Tuesday, December 04, 2007

ஒரு பயணத்தின் பின்னால்!

ஒரு பயணத்தின் பின்னால்!


மாடொன்று சினிமா போஸ்டரை சாவகாசமாய்த் தின்றுக்கொண்டிருக்க, சாலையின் குறுக்கே வந்துவிட்ட மொபெட்டை, தன் பீடத்திலிருந்து இறங்கி வந்து வைதுக்கொண்டிருந்தார் போக்குவரத்துக்காவலர்'- என்றெல்லாம் எழுத இடம் தராத ரியாத் மாநகரச் சாலை. பஸ்களும் ஸ்கூட்டர்களும் ஆட்டோவும் இல்லாத சாலையில் கார்களே கார்களை முந்திக் கொண்டிருந்தன. அலுவலகத்தின் உள்ளமர்ந்து சாலையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அலுவலகம் சாத்துவதற்கு ஐந்து நிமிடங்களே இருந்தன. அப்போது அரக்கப் பரக்க வந்த அந்த இரு மண்ணின் மைந்தர்களுடன் பின் தொடரும் ஆடு போல வந்தார் அவர். தமிழர் என்பது தோற்றத்திலேயே தெரிந்தது.

மண்ணின் மைந்தர் தான் முதலில் வாய் திறந்தார்.
"அஸ்ஸலாமு அலைக்கும்!"
"வ அலைக்கும் ஸலாம்" (தொடரும் உரையாடலை நாம் தமிழில் பார்ப்போம்)
"நாளை மதறாஸுக்கு ஏதும் விமானம் உள்ளதா?" என்றார் வந்தவர்.
பொறுப்பாளர் (கஃபீல்) போலத் தெரிந்தார்.

கணினியில் சோதித்த என் சக ஊழியர் மோகன் "இன்று இரவுக்கே உள்ளது" என்றார்.

உடனே அந்த தமிழர் பக்கம் (அவர் தான் பயணி போலும்) திரும்பிய அந்த ஆள் "இன்று இரவு இருக்கிறதாம் - போகிறாயா?" என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

அவருக்கு பதிலளிக்காத அந்த தமிழர் மோகனிடம் தமிழிலேயே "நாளைக்கு இருக்கான்னு பாருங்களேன்" என்றார். ஏதோ சோகம் போல காணப்பட்டார்.

"இல்லீங்க! நாளைக்கு சவூதியா கிடையாது, கல்ஃப் ஏர் தான் - அது உங்களுக்குப் பரவாய்ல்லியா"
"கல்ஃப் ஏர் சுத்திக்கிட்டுப்போவாங்க! - அப்படீன்னா நாளை மறுநாள் சவூதியா இருக்குமா பாருங்களேன்?"
"நாளை மறுநாளெல்லாம் கிடையாது - இதை விட்டா அடுத்து வெள்ளிகெளம தான்"

இதற்கிடையில் சவூதிக்காரர் குறுக்கிட்டு "எஷ் ஃபீ?" ( என்ன சேதி?) என்று கேட்க, மோகன் அவருக்கு விளக்கினார்.

அவர் உடனே "போகணும்னு முடிவு பண்ணி விட்டாய். இன்று இரவே போவதற்கென்ன?" என்று தன் ஊழியரைப் பார்த்துக் கேட்டார்.

அவர் அதற்கு ஏதோ சொல்ல வாய் திறக்குமுன் அங்கு தேனீர் கொண்டு வந்த ரஷீத் அவரை சற்று உற்றுப் பார்த்துவிட்டு
"நீங்க ஜாஃபர் இல்லே? 'சஜினி' ல கூட இருந்தீங்களே?"

"ஆமா ரஷீத் பாய், என்ன மறந்துட்டீங்களா? நாந்தான் இங்க அழைச்சிட்டு வந்தேன்"
"சஜினிலருந்து முடிச்சிட்டு போயிட்டீங்கன்னு சொன்னாங்க, எப்படி இருக்கீங்க?"
"ம் இருக்கேன். நீங்கல்லாம் எப்படி இருக்கீங்க?"
"நமகென்னங்க, அதுபோகட்டும், புது விசாவுல எப்ப வந்தீங்க?, என்ன வேலை?, எங்கே வேலை?"
"வந்து இருபது நாள் தாங்க ஆகுது, இங்க தான் எக்ஸிட் 10ல"
"வந்து இருபது நாள்ல ஊருக்குப் போறேன்றீங்க, ஏதும் எமர்ஜென்ஸியா?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க, எனக்குப் பிடிக்கலைங்க - முடிச்சுட்டுப் போறேன்"

அதற்குள் என் பக்கம் ரஷீத் திரும்பி ஜாஃபர் பற்றி ஒரு சிறு அறிமுகம் கொடுத்தார். ரஷீதும் நானும் பேசிக்கொண்டிருந்த போது ராஜு (இன்னொரு ஊழியர்) அவரருகில் அமர்ந்துக்கொண்டு "ஏதாச்சும் வேலையில கஷ்டமிருக்கா?" - சக தமிழனுக்கு உதவும் துடிப்பு கிரிக்கெட் ஸ்கோர் தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் போல.

"அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க" என்றவர் மென்று விழுங்கி....
"ஹவுஸ் டிரைவர் வேலை தான். வேலை ஒண்ணும் கஷ்டமில்லீங்க, ஆனால், ரெஸ்ட் இல்லீங்க" என்றார்.

அவர் சொன்ன தோரணையிலும் தொனியிலும் அவர் சொல்வது உண்மை இல்லை என்று விளங்கி விட -
-இப்போது ராஜு அவரை நோக்கி
"நீங்க நம்மாளுங்கறதால கேட்கிறோங்க, ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க இவங்கிட்ட பேசிப்பார்க்கலாம்"

ரஷீத் தொடர்ந்தார்: "ஜாஃபர், புது விசாவுக்கு எத்தனி செலவு பண்ணி வந்திருப்பீங்க, அந்த செலவையாவது எடுக்க வேண்டாமா? - சொல்லுங்க உங்க கஷ்டத்தை - முடிஞ்சா 'ரிலீஸா'வது கேட்டு பேசிப்பார்ப்போம்"

ரிலீஸ் என்கிற ஆங்கில வார்த்தையை காதில் வாங்கிய அந்த ஆள் வேகமாக கடங்காரனை கண்டவன் போல திரும்பி "என்ன பேசுகிறீர்கள்?" என்று ரஷீதைப் பார்த்துக் கேட்க ரஷீத் அதற்கு "வந்து இருபது நாளில் ஊருக்குப் போகிறாரே, ஏன் எதற்கு என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம்"

அந்த ஆள் முழுதுமாக ரஷீத் பக்கமாகத் திரும்பி தன் தலையில் இருந்த குறுவட்டை எடுத்து சரி செய்த படி,
"நீயாவது கேட்டுச் சொல்லு - நான் எவ்வளவோ கேட்டும் எதுவுமே சொல்ல மாட்டேன் என்கிறான்"

ராஜு குறுக்கிட்டு "ரெஸ்ட்டே இல்லை என்று சொல்கிறார்"

"தய்யிப், அதை என்னிடம் சொல்லலாமில்லையா.." என்று கூறியவர் தன் ஊழியரை நோக்கித் திரும்ப அவர் அவசரம் அவசரமாக கைகளை ஆட்டி ரஷீதை நோக்கி "அவங்கிட்ட ஏதும் சொல்ல வேணாம்னு சொல்லுங்க" என்கிறார்.

அவருக்காக உதவ முன்வந்த ரஷீதுக்கும் ராஜுவுக்கும் அதிர்ச்சி. 'என்ன இந்த ஆள் இப்படிச் சொல்கிறார்' என்பது போல.

சன்னமான குரலில் அவரே தொடர்ந்து, 'நான் ஊருக்குப் போனாப் போதுங்க' என்று சொல்ல அதற்கு மேல் அவருக்காக பேச ஏதுமில்லாத ஏமாற்றத்தில் "சரி, உங்க இஷ்டம், கிளம்புங்க" என்று சொல்லி விடுகிறார்.

அதன் பின் ஒருவழியாக அன்றைய இரவு விமானத்துக்கே டிக்கட் வாங்கிக்கொண்டு அவர்கள் சென்று விட்டாலும் நமது அலுவலர்களுக்கிடையில் தூவானம் போல தொடர்கிறது அந்தப் பேச்சு.

"ஆளு முன்ன மாதிரி இல்ல. ஏதொ ஒடஞ்சிப்போயிதெரியறார்" - இது ரஷீத்.
"ஆமாங்க, ஏ...அதோ இருக்கு" - ராஜு தன் பாணியில்

"ஒண்ணு இவர்கிட்டயோ இல்ல அவங்கிட்டயோ ஏதோ விஷயம் இருக்கு" என்கிறார் சைஃபுல்லா - காசாளர்.

