Monday, February 12, 2007

கல்யாண் என்றொரு சகோதரன்.

கல்யாண் என்றொரு சகோதரன்.

சாகரன் என்கிற கல்யாணுடனான எங்கள் பழக்கத்திற்கு அதிக வயதில்லை என்றாலும் பல வருடங்கள் பழகிய ஒரு அந்நியோன்னிய உணர்வு. இன்னமும் அவருடைய அகால மரணத்தை நம்ப இயலவில்லை.

எப்போதும் உற்சாகத்தைத் தேக்கி வைத்திருக்கும் அந்த முகத்தைப் பார்த்தாலே, பார்ப்பவருக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

இருவாரங்களுக்கொரு முறை தொடர்ந்து எழுத்துக்கூடத்தில் சந்தித்து வந்திருக்கிறோம். எழுத்துக்கூடத்தின் ஒருங்கிணைப்பாளரே அவர்தான்.

(பஃக்ருத்தீன்) பெயரும் பதிவும் தினமலரில் குறிப்பிடப்பட்டதைக் குறித்து முதலில் செல்பேசியில் தொடங்கிய நட்பு.

ஊக்கமூட்டுவதில் மன்னன். "பாராட்டணும்யா, அப்பத்தான் திறமைலாம் வெளிப்படும்" என்பார்.

நல்ல திறமைசாலி. தேன்கூடு திரட்டி மட்டுமில்லாமல், பலப்பல மின் குழுமங்களின் வெற்றிக்கும் பின்னணியில் இருந்தவர். அதிகம் பேசாதவர் எனினும் நண்பர் சுபைர் போன்ற நிறைய பேர்களை எழுதவைத்தவர்.

'உங்களையெல்லாம் நண்பனாக அடைந்ததில் சந்தோஷமடைகிறேன்' என்று
ஒரு முறை
மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் சொல்லியிருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த பட்டிமன்றம் முடிந்ததும், ஓடிவந்து எங்களை கட்டிப்பிடித்துக்கொண்டு "கலக்கிட்ட..யா" என்று பாராட்டிய அந்தக்குரலை இனி கேட்க இயலாது.

இது சுயநலம் தான். எங்களை முன்வைத்தே இந்த இழப்பை சிந்திக்கிறோம். உண்மையில், அவர் வாழ்வின் எல்லா நிலைகளிலும் சிறந்து விளங்கினார். அவருடைய மூன்றே வயதான குழந்தை, இழப்பு அறியாமல், வந்திருந்த ஒரு 'அங்கிளை' விளித்தபோது... அனைவருக்கும் கரை உடைத்துக் கொண்டது கண்ணீர்.

'கூகுள் சாட்'டில் Kalyan J என்கிற பெயர் Not at Desk என்ற குறிப்புடன் இருப்பதை தாங்க முடியவில்லை.

மரணம் என்பது தத்துவமாகவே இருக்கிறது-நெருங்கியவர்களுக்கு வரும்வரை!

ரியாத் வாழ் தமிழர்கள் கல்யாண் விட்டுச்சென்றுள்ள வெற்றிடத்தில் தம் குடும்பத்தில் ஒரு சகோதரனின் இழப்பை உணர்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

கண்ணீருடன்
லக்கி ஷாஜஹான்
ஹ.பஃக்ருத்தீன்.

Sunday, February 11, 2007

நாகூர் ரூமியின் 'அடுத்த விநாடி'

நாகூர் ரூமியின் 'அடுத்த விநாடி'

தமிழ் எழுத்தாளரும் ஆங்கிலப்பேராசிரியருமான நாகூர் ரூமி எழுதிய இரண்டு நூல்களை நண்பர் ஒருவரிடமிருந்து பல முயற்சிகளுக்குப்பின் வாங்கி வந்தேன். 1). அடுத்த விநாடி 2). இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம். என்நூலகத்தில் வாங்கிச் சேர்க்க நான் கண்வைத்த இரண்டு புத்தகங்கள் அவை.

முதலில் 'அடுத்த விநாடி' யை சில விநாடிகள் மேலோட்டமாகப் புரட்ட நினைத்த என்னை முழுதுமாக அது ஈர்த்ததில், மற்ற வேலைகளை மறந்து அப்படியே உட்கார்ந்து விட்டேன்,

சுய முன்னேற்ற நூல்கள் பொதுவாக 'எழுதியவருக்கே' அதிகம் உதவுவதாக இதுவரையில் கேள்விப்பட்டுள்ள எனக்கு, இந்நூல் உண்மையில் நல்ல ஆச்சரியமளித்தது.
தொடக்கம் முதலே பிசிறு தட்டாத, ஈர்க்கும் நடை ரூமிக்கே உரிய கலை.

முதல் அத்தியாயத்தில் 'ஒரு ரகசியம்' சொல்லித்தொடங்குகிற இந்நூல் வெற்றிக்குரிய 'பயிற்சியை' மேற்கொள்பவர்களாக வாசகர்களை இறுதியில் ஆக்கிவிடுகிறது
எதிர்மறையான எண்ணங்களையும் உணர்வுகளையும்,பழக்கங்களையும் விடாதவரை வெற்றியும் நமக்கு எதிர்மறையாகவே இருக்கும்.

வெற்றிக்கு மாலையிட விரும்பும் யாரும் தன்னைத்தானே தோற்கடிக்கிற மனப்பாங்கை (Self Defeating Behaviour) விட்டும் கட்டாயம் மீள வேண்டும் என்பதை வலியுறுத்தும் முதல் அத்தியாயத்தில் வருகிற பொன்மொழியிது:"சிந்திப்பவர்கள் சாவதில்லை, சிந்திக்காதவர்கள் ஏற்கனவே செத்துப்போனவர்கள்"

வெற்றி என்பது பணம் புகழ் சம்பாதிப்பதோ, சொத்து சேர்ப்பதோ அல்ல. இவையெல்லாம் வெற்றியைக் குறிக்கலாம்.வெற்றியின் எத்தனையோ அடையாளங்களில் இவை ஒன்று அவ்வளவு தான்.

'தோல்வி, அவமானம், ஏமாற்றம் எனப்பலப் பெயர்களில் வெற்றி தொடக்கத்தில் வருவதுண்டு' என வெற்றியின் பல முகங்களை இரண்டாம் அத்தியாயம் பேசுகிறது.
உதாரணங்களாக, பத்தாயிரம் தடவை தோற்றிருந்தாலும், இன்று ஒரு மாபெரும் வெற்றியாளராக அறியப்படும் விஞ்ஞானி எடிசனும், பலப்பல தோல்விகளுக்குப் பின்னரே வெற்றிக்கொடி கட்டிய ஆபிரஹாம் லிங்கனையும் ஆசிரியர் சுட்டுகிறார்.

நம்பிக்கை என்கிற அற்புத விளக்கைப் பற்றி பேசும் போது, தெளிவில்லாமல் குழப்பமாக இருந்தால் எந்த நம்பிக்கையாலும் பயன் இல்லை, உணர்ச்சியோடும், தெளிவான நம்பிக்கையோடும் ஆழ்மனத்துக்கு அனுப்பப்படும்எண்ணங்கள் மட்டுமே வெற்றியாக நமக்குத் திரும்பி வரும்' என்கிறார்.

ஆசை என்னும் பிரார்த்தனை பற்றி, குறிக்கோளுடன் கூடிய ஆசையை ஆசிரியர் வலியுறுத்துகிறார்.

'எந்த ஒரு காரியத்திலும் வெற்றி பெற வெற்றியின் விதிகளைப் பின்பற்றுவதுடன் தோல்வியின் எந்தவிதியையும் பின்பற்றாதிருக்க வேண்டும் என்பதையும் ஒரு விதியாக உணர்த்துகிறார்.'தோல்வியின் விதிகளில் ஒன்று பதற்றம் (Tension) அடைவது'

நம்முடைய நாம், மற்றவருடைய நாம், உண்மையான நாம் என்று ஒவ்வொருவருள்ளும் இருக்கிற மூவரை வெளிப்படுத்தி அவரவர் வாழ்க்கை அவரவருக்கானதாக, உண்மையானதாக இருக்கவேண்டும் என்பதும் விளக்கப்பட்டிருக்கிறது.

வசதியற்றிருந்தாலும், செல்வமனநிலை கொண்டவர்களே வெற்றிக்குத் தகுதியானவர்கள் என்று விவரிக்கிற இந்நூல் பெரிய காரியங்களுக்கு வித்திடும் சிறிய அம்சங்களையும் நுண்ணோக்கிப்பார்வையில் கண்டு அவற்றின் முக்கியத்துவம் உணர்த்துகிறது.

நல்ல ஞாபகசக்தியின் முக்கியத்துவம் குறித்து கூற வருகிற ஆசிரியர், அதற்காக, தேவையற்ற எண்ணங்களை வைத்துக்கொண்டு குழப்பிக்கொள்ள கூடாது, குப்பைக்கூடையில் எறிந்துவிட வேண்டும் என்கிறார்.

அடுத்தவர் மீது பழி போடுவது, எதையும் நியாயப்படுத்த முயல்வது, கோபம், (பொருந்தாப்)பேச்சு என்கிற சுய சிறைகளிலிருந்து வெற்றிபெற விரும்புபவர்கள் வெளியேற விரும்பினால், இந்நூல் அதற்கு ஐயமின்றி உதவுகிறது.

முடிவெடுப்பதில் மதில்மேல் பூனையாக இருக்கக்கூடாது என்கிற கருத்து 'எண்ணித்துணிக கருமம்..' என்கிற குறளை நினைவுபடுத்துகிறது.

உடல்மொழி குறித்து சொல்லவரும்போது, உடல் என்பது சூட்சுமமான முறையில் மனது தான் என்கிறார்.

இறுதியாக, எளிய பயிற்சிகளாக 1) மூச்சுப்பயிற்சி, 2). கண் பயிற்சி 3). ரிலாக்சேஷன் 4). ஆல்ஃபா பயிற்சி 5) நினைவாற்றல் பயிற்சி 6). நினைத்தது நடக்க பயிற்சி 7). மன ஒருமைப்பாட்டுக்கான பயிற்சி ஆகிய பயிற்சிகளைத் தந்திருப்பதன் மூலம் இந்நூல் மேலும் சிறப்புடையதாகிறது.

முன்னேற்றத்தில் விருப்பமுடைய அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல்.

நாகூர் ரூமியின் சில படங்களை இங்கு காணலாம்:

http://www.box.net/public/2x36rq6zxxRumi's Picture

Thursday, February 08, 2007

கணவன் - மனைவி - ஆடை!

கடந்த வாரம் கணவனா மனைவியா என்ற தலைப்பில் ரியாத்-தில் நடந்த நகைச்சுவையான பட்டிமன்றத்தில் கணவனே என்று பேச "நேர்ந்தது".

'நேர்ந்தது' என்று சொல்லக்காரணம், ஏற்றுக்கொண்ட தலைப்புக்கேற்ப பேசினேன் என்பதைத்தான். இல்லாவிட்டால், எல்லாக் கணவர்களையும் போல நானும் மனைவியே! கட்சி தான் என்பது இங்கு கேடயக்குறிப்பு. (Disclaimer).

பேசி முடித்ததும், நிறையவே பாராட்டுக்கள் கிடைத்தன என்றாலும் ஒரு சகோதரியின் பாராட்டு புன்னகைக்க வைத்தது. "நல்லாயிருந்துச்சுங்க! - இன்னும் கொஞ்சம் சிரிச்சிக்கிட்டே பேசி இருக்கலாம்!"

உண்மையைச்சொன்னால், மேடை அனுபவம் அதிகமில்லாத நிலையில், மேடைக்கூச்சத்தை சரிசெய்துக்கொள்ள கிடைத்த வாய்ப்பை தவறு செய்யாமல் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். நிறைய பேசும் எண்ணமும், குறிப்புகளும் வைத்திருந்தும், பதவிக்காலத்தில் அரசியல்வாதிகள் நினைவுபடுத்திக்கொள்ளும் வாக்குறுதிகளைப் போலாகிவிட்டிருந்தன என் மேடைநேரத்துச் சிந்தனைகள்.

மேடையை விட்டு இறங்கியதும் தான், தேர்வு முடிந்த மாணவனுக்கு ஞாபகம் வருவது போல, வரிசையாக நினைவுகளில் அலைமோதின குறிப்புகள்."அட, அந்த ஒரு சிரிப்பையும் சொல்லியிருக்கலாமே...?"

அன்றைய இரவில் எனக்கு இதே தலைப்பினையொட்டி ஒரு மின்னல் கீற்று ஞாபக அ(இ)டுக்குகளிலிருந்து கண்விழித்தது.

கிட்டத்தட்ட பதினைந்து, பதினாறு ஆண்டுகளேனும் இருக்கலாம், ஆடை என்கிற தலைப்பில் கவிக்கோ அப்துல்ரகுமான் எழுதிய ஒரு ஆன்மீகக் கட்டுரை வாசித்து!

ஜூனியர் விகடனோ, ஜூனியர் போஸ்ட்டோ, நினைவில்லை, ஆறாவது விரல் என்கிற தொடரில் எழுதியிருந்தார். நினைவிலிருக்கும்வரை எழுதுகிறேன், தவறாக ஏதும் இருப்பின், அறிந்தவர்கள் சுட்டினால் திருத்திக்கொள்வேன்.

ஆன்மீகம் என்று வரும்போது, இலக்கியவாதிகளைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்பது என் பொதுவான கொள்கை! காரணம், இலக்கியம் என்பது என்னதான் காலக்கண்ணாடியாக கருதப்பட்டாலும், குவிஆடியாகவோ, குழி ஆடியாகவோ-எதையும் மிகைப்படுத்தவோ, குறைப்படுத்தவோ-செய்கிறது என்பதென் எண்ணம்.

ஆயினும்,யோசித்துப்பார்த்தவரை 'ஆடை' என்கிற கவிக்கோவின் கட்டுரை இயல்பாக இருப்பதாகவே உணர்கிறேன். எனவே, நினைவிலிருந்து இங்கு பதிவிறக்கம் செய்துவைக்கிறேன். ஏதும் தவறாக எழுதி இருப்பதாக அறிந்தவர் சுட்டினால் திருத்திக்கொள்கிறேன்.

குர்ஆனில் கணவன் மனைவி குறித்து சொல்லப்படும் ஒரு உவமைக்கு அப்துல்ரகுமான் அதில் விளக்கமளித்திருந்தார்:

சூரத்துல் பகரா என்கிற அத்தியாயத்தில் 187ம் வசனத்தில் "அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை!" என்று சொல்லப்பட்டுள்ளது! அதாவது, கணவன் மனைவிக்கு ஆடை! மனைவி கணவனுக்கு ஆடை!

மணவாழ்க்கையில் யார் உயர்ந்தவர்கள் என்பதில் கணவன், மனைவி இடையே தான்மை (Ego) விளையும் நிலையில் இவ்வசனம் தீர்வாய் நிற்கிறது.இருவரும் ஒருவருக்கொருவர் ஆடை. எனவே, இப்பதவிகளைப் பொறுத்த அளவில் இருவரும் சமமே!

அதி முக்கியத் தேவைகள் மூன்றில், உணவை, உறைவிடத்தை உவமையாகக் கூறாமல், உடையைச் சொன்னதில் ஆழமான பொருள் இருக்கிறது.ஏனெனில், உயிரினங்களில் மனிதன் மட்டும் தான் ஆடை அணிகிறான். பாலுணர்வையும், அழகாக, திருமணம் என்கிற வரம்புக்குட்பட்டு வெளிப்படுத்துவது மனித இனம் மட்டுமே.அதனால் தான் அவன் 'மண'க்கிறான்.

திருமணம் என்பதை ஆணும் பெண்ணும் 'ஆடை' அணியும் நிகழ்வாகச் சொல்லப்பட்டிருப்பது சிந்தனைக்குரியது!


அவரவர் அணியும் ஆடையை அவரவரே தேர்ந்தெடுக்க வேண்டும். தன் விருப்பம் போல் தேர்ந்தெடுத்ததை உடுத்தும் போது தான் மனமகிழ்வு இருக்கும். திருமண உறவு என்பதும் அப்படித்தான்.விரும்பியதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் விருப்பத்தோடு உடுத்த முடியாது.

அடுத்து, ஆடை நமக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும். இவ்வுலகின் சூழ்நிலைகள், காரணங்களில் ஒவ்வொருவரும் ஆயத்த ஆடைகளே! அதில் அவரவர் தம் விருப்பத்துக்கும், பொருத்தத்துக்கும் ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்வதே நலம் பயக்கும்.

ஆடையானது பாலுறுப்புகளை மறைப்பதைப் போல கணவன் என்கிற ஆடை கட்டிக்கொண்டிருக்கும் ஒரு பெண் தவறான பார்வைகளிலிருந்து மறைக்கப்படுகிறாள். மனைவி என்கிற ஆடை அணிந்துக்கொண்டிருக்கும் ஒரு ஆணும், அவ்விதமே மறைக்கப்படுகிறான்,

தட்ப வெப்பங்களிலிருந்து நம்மை ஆடையானது காப்பது போல, இன்ப துன்பம் தாக்காமல், கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு தருகிறார்கள்.

ஆடையானது அழுக்குப்படாமல் உடலைக் காப்பது போல, தீய பழக்கங்கள் என்ற அழுக்குப்படாமல் கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் காத்துக்கொள்ள வேண்டும்.

உடற்குறைகளை வெளித்தெரியாமல் ஆடை மறைப்பது போல், கணவனின் குறைகளை மனைவியும், மனைவியின் குறைகளை கணவனும் மறைக்க வேண்டும்.

சமூகத்தில்,ஆடை என்பது கெளரவத்துக்காக அணியப்படுகிறது, கணவனும், மனைவியும் ஒருவர் மற்றவரின் கெளரவமாய் அமைய வேண்டும்.


அதுபோலவே, ஆடை அடையாளத்துக்காகவும் அணியப்படுகிறது. கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவரின் அடையாளமாய் இருக்க வேண்டும்.


ஆடை அழகுக்காக அணியப்படுகிறது. அதுபோல கணவனும் மனைவியும் அழகுப்படுத்துபவர்களாக இருக்கவேண்டும். சிறந்த அழகு தூய்மை தான்.எனவே, ஒருவருக்கொருவர் ஆடையாக இருவரும் தூய்மையாக இருக்க வேண்டும்.

ஆடை, நாகரீகத்துக்கான குறியீடு. ஆடை இல்லாதவன் அரை மனிதன். திருமணத்தில் தான் ஆணும் பெண்ணும் முழுமையடைகிறார்கள்.

ஆடையில் ஒரு சமூகத்தின் பண்பாடு வெளிப்படும். கணவன் மனைவி என்கிற ஆடையிலும்!

ஆடை அழுக்காகி விட்டால், தூக்கி எறிந்துவிடக்கூடாது. சலவை செய்து அணிந்துக்கொள்கிறோம்.சற்றே கிழிந்து விட்டாலும், தைத்து அணிந்துக்கொள்கிறோம். கணவனிடமோ, மனைவியிடமோ, குறைகள், கோபதாபங்கள் ஏற்பட்டால், பிரிந்து விடக்கூடாது. சமாதானமாகி விட வேண்டும்.

ஆயின், அணியவே முடியாத அளவுக்கு அழுக்கடைந்தாலோ, தைக்கவே இயலாத அளவுக்கு கிழிந்துப் போனாலோ, ஆடை என்பது அதன் பொருளை இழந்து விடும் நிலையில் தூக்கி எறிந்து விட்டு புதிய ஆடையைத் தைத்துக்கொள்ள வேண்டியது தான்.

'அறிவு'க்கனி உண்டவுடன் ஆதாமும் ஏவாளும் செய்த முதல் வேலை ஆடை அணிந்ததாகத்தான் இருக்கும். அறிவிழந்து பைத்தியம் முற்றியவர் செய்யும் முதல் வேலையோ 'ஆடை'யைக் கிழிப்பது தான். காரணமின்றி, தத்தம் "ஆடை"யை கிழிக்கிற கணவனோ, மனைவியோ பைத்தியக்காரர்கள் தான்!

(கவிக்கோவின் குர்ஆன் சார்ந்த சிந்தனைகளை, நினைவிலிருந்தவரை என் எழுத்துக்களில் தந்திருக்கிறேன். தவறுகள் காணுமிடத்து, தயங்காமல் சுட்டும் படி மறுபடி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி).