Monday, February 28, 2005

அது ஒரு பொன் மாலைப் பொழுது!

(இன்று காலை என் வலைப்பதிவு பக்கத்தை பார்தத எனக்கு அதிர்ச்சி. என் வலைப்பதிவில் புதிதாகப் பதிந்திருந்த 'ஒரு பொன் மாலைப்பொழுது' காணாமல் போயிருந்தது. காரணம் தெரியவில்லை. எனினும், அதையே மீண்டும் பதிகிறேன்.)


கடந்த 17.02.05 வியாழன் மாலை ரியாத் வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு இனிய மாலைப்பொழுதாக அமைந்தது. ஆம் அன்று தான் ரியாத் தமிழ்(ச்) சங்கம்
தொடங்கப்பட்டது. சவூதி அரேபியாவிற்கான இந்தியத்தூதர் மேதகு எம்.ஓ.ஹெச். பஃரூக் மரைக்காயர் தலைமையில் நடைபெற்ற விழாவின் சிறப்பு விருந்தினராக கவிப்பேரரசு வைரமுத்து வந்திருந்தார்.

இந்த இனிய நிகழ்ச்சியின் அமைப்பாளராக அஹமது இம்தியாஸ் திறம்பட செயலாற்றியிருந்தார். உண்மையில் ரியாத் தமிழ் ச்சங்கம் என்பது ரியாத்-தில் பல்வேறு பெயர்களில் இயங்கி வந்த ஆறு தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு ஆகும். அவற்றுள் குறிப்பிடத்தக்கதாக தமிழ் கலாச்சாரக் கழகம். அதன் தலைவர் திரு. மாசிலாமணி என் இனிய நண்பர். ரியாத்திலுள்ள மன்னர் சவூத் பல்கலைக்கழகத்தில் லேசர் துறையில் பேராசிரியர்.நோபல் பரிசு ப்பெற்ற விஞ்ஞானிகள் சந்திரசேகர் அப்துஸ்ஸலாம் ஆகியோருடன் பணியாற்றியவர். சிறந்த கவிஞர். சிறந்த விஞ்ஞானி. எல்லாவற்றுக்கும் மேலாக மிகச்சிறந்த மனிதர். என் கவித்திறனை மேலும் மேலும் முன்னெடுத்து ச் செல்ல விழைபவர்.

ரியாத் தமிழ்ச்சங்கத் தொடக்க விழாவின் கவியரங்கத்திற்காக நடத்தப்பட்ட கவிதைப்போட்டியில் கலந்துக்கொள்ளுமாறு பெரிதும் என்னை கோரியிருந்தார். அதன்படி நானும் கலந்துக்கொள்ள, 65க்கும் மேற்பட்ட கவிஞர்களின் - ஏற்பாட்டாளர்களால் தரப்பட்ட தலைப்புக்கேற்ப எழுதப்பட்ட கவிதைகளில்-முதற்கட்ட ஆய்வில் பதினாறு பேர் தேர்வு செய்யப்பட்டனர். என் கவிதைக்கு இரண்டாம் நிலை என்று சொல்லப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட பதினாறு பேரும் அவரவர் விரும்பும் தலைப்புகளில் 40 வரிகளுக்குள் கவிதை எழுதி கவியரங்க அமைப்பாளர் திரு. மோகனிடம் சமர்ப்பித்து விடவேண்டுமென்றும் அந்த பதினாறில் சிறந்த பத்து கவிதைகள் கவியரங்கத்திற்காக (திரு.வைரமுத்துவின் தேர்வின் அடிப்படையில்) தேர்ந்தெடுக்கப்படும் என்று சொன்னார்கள். நான் முதற்கட்ட த்தேர்வில் எழுதிய கவிதையையே ஒருசில மாற்றங்கள் செய்து கொடுத்தேன். காரணம் நேயர்களை வெகுவாக கவரத்தக்க பாடுபொருள் அது.- வெளிநாட்டு இந்தியனின் உள்மன க்கிடக்கைகள் குறித்தது. எதிர்பார்த்தப்படி , முதல் நிலை பெற்ற நண்பரும் அதே பாடு பொருளை கொண்டிருந்தார். (பாராட்டுப்பெற்ற அந்தக்கவிதையை வேறொரு தருணத்தில் என் பதிவிலிடுவேன்). கவிதையைச் சிலாகித்து 'வாழ்த்துக்கள்" என்று எழுதி வைரமுத்து கையெழுத்திட்டிருந்த சான்று அளித்தார்கள்.