"நான் நினைக்கிறேன்..... என்று பலவிதமாக அனைவரும் அதையே அசைபோட்டபடி பேசிக்கொண்டிருக்க கடைசியாக மோகனே,"உண்ம என்னன்னு தெரியாமல் ஆளாளுக்கு பேசிகிட்டிருக்கிறோம் - சரி, சரி, ராஜு சாத்துங்க போலாம்"

புதிய விசாவில் வந்து இருபதே நாட்களில் போக வேண்டுமென்றால்....? என்ன காரணமிருக்கும் - எனக்கும் யோசிக்க யோசிக்க ஒன்றும் சரியாக புலப்படவில்லை அல்லது நிறைய தவறாகப் புலப்பட்டது.

வெளியே வந்து என் வாகனத்தை திறக்குமுன் மகள் வாங்கிவரச் சொல்லியிருந்த ஸ்ட்ராபெர்ரி நினைவுக்கு வர, அருகிலிருக்கும் தமீமி மார்க்கெட்க்கு சென்றேன். அங்கு எனக்கு காத்திருந்த ஆச்சர்யம் போல அவர். அதே ஜாஃபர். சாக்லேட்டுகளை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். "என்னங்க, இன்னும் ஏர்போர்ட் கிளம்பலையா?" என்றேன்.

"தோ, டிரைவர் வண்டியோட வாசல்ல இருக்கிறார், கிளம்பிக்கிட்டே இருக்கேன்" என்றார். முகத்தில் சற்று மலர்ச்சி தென்பட்டது. தூக்கத்திலிருந்து விழித்து முகம் கழுவி வந்தவரைப் போல.

ஒரு குழந்தை போல சாக்லேட்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தவரிடம் கேட்டேன்:
"எத்தன குழந்தைங்க உங்களுக்கு"
மந்தகாசமாய்ப் புன்னகைத்துச் சொன்னார்:

"கல்யாணம் ஆகியே ரெண்டு மாசந்தாங்க ஆகுது".

--------------------oOo------------------------

நன்றி: இஸ்லாம்கல்வி.காம்

9 comments:

அகமது சுபைர் said...

சார்..உங்களுக்கு கவிதை மட்டும் தான் தெரியும் என்றிருந்தேன்..

சிறுகதை அதி அற்புதம்...

manjoorraja said...

கல்யாணம் ஆகி இரண்டுமாசத்தில் இந்த ஆள் எதற்கு இவ்வளவு செலவு செய்து வரணும்.

வந்தப்பிறகு கொஞ்சம் கூட யோசிக்காமல் இப்படி செய்வதும்.

பலர் இப்படித்தான் இருக்கிறார்கள் அரபு நாடுகளில்.

பாச மலர் / Paasa Malar said...

ரியாத் மணத்துடன் இந்திய மனதுடன் ஒரு கதை..நன்றாக இருக்கிறது..

Jafar ali said...

இது கதையல்ல! அரபு நாடுகளில் தினம் காணக்கூடிய நிஜம். எழுத்து நடை அற்புதம்! பாராட்டுகள் பஃக்ருத்தீன்!!

இப்னு ஹம்துன் said...

அய்யா அகமது சுபைர்,
நன்றி..
அது என்னங்க 'சார்?'

இப்னு ஹம்துன் said...

மஞ்சூரார் அவர்களே..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'அரபுநாடுகளில் இருக்கும்போது ஊருக்குப்போனால் போதும் என்றிருப்பதும், ஊருக்குப் போனதும் அடுத்த விசாவுக்கு ஆலாய்ப் பறப்பதும்'....நம்ம ஊர் யதார்த்தம்தானுங்க!

இப்னு ஹம்துன் said...

பாசமலர் அக்கா,
நன்றி.
உண்மையில் இந்தக்கதை எழுதி இரண்டு வருடமாவது இருக்கும்.
பலமாதங்களாக வலைப்பூவைக் கூட எட்டிப்பார்க்காமல் இருந்தேன். உங்கள் சிறுகதை ஒன்றால் உந்தப்பட்டதால் தான் இக்கதையை (இரண்டு வருடத்திற்குப்பிறகு) வெட்டி ஒட்டினேன்.

இப்னு ஹம்துன் said...

Jafar safamarva, நன்றி.
கதை நாயகனின் பெயருடையவரே வந்து 'கதையல்ல நிஜம்' என்பது....!!!

இந்தக் கதையை இரண்டு வருடங்களுக்கு முன் எழுதிய புதிதில், மின்னரட்டையில் வந்த மூத்த பதிவரொருவர் 'சாத்தியமேயில்லை' என்றார். அவர் சூழலில் அது சரியே!
அவர் கருத்துக்கு விடையாக உங்கள் கருத்து அமைந்துள்ளது!

அகமது சுபைர் said...

//அய்யா அகமது சுபைர்,
நன்றி..
அது என்னங்க 'சார்?'//


ஒரு மரியாத :-)