய்வில் பதினாறு பேர் தேர்வு செய்யப்பட்டனர். என் கவிதைக்கு இரண்டாம் நிலை என்று சொல்லப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட பதினாறு பேரும் அவரவர் விரும்பும் தலைப்புகளில் 40 வரிகளுக்குள் கவிதை எழுதி கவியரங்க அமைப்பாளர் திரு. மோகனிடம் சமர்ப்பித்து விடவேண்டுமென்றும் அந்த பதினாறில் சிறந்த பத்து கவிதைகள் கவியரங்கத்திற்காக (திரு.வைரமுத்துவின் தேர்வின் அடிப்படையில்) தேர்ந்தெடுக்கப்படும் என்று சொன்னார்கள். நான் முதற்கட்ட த்தேர்வில் எழுதிய கவிதையையே ஒருசில மாற்றங்கள் செய்து கொடுத்தேன். காரணம் நேயர்களை வெகுவாக கவரத்தக்க பாடுபொருள் அது.- வெளிநாட்டு இந்தியனின் உள்மன க்கிடக்கைகள் குறித்தது. எதிர்பார்த்தப்படி , முதல் நிலை பெற்ற நண்பரும் அதே பாடு பொருளை கொண்டிருந்தார். (பாராட்டுப்பெற்ற அந்தக்கவிதையை வேறொரு தருணத்தில் என் பதிவிலிடுவேன்). கவிதையைச் சிலாகித்து 'வாழ்த்துக்கள்" என்று எழுதி வைரமுத்து கையெழுத்திட்டிருந்த சான்று அளித்தார்கள்.

நிற்க, - இந்தியத்தூதர் பஃருக் மரைக்காயருடைய இலக்கிய முகத்தை வெளிப்படுத்துவதாகவும் இந்நிகழ்ச்சி அமைந்தது. நல்ல பேச்சாளர். கவிதைகளின் ரசிகர். உண்மையில் 'ரியாத் தமிழ்ச்சங்கத்தை" தொடங்கிட முதல் முயற்சியும் முழு முயற்சியும் எடுத்தவர்.

வைரமுத்துவின் பேச்சு பொதுவாக இருந்தது. சரளமான;நல்ல தமிழ்ப்பேச்சு. ரியாத் தமிழ்(ச்) சங்கத்தின் பெயர்பலகையை திறந்து வைத்து விட்டு 'இவ்வளவு சிறப்பான இந்த விழாவில் ஒரு குறையும் இருக்கிறது" என்று சொன்னவர், தமிழ் (ச்) சங்கம் என்ற பெயரில் 'ச்" விடுபட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். சவூதி அரேபியாவில் பொது இடத்தில் 'இச்" கூடாது என்பதால் விடுபட்டிருக்கலாம் என்று சிலேடை பேசினார். 'தலைவர்' கலைஞர் தம் வாழ்த்துக்களை இந்தியத்தூதருக்கும் இந்தியர்களுக்கும் சொன்னதாக தெரிவித்தார்.

சவூதி மண்ணின் புனிதம் போற்றியவர், 'வாழ்க்கை தரும் இந்த மண்ணுக்கு நீங்கள் யாவரும் விசுவாசமாக இருக்கவேண்டும்" என்று அறிவுறுத்தினார். முஹம்மது நபிகளின் பொன்மொழிகளை நினைவு கூர்ந்தார். 'சதா வணங்கிக்கொண்டிருப்பதை விட உழைக்கவும் வேண்டும்- உழைத்துண்பவரே உண்மையான இறை நம்பிக்கையாளர்".

உலகம் கண்ட உன்னத தலைவர்களை வரிசைப்படுத்தும் போது மைக்கேல் ஹார்ட் என்கிற கிறிஸ்தவ அறிஞரே முஹம்மது நபியைத்தான் முதன்மைப்படுத்தினார் என்று குறிப்பிட்டார். (THE 100). காந்தியடிகளை விட, ஐன்ஸ்டீனை விட, இயேசு கிறிஸ்துவை விட முஹம்மது நபியை முதன்மைப்படுத்த க்காரணம் 'சொல்லுக்கும் செயலுக்கும் சிறிதும் இடைவெளி இல்லாத தன்மை" என்று ஹார்ட் குறிப்பிட்டிருப்பதை எடுத்துச்சொன்னார்.

தாம் சினிமா என்கிற பள்ளத்தில் விழுந்துக்கிடப்பதாக கூறுபவர்களுக்கு பதில் தரும் போது, 'நான் எழுதிய இலக்கிய நூல்கள் 100 பேரை ச் சென்றடைகிற நேரத்தில் சினிமாப்பாட்டு 10000 பேரைச் சென்றடைந்து விடுகிறது" என்றார். 'இலக்கியம் என் இதயத்துக்காக.. சினிமாப்பாட்டு என் வயிற்றுக்காக.." என்றார். உயர்தரமான கவிப்பூர்வமான ஒரு பாட்டு நிராகரிக்கப்பட்டதையும் பின் அதே இடத்தில் 'உப்புக்கருவாடு.. ஊறவச்ச சோறு" ருசிக்கப்பட்டதையும் குறிப்பிட்டார்.

அடிக்கடி இதுப்போல இலக்கிய விருந்தளிக்குமாறு ரியாத் தமிழ்ச்சங்கத்தை க்கேட்டுக்கொண்டார். தன்னைப்போன்ற நட்சத்திர படைப்பாளிகளை மட்டும் அழைப்பது என்றில்லாமல் பிற இலக்கிய வாதிகளையும் அழைத்து இலக்கிய விழாக்களை கொண்டாடவேண்டுமென்றார். அப்துல் ரகுமான் ,மு.மேத்தா, தமிழன்பன் என்று சில பெயர்களையும் குறிப்பிட்டார். 'நட்சத்திரங்களை மிஞ்சிய சூரியர்களும் உண்டு" என்றவர் தத்தம் ஒருசில வரிகளிலேயே சில கவிஞர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு, எடுத்துக்காட்டாக 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" (கணியன் பூங்குன்றனார்) , தொடங்கி 'இரவிலே வாங்கினோம் - இன்னும் விடியவே இல்லை"(அப்துல் ரகுமான்), 'ஆண்களுக்கு பெண்களை விடச் சிறந்த ஆறுதல் இருக்கமுடியாது – பெண்களே இல்லாவிட்டால் ஆண்களுக்கு ஆறுதலே தேவைப்பட்டிருக்காது" என்று பெர்னார்ட் ஷாவையும் குறிப்பிட்டார்.

மறுநாள் ஒரு நட்சத்திர ஹோட்டலில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்ததாம். இத்தகவல் ஒலிப்பெருக்கி வாயிலாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே வாகன வசதி கருதி நான் அரங்கை விட்டு வெளியாகி இருந்ததால் கலந்துரையாடலில் கலந்துக்கொள்ள இயலவில்லை.

இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு உழைத்த அஹமது இம்தியாஸ், பேரா.மாசிலாமணி, ரஹமத்துல்லா,ஜெயசீலன்,ராதா கிருஷ்ணன்,ரஷீத் பாஷா, ஹைதர் அலி, சுவாமி நாதன், ஆரிஃப் மரைக்காயர், சஜ்ஜாவுதீன் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே..!

ரியாத் தமிழ்ச்சங்க வலைமனை: http://riyadhtamilsangam.com

3 comments:

Abu Umar said...

பாராட்டுகள்

Anonymous said...

test

Unknown said...

வணக்கம், இந்த நிகழ்ச்சியில் நானும் பார்வையாளனாகக் கலந்துகொண்டேன். அதனை பற்றி எழுதிய கட்டுரை இங்கே

http://kvraja.blogspot.com/2005/02/blog-post_20.html

ஒரு பொருத்தம் என்னவென்றால் இருவருமே ஒரே மாதிரியான தலைப்பை வைத்திருக்கிறோம்.