நிற்க, - இந்தியத்தூதர் பஃருக் மரைக்காயருடைய இலக்கிய முகத்தை வெளிப்படுத்துவதாகவும் இந்நிகழ்ச்சி அமைந்தது. நல்ல பேச்சாளர். கவிதைகளின் ரசிகர். உண்மையில் 'ரியாத் தமிழ்ச்சங்கத்தை" தொடங்கிட முதல் முயற்சியும் முழு முயற்சியும் எடுத்தவர்.

வைரமுத்துவின் பேச்சு பொதுவாக இருந்தது. சரளமான;நல்ல தமிழ்ப்பேச்சு. ரியாத் தமிழ்(ச்) சங்கத்தின் பெயர்பலகையை திறந்து வைத்து விட்டு 'இவ்வளவு சிறப்பான இந்த விழாவில் ஒரு குறையும் இருக்கிறது" என்று சொன்னவர், தமிழ் (ச்) சங்கம் என்ற பெயரில் 'ச்" விடுபட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். சவூதி அரேபியாவில் பொது இடத்தில் 'இச்" கூடாது என்பதால் விடுபட்டிருக்கலாம் என்று சிலேடை பேசினார். 'தலைவர்' கலைஞர் தம் வாழ்த்துக்களை இந்தியத்தூதருக்கும் இந்தியர்களுக்கும் சொன்னதாக தெரிவித்தார்.

சவூதி மண்ணின் புனிதம் போற்றியவர், 'வாழ்க்கை தரும் இந்த மண்ணுக்கு நீங்கள் யாவரும் விசுவாசமாக இருக்கவேண்டும்" என்று அறிவுறுத்தினார். முஹம்மது நபிகளின் பொன்மொழிகளை நினைவு கூர்ந்தார். 'சதா வணங்கிக்கொண்டிருப்பதை விட உழைக்கவும் வேண்டும்- உழைத்துண்பவரே உண்மையான இறை நம்பிக்கையாளர்".

உலகம் கண்ட உன்னத தலைவர்களை வரிசைப்படுத்தும் போது மைக்கேல் ஹார்ட் என்கிற கிறிஸ்தவ அறிஞரே முஹம்மது நபியைத்தான் முதன்மைப்படுத்தினார் என்று குறிப்பிட்டார். (THE 100). காந்தியடிகளை விட, ஐன்ஸ்டீனை விட, இயேசு கிறிஸ்துவை விட முஹம்மது நபியை முதன்மைப்படுத்த க்காரணம் 'சொல்லுக்கும் செயலுக்கும் சிறிதும் இடைவெளி இல்லாத தன்மை" என்று ஹார்ட் குறிப்பிட்டிருப்பதை எடுத்துச்சொன்னார்.

தாம் சினிமா என்கிற பள்ளத்தில் விழுந்துக்கிடப்பதாக கூறுபவர்களுக்கு பதில் தரும் போது, 'நான் எழுதிய இலக்கிய நூல்கள் 100 பேரை ச் சென்றடைகிற நேரத்தில் சினிமாப்பாட்டு 10000 பேரைச் சென்றடைந்து விடுகிறது" என்றார். 'இலக்கியம் என் இதயத்துக்காக.. சினிமாப்பாட்டு என் வயிற்றுக்காக.." என்றார். உயர்தரமான கவிப்பூர்வமான ஒரு பாட்டு நிராகரிக்கப்பட்டதையும் பின் அதே இடத்தில் 'உப்புக்கருவாடு.. ஊறவச்ச சோறு" ருசிக்கப்பட்டதையும் குறிப்பிட்டார்.

அடிக்கடி இதுப்போல இலக்கிய விருந்தளிக்குமாறு ரியாத் தமிழ்ச்சங்கத்தை க்கேட்டுக்கொண்டார். தன்னைப்போன்ற நட்சத்திர படைப்பாளிகளை மட்டும் அழைப்பது என்றில்லாமல் பிற இலக்கிய வாதிகளையும் அழைத்து இலக்கிய விழாக்களை கொண்டாடவேண்டுமென்றார். அப்துல் ரகுமான் ,மு.மேத்தா, தமிழன்பன் என்று சில பெயர்களையும் குறிப்பிட்டார். 'நட்சத்திரங்களை மிஞ்சிய சூரியர்களும் உண்டு" என்றவர் தத்தம் ஒருசில வரிகளிலேயே சில கவிஞர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு, எடுத்துக்காட்டாக 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" (கணியன் பூங்குன்றனார்) , தொடங்கி 'இரவிலே வாங்கினோம் - இன்னும் விடியவே இல்லை"(அப்துல் ரகுமான்), 'ஆண்களுக்கு பெண்களை விடச் சிறந்த ஆறுதல் இருக்கமுடியாது – பெண்களே இல்லாவிட்டால் ஆண்களுக்கு ஆறுதலே தேவைப்பட்டிருக்காது" என்று பெர்னார்ட் ஷாவையும் குறிப்பிட்டார்.

மறுநாள் ஒரு நட்சத்திர ஹோட்டலில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்ததாம். இத்தகவல் ஒலிப்பெருக்கி வாயிலாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே வாகன வசதி கருதி நான் அரங்கை விட்டு வெளியாகி இருந்ததால் கலந்துரையாடலில் கலந்துக்கொள்ள இயலவில்லை.

இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு உழைத்த அஹமது இம்தியாஸ், பேரா.மாசிலாமணி, ரஹமத்துல்லா,ஜெயசீலன்,ராதா கிருஷ்ணன்,ரஷீத் பாஷா, ஹைதர் அலி, சுவாமி நாதன், ஆரிஃப் மரைக்காயர், சஜ்ஜாவுதீன் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே..!

ரியாத் தமிழ்ச்சங்க வலைமனை: http://riyadhtamilsangam.com

Wednesday, February 23, 2005

வாக்குமூலம்

என் வாசகப்பரப்பை விரிவுப்படுத்திய கவிதை இது. இதைப் படித்து விட்டு என் அலுவலகம் தேடி நேரில் வந்து(ம்) பாராட்டியவர்களும் உண்டு. எனக்கு தூண்டுகோலாகவும் துலாக்கோலாகவும் அமைந்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் பல! - 'இஸ்லாம்கல்வி.காம்" இதை வெளியிட்டுள்ளது.
-பரங்கிப்பேட்டை ஹ.பஃக்ருத்தீன்


வாக்குமூலம்

‘நான்’ என்பது உலகமாயிருந்தது!
பால் எது? சுண்ணாம்பு எது?
விளங்காத போது
‘நான்’ என்பது உலகமாயிருந்தது.

சூழ்ந்து கடிக்க வந்தன
சுயநலங்கள்.
ஒதுங்கி ஒடுங்கியதில்
‘நான்’ என்பது தானாய் ச்சிறுத்தது.

இப்போதும்
இருட்டும் போதெல்லாம்
வழிகளின் பயத்திலோ
வலிகளின் உணர்விலோ
உறவை, நட்பை உள் வாங்கி
‘நான்’ சற்றே விரிவதுண்டு.

சமூக வீதிகளில்
யுத்த காலங்களின்
பரஸ்பர தாக்குதல்களில்
இனத்தை மதத்தை
இழுத்தணைத்து க் கொள்ளும் ‘நான்’.

அதீத எதிர்பார்ப்புகளின் போதும்
அநாதரவான தருணங்களிலும்
இறை ஆதரவை நாடி ஓடி
இணைந்துக்கொள்ளும் ‘நான்’.

ஆதாயங்களின் போதும்
கவனிப்பாரற்று தனிமை காணும் போதும்
தன் கூடடங்கும் ‘நான்’.

அளவீடுகளுக்கு அடங்காமல்
மாறிக் கொண்டேயிருக்கும் ‘நான்’
மண்ணில் அடங்கிப் பின் தீரும்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

Tuesday, February 22, 2005

தொலை(ந்த) க்காட்சி(கள்)


1975

வேலை முடிந்து வரும்
அப்பாவின் பை பறித்து
இனிக்கும் மணக்கும்
அன்பைத்தேடிய
எங்களின் இளம்பிராயம்
புகைப்படமாகி விட்டது
மனசுக்குள்ளே..!

2005
இப்போதும்..
வேலை முடிந்து வரும்
என் பை பறிக்க..
வருவதில்லை..
மனைவியோ.. பிள்ளைகளோ..!
எதிரே
கவர்ச்சியாய் சிரிக்கும்
நீள் சதுரப் பெட்டியில்
தொலைந்து விட்ட காட்சிகள் அவை.!

Sunday, February 20, 2005

ஒரு கண்ணாடி அகம் காட்டுகிறது

உணவுக்குப் பஞ்சமில்லை..
உடுப்புகளும் குறைவில்லை..
உறைவிடமோ ஒரு பிரச்னையில்லை..
முக்கால்வாசி உலகத்தாரினும்
மேலானவன் நீ - மிகையில்லை.

வங்கியில் கணக்குண்டு
வார்கச்சையிலும் இருப்புண்டு
சில்லறை செலவுகளுக்கோ
சஞ்சலங்கள் ஒருபோதுமில்லை!
சிறிய அந்த செல்வந்த உலகினில்
செல்லத்தக்க உறுப்பினர் தான் நீ..!

அதிகாலை விழிக்கின்றாய்
ஆரோக்யம் உணர்கின்றாய்!
ஆசிர்வதிக்கப்பட்டவனல்லவா நீ
இந்த வாரம் இல்லாமல் போன
ஒரு பத்து இலட்சம் பேரினும்!

யுத்த முகம் கண்டதில்லை
இரத்த ஓலம் கேட்டதில்லை!
பட்டினிப்பெருங்கொடுமை
பரிதவிப்பின் பெருந்துயரம்
பாதிப்புகள் உனக்கில்லை..!
பாதி உலகின் மக்களை க் காணினும்
பேறு பெற்றவன் நீ

அன்பு மிக்க பெற்றோருனக்குண்டு
பண்பு நிறை மனைவியோ - உன்
பெருமைகளின் மகுடம்!
ஆசிர்வதிக்கப்பட்டவைஉன் குழந்தைகள்
அபூர்வமானவர்களில் நீ!

'எழுதப் படிக்கத் தெரியாதவர்
இருபது கோடிப் பேராம்’
வாசிக்கும் நீ யோசிப்பதுண்டா?
எத்தனை பெருமிதம் எனக்கு” என்று!

புன்னகை வசிக்கும் உன் முகம்
இதயமும்
இறைநன்றியை உச்சரித்தே
இயங்கட்டும் என்றும்!
(வலைமனையில் கண்ணுற்ற ஒரு ஆங்கிலக் கவிதையை தழுவி எழுதியது)

Saturday, February 12, 2005

பொய் மான் பொழுதுகள்

ஓர் இதிகாசச்செருப்பு
சிம்மாசனமேறிய போது..
உடையவனுக்கு இருந்ததோ
ஒற்றை முகம் தான்..!

இன்றைக்கும்..
பதவி ஆசை காட்டியே
பயன்படுத்தப்படுகின்றன செருப்புகள்!
உபயோகிப்பவர்களை
உற்றுநோக்கினாலோ....
பத்து முகங்கள்..

‘வில்’லுடன் இருந்தான்
கதாநாயகன் அன்று!
வில்லன்களாகவே இருக்கிறார்கள்
இன்றைய கதாநாயகர்கள்.

வாக்குறுதியை
உயிரினும் காத்ததனால்
வனவாசம் நிகழ்ந்ததென்ற
இதிகாச உண்மைக்கு
இன்றைக்கும் பயந்து….
காட்சி முடிந்ததும்
கலைத்துவிடும் எண்ணத்தில்
‘ஒப்பனை’ யாகவே உள்ளன
இன்றைய வாக்குறுதிகள்!

கவர்ச்சியில் மயங்கி….
‘பொய்மானை’ த்
துரத்திக்கொண்டிருக்கிறார்கள்...
பொதுமக்கள்
பொழுதெல்லாம்...!
-----------------------------------------------

தேசியப் பெருநாள்

எங்கள் தேசம் இந்திய தேசம்!
உலகம் யாவினும் உன்னத தேசம்!!

மதச்சார்பின்மை – எங்களின்
மதிப்புயர் மனப்பான்மை!

இறந்தவர்கள் உயிர்த்தெழுகின்ற
புனித வெள்ளியையும்...

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு
வாரி வழங்குகின்ற ரம்ஜானையும்...

ஏழையர் அகங்களிலும்
நம்பிக்கை தீபம் ஏற்றப்படும்
தீபாவளியையும்...

நாங்கள்
ஒற்றை நாளில்
ஒரு சேரக் கொண்டாடுவதுண்டு
-ஐந்து வருடங்களுக்கொரு முறையேனும்.!

மனப்பாங்கில் தொய்வடைந்தாலோ
அடிக்கடியும் கொண்டாடுவதுண்டு!

தேர்தல் திருநாள் - எங்கள்
தேசியப்பெருநாள்.

Wednesday, February 09, 2005

பயணங்களில்..

பயணம் என்பது நின்று விடாத நிலை மாற்றம்
பயணம் என்பது தொன்று தொட்ட தொடரோட்டம்
பயணம் என்பது உலக இயக்கத்தின் அச்சாணி!

நாம் எல்லோரும் பயணிகள்
எப்போதும் பயணிக்கிறோம்.

காலத்தின் வாகனத்தில்
கால் வைத்த பின்னர்
தொடக்கம் என்பது தொலைந்து போனது
இலக்கு என்பதோ..இனிமேல் வருவது.

நினைக்கும் இலக்குகள்நிழலேயாகும்
நிஜத்தின் இலக்கைமார்க்கமே அறியும்
மார்க்கங்கள் இரண்டே..
மற்றவை கிளைகள்
நன்மார்க்கம் துன்மார்க்கம் என்பதன்றி
என் மார்க்கம் உன் மார்க்கம் என்பதில்லை..!
அவரவர் மார்க்கம் அவரவர்க்கு..!
ஆயினும் குறுக்கு வழி தேடி ப்பின்
குழம்பித்தவிப்பவர்க்கு
வழிகாட்ட... வழிகாட்ட..
நம் வாழ்க்கை வெளிச்சம் பெறுமே.!
------------------------------------------

Tuesday, February 08, 2005

சுனாமியால் திறந்துக்கொண்ட இதயங்கள்.

அநாகரிகத்திற்கு எல்லை இருக்கிறதா? என்ற தலைப்பில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் தன்னுடைய உயிர்மை வலைப்பதிவில் தமிழக அரசியலாளர்களின் குணங்களை எடுத்துக்காட்டியிருந்தார்.
என் பார்வையில், அவர்கள் மாறாதிருப்பதன் அவலத்தை ஒத்துக்கொள்ளும் அதே சமயம் அவர்கள் மாறாதிருப்பது ஏதொரு ஆச்சர்யத்தையும் ஏற்படுத்திவிடவில்லை (என்னளவிலேனும்) என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அவர்கள் மட்டுமல்ல - மதம் சார்ந்த ஆர்.எஸ்.எஸ் - போன்ற அமைப்புகளுக்கும் தங்களின் பிம்பத்தை கட்டமைப்பதற்கும், முன்னிறுத்துவதற்கும் சுனாமிகள் கூட ஒரு வாய்ப்பாகி விடுகின்றன.

மத அரசியல் வாதிகள் ஒருவருக்கொருவர் 'நாங்கள் தான் செய்தோம்" 'இல்லையில்லை, நாங்கள் தான் கூடுதலாகச் செய்தோம்"- என்றெல்லாம் அறிக்கைபோரிட்டுக்கொண்டதையும் கண்டோம்.

துக்ளக் ஆண்டு விழாவில் கூட சோ சுனாமிப்பணிகளில் ஆர்.எஸ்.எஸ்ஸை(மட்டுமே) சிலாகித்துப்பேசினார். அச்சமயம் அவரிடம் மற்ற (மத) அமைப்புகளின் பணிகளைப் பற்றி குறிப்பிடப்பட,"அப்படியானால் பாராட்டுக்கள்" என்றார். (தூய உள்ளத்துடன் சேவை மனப்பான்மை கொண்டு தொண்டு செய்தவர்கள் (செய்து வருபவர்கள்) இதில் அரசியல் செய்வதில்லை).

அதே சமயம், தங்கள் இன்னுயிரைப்பொருட்படுத்தாமல், பின் வரும் புகழ் நோக்காமல், சுனாமியிடமிருந்து மக்களின் உயிர் காத்த எத்தனையோ ஹீரோக்களை உள்ளுர் பத்திரிக்கைகள் எடுத்துக்காட்டியிருந்தன. இந்தியாவில் பிரதானமான பேச்சுப்பொருளாயிருந்து வருகிற ஜாதியோ, இனமோ, மதமோ, அந்த நல்ல உள்ளங்களுக்கு பொருட்டாகத் தெரியவில்லை. சுனாமியால் எத்தனையோ உயிர்கள் இறந்துப்போன சோகத்தை ஓரளவேனும் ஆறுதல்படுத்த (ஜாதி மதம் பாராத) இந்தியத்துவம் உயிர்த்தெழுந்து வந்ததோ என்று தான் தோன்றுகிறது.

கடலூர் அருகிலிருக்கும் ஒரு கிராமத்தின் முஸ்லிம் ஜமாஅத்தினர் சுற்றுப்புறத்தில் பாதிக்கப்பட்ட மீனவ கிராமத்தவர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு இருபது தினங்களுக்கும் மேல் உணவு, இருப்பிட வசதி அளித்து உதவியதுடன், சுனாமிக்குப்பலியான நூற்றுக்கணக்கான சடலங்களை அவரவர்தம் மதச்சம்பிராதயங்களுக்கேற்ப இறுதிச்சடங்கு செய்தனர். (இத்தனைக்கும் அந்த கிராமத்தின் முஸ்லிம்கள் யாரும் பாதிக்கப்படவில்லையாம்). இது குறித்து வால் ஸ்டிரீட் ஜர்னல் முதல் தினமணி வரை செய்திகளை வெளியிட்டிருந்தனர். 'இக்கட்டான நேரங்களில் எப்படி செயல்படுவது என்பதை அரசாங்கத்துக்கே கற்றுத்தரும்படி செயல்பட்டனர்" என்றது ஜூனியர் விகடன். ''அற்புதமாக பணியாற்றினார்கள்"" - என்றார் மாவட்ட ஆட்சியர்.

இதில் சிலிர்க்க வைக்கும் செய்தி : CARING HAS NO RELIGION என்கிற தலைப்பில் INDIAN EXPRESS நாளிதழ் 30 டிசம்பர் 2004 ல் வெளியிட்டிருந்த பாராட்டுக்கட்டுரைக்கு இதுவரை வந்து குவிந்த 190க்கும் மேற்பட்ட கருத்துக்களில் 'நான் ஒரு கரசேவகனாக இருந்தேன். (இவர்களின்) மனித நேயப்பணிகளுக்கு முன்பாக என் காவி அடையாளத்தை சமர்ப்பித்து விடுகிறேன். குஜராத்தில் முஸ்லிம் மக்களை கொன்று குவித்தது குறித்து வெட்கப்படுகிறேன். இனியேனும் இந்தியாவை இந்து, முஸ்லிம் கிறிஸ்தவர்கள் சேர்ந்தே நிர்மாணிப்போம்." என்று ஒரு வாசகர் எழுதியிருப்பது தான். இந்தியாவை நிர்மாணிக்க இத்தகைய எண்ணங்களே தேவை.

சுனாமியால் திறந்துக்கொண்ட இதயங்களுக்கும் - உதவுவதன் பொருட்டே நீளத் தொடங்கிவிட்ட கரங்களுக்கும் நன்றி செலுத்துவோம்.
-------------------------------------------------------------------------------------

Monday, February 07, 2005

தேடல்களில்….....

தேடல் என்பது வாழ்வின் வேர்.!
தேடல் என்பது மனதின் மகரந்தம் !
தேடல் என்பது நாளைக்கான இன்றின் கனவு!

தேடல் இன்றி யாரும் இல்லை.
தேடலின் தாகமே வாழ்வை நகர்த்தும்!

எதைத் தேடுகிறீர்களோ அதை அடைகிறீர்கள்!
ஒன்றைத் தேட, மற்றொன்று தொலையும்! - இது
மாறும் உலகினில் மாறாத நியதி! – உயிர் வாழ்க்கையின்
ஆற்றல் அழிவின்மை விதி!

ஆகாத கனியாம் உலகைத் தேடி
ஆதியில் மனிதன்
சுவனம் தொலைத்தான்.
தொலைத்த மறுமை
திரும்பப் பெற்றிட
உலகை த்தொலைத்து
உயர்ந்திட வேண்டும்.

எதை நாடுகிறீர்களோ,
அதைத் தேடுங்கள்.
எதைத் தேடினீர்கள்
என்பதை வைத்துத்தான்
யார் நீங்கள் என்று சொல்ல முடியும்.

பொருளும் புகழும் புண்ணியமும் - இறை
அருளும் அறிவும் ஆன்ம ஞானமும்
தேடுபவர்களுக்கே தென்படுகின்றன.

தன்னை த்தானே கண்டறிவதே
தேடல்களில் எல்லாம் தலையானது.
உங்களை நீங்களே
விளங்கிக்கொள்ளவும்
உங்களை பிறருக்கு ணர்த்துவதற்கும்
உங்களை த்தேடி வையுங்கள்.

தேடல்களும்
தேவைகளும் அற்ற இறைவனை
தேட முற்படும் பொழுதில்
தொலைப்பதற்கு நீங்கள் வேண்டும்.
உங்களின் ‘தான்’ வேண்டும்.
அதற்காகவாவது......
உங்களைத் தேடி வையுங்கள்.
-----------------------------------------

Sunday, February 06, 2005

சோகவனத்துச்சீதைகள்!

அழகும் இளமையும்
அலங்கரித்த

அந்த நாட்களில்
எங்கள் கனவுகளில்
எப்போதும் பிருத்வி ராஜன்களே...!

ஆயினும்...
செல்வம் இல்லாத

சோமநாதபுரங்களை
எந்த கஜினிமுகமதும்
ஏறெடுத்துப்பார்ப்பதில்லை
என்பதை அறிந்தப்பின்...
இப்போதெல்லாம்...
அசோகவனத்தில் அல்ல,
சோகவனத்தில்காத்திருக்கிறோம்.
‘ ராவணனாவது வரமாட்டானா…’?

கவிதை:
வாழ்க்கை க் கனி..-
பரங்கிப்பேட்டை ஹ.பஃக்ருத்தீன்

‘ஆஹா.. அதுவன்றோ கனி..’
என்றான் சாத்தான்.‘
ஆகாது அக்கனி..’
என்றான் இறைவன்.
பாவம் மனிதன் !

பழம் தின்று
கொட்டை ப்போடும்
பக்குவம் அறியாமல்
பழத்தை த்துப்பி விடுகிறான்
இல்லையேல்
கொட்டையை த்தின்று விடுகிறான்.
-------------------------------------------