புதுச்சேரி மின்னிதழின் தள பொறுப்பாளர் கவிஞர். இராச தியாகராசன் அவர்களின் அறிவிப்பை ஏற்று பாவேந்தர் நினைவு நாளுக்காக புதுச்சேரி மின்னிதழில் வெளியிடுவதற்காக சில நாட்களுக்கு முன் எழுதிய கவிதை:
பாவேந்தர் நினைவாக
புகை மறப்போம் ஆனந்தம் கொள்வோம்
--------------------------------------------------------------------------------
தேசத்தின் வளமதனை சுருட்டுகின்ற தீயவர் போல்
தேகத்தின் நலமதனை சுருட்டுகின்ற வெண்சுருட்டே - நீசமுள்ள
நாகத்தின் நஞ்சுபோல் நுனிநாக்கில் நெருப்பேந்தி
நாசத்தின் வாசலுக்கு நகர்த்துகிறாய் நண்பரையே!
கவலை என்பார்உனை கைப்பிடித்த காரணத்தையே!
அவலை நினைத் துரலையே இடிப்பாருண்டோ..... - எவரும்
தீவலையில் வீழ்ந்து திரும்பிடவே இயலாமல்
தவணையிலொரு கொள்ளியினைத் தனக்கே வைப்பாரோ.....?
தீப்பழக்கம் அல்ல இது புகைப்பழக்கம் என்பாருண்டு
தீக்கு வழக்கம் புகையாய் தன்னைத் தொடங்குவதே - ஆக்கமின்றி
தேக்கமுறுமே தேக நலனுடன் தேடிடும் பொருளும்
தூக்கமி ல்லாத முகத்தைப் போல் முதுமைத் தோற்றம்.
சிந்திக்கப் புகைப்பாரும் சிந்தித்தால் புகைப்பாரோ.......
நிந்தித்து என்னபயன் நோய் வந்த பின்னாலே - எந்திக்கும்
ஏதுமில்லை ஒரு குரலும் புகையினைப் போற்றி
ஆதலினால் புகை மறப்போம் ஆனந்தம் கொள்வோமே!
_____________________________பாவலர் பக்ருதீன்,பறங்கிப்பேட்டை
நன்றி: www.pudhucherry.com