Tuesday, February 23, 2010

சொல் வெடித்த பொழுது...


வார்த்தைகளால் நெய்யப்பட்ட

எதிர்பார்ப்பின் சிறகுகள்

ஒரு மலை மீது

தவமிருந்த பொழுது

"மறந்துவிடு" என்னும் ஓர் சொல்

வெடித்துப் பரவியது.



காரணத்தின் கத்தியை

அறியாமலேயே ஏந்தியவனாய்

உயரப் பறப்பதற்காகவே

ஊதப்பட்ட பலூனில்

காற்றும் அறியாததொரு

கீறலைச் செய்து விட்டு

விகல்பமற்ற

குழந்தையாகிவிடுகிறாய்.



தகிக்கும் தாகத்தில்

தள்ளிவிட்ட பின்னர்

நிராசையின் கங்குகளால்

நிரப்பவும் செய்கிறாய்.

நீயறியாமலே.


மன்னிக்கவும் மறக்கவுமாய்

கற்று வைத்த வாழ்க்கை

கதவு திறந்துவிடுகிறது.



பயணிக்கத் தயாராயிருக்கும்

பாதங்களுக்கு

இன்னமும் நீண்டிருக்கின்றன

பாதைகள்.



நன்றி: கீற்று

1 comment:

அன்புடன் மலிக்கா said...

மிக அழகாய் வார்த்தைகள் கோர்க்கப்ட்டிருக்கின்றன.. வாழ்த்துக்கள்..

வாங்க நம்ம பக்கம